Wednesday, November 14, 2012

சைக்கிள்காரர் வீடு....அப்பாவுக்கு வேலை மாற்றலாகி ஒரு கிராமத்திற்கு அருகில் இருக்கும் தொழிற்சாலையில், எஞ்சின் தயாரிப்பு பிரிவில் உற்பத்தி பொறியாளாராக பணி நியமனம் செய்திருந்தார்கள்... பிறந்ததிலிருந்து பனிரெண்டு ஆண்டுகள் வரை நகர வாழ்க்கை வாழ்ந்திருந்த எனக்கு ஒரு கிராமத்திற்குப் போகிறோம் என்ற எண்ணமே ஒரு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது... அப்பா முதலில் பயந்தார், மகன் அடம்பிடிப்பானோ, கிராம வாழ்க்கை பிடிக்குமா என்றெல்லாம்... ஆனா எனக்கோ கிராமம்னா எப்படி இருக்கும், புது இடம், பள்ளிக்கூடம் என்றெல்லாம் புதிய இடம் பற்றிய சிந்தனைதான்...

வேலைக்கு சேர வேண்டிய ஒரு வாரத்திற்கு முன் நானும் அப்பாவும் அந்தக் கிராமத்திற்குப் போனோம் தங்குவதற்கு வீடு தேடி... காலையில் பேருந்து ஓர் இடத்தில் எங்களை இறக்கி விட்டுச் சென்றது. பேருந்து இறக்கிவிட்ட இடத்திலிருந்த பெரிய ஆலமரத்தடியில் நின்று கொண்டிருந்த சிலர் அவர்களாகவே வந்து எங்களிடம் பேசினார்கள்...

நாங்கள் அணிந்திருந்த பேண்ட் சட்டையை அவர்கள் வெறித்துப் பார்ப்பது போல எனக்குத் தோன்றியது.... அப்பா எங்களைப் பற்றிய விவரம் சொல்லி வீடு வாடகைக்கு பார்க்க வந்திருக்கோம் என்று சொன்னதும் அவர்கள் பேச்சில் மரியாதை மேலும் கூடியது.... சார்வுக தான் எஞ்சின் பேட்டரிக்கு அதிகாரியா வந்திருக்காகனு அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். 

”சார் 2 மைல் நடந்து போகணும்... ஊருக்குள்ள போறதுக்கு பஸ்லாம் இல்லங்க சார்...”
.
”இந்தப் பாதையில நடந்து போயிட்டே இருங்க சார், சந்தைக்குப் போன வண்டிக இப்ப ஊருக்கு திரும்பி வந்துரும், அதுல ஏறிக்கலாம்” னு சொன்னாங்க....

2 மைல்னா எத்தனை தூரம்னு எனக்கு அப்ப தெரியல....அவர்கள் காட்டிய செம்மண் சாலையில் நடக்க ஆரம்பித்தோம்... மழைக்காலமாக இருந்ததால் ஆங்காங்கே செம்மண் சகதியாகவும் இருந்தது... பேண்ட்டை கொஞ்சம் மடக்கிவிட்டு கவனமாக நடந்தோம்...ஆலமரத்தடியில் இருந்து ஒருத்தர் சத்தமாக கூப்பிட்டார்.... ”சார்........”

ரெண்டு பேரும் திரும்பி பார்த்தோம்...

”சைக்கிள்காரர் வீட்டுக்கு போகணும்னு கேளுங்க சார் , ஆருனாலும் வழி சொல்லுவாக”

அப்பா பதிலுக்கு சரினு சொல்லிட்டு என் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்....

சைக்கிள் காரர் வீடா? வீடு முழுவதும் சைக்கிள் வச்சிருப்பாரோ? இல்லனா சைக்கிள் கடை எதுவும் வச்சிருப்பாரோ !? நிறைய சைக்கிள் இருந்தா அப்பாவ எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரச் சொல்லணும்னு என மனதுக்குள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்க....

அப்பா பேசிக்கிட்டே வந்தார்.... தம்பி.... இருக்கப் போற இடம் பிடிக்குதோ பிடிக்கலையோ.... இனிமேல் இங்கதான் இருக்கணும்... அதுனால பிடிக்கும்னு நினைச்சுக்கிட்டே  ஊரப் பாத்துக்கிட்டு வான்னார்....

