Sunday, September 16, 2012

கூடங்குளமும் - சவுத் ஆளுங்களும்...அனைவருக்கும் வணக்கம்,

முதலிலேயே சொல்லிடுறேன்.... கூடங்குளம் போராட்டம் பற்றி சரியா தப்பானு உக்காந்து விவாதிச்சு இருபக்கமிருந்து காப்பி பேஸ்ட் ஆயுதங்கள் எடுத்து தன் தரப்பை நியாயப் படுத்தப் போகிற இடுகை இல்லை இது. அதுக்கு நான் சரிப்பட்டும் வரமாட்டேன். ஆக, அந்த மாதிரி எதும் எதிர்பார்க்காதீர்கள்...

ஒரு போராட்டம் எப்படிலாம் பார்க்கப் படுகிறது என்பதைப் பற்றி ஒரு சின்னப் பார்வை...


கூடங்குளமும் சவுத் ஆளுங்களும்:

கூடங்குளத்தில் அணு மின் நிலையம் தொடங்கிய காலத்தில் இருந்தே போராட்டங்களும் தொடங்கப் பட்டது என்பது பலருக்கும் தெரியும். நம்மில் சிலருக்கு இது தெரிய வாய்ப்பில்லை. இந்த சமூக வலைத்தளங்கள் இருப்பதால், இன்று எல்லாரும் செய்தியாளர்களாகி அவரவருக்குத் தெரிந்ததை பொதுவில் வெளியிட்டு வருகிறார்கள். சிலர் ஊகத்துடன் சொன்னாலும், பலர் சான்றுகளோடு பேசுகிறார்கள். அவர்கள் தரப்பு சான்றுகளையும் பொதுவில் பகிர்ந்து கொள்ளும் போது நாமும் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் உடனடியாக ஒரு தகவலின் உண்மையையும் பொய்யையும், மாறுபட்ட கருத்துக்களையும் அறிந்து கொள்ள சமூக வலைத்தளங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.சரி இந்த கூடங்குளம் பற்றி, பற்றி எரியும் தகவல்களைத்தான் நாள்தோறும் பலர் பேசுகிறார்களே, நீ என்ன புதுசா சொல்லப் போறேனு கேட்கிறீங்களா?! இதோ வாரேன் ....

பல மாநில, நாட்டு மக்களுடன் இணைந்து வேலை பார்க்கும் சூழலில் நான் இருக்கிறேன். சமீபத்தில் என் கூட வேலை பார்க்கும் நண்பர்களுடன் நடந்த உரையாடல்தான் நீங்க இனி பார்க்கப் போவது....

வட இந்திய நண்பர் ஒருவர் கேட்டார், ”Why you tamils are like this, You people are facing big power breakdown, showing your tamilnadu map as dark without any lights in Facebook, Our government gives you solution, koodan kulam power plant, why don't you accept that, why you all are so emotional, jumping into the sea and protesting ” ஏன் நீங்களெல்லாம் இப்படி இருக்கீங்க, உங்களுக்கு மின்சாரம் இல்லைனு, பேஸ்புக்ல தமிழ்நாட்டு  மேப்பை ஒரு லைட்டும் இல்லாம கருப்பா போடுறீங்க, நம்ம அரசு, உங்களுக்கு மின்சாரம் கிடைக்க வழி ஏற்படுத்தி குடுக்குது, அதை ஏன் ஏத்துக்க மாட்றீங்க... ஏன் ரொம்ப உணர்ச்சி வசப் படுறீங்க, கடலுக்குள்ள குதிச்சு போராடுறீங்க....வட தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் சொன்னார் , ”These south peoples are always like this sir, Always they roam with sword and talk emotionally and they don't really understand the need of the power plant.” இந்த சவுத் ஆளுங்க அப்படித்தான் சார், எப்பவுமே அரிவாளோடு சுத்திக்கிட்டு இருப்பாங்க, உணர்ச்சிவசப்பட்டு பேசுவாங்க. அவங்களுக்கு பவர் ப்ளாண்ட்டின் தேவை பற்றி உண்மையிலேயே தெரியல.

