Saturday, September 22, 2012

உணவு வகைகள் -- மண்டி பிரியாணி (Mandi Biriyani)


அனைவருக்கும் வணக்கம்,

முந்தைய பதிவில் பார்பிக்யூ சிக்கன் & மட்டன் பற்றிப் பார்த்தோம்... வாருங்கள், இந்தப் பதிவில் பிரியாணி - மண்டி பிரியாணி பற்றிப் பார்ப்போம்...

அசைவ விரும்பிகளுக்கு பிரியாணினாலே ஒரு விதமான மகிழ்ச்சி தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்... 

இந்த பிரியாணிலதான் எத்தனை எத்தனை வகை...  கோழி பிரியாணி, ஆடு பிரியாணி, மீன் பிரியானி, காளான் பிரியாணி, இறால் பிரியாணி, தம் பிரியாணி இப்படி பல வகை பிரியாணிகள் நாம் கண்டிருக்கிறோம் உண்டிருக்கிறோம்... 

கோழி பிரியாணி:



ஆடு பிரியாணி:


நம்ம ஊருல ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு விதமான பிரியாணி புகழ்பெற்றிருக்கிறது. 

தலைப்பாக்கட்டு பிரியாணி (திண்டுக்கல்),ஆம்பூர் பிரியாணி,ஹைதராபாத் பிரியாணி,மலபார் பிரியாணி,பெங்கால் பிரியாணி, சிந்தி பிரியாணி என பல ஊர்களின் பெயர்களில் புகழ்பெற்ற பிரியாணிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.... நம்மில் பலர் உண்டும் ரசித்திருக்கிறோம்.... ஒவ்வொரு ஊர் பிரியாணியும் ஒரு தனித்துவமான சுவைதான்.... 

கடைல வாங்கிச் சாப்பிடுற பிரியாணிய விடுங்க....இஸ்லாமிய சகோதர்களின் வீட்டில் சமைக்கப்படுகிற பிரியாணியின் சுவையே தனி சுவைதான்....  ரமதான், பக்ரீத் பெருநாட்களில் இஸ்லாமிய நண்பர்கள், பெரிய தூக்குச் சட்டியில் பிரியாணியும் தால்சாவும் கொண்டு வந்து கொடுப்பாங்க... அந்த தால்சாவின் சுவை எந்த ஊருலயும் எந்த உணவகத்துலயும் கிடைக்காது....  


சரி வாங்க, நாம இப்ப பார்க்கப் போவது மண்டி பிரியாணி.... 



அமீரகத்தில் மிகவும் பிரபலமான உணவு வகையான இந்த மண்டி பிரியாணியின் பிறப்பிடம் யேமன்... இது யேமனின் பாரம்பரிய உணவு என்று நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பொதுவாக பாஸ்மதி அரிசியில் செய்யப்படும் பிரியாணியில், சேர்க்கப்படும் இறைச்சி சமைக்கப்படும் பக்குவம்தான் இந்த மண்டி பிரியாணியின் தனித்தன்மை. மேலும் இந்த மண்டி பிரியாணியைச் சாப்பிடும் முறையும் கொஞ்சம் வித்தியாசமானது... 

இளங்கறியாக (ஆடு & கோழி) தேர்ந்தெடுத்து இந்த மண்டி பிரியாணிக்கு பயன்படுத்துகிறார்கள். கோழியை குறுக்கு நெடுக்காக இரண்டு துண்டுகளாக வெட்டி விடுகிறாகள், ஆட்டிறைச்சியை ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்கிறார்கள். பின்பு இறைச்சியை தந்தூரி அடுப்பில்  இறைச்சியை வேக வைத்து விட்டு, புகை வெளியேறாத படி மூடி விடுகிறார்கள்... நன்கு வெந்த பிறகு அந்த இறைச்சியை எடுத்து பிரியாணியுடன் சேர்த்து பரிமாறுகிறார்கள்....




தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயம் இவற்றை பச்சையாக அரைத்து தயாரிக்கப்பட்ட சட்னியை மண்டி பிரியாணியுடன் தொட்டுக் கொள்வதற்கு தருகிறார்கள். மேலும், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், லெட்யூஸ், எலுமிச்சை ஆகியவற்றால் செய்யப்பட்ட சாலட்டும் கிடைக்கும்.


இங்கு மண்டி ரெஸ்ட்ராண்ட்கள் என்று இந்த மண்டி பிரியாணி உணவுகளுக்காகவே தனிப்பட்ட உணவகங்கள் இருக்கின்றன... இந்த உணவங்களில் பெரும்பாலும் நாற்காலி மேசைகள் இருப்பதில்லை... கார்பெட் தரையில் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் அமர்ந்து சாப்பிடலாம்... ஒரு நல்ல சுவையான உணவு....




பொதுவாக, இந்த மண்டி பிரியாணி பெரிய விருந்துகள், கல்யாண விருந்துகள், அலுவலகத்தில் விருந்துகளின் போது பரிமாறப்படுகிறது.... இதில் சிறப்பான ஒன்று ஒரு தட்டு அல்ல தாம்பாளத்தில்தான் மண்டி பிரியாணி பரிமாறப்படும்... மொத்தமா ஒரு தாம்பாளத்தில் ஐந்து பேர் அமர்ந்து சாப்பிடலாம்... சுற்றி உக்கார்ந்து கொண்டு அவரவர் முன்னால் உள்ள பிரியாணியை எடுத்துச் சாப்பிட வேண்டியதுதான்...




நன்றி: அனைத்துப் படங்களும் இணையத்திலிருந்து (கடைசிப் படத்தை தவிர:-)

அடுத்த பதிவில் சில சிறு உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்....

முந்தைய பதிவுகளைக் காண இங்கே சென்று பாருங்கள்...

அனைவருக்கும் நன்றி...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்ப எங்கே ஊரு பேமஸ் : வேணு பிரியாணி...

Balaji said...

அப்படியா அடுத்த முறை ஊருக்கு வரப்ப, திண்டுக்கல் பக்கம் வந்தா சாப்பிட்டுறேன்...

தகவலுக்கு நன்றி.