Sunday, August 26, 2012

செல்ஃபோன் வச்சிருக்கீங்களா....



அனைவருக்கும் வணக்கம்,

அது செல்ஃபோன் வர ஆரம்பித்தகாலம் 1998 இருக்கும்னு நினைக்கிறேன், செல்ஃபோன் அப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா மக்களிடம் பிரபலமாக ஆரம்பிச்சது. ரொம்ப அரிதா ஒருத்தர் ரெண்டு பேர் கையில இல்ல இல்ல சட்டைப் பையில துருத்திக்கிட்டு நிக்கும். அப்ப செல்ஃபோன்னா நோக்கியா 5110 தான். நல்லா பெரிசா கருப்பா கட்டியா இருக்கும். ஆண்டென்னா வெளில நல்லா நீட்டிக்கிட்டு இருக்கும்.


கீழே படத்துல இருக்கு பாருங்க இதான் அந்த நோக்கியா 5110 மாடல், அப்ப இதெல்லாம் பெரும்பாலும் பணக்காரங்கதான் வச்சிருப்பாங்க... விலை 6000 லிருந்து 10000 வரைக்கும் சொல்லுவாங்க வந்த புதிதில்....

Inline image 1
சிம்கார்டு வாங்கனும்னா அப்ப ஏர்செல் மட்டும்தான் Inline image 2, போஸ்ட்பெய்டு கனெக்சன் வாங்கனும், சிம்கார்டின் விலை 3500 ரூபாய் இருந்துச்சு. இன்கமிங் காலுக்கும் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. இன்னொரு கம்பெனி BPL சிம்கார்டு Inline image 3... இவங்க ரெண்டு பேருதான் அப்ப ரொம்ப பிரபலம்.
செல்ஃபோன் விக்கிறதுக்கு இப்ப மாதிரி நிறைய கடைகள் அப்ப இல்லை, சில கடைகள் மட்டுமே இருந்தது அப்ப, அதுக்கு மேல போனா மீனாட்சி பஜார், பாண்டியன் பஜார் இங்க போனாத்தான் செல்ஃபோன் வாங்க முடியும்.
சரி செல்போனும் சிம்கார்டும் வாங்கியாச்சு அப்புறமென்னான, அந்த செல்போனுக்கு ஒரு பிளாஸ்டிக் கவரு போடனும்ங்கனு பஜார்ல சொன்னாங்க, கவர் போடாட்டி செல்ஃபோன் கெட்டுப்போகுமாம்,
சரிங்க அந்தக் கவர் எம்புட்டுனா , 500 ரூபாய் கவர்னு சொல்லி அதையும் தலையில் கட்டி இல்ல செல்ஃபோன்ல மாட்டி விட்டுவாங்க... கடைசியில ஒரு செல்ஃபோன் நம் கையில் வரும் போது கிட்டத்தட்ட பத்தாயிரம் செலவாகிடும்.
நோக்கியா தவிர BPL செல்போனும் அப்ப கிடைத்தது. BPL செல்ஃபோன் இன்னும் ரொம்ப பெரிசா இருக்கும்... நம்ம சட்டைப் பையில் திணிச்சு வைக்கனும்... அப்புறம் பஜார்ல அல்காடேல் மொபைல் போன் விற்பனைக்கு கிடைச்சது....Inline image 4 அல்காடேல் பயன்படுத்த ரொம்ப கடினம்...... எந்த பட்டனை அமுக்கிறதுன்னே புரியாது.... அப்புறம் சோனி எரிக்ஸன் , மோட்டோரோலா., எல்ஜி., சாம்சுங்... இப்படி பல கம்பெனி போன்கள் கிடைக்க ஆரம்பித்தன.
செல்ஃபோனை வாங்கிய பிறகு சில ஆரம்பகால பிரச்சனைகள் இருந்தன, அது என்னானா,உள்ளூர் நம்பருக்கு பேசனும்னாலும் STD code முன்னாடி போட்டு அழைக்கனும். அதை தெரிஞ்சு வச்சுக்க வேண்டியிருந்தது,
இன்னொரு பிரச்சனை , நம்மளுக்கு யாரும் போன் பண்ணவே மாட்டாங்க, சும்மாவே போன எடுத்து வெறிச்சு வெறிச்சு பாத்துக்கிட்டு இருக்கனும்.
