Sunday, November 4, 2012

குளோபல் வில்லேஜ் ஒரு பார்வை -- துபாய் Global Village

குளோபல் வில்லேஜ் 2012 -2013



அனைவருக்கும் வணக்கம்,

துபாயில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குளோபல் வில்லேஜ், 2012 அக்டோபர் 21 ம் தேதி தொடங்கி 2013 - மார்ச் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. 

குளோபல் வில்லேஜ் முதன்முதலாக கடந்த 1996 ஆம் ஆண்டு துபாயின் க்ரீக் என்னும் பகுதியில் சிறு சிறு கடைகளுடன் பல நாடுகள் கலந்து தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட ஆண்டில் ஏறத்தாழ 500,000 மக்கள் இந்த குளோபல் வில்லேஜை பார்வையிட வந்தனர்.

இரண்டாம் ஆண்டில் 18 நாடுகள் கலந்துகொள்ள 900,000 மக்கள் கலந்து கொள்ள பெரும் நிகழ்ச்சியாக நடந்தது...

இப்படி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த குளோபல் வில்லேஜ், பத்தாண்டுகள் கழித்த பின்பு, பங்குபெறும் நாடுகளின் எண்ணிக்கையும், உலகெங்கிலும் இருந்து வருகைதரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கூடியதால் 2005 ஆம் ஆண்டு முதல் துபாய் லேண்ட் (Dubai Land) என்னுமிடத்தில் குளோபல் வில்லேஜிற்காக நிரந்தரமாக ஒரு இடம் அமைக்கப்பட்டது...மிகப்பெரிய கார் நிறுத்திமிட வசதியும் செய்து கொடுத்திருக்கிறார்கள். துபாயிலிருந்து பேருந்து வசதியும் உள்ளது.


இது என்ன குளோபல் வில்லேஜ்... இதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் அதன் வரலாற்றைக் கூறுகிறேன் என்று பார்க்கிறீர்களா?

இதோ வருகிறேன்

குளோபல் வில்லேஜ்:  (Where the world comes together)

(21-அக்டோபர்-2012 முதல் 30-மார்ச்-2013 வரை)

உலகின் பலநாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி தங்கள் நாட்டு கலாச்சாரம், பொழுதுபோக்கு போன்றவற்றை வெளிப்படுத்தவும், சுற்றுலா இடமாகவும், தங்கள் நாட்டுக்கே உரித்தான சில சிறப்பான பொருட்களை வணிகம் செய்யவும் அமைந்துள்ள / அமைக்கப்பட்டுள்ள ஓர் இடம்தான் குளோபல் வில்லேஜ். 2010 ஆண்டு புள்ளி விபரத்தின் படி 28 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 4.5 மில்லியன் மக்கள் வந்து செல்கிறார்கள்.

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக காட்சி மாடங்கள் (Pavilion) அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தநாட்டிற்குரிய காட்சி மாடங்களில் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் கடை வைத்திருப்பார்கள். சிறப்பு என்னவென்றால் கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் நாட்டிற்குரிய பாரம்பரிய உடை அணிந்திருப்பார்கள்.... கடைகளின் உள் அமைப்பும் அவர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும்.

இந்தியா:



கார் நிறுத்துமிடத்திலிருந்து, குளோபல் வில்லேஜ் அரங்கிற்கு செல்ல சைக்கிள் ரிக்‌ஷா வசதியும் உள்ளது. நமது டெல்லியைச் சேர்ந்த ரிக்‌ஷாக்காரர் ஒருவர் இந்தப் படத்தில்.... 