[[இனி ஆங்கில உரையாடல் இல்லாமல் தமிழிலேயே சொல்றேன். மாத்தி மாத்தி ஏழுத கடினமா இருக்கு :-)]]

நான் சொன்னேன், எல்லாம் இந்த சினிமாவ சொல்லணும், அதுலதான் தென் தமிழகம்னு காட்டினாலே அரிவாளோட சுத்துற மாதிரித்தான் காட்டுறாய்ங்க, அதை நினைச்சுக்கிட்டு நீங்க எங்க பக்கம் இருக்கிறவய்ங்க எந்நேரமும் இப்படித்தான் சுத்துவாய்ங்கனு நீங்களா கற்பனை பண்ணா நாங்க என்ன செய்ய முடியும்.... [[எங்களை பேச விட்டுட்டு வட இந்திய நண்பர் பொறுமையா பார்த்துக்கொண்டிருந்தார்... இன்னும் சில பிற பகுதி நண்பர்களும் ஆவலாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.]]

என் நண்பர்: ஹலோ கம்முனு இருங்க, உங்களாளுங்க எதுக்கெடுத்தாலும் அரிவாள எடுத்து போட்ருவாங்களேமா, அதான் நியூஸ்ல படிக்கிறோமே

நான்: ஏங்க தென் தமிழகத்துல இருக்கிற எல்லாரும் காலைல கடைல டீக் குடிச்சிட்டு, வீட்டுக்கு வரதுக்குள்ள எவனையாவது வெட்டிட்டுத்தான் வர்ரோம்ங்கிற மாதிரி கற்பனை பண்ணி வச்சிருக்கீங்க, அப்படிலாம் இல்லங்க, உங்க எண்ணத்த மாத்திக்கங்க.... 

என் நண்பர்: சரி விடுங்க, இப்ப ஏன் கூடங்குளத்தை எதிர்க்கிறீங்க, அதுனால எவ்ளோ கரெண்ட் கிடைக்கும்.... நம்ம தமிழ்நாட்டுக்கு நல்லதுதானே....

நான்: தமிழ்நாட்டுக்கு நல்லதுதான், சரி, எவ்ளோ கரெண்ட் கிடைக்கும் தெரியுமா? எத்தனை மெகாவாட் கிடைக்கும் சொல்லுங்க!?

என் நண்பர்: அது எவ்ளோனு தெரியல! . ஆனா கரெண்ட் கிடைக்கும் ... 

(என் மனசாட்சி: எவ்ளோ கிடைக்கும், அதை யாருக்கு யாருக்கு பங்கு வைக்கணும்னு தெரியல... ஆனா பேச்சு மட்டும் நல்லா பேசுறாங்கப்பா...)

நான்: சரி உங்களுக்கு தெரியல விடுங்க,  ஆனா அந்தப் பகுதி மக்கள் வேணாங்கிறாங்க,  பயப்படுறாங்களே,

என் நண்பர்: எதுக்குப் பயப்படுறாங்க, அதான் பாதுகாப்பா இருக்குனு அரசாங்கம் சொல்லுதே

நான்: பாதுகாப்பா இருக்கோ இல்லையே, உள்ளூர்க்காரங்க வேணாங்கிறாங்களே... அது மட்டுமில்ல, ஜப்பான், அமெரிக்கா எல்லாம் அணு உலையை மூடுறாங்களே...

என் நண்பர்: அதெல்லாம் பேசாதீங்க, தமிழ்நாட்டுக்கு நல்லது, அப்ப அவங்க ஒத்துக்கத்தான் வேணும்.

நான்: அதெப்படிங்க நீங்க அடுத்தவன வலுக்கட்டாயமா ஒத்துக்கத்தான் வேணும்னு சொல்ல முடியும். உங்களுக்கு கரெண்ட் வேணுமின்னு கேளுங்க, அதை ஏன் கூடங்குளத்தில் இருந்து வேணும்னு கேட்குறீங்க

என் நண்பர்: அங்கதான அணு உலை இருக்கு, அதான் கேட்குறோம். எவ்ளோ செலவு பண்ணி அரசாங்கம் கட்டியிருக்கு, இப்ப அதை பயன்படுத்தலைனா பணம் வீணாகாதா?!

நான்: ஏங்க எம்புட்டோ ஊழல் நடந்திருக்கு, அதுல வீணாகாத பணமா இதுல வீணாகப் போகுது. இதை வேற பயன்பாட்டிற்கு பயன்படுத்திகலாம்னு சொல்றாங்களே...

என் நண்பர்: அதெல்லாம் சரியா வராது, கூடங்குளத்தை எதிர்கிறது முட்டாள்தனம். உங்க சவூத் ஆளுங்கள திருத்தவே முடியாது...

நான்: அவங்க உயிர் வாழும் உரிமையைக் கேட்குறாங்க, அதுல என்னங்க முட்டாள்தனம்?

என் நண்பர்: அப்படி என்னங்க பயம், பாதுகாப்பு இருக்குனு எல்லாரும் சொல்றாங்களே? 

நான்: நம்ம நாட்டுல ஒரு விச வாயு கசிஞ்சதுக்கே,  பல ஆண்டு காலமா இன்னும் குழந்தைகள் குறைபாடுகளோடு பிறக்குதாம், இந்த அணு உலையில் ஏதாவது ஆச்சுனா!?என் நண்பர்: இப்படி எல்லாமே அது நடந்தா இது நடந்தா என்னாகும்னு நினைச்சுக்கிட்டு இருந்தா, எதுவும் நடக்காது... அவ்ளோ பயமா இருந்தா அவங்க வேறு இடத்துக்குப் போயிட வேண்டியதுதானே...

நான்: அதெப்படிங்க, என் வீட்டுக்கு வந்து என்னை வெளியேற சொல்லுவீங்க.... 

என் நண்பர்: பின்ன தமிழ்நாட்டுக்கு நல்லதுனா, அவங்க அணு மின் நிலையத்தை ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்.

நான்: சரிங்க ஒத்துக்கிறேன், உங்க வீட்டு பெட் ரூம்ல ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் வச்சிருவோம், அங்கிருந்து பக்கத்துல இருக்கிற ஒரு பத்து வீட்டுக்கு கரண்ட் குடுப்போம்... ஒத்துக்கிருவீங்களா?!? பத்துப் பேருக்கு நல்லது நடக்குதே ஒத்துக்கங்களேன்...

என் நண்பர்: இதாங்க, உங்கள உணர்ச்சிவசப்பட்ட மக்கள்னு சொல்றது... பேசிக்கிட்டு இருக்கும் போதே எங்க வீட்டு பெட்ரூம்ல ட்ரான்ஸ்ஃபார்மர் வக்கிறேனு சொல்றீங்க :-(((

(ஆளு கொஞ்சம் நொந்துட்டார் பாவம்....)

நான்: சரி விடுங்க... ஒரு விளக்கம் சொன்னா உணர்ச்சி வசப்படுறேனு சொல்றீங்க... ஒரே ஒரு ட்ரான்ஸ்ஃபார்மருக்கே ஒத்துக்கிற மாட்டுறீங்க... அவங்க ஊருக்கு நடுவுல ஒரு பெரிய அணு உலை வக்கிறாங்க... அதெப்படிங்க ஒத்துக்குவாங்க....

என் நண்பர்: சரி விடுங்க.... இந்த சவுத் பசங்க எப்பவுமே இப்படித்தான்...

(அவர் சொன்னதுதான் சரின்னுட்டு, கொஞ்சம் கோபமாகவே சொல்லிட்டு கிளம்பி போயிட்டார்....)

(நாங்க ரெண்டு பேரும் பேசுவதை, அனைவரும் ஒரு மாதிரி பார்த்துட்டு, போயிட்டாங்க. அவர்களின் பார்வைக்கு என்ன பொருள் என்று தெரியல :-)

இவ்வாறாக, ஒரு பயனும் இன்றி வெட்டிப் பேச்சு பேசிய கூட்டத்தைக் கலைத்து விட்டு அனைவரும் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டோம்.

இப்படியாக பல போராட்டங்கள்  குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்களுக்கு புரியாத புதிராகத் தெரிகிறது. தமிழ்நாட்டுல இருக்கிற அனைத்துப் பகுதி தமிழர்களுக்கும்!!? புரியும் போதுதான், தமிழ்நாடு தாண்டி டெல்லிக்குப் புரியும். ஆக, அனைவருக்கும் விளங்க வைக்க வேண்டிய கடமை போராட்டாக்காரர்களுக்கு உண்டு. 
கூடங்களும் அணு உலையால் கரெண்ட் கிடைத்தாலும், ஏதோ ஒரு அச்சம் இருக்கிறது என்பது உண்மை எனெனில் கண் முன்னே இதற்கு முன் நடந்த விபத்துகளின் சான்றுகளும் இன்னும் நம் வரலாற்றின் பக்கங்களில் நாம் காணக் கிடைக்கிறது. 

இதையெல்லாம் ஒதுக்கி தள்ளி விட்டு விட்டாலும், ஒன்றே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.நம்ம சுகத்திற்காக, அடுத்தவனை இழக்கச் சொல்வது நியாமில்லை.... சொந்த வீட்டுக்காரன் வேணாம், வராதீங்கனு சொல்லும் போது, வலுக்கட்டாயமாக அவன் வீட்டுக்குள்ள போய் கலவரம் பண்ணக் கூடாது...

இதற்கு முன்பு முல்லைப்பெரியாறு போராட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது இது போலவே சில தமிழக நண்பர்கள் மலையாளி நண்பர்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள், “அதான் புது அணை கட்டி, தண்ணி விடுறோம்னு சொல்றான்ல, ஏன்யா சவுத் ஆளுங்க பிரச்சனை பண்றீங்க” என்று.  (அன்னைக்கு நடந்த உரையாடலை எழுதனும்னா, இன்னும் பெரிசா போகும்:-) 

ஆக, தமிழன் தமிழனுடைய பிரச்சனையில் ஒன்று பட பேசாத பொழுது, எந்தப் போராட்டமா இருந்தாலும் நாம நமக்குள்ளேயே முதலில் போராட வேண்டியிருக்கிறது என்பதுதான் உண்மை.

கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்; கூடங்குளம் போராட்டத்தில், சினிமா முகம் இல்லாத ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டு, அந்த மக்களின் போராட்டமும், ஒற்றுமையும் மெய் சிலிர்க்க வைக்கிறது....

(அனைத்துப் படங்களும் இணையத்திலிருந்து: நன்றி.)

அனைவருக்கும் நன்றி...

9 comments:

சேட்டைக்காரன் said...

கூடங்குளம் போராட்டம் இப்போது எட்டியிருக்கிற கட்டத்தில், ஆதரித்து எழுதினாலும் சரி, எதிர்த்து எழுதினாலும் சரி, எழுதுகிறவர்கள் விமர்சனத்துக்கு ஆளாகப்போவது உறுதி! ஆனால், உங்களது நண்பர்கள் போலவே கேள்வி கேட்கிறவர்கள் இங்கும் இருக்கிறார்கள். அவர்களும் கேட்காத கேள்விகளும்,கேட்டால் உதாசீனப்படுத்தப்படுகிற கேள்விகளும் நிறைய இருக்கின்றன - பயமுறுத்தியபடி!

சேட்டைக்காரன் said...

எங்கெங்கும் கேள்விகள் மட்டுமே தென்படுகின்றன. பதில்கள் தான் தலைமறைவாகி விட்டன. :-((

Balaji said...

உண்மைதான் சேட்டைக்காரரே....

நன்றி...

எல் கே said...

நண்பருக்கு, உதயகுமாரை ஒரு தலைவராக பார்க்க இயலவில்லை. தேவை இல்லாமல், பல ஆயிரக்கணக்கான மக்களை ஆபத்தில் இறக்கிவிட்டு அவர் தலைமறைவாகிவிட்டார்

Jaffer ALi said...

நல்லாவே எழுதுறிங்க பாஸ்..வாழ்த்துகள்..

Balaji said...

நண்பர் எல். கே,

அந்த மக்கள் அவரைத் தலைவராகப் பார்க்கிறார்கள்...


உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...

Balaji said...

நன்றி ஜெஹபர்...

aathmaa said...

எங்கோ தவறான எண்ணம் விதைக்கப்பட்ட மாதிரி தோன்றுகிறது..எந்த பக்கம் நியாயம் என்பதை, உணர்வுபூர்வமாக யோசியாமல், உண்மையை எப்படி புரிந்து கொள்ளப்போகிறோமோ தெரியவில்லை....

மழைக்காதலன் said...

ஒரு நல்ல தலைவனுக்கான எல்லா தகுதிகளும் உதயகுமருக்கு இருக்கிறது...