அப்புறம் யாராவது போன் பண்ணாலும் சீக்கிரம் கட் பண்ண சொல்லனும், இன்கமிங்கும் காசாச்சே.........
அந்த நேரங்களில் நண்பர்களுக்கிடையே ஒரு பேச்சு நடக்கும் போது கண்டிப்பா செல்ஃபோனும் ஒரு பேச்சாக இருக்கும்.
மாப்ள, அவனும் செல்ஃபோன் வாங்கிட்டாண்டா...
அது என்ன மாடல்டா...
ஸ்லீக்கா இருக்கு மாப்ள...
அமெரிக்காகாரய்ங்க இதெல்லாம் ரொம்ப காலமா யூஸ் பண்றாய்ங்களாம்டா...
ஆமாடா நாம் ரொம்ப லேட்டுடா...
செல்ஃபோன் இருந்தா ஜாரியெல்லாம் ஈஸியா கரெக்ட் பண்ணிடலாம்டா...
புதுபோன் வாங்கினதுக்கு பார்ட்டி வை மாப்ள...
புது ரிங்டோன் வந்திருக்கு மாப்ள...
ஏ சாமிபாட்ட ரிங்டோனா வைடா...
இப்பல்லாம் நான் போன்ல அலாரம் வச்சுத்தான் எந்திரிக்கிறேண்டா...
செல்போனுக்கு புது கவர் போடனும் மாப்ள...
இப்படி பல பல பேச்சுகள் நடக்கும்.
மிகக் குறைந்த காலத்திலேயே நோக்கியா 3310 வர ஆரம்பிச்சது. Inline image 5அது ஆண்டெனா இல்லாம பாக்க அழகா இருந்துச்சு...
பட்டன்லாம் அமுக்க ரொம்ப இலகுவா இருக்கும் இதுல. எந்த அழைப்பும் வராம போன் வாங்கி வச்சிருக்கவுங்களுக்கு இதுல இன்னொரு விசயம் ரொம்ப பிடிச்சு போயிருந்தது. அது என்னானா , நோக்கியா 5110 வில் இருந்த Snake Game ஐ விட இதுல இருந்த Snake Game ரொம்ப நல்லாயிருந்து, சில கூடுதல் விசயங்கள் இதுல இருந்துச்சு விளையாட. அதுனால இந்த போன் வச்சிருக்கவங்க Snake Game விளையாட விரும்புவாங்க.... அப்புறம் நோக்கியா ஒவ்வொரு மாடலா அறிமுகப் படுத்திக்கிட்டே இருந்தாங்க.....
செல்ஃபோன் வாங்கினாலும் , இந்த செல்ஃபோன் ஆப்பரேட்டர்கள் தமிழ்நாட்டை ரெண்டா பிரிச்சு வச்சிருந்தாங்க, சென்னை ஒரு பகுதியாகவும் சென்னையைத் தவிர மற்ற பகுதிகள் இன்னொரு பகுதியாகவும் வச்சிருந்தாங்க. இந்தப் பகுதிகளை Rest of TamilNadu (ROTN) என்று டெக்னிக்கலா அழைப்பார்கள். இப்ப என்ன பிரச்சனைனா, சென்னைக்கு மற்ற பகுதிகளில் இருந்து போனா ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டும். இன்கமிங் காலுக்கும் கூடுதல் கட்டணமிருந்தது.
அப்ப சென்னையில Wings மற்றும் RPG Cellular Inline image 6என்கிற சில நிறுவனங்கள் இருந்ததென நினைக்கிறேன். அந்த RPG Cellular தான் பின்னாளில் ஏர்செல்லாக மாறியது. அப்ப சென்னைக்கு போறதே எனக்கு சினிமால பட்டணத்துக்கு போறேனு சொல்ற மாதிரிதான் அதுனால சென்னையில் இந்த செல்ஃபோன் வர ஆரம்பித்த காலங்களில் என்ன நடந்தது என தெரியவில்லை. அதனால மதுரைப் பகுதியை வச்சே எழுதுறேன்.