என்னமோ எனக்குப் பிடிச்சித்தான் இருந்தது... தானாக வந்து பேசிய மனிதர்கள்... எங்கள் பேண்ட் சட்டையைப் பார்த்த பார்வை... ஒவ்வொரு பேச்சிலும்  அவர்கள் சொன்ன ”சார்” ... செம்மண் சாலை என எதோ ஒன்று எனக்கு மகிழ்ச்சியைத் தநது கொண்டிருந்தது...

நடந்துக்கிட்டே இருந்தோம்....

கொஞ்சம் தூரம் நடந்த பிறகு மெல்ல எங்கள் காதுகளுக்கு மணியோசை கேட்டது.... அப்பா திரும்பி பார்க்காமலே சொன்னார்... மாட்டு வண்டிக வரப் போகுது.... திரும்பிப் பார்த்தேன்... வரிசையாக மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தன...எங்கள் அருகில் வரவும் வண்டிகளை நிறுத்தி, சார்... ஏறிக்கங்கன்னார் வண்டி ஓட்டி வந்தவர்... 

ஆலமரத்தடியில் நின்றவர்கள் சொல்லி அனுப்பியிருப்பாங்க போல..

வண்டியில் அப்பா ஏறப்போனார்... இருங்க சார்னு சொல்லி தலைப்பாகை கட்டியிருந்த துண்டை எடுத்து வண்டியில் இருந்த தூசியைத் தட்டி விட்டு எறச்சொன்னார்...

அப்பா ஏறி அமர்ந்ததும், வண்டிச்சக்கரத்தில் உள்ள ஆரத்தில் கால் வைத்து என்னை ஏறி நானும் அமர்ந்தேன்...  

மழையில் நனைந்திருக்கும் போல மாட்டு வண்டி, பலகையெல்லாம் ஊறியிருந்தது.... மாடுகளின் கொம்புகளில் மணி அழகாக மாட்டப்பட்டிருந்தது... கழுத்திலும் ஒரு மணி தொங்கியது... செல்லும் வழியில் மக்கள் உழவுப் பணியில் ஈடுபட்டிருப்பதை பார்த்துக் கொண்டே சென்றேன்...அப்பா வண்டிக்காரரிடம் பேசிக்கொண்டு வந்தார்.... சைக்கிள் காரர் வீட்டுக்குப் போகணும், வேலைக்கு வந்திருக்கேன், வீடு வாடகைக்கு பார்க்கணும்.... 

”ம்ம்ம் சொன்னாய்ங்க சார்... கம்மாக்கரைல இறக்கி விட்டுடுறேன் அங்கன விசாரிச்சுக்கிட்டு போங்க சார்” வண்டிக்காரர் சொன்னார்....

கொஞ்ச தூரப் பயணத்திற்குப் பின் ஓரிடத்தில் இறக்கி விட்டுட்டுப் போனார் வண்டிக்காரர்...

பெரிய ஏரி மாதிரி இருந்தது அந்தக் கண்மாய்...  ஒரு பத்து நிமிடம் அங்கே நின்றிருப்போம்... சட்டையில்லாமல் என் வயதையொத்த சிறுவன் வெள்ளாட்டு மந்தையை ஓட்டிக் கொண்டு வந்தான்.... கையில் ஒரு தொரட்டியும் ஒரு தூக்குவாளியும் வைத்திருந்தான்...

தம்பி சைக்கிள் காரர் வீட்டுக்கு எப்படிப்பா போறது.... எங்களை ஏற இறங்க பார்த்துட்டு, ஒரு திசையில் கையை நீட்டிச் சொன்னான்...

”இங்கிட்டு தெக்கால நடங்க சார்.... ஒரு மதகு வரும் அதைத்தாண்டிப் போங்க ஒரு ஒத்தையடிப் பாதை வரும்... அதுல போனீங்கனா ஊரு வரும்.... அங்கன ஆருட்டனாலும் கேளுங்க சார்.... ”

அவன் சொன்ன திசையில் நடக்கத் தொடங்கினோம்.... நான் திரும்பிப் பார்த்தேன்... அந்தச் சிறுவன் இன்னும் எங்களைப் பார்த்துக் கொண்டே அதே இடத்தில் நின்றிருந்தான்...

மதகைத் தாண்டி , ஒத்தையடி பாதையில் நடந்து ஒரு வழியாக ஊருக்குள் நுழைந்தோம்...

சிறிய கிராமம்... குடிசை வீடுகளும் ஓட்டு வீடுகளும் மாறி மாறி இருந்தன.... பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது... சில ஓட்டு வீட்டுத் திண்ணைகளில் சிவப்பும் வெள்ளையும் பட்டை பட்டையாக பெயிண்ட் அடித்திருந்தார்கள்.

அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர் எங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே எங்களோடு நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.... கொஞ்ச தூரம் போனதும் ஒருத்தர் வந்து பேசினார்...

”என்னாங்க சார் யாரைப் பார்க்கணும்...”

அப்பா எங்களைப் பற்றிய விவரம் சொல்லி, சைக்கிள்காரர் வீட்டுக்குப் போகணும்... என்று சொன்னார்...

ரொம்ப ஆவலா இருந்தேன்... சைக்கிள் காரர் வீட்டைப் பார்க்க.... சைக்கிள் நிறைய இருக்குமோ!? இன்னும் என் மனதில் அந்த எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது...

”அப்படியா... சரி சரி வாங்க சார்.... எங்க மாமா வீடுதான்... வாங்க வாங்க” ... சொல்லிட்டு எங்கள் முன்னாடி பெருமிதமாக நடந்து சென்றார்...

ஒரு பெரிய வீட்டுக்கு முன்னாடி கொண்டு போய் எங்கள நிறுத்தினார்... திண்ணைல உட்கார சொல்லிட்டு குரல் கொடுத்தார்... 

”மாமாய் உங்கள் பாக்க வந்திருக்காக... அசலூர்க்காரகளா இருக்காக....”

”தா வாரேன்... ஒக்காரச் சொல்லு” உள்ளேயிருந்து ஒரு கனத்த குரல் கேட்டது....

அந்த வீட்டின் அமைப்பே நல்லா இருந்தது... ஊருலயே இதான் பெரிய வீடா இருக்கும் போல.... வீட்டு முன்னாடி ஒரு கூட்டி வண்டியும், தூரத்தில் ஒரு பக்கம் மாட்டுக் கொட்டகையும் இருந்தன... இரண்டு பெரிய வேப்பமரங்கள் ஒரு வளைவு போல இருந்தன வீட்டிற்கு முன்னால்... ரொம்ப ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்...

வெள்ளை வேட்டியும், சல்லடை போல இருக்கும் பனியனும் அணிந்த ஒருத்தர் வீட்டுக்குள்ள இருந்து வந்தார்... 

”வாங்க ... வணக்கம்...”

அப்பா வணக்கம் சொன்னார்... நான் சைக்கிள்காரர பார்த்துக்கிட்டே இருந்தேன்....

”என்ன விசயமா வந்திருக்கீக சார்....”

அப்பா விவரம் சொல்ல தொடங்குமுன்னே... வீட்டுக்குள்ள திரும்பி “ஏ புள்ள ... மோர் கொண்டா” னு சொல்லிட்டு எங்கள பாத்து சொல்லுங்க சார்ன்னார்...

நான், சைக்கிள்கள் எங்காவது நிறுத்தி வச்சிருக்காரானு சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.... ம்ஹும் எங்கயும் காணாம்....

அப்பா வந்த விவரத்தைச் சொல்லி முடித்ததும்... 

அவர் முகம் கண்ணெல்லாம் கொஞ்சம் விரிந்தது.... அவருக்கும் கொஞ்சம் பெருமையாக இருந்திருக்கும் போல...

”ஓ அப்படியா சேதி... சரிங்க சார்... என் பழைய வீட்டுல தங்கிக்கங்க... இங்க காரை வீடு கட்டி வந்து பதினெட்டு வருசமாச்சு.... அங்க பழைய வீட்டுல பழைய தட்டு முட்டுச்சாமானா போட்டு வச்சிருக்கேன்... ஒரு வாரத்துல சுத்தம் பண்ணி மராமத்து செஞ்சுபுடுறேன்... பின்னாடியே கேணி இருக்கு.... எந்தப் பிரச்சனையும் இல்ல...  நீங்க தங்கிக்கலாம் சார்...

”வாடகை ?”

”ஹா ஹா.... அட விடுங்க சார்... வீட்டப் பாருங்க... பிடிச்சிருந்தா தங்கிக்கங்க... நீங்க குடுக்கிறத குடுங்க.... சும்மா கெடக்குற வீடுதானே....  மீண்டும் ஒரு சிரிப்பு சிரித்தார்...ஹா ஹா ஹா.....”

பேசிக்கொண்டிருக்கும் போதே , அவர் மனைவி , சிரித்த முகத்துடன் வந்து மோர் கொடுத்தாங்க...

குடிச்சிட்டு கிளம்புறோம்னோம்...

