Sunday, September 9, 2012

இயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...



அனைவருக்கும் வணக்கம்,

இப்ப நான் சொல்லப் போறது, இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேரு சொல்லிக் கொண்டிருப்பதுதான்... இருந்தாலும் இன்றைய சூழலின் தேவையைக் கருத்தில் கொண்டு நானும் என் பங்குக்குச் சொல்ல வேண்டும் என்ற ஒரு விருப்பத்தில் இதை எழுதுகிறேன்.

இயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...

நாமெல்லாம் இப்ப ரொம்ப வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்... குகை வாழ்க்கை மனிதன் வாழ்ந்தானு படிச்சிருக்கோம்...ஆனா பார்த்ததில்லை...இருந்தாலும் நமது இளம் பருவத்தில், இப்படியான ஒரு கான்க்ரீட் காட்டுக்குள் வாழ்க்கையைத் தொடங்கவில்லை... அழகான, பசுமையான கிராமத்தில்தான் நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையைத் தொடங்கினோம்... ஆனால் நம் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை பெரும் பெரும் கட்டிடங்களுக்கு நடுவில்தான் தொடங்குறார்கள்.

நாம் பார்க்க எத்தனையோ எத்தனையோ மாற்றங்கள் நம் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டு விட்டன. இன்னும் சொல்லப் போனால் ஏற்படுத்தி விட்டோம். மிக வேகமான வளர்ச்சி, மக்கள் தொகை, நம்முடைய தேவை என பல காரணிகள் நம்மைத் தூண்டிவிட்டு, ஒரு வித சுயநலத்தோடு நாம் பசுமையை மறந்து, கான்க்ரீட் காட்டுக்குள் வாழப் பழகிவிட்டோம். பசுமை இப்போது புதிதாய் கட்டப்பட்ட வீட்டுச் சுவறில் வாஸ்து பரிந்துரைத்த வண்ணமாகத்தான் இருக்கின்றது.

போட்டியும், ஏக்கமும், ஆற்றாமையும் நம்மை வேகமாக ஓடத் தூண்டுகிறது. உலகம் , உலக வெப்பமயமாதல் பற்றிய கவலை எல்லாருக்கும் இருந்தாலும், வெளிக்காட்ட முடியாத சூழலில் நம் வாழ்க்கை நம்மை அழைத்துச் செல்கிறது.வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும், ஓடிக்கொண்டே இருக்கின்றோம், நம் ஓட்டத்திற்கு விஞ்ஞானம் வேகமாய் வழி காட்டுகிறது, அதன் விலையோ நம் இயற்கை.   

ஆமால்ல, ஒரு காலத்துல எங்க வீட்டுல, தோட்டத்துல பசுமையா இருந்துச்சு... அப்ப எங்க வீட்டு முன்னாடி ரெண்டு பெரிய வேப்ப மரம் நின்னுச்சு.... இந்த இடமெல்லாம் ஒரே பசுமையா இருந்துச்சு என்கிற ஏக்கத்துடனே வாழ்க்கையை அதன் போக்கில் ஒத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளுக்கு நேரில் காட்ட முடியாமல், சொல்லக் கூடிய கதைகளாய் மாறிப்போச்சு நாம் வாழ்ந்த இயற்கை ஒத்த வாழ்வு.


என்ன செய்யலாம்... வீடுகளை இடித்து விட்டு மரங்களை நட்டு, சிறு குடிசை போட்டு வாழ்ந்து விடலாமா என்றால், என்னைத் தூக்கிப் போட்டு எத்தி விடுவீர்கள்.... வேறென்ன செய்யலாம்.... நம்முடைய தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது... தேவை மிஞ்சிய தேடலில் நம்மை விழுங்கும் நிழல்களாய் நம்முடைய எதிர்பார்ப்புகள் இந்த வாழ்க்கையின் மேல் பெருகிக் கொண்டே இருக்கின்றது.  என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என சிந்தித்திக் கொண்டிருக்கும் வேளையில், நம்மில் சிலர், நம் நாட்டைச் சேர்ந்தவர்கள், என்ன செய்திருக்கிறார்கள் என்பதையும் சற்றுப் பார்ப்போமா!?

இவர்களைப் பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள், இருந்தாலும் பகிர்ந்து கொள்கிறேன்.

திம்மக்கா...

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு வயது இப்பொழுது 80 ஆகிறது, இவரது கணவர் பெயர் சிக்கண்ணா. இவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லை. இதன் பொருட்டு உற்றார் உறவினர்களின் அவதூறுப் பேச்சுகளால் மனம் நொந்து போயிருந்த திம்மக்கா, தனது 28 வயதில் தனது கூதூர் கிராமத்தின் சாலையின் இரு மருங்கிலும் ஆல மரத்தை நட்டு இருக்கிறார். ஆனால் அப்பொழுது அந்த ஊரில் தண்ணீர் அவ்வளவாக கிடைக்கவில்லையாம். அதற்காக நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி மரங்களைப் பிள்ளைகள் போல பேணி வளர்த்திருக்கிறார். பின்பு ஊரிலேயே சில குட்டைகளை உருவாக்கி, மழைத் தண்ணீரை சேமித்து மரங்களுக்கு ஊற்றி வளர்த்திருக்கிறார் கடந்த ஐம்பது ஆண்டுகளாக.


அவரைப் பெருமைப்படுத்தும்விதமாக, சுற்றுச்சூழலின் நண்பன் என்ற விருதை அமெரிக்கா அவருக்கு வழங்கியிருக்கிறதாம், அது போக மேலும் பல விருதுகளை வாங்கியிருக்கிறாராம். கர்நாடக அரசு அவருக்கு உதவித் தொகையாக மாதம் ரூ500 வழங்கி, பெங்களூருவில் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் வழங்கியிருக்கிறதாம். தன்னுடைய கணவர் சிக்கண்ணா இறந்து பிறகும், கூதூரில் இருக்கும் என் பிள்ளைகளாகிய மரங்களை விட்டு வர இயலாது என்று கூறி பெங்களூரு வீட்டை அரசிடமே திருப்பி கொடுத்து விட்டு, கூதூரிலேயே அரசின் ஓய்வூதியத்தோடு வாழ்ந்து வருகிறாராம்.

திம்மக்காவின் பிள்ளைகளாகிய மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாய், அரசுக்குச் சொந்தம். எப்பேர்பட்ட தன்னலமற்ற சேவையை இந்த நாட்டிற்கு வழங்கியிருக்கிறார் என்று நாமும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தச் சுற்றுச் சூழலுக்கு ஒரு மரம் கூட நாம் இதுவரை நாம் வளர்க்காத வேளையில் ஒரு தாய் எத்தனை மரங்களை வளர்த்து பராமரித்திருக்கிறார், அவரால் கூதூர் கிராமம் இன்று குளுமையாக இருக்கின்றது. அந்தத் தாயுள்ளம் வாழ்க.

மேலும் தகவல்களுக்கு இவரைப் பற்றி இணையத்தில் தேடலாம்...


ஜாதவ் பயேங்:


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாதவ் பயேங் என்பவர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறாராம். 1979 ஆண்டு பிரம்புத்திரா ஆற்றில் வந்த  வெள்ளம் வடிந்த பிறகு, அங்கு பல ஊர்வன பறப்பன இறந்து கிடந்திருக்கின்றன. மரங்கள் இல்லாத்தால் வெப்பத்தால் இந்த உயிரினங்கள் அழிந்தன என்று அறிந்த அவர் வனத்துறையை அணுகி விசாரித்ததில் மணல் படுகையில் மரங்கள் வளராது, மூங்கில் மரங்களை வேண்டுமானால வளர்க்க முயற்சி செய்யலாம் என்று கூறியிருக்கின்றனர்.



அப்போது அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் 200 ஹெக்டேர் மணற்படுகையில் சமூக காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரம் வளர்க்கும் பணியில் இவரும் இணைந்திருக்கிறார். பணி முடிந்து அனைவரும் திரும்பியதும், இவர் மட்டும் அனுமதி கேட்டு அங்கேயே தங்கியிருந்திருக்கிறார். பின்பு மற்ற மரங்களை வளர்க்க முயற்சித்திருக்கிறார், மணல் ஏதுவாக இல்லாததால்,  தன் கிராமத்தில் சிவப்பு எறும்புகளை கொண்டு வந்து அங்கே விட்டிருக்கிறார்.  சிவப்பு எறும்புகள் மண்ணின் தன்மையை செழிப்பாக மாற்றுமாம். பின்பு அங்கு பல மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். இப்பொழுது 300 ஹெக்டேர் பரப்பளவில் பெரும் காடாக மாறியிருக்கிறது அந்த இடம். பல பறவைகளும் விலங்குகளும் வாழுமிடமாக மாறியிருக்கிறது.

வாழ்க ஜாதவ் பயேங்.

மேலும் தகவல்களுக்கு இவரைப் பற்றி இணையத்தில் தேடலாம்...


வெளியூர்க்காரங்களா சொல்லிக்கிட்டு இருக்கேனா? நம்ம ஊரு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எவ்வளவோ கண்டுபிடிச்சு சொல்லியிருக்கார்



அவரைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். அவர் சொன்னதில் ஒரு கருத்தை மட்டும் இங்க சொல்லிக்கிறேன். அதாவது,
ஒவ்வொருத்தரும் பிள்ளை மாதிரி ஒரு மரமாவது வளருங்கள்.” இன்னும் இவர் சொல்லும் இயற்கை விவசாயம், உணவு முறை என பல கருத்துக்கள் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன. நேரம் கிடைத்தால் தேடிப் பாருங்கள்

மேலே கூறிய மூவரைப் பற்றியும் செய்தித்தாள்களில் படித்தவற்றை தங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.


நாம் என்ன செய்யப் போகிறோம்:

சரி, இவர்கள் செய்ததைப் பார்த்தோம், நாம் என்ன செய்யப் போகிறோம். இவர்களைப் போல மரங்களோ, காடுகளோ நம்மால் உருவாக்க முடியுமா?
பெரிய கேள்வி தொக்கி நிற்கிறது! இயற்கையைப் பேணி காக்க நம்மால் இயன்றதை நேரடியாகவே மறைமுகமாகவோ செய்யலாம்.  

இந்த மாதிரி நம் வசிக்கும் கட்டிடம் முழுவதும் மரம் வளர்க்க முடியாவிட்டாலும்



நம் வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு இடத்தில், இடமிருந்தால் ஒரு மரத்தை வளர்க்கலாம்... மரம் வளர்க்கும் அளவுக்கு இடமில்லையா? ஒரு செடியையாவது வளர்க்கலாம்... தொட்டிகளில் செடி வளர்க்கலாம்... இது ஒரு பொழுது போக்காகவும் இருக்கும், ஒரு நல்ல மன அமைதியையும் கொடுக்கும். அலுவலகம் கிளம்பும் முன், வேலை முடிந்து வந்த பின்பு அல்லது ஓய்வு நேரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, செடியையோ மரத்தையோ சுற்றிப் பார்க்கும் போது ஒரு வித மகிழ்ச்சி கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

இது எதுவும் செய்ய இயலவில்லையா? சரி இன்னொன்று செய்யலாம் வாருங்கள். அவ்வப்போது திடீரென சில சமூக ஆர்வலர்கள் எதாவது ஒரு திட்டத்தின் கீழ் ஆங்காங்கே மரங்களை நட்டு, அதை ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டு, பின்பு அதைச் சுற்றி கம்பி வலை போட்டு விட்டு, அன்றோடு மறந்து போயிருப்பார்கள். ”மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவானுஅந்த மரமும் ஏங்கித் தவித்து கடைசியில் கருகிப் போகும். சுற்றிப் போடப்பட்டிருந்த கம்பி வலை எங்கோ ஒரு பழைய இரும்புக் கடையில் கிடக்கும். அது போல பராமரிப்பாரற்றுப் போன மரங்களையோ செடியையோ கண்டால் நம்மால் இயன்றளவுக்கு நாள்தோறும் தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம்.

அடப்போங்க, இதெல்லாம் எங்க போய் தேடுறதுனு நினைச்சா, இன்னொன்னும் செய்யலாம்... மறைமுகமாக மரம் வெட்டுவதைத் தடுக்கலாம். அலுவலகத்தில் ப்ரிண்டர் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எதை எடுத்தாலும் பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்குவதை தவிர்க்கலாம். இப்பொழுது எல்லா கோப்புகளையும் கைபேசியில் அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து நிற்கிறது. கணினி மயமான உலகத்தில் எலக்ட்ரானிக் கோப்புகளை பாதுகாக்க, பல ஜிபி (Gigabyte) கொள்ளவு கொண்ட USB Flash Drive கள் கிடைக்கின்றன. காகிதங்களில் பிரதி எடுக்காமல் வேண்டுமானவற்றை இவற்றில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். .

அதற்கும் மேலாக மேகத்திலும் சேமித்து வைக்க தொழில்நுட்பம் துணைபுரிகிறது, என்னங்க குழம்பிட்டீங்களா, Cloud Storage தொழில்நுட்பத்தைச் சொன்னேன். இன்றைய தகவல் தொழில்நுட்பம் அளிக்கும் இந்தச் சேவையை பயன்படுத்தி மேலே மேகத்தில் ஏற்றி வைத்து விட்டு, வேணுங்கிறப்ப இறக்கிப் பார்த்துக் கொள்ளலாம் :-). காகிதங்களை வீணாக்க கூடாது என்பதை அறிவுறுத்துவதற்காகவே இப்பொழுது அலுவலக மடல்களின் சிக்னேச்சரில் P Think GREEN - Natural resource isbalanced on our planet, do not consume more than required - be considerate & rational inuse !! இது போன்று சேர்த்துக் கொள்கிறோம். தயவுசெய்து காகிதங்களை வீணாக்காமல், தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோம்.

மரம் வளர்ப்பை மற்றும் பேசுகிறேனே, தண்ணீரைப் பற்றி பேசவில்லை என்று நினைக்கிறீர்களா... மரம் வளருங்கள்... தண்ணீர் தானா வரும்....

இயற்கையைப் பேணுவொம்...

மரம் வளர்ப்போம்....

அலுவலகங்களில் தேவையில்லாமல் பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்....

அடுத்த பதிவில் நீர் வளம் மற்றும் பாதுகாப்பைப் பற்றிப் பார்க்கலாம்..



அனைவருக்கும் நன்றி....

(நன்றி: அனைத்துப் படங்களும் இணையத்தில் இருந்து)

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஜாதவ் பயேங், திம்மக்கா - இவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன்... மிகவும் போற்றப்பட வேண்டியவர்கள்...

மிக்க நன்றி சார்...

Balaji said...

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே...

semmalai akash said...

தூள் கெளப்புறீங்க அண்ணே, சிந்திக்க வைக்கும் பதிவு.

Balaji said...

மிக்க நன்றி தம்பி...

Shankar M said...

அருமையான் தகவல்கள் ; சிந்திக்கவும் செயல்படவும் தூண்டும் பதிவு.... தொடரட்டும் @ Balaji

Balaji said...

நன்றி சங்கர்....
ஊக்கம் தருகிறது உங்கள் பின்னூட்டம்....

Yaathoramani.blogspot.com said...

இன்றைய சூழலில் அனைவரும் அவசியம்
அறிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் அடங்கிய
அருமையான பதிவு
அறியாதன பல அறிந்து கொண்டேன்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Balaji said...

நன்றி ரமணி ஐயா...