தொடர்ந்து படியுங்கள் (தயவுசெய்து)... படிக்கிறீங்களா??
இப்பத்தான் ஏர்டெல் நிறுவனம் புது திட்டம் கொண்டு வந்தாங்க, ஒரே சிம்கார்டில் இரண்டு நம்பர் கொண்டு வந்தாங்க, ROTN பகுதியில் பயன்படுத்தப் படும் எண் சென்னைக்கு போனதும் switch off செய்து switch on பண்ணனும், அப்ப PIN கேட்கும் 20000, டைப் பண்ணா சென்னை எண்ணாக மாறிவிடும், அந்த நம்பரில் யாரு போன் பண்ணாலும் இன்கமிங் கால் இல்லை. ROTN பகுதிக்கு வந்ததும் மறுபடி switch off செய்து switch on பண்ணா PIN கேட்கும் அப்ப 10000 என டைப் பண்ணனும். உடனே பழைய எண்ணுக்கு வந்து விடுவீர்கள்.
ஏர்டெல் ப்ரிபெய்டு கார்டு கொண்டு வந்ததும் மொபைல் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. சிம்கார்டின் விலையும் மலிவாக கிடைத்தது. நோக்கியா 5110 விலையும் குறைந்தது, குறிப்பா அந்தக் கவரின் விலை 50ரூபாய்க்கு கிடைத்தது :-)
இந்த நேரத்தில்தான் ஏர்செல்லுக்கு ஏர்டெல்லுக்கும் போட்டி,Inline image 8   Inline image 7 ஏர்செல் எல்லாப் பக்கமும் டவர் போட்டுட்டாங்க, அதனால சிக்னல் நல்லா கிடைக்கும். ஆனா வாய்ஸ் க்ளாரிட்டி இல்லை. ஏர்டெல்அப்பத்தான் வந்திக்கிட்டு இருந்தாங்க, அதிகமான டவர் இல்லை, இதனால் கிராமப் புறங்களில் இவர்களால் விற்பனை அதிகரிக்க இயலவில்லை.
இப்படி செல்ஃபோன் ஆதிக்கம் பெருகிய வேளையில், பலரின் சட்டை பாக்கெட்டுகளில் துருத்திக் கொண்டிருந்த செல்போனை காண முடிந்தது. அப்புறம் இடுப்பு பெல்டிலும் தொங்கிக் கொண்டிருந்தது செல்ஃபோன்.
இதயத்துக்கு ஆகாதாம் கதிர்வீச்சு அதிகமாப்பா, அதான் இடுப்புல தொங்க விட்டுருக்கோம்னு சொல்லுவாங்க.....
இடுப்புல தொங்குனா ஆண்மை போயிரும்னு கைக்குட்டையில் சுற்றி உள்ளங்கையில் வைத்துக் கொண்டிருந்தவர்களும் உண்டு.
ஒரு கடைக்கோ அல்லது ஒரு நிகழ்ச்சிக்கோ அல்லது ஒரு வீட்டிற்கோ போனா முதலில் செல்போனை எடுத்து எல்லாரும் பார்க்கும் படியாக முன்னால் உள்ள மேஜையிலோ அல்லது டீபாயிலோ இப்படி எதுவுமே இல்லாவிட்டல் கையில் தெரியும்படியா வைத்துக் கொண்டிருப்பார்கள்.... அது கௌரவத்தை காட்டும் பொருளாகவும், பெருமையான விசயமாகவும் இருந்தது...
செல்லுபோனெல்லாம் வச்சிருக்காருப்பானு சொல்லுவாங்க. அதுல ஒரு பெருமை. அவனுக்கென்னப்பா வண்டி செல்போனுனு செட்டிலாகிட்டான்பானு சொல்லுவாங்க, பில் கட்டுறவனுக்குத்தான் தெரியும் கண்ணுக்கு தெரியாம எம்புட்டு காசு கணக்குல சேத்திருக்காங்கனு, ஒருநாள் பில் கட்ட தாமதமானும் அபராதம் அத்துக்கிட்டு போயிடும்.....