”சார் வீட்டப் போய் பாத்துட்டு வாங்க, சமைக்கச் சொல்றேன் சாப்பிட்டுப் போகலாம்...”

”இல்லங்க வீட்டப் பாத்துட்டு கெளம்புறோம்....”

”இல்ல சார்  வீட்டப் பார்த்துட்டு வாங்க, நீங்க இப்ப கெளம்புனாலும் டவுனுக்குப் போய்ச்சேர மதியம் மூனு மூன்ரை ஆயிரும்... சின்னப்பயல கூட்டியாந்திருக்கீக பசி தாங்குவானா.... சாப்பிட்டுப் போங்க சார்....”

அவர் பேச்சின் உண்மையும், அவரின் விருந்தோம்பலும் அப்பாவைச் சம்மதிக்க வைத்தது.... சரி வீட்டப் பார்த்துட்டு வாரோம்னார் அப்பா...

”ஏய் மாப்ள, களத்து வீட்ட காட்டிட்டு வாய்யா....  ”

அவர் மாப்ளயோடு போய் வீட்டப் பாத்துட்டு வந்தோம்... எங்களுக்குப் பிடிச்சுப் போச்சு...

பின்பு சைக்கிள் காரர் வீட்டுல சாப்பிட்டு , அவங்க ஏற்பாடு செய்திருந்த கூட்டு வண்டியில் பஸ் நிறுத்தத்திற்கு பயணமானோம்...செல்லும் வழியில் வண்டி ஓட்டுறவரிடம் அப்பாவைக் கேட்கச் சொன்னேன்...

”சைக்கிள்காரர் வீடுனு சொல்றாங்களே... அங்க ஒரு சைக்கிள் கூட காணாமே, ஏன் அந்தப் பேரு வச்சிருக்காங்க..” அப்பா கேட்டார்....

”ஹா ஹா ஹா... அதா சார்.... எங்க ஐயாதான் ஊருலயே மொதமொதலா சைக்கிள் வாங்கியாந்து ஓட்டுனவக... எப்பயாவது டவுனுக்கு போகணும்னா வண்டிய வெளில எடுத்து ஓட்டுவாக.... மத்த நேரத்துலலாம் சுத்தமா தொடச்சு வீட்டுக்குள்ள வச்சிருப்பாக..... அதான் ஐயாவுக வீட்டுக்குப் பேரு சைக்கிள்காரர் வீடு.”

நாங்க பஸ்ஸ பிடித்து ஊர் வந்து சேர்ந்தோம்... அடுத்த வாரம் சைக்கிள்காரர் வீட்டுக்கு குடி போகணும்.


(நன்றி: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து....)

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நாங்களும் பயணத்தில் வந்தது போல் இருந்தது... அருமை...

சகாதேவன் said...

//சின்னப்பயல கூட்டியாந்திருக்கீக பசி தாங்குவானா.... சாப்பிட்டுப் போங்க சார்....”// I like the cyclekaarar's
hospitality.
s.vadivelmurugan
(vedivaal.blogspot.com

தொழிற்களம் குழு said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

மிக வேகமான திரட்டி
http://otti.makkalsanthai.com

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

Balaji said...

நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே....

Balaji said...

நன்றி திரு. சகாதேவன் அவர்களே...

சேட்டைக்காரன் said...

அருமையா எழுதியிருக்கீங்க பாலாஜி! சைக்கிள்காரர் என்று வாசித்ததும் ஓரளவு யூகிக்க முடிந்தாலும், அதனால் சற்றும் சுவாரசியம் குறைந்துவிடாமல் அழகாய் உடனே அழைத்துச் செல்கிறது உங்களது நடை! சபாஷ்!

Balaji said...

சேட்டைக்காரன்...
மிக்க நன்றி...

Semmalai Akash! said...

அண்ணா,

அருமையான எழுத்துநடை, கிராமத்து மனம் வீச, அப்படியே அழகா சொல்லிருக்கிங்க பாராட்டுகள்.

Balaji said...

நன்றி தம்பி...

Anonymous said...

கிராமம் பற்றி நானும் எழுதறேன்ற பேர்ல மொக்க போடாமல், ரொம்ப சுவாரஸ்யமாகவும் அருமையாகவும் எழுதிய பதிவு.தொடரட்டும்...

Balaji said...

மிக்க நன்றி

அ.மு. நெருடா said...

அட்டா! அருமைண்ணே... அந்த மக்க... ஊர் பொடுசுக எல்லாமே ஏக்கத்தை வரவழைத்துவிட்டது.