இவர் படத்தை இவருக்கு அனுப்புமாறு என்னிடம் ஒரு விசிட்டிங் கார்டு குடுத்தார்.... அதில் அவர் இந்திய அலைபேசி எண் மட்டுமே உள்ளது... பின்பொரு நாள் அழைத்துப் பேசி இந்தப் படத்தை அவருக்கு அனுப்ப வேண்டும் :-)

இந்த ரிக்‌ஷாக்களில் அரபிகளும், வெள்ளைக்காரர்களும் விரும்பி பயணம் செய்கிறார்கள்... நம்ம ஆட்கள் ஏறுவது மிகவும் குறைவே :-)))

சரி வாங்க ரிக்‌ஷாவில் ஏறி குளோபல் வில்லேஜ் உள்ளே செல்லலாம்...

மிகப்பெரிய இடம்... ஆங்காங்க ஒவ்வொரு நாட்டின் காட்சி மாடங்கள்....ஒவ்வொரு நாடும் தங்களின் கலாச்சாரத்தை அனைவருக்கும் காட்டும் வகையில் தங்கள் இடங்களை அமைத்துள்ளன... 

எகிப்து:



வியட்நாம் & அஃப்கானிஸ்தான்



பலூன்கள், பொம்மைகள் விற்பவர்கள் ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்...



இது மட்டுமின்றி ஒரு தனி இடம் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே அனைவரும் விளையாடக்கூடிய வகையில் பல விளையாட்டுகள் நிறைந்திருக்கின்றன.



பலநாட்டு உணவகங்கள் உள்ளே அமைத்திருக்கிறார்கள். விதவிதமான உணவு வகைகளை உண்டு மகிழலாம்.

குளோபல் வில்லேஜின் உள்ளே ஆங்காங்கே பல மேடைகள் உள்ளன. அவற்றில் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். தங்கள் நாட்டு கலாச்சாரத்தை வெளிபடுத்தும் வகையில் கலைஞர்கள் நிகழ்சிக்களை நடத்திக் கொண்டிருப்பார்கள்....









பார்வையாளர்களைக் கவரும் விதமாக, கலைஞர்களின் அணிவகுப்பு அவ்வப்போது நடத்தப்படுகின்றது. உங்களோடு பகிர்ந்து கொள்ள அந்த காணொளியை பதிவு செய்திருக்கிறேன். கண்டு மகிழ இங்கே சென்று பாருங்கள்.



இது போல் நடக்கும் நிகழ்ச்சிகளில் பலூன் விற்பவர், பொம்மைக் கடைக்காரர்கள், ஓடியாடும் குழந்தைகள்,கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், மேடைப் பாடல்கள், தீ விளையாட்டு காட்டுபவர் என அனைவரையும் ஓரிடத்தில் கண்டு மகிழும் போது  என்னைப் போன்று இங்கிருப்பவர்களுக்கு, ஊரில் திருவிழாவிற்கு சென்று வரும் நினைவும் உணர்வும் வரும் என்பது உண்மை.

நன்றி.

7 comments:

Vishnu... said...

மிக அருமையான பகிர்வு நண்பரே .. குளோபல் வில்லேஜ் பற்றி தெரிந்து கொண்டேன் ..புகைப்படங்கள் அனைத்துமே அருமை .. கண்களை கவர்கிறது அதிலும் வியட்நாம் படம் hdr photography முறை பயன்படுத்தியத்து போல இருக்கிறது நண்பரே ..அருமை ..

அன்புடன்
விஷ்ணு

settaikkaran said...

பலே பாண்டியா என்பதுபோல, உங்களை ‘பலே பாலாஜி’ என்று அழைக்கலாமா என்று யோசிக்கிறேன். புகைப்படங்களும் இடுகையும் அசத்தல்!:-)

Balaji said...

தொழிற்களம் குழு said...

ஓ சரிங்க...

நன்றி...

Balaji said...

Vishnu... said...

மிக்க நன்றி நண்பரே...

Balaji said...

சேட்டைக்காரன்...

மிக்க நன்றி ஐயா... :-)))

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களும் பகிர்வும் அருமை...

பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி...

Balaji said...

திண்டுக்கல் தனபாலன்...

மிக்க நன்றி நண்பரே...