இப்படி செல்போன் பலர் கையிலும் புழங்க ஆரம்பித்த வேளையில், மதுரை சாலைகளில் ஒரு பெரிய இயந்திரம் வந்து ரோட்டை நடுவுல கிழிச்சிக்குட்டு உள்ள ஒரு கேபிளை பதிச்சிக்கிட்டு போச்சு... என்னமோ ஏதோனு வேடிக்க பாத்திக்கிட்டு இருந்தோம், அப்பத்தான் அங்க வந்தார் அம்பானி. Inline image 9
DAE (Dirubhai Ambani Entrepreneurship )இந்தத் திட்டத்தோட ரிலையன்ஸ் உள்ள வந்தாங்க , பத்தாயிரம் கட்டி உறுப்பினரா சேரனும் , நமக்கு ஒரு செல்போன் குடுப்பாங்க, அப்புறம் நாம ஒரு பத்து பேரைச் சேர்க்கனும், அவுங்க அப்புறம் பத்து பேரைச் சேக்கனும்னு ஒரே குழப்பமா திட்டம் கொண்டு வந்தாங்க... அம்பானிட்ட இருக்கிற பிரச்சனை ஒவ்வொரு மாதமும் ஒரு புது திட்டம் வரும், முதலில் சேர்ந்தவன் அடுத்து வந்த திட்டம் பற்றி புரியாம குழம்பி போயிடுவான்.
திடீர்னு ஒருநாள் 500 குடுத்தா போதும் 2 செல்போன் தரேன்னுட்டார் அம்பானி, எல்லாரும் 500 ரூபாய் கட்டி ரெண்டு ரெண்டு போன் வாங்கி என்ன செய்றதுனு தெரியாம வச்சிக்கிட்டு இருந்தாங்க. பில்லு எகிறுச்சு, எப்படி கணக்கு பண்றாங்கனு யாருக்கும் புரியலை. ரிலையன்ஸில் இருந்து ரிலையன்ஸுக்கு பேசினா இலவசம்னு அறிவிப்பு வந்தவும் குண்டக்க மண்டக்க பேசி அப்புறம் பில் கட்ட முடியாம செல்போன தூக்கி எறிஞ்சவங்களையும் பாத்திருக்கேன். இப்படி கட்டாத பணத்தை வசூல் பண்ண ரெக்கவரி டீம் என்று ஒன்னை ஆரம்பிச்சு அவங்க போன் போட்டு விசாரிச்சு ஆள கண்டுபிடிச்சு கட்டப் பஞ்சாயத்து பண்ணி பணம் வசூல் பண்ணாங்க ஓரளவுக்கு.
அம்பானி வந்ததும் இதுக்கு முன்னாடி வந்த ஏர்செல் ஏர்டெல் எல்லாம் திடீர்னு கட்டணம் குறைச்சிட்டாங்க, செல்போன் பல கவர்ச்சிகரமான திட்டங்களுடன் வெற்றியடைய ஆரம்பிச்சது..... இம்புட்டு மற்ற நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நிலையில் BPL , ஹட்ச் ஆகி அப்புறம் வோடபோனாகி விட்டது.... Inline image 10  Inline image 11  Inline image 12
அனைத்து நிறுவனக்களுக்கும் இடையே கடும் வியாபார போட்டி, இன்கமிங்க் பிரீ, குறிப்பிட்ட எண்ணுக்கு அவுட்கோயிங் ப்ரீ, SMS ப்ரீ என பல திட்டங்கள் வந்து விட்டது. செல்போன் விலையும் குறைந்ததால் மக்கள் கையில் எளிதில் கிடைக்க ஆரம்பித்து விட்டது. அதுவரை கௌரவத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட அந்தச் செல்போன் , எல்லார் கைகளிலும், பைகளிலும் கிடைக்க ஆரம்பித்தது.
அடுத்தடுத்து புதுசு புதுசா செல்போன் மோகங்கள் உருவாக ஆர்மபித்தது. அது என்னானா கலர் டிஸ்ப்ளே செல்போன், பாலி போனிக் ரிங் டோன் செல்போன், எஃப் எம் ரேடியோ செல்போன், கேமரா செல்போன், மெரிகார்டு உள்ள செல்போன் அப்படி இப்பிடினு ஏகப்பட்ட செல்போன் வந்தாச்சு...
