Friday, May 24, 2019

பழி - ஒரு திரில்லர் சினிமாவே எடுக்கலாம்

படைப்புக்கான விமர்சனக் கூட்டங்களும், விமர்சனங்களும் அது தொடர்ந்து வாசகர் கருத்துகளும் படைப்பை, அந்த எழுத்தை மட்டும் பேசி எழுத்தாளனின் குணநலன்களை வன்மத்தோடு தாக்காமல் இருந்தால் நல்ல படைப்புகள் நிறைய வரும்... படைப்பாளிக்கும் செய்யும் மரியாதையும் அதுவேயாகும்... நம்மாள முடியாதத ஒருத்தன் செய்றான்னா, அவனைப் போற்றிப் புகழலைனாலும் பரவாயில்ல, அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்காமல் இருந்தாலே போதும்ப்பா சாமி... புண்ணியமாப் போகும்...

அண்ணன் அய்யனார் விஸ்வநாத்தின் எழுத்து ஓரிதழ்ப்பூ நாவல் மூலமாகத்தான் எனக்கு முதல் அறிமுகம். ஓரிதழ்ப்பூ விமர்சனக்கூட்டங்களில் உண்டாக்கப்பட்ட பிம்பங்களிலேயே அந்த நாவலைப் படிக்கவேண்டும் என்ற ஆவல் பிறந்து, உடனடியாக அந்தப் நாவலை வாங்கிப் படித்ததும், அய்யனாரின் எழுத்தும் வேகமும் மிகவும் பிடித்துப் போனது...அதைப் பற்றி இணையவெளியில் பலர் நிறைய எழுதிட்டாங்க நான் உட்பட... பல நாட்கள் இலக்கிய வட்டங்களில் பேசு பொருளாக இருந்தது அந்த நாவல்... இன்னமும் துர்காவைச் சிலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்...

பழி - இதுவே அய்யனாரின் முதல் நாவல் என்று குறிப்பிட்டிருக்கிறார்... நாவலைத் தொடங்கியதும் “இழுத்து வரும் போது சப்தம் போடாதிருக்க அவன் வாயைப் பிளந்து, பெரிய ஜல்லிக்கல் ஒன்றினைப் பல் தாடைகளுக்கு நடுவில் முட்டுக் கொடுத்திருந்தேன்” என்ற வரியைப் படித்ததும் கொலைகாரனின் கொடூரம் இந்த நாவலுக்குள் வெகுவாக ஈர்த்துப் போகும் விறுவிறுப்பை தூண்டியது.... 

தொடர்ந்து போகப் போக வெகு சாதரணமாக பல சம்பவங்களைச் செய்து கொண்டே போகிறார்கள்... படித்துக் கொண்டிருக்கும் போதே ரேனிகுண்டா படம் போல சில கூலிப்படை கொலைகளைப் பற்றிய படங்களும் காட்சிகளும் நினைவுக்கு வந்து போயின... நிழலுலகும் அதில் சிக்கி இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்வையும், கதாநாயகன் அவன் நண்பர்கள், அவர்களின் பழைய வாழ்வு, நடிகை, முதலாளிகள், பின் மனிதர்களின் வக்கிரம் வெறி கொலை வெறி தொழில் முறை கொலைகாரர்கள் அவர்களின் மன ஓட்டம் என எல்லாவற்றையும் விறுவிறுப்பாக சொல்லிக் கொண்டே போகிறார்... 

முன்னொரு காலத்தில் இது போன்ற நிறைய உண்மைக் கதைகளை கேட்டும் அது போன்ற நபர்களை பார்த்தும் இருப்பதால் நிறைய இடங்களில் நாவலில் சொல்லப்படும் காட்சிகளை உருவகப்படுத்திக்கொள்ள எளிதாக இருந்தது எனக்கு. ஆனால் ஒன்று இந்தக் நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொழில் முறைக் கொலைகாரர்கள் குடிப்பதைப் போல் நிஜ வாழ்வில் சம்பவம் செய்பவர்கள் அப்படியெல்லாம் குடிப்பதில்ல என்று கேள்விப்பட்ட்டிருக்கிறேன்... சிலருக்கு அந்தப் பழக்கம் கூட இருந்ததில்லை...

ஈவுஇரக்கமில்ல தொழில் முறையில் கொலைகளைச் செய்யும் கூலிப்படையினரின் கொலைப் பயணம்தான் இந்த நாவல்...  முதல் அத்தியாயத்தில் நடக்கும் கொடூரக் கொலையே கதாநாயகன் தன் நண்பனைத்தான் செய்கிறான் என்று கருதினேன்.. ஆனால் அடுத்து விஜயலட்சுமி வந்து சந்தன விஜியாகி கடைசியில் மீண்டும் கதாநாயகன் சந்திப்பு, முதல் அத்தியாயக