சினிமாவிலும் செல்போன் அதிகமாக காட்டப்பட்டது, மன்மதன்ல சிம்பு நோக்கியா 6600 Inline image 13 வச்சிருக்கிறத பாத்துத்தான் நான் அந்த போனே வாங்கினேன்.
தற்போதைய காலகட்டத்தில் செல்போன் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது. இன்றியமையாதது என்று சொன்னாலும் தகும், அந்த அளவுக்கு செல்போன் தொழில்நுட்பம் இன்று பயன்படுகிறது.
குறுந்தகவல் ஒரு தகவல் தொடர்பு ஊடகமாகவே மாறிவிட்டது. புரளியும் சரி செய்தியும் சரி உடனே பார்வார்ட் மெசேஜாக பறந்து விடுகிறது எல்லாருடைய செல்போன்களுக்கும்.
இணையம் இணைக்கும் GPRS தொழில்நுட்பம் வந்தபிறகு இணையம் நம் கைகளில் வந்து விட்டது, கணிணியை சார்ந்திருக்க தேவையில்லை, Bluetooth, WiFi எல்லாம் செல்போனுக்குள் நுழைந்து நம் வாழ்க்கையை எளிதாக்கி விட்டது..
வங்கிச்சேவை, பயணம் குறித்த தகவல்கள், அரசுத் துறை தகவல்கள் அனைத்தும் இப்போ குறுந்தகவல்களாக கைகளில் கிடைத்து விடுகிறது.
ஊரு விட்டு ஊரு பிழைக்கப் போனவர்கள், தன் வீட்டோடு தொடர்பிலிருக்க கடிதம் எழுதி காத்திருக்க தேவையில்லை, ஊரிலிருக்கும் ஒரே பெரிய வீட்டிற்க்கு போன் போட்டு(அங்க மட்டும்தான் ஃபோன் இருக்கும்) நம் வீட்டு ஆட்களை அங்கு வந்து நம் அழைப்புக்காக காத்திருக்க வைக்கவும் தேவையில்லை. எல்லோர் கைகளிலும் செல்போன், எல்லோரும் தொடர்பிலிருக்கிறார்கள்.
முன்பு வியாபாரிகள், தொழில் செய்பவர்கள் மற்றும் வெளித் தொடர்பு அதிகம் வைத்திருப்பவர்கள் சட்டைப் பைகளில் ஒரு சின்ன டெலிபோன் டைரியோ அல்லது ஒரு நோட்டோ இருக்கும் அதில் தொலைபேசி எண்களை குறித்து வைத்திருப்பார்கள், போன் செய்யும் பெரும்பாலும் அந்த குறிப்பை எடுத்துப் பார்க்காமலே, நினைவில் இருந்து எடுத்து எண்களை சுழற்றுவார்கள். ஆனா இப்ப செல்போன் வந்த பிறகு எதும் நினைவில் இல்லை, ஃபோன்புக்கை திறந்து உடனே டயல் செய்து விடுகிறோம். அதிகமா மூளைக்கு வேலை குடுக்கிறதில்லை, செல்போனை நம்பி இருந்தா போதும். ஒருவேளை செல்போன் தொலைஞ்ச் போச்சுனா , அந்த எண்களின் தொடர்புகளை மறுபடி அமைப்பதும் கடினம்தான்.
இப்ப செல்போன்ல எல்லாமும் இருக்கு, இணையம் இருக்கு, முகம் பாத்து பேசலாம், குறுந்தகவல் அனுப்பலாம், MMS அனுப்பலாம், படம் பிடிக்கலாம், வீடியோ எடுக்கலாம், என்ன வேணாலும் கைக்குள் இருக்கும் செல்போன் மூலம் காணலாம்.
இவ்ளோதான் செல்போன் பற்றிய என் பார்வை.
இங்க செல்போன் அறிமுகமானதையும், வளர்ச்சியையும் மற்றும் அதன் நல்லதையும் மட்டும் பேசியிருக்கிறேன். கெட்டதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே.
இதுவரை படித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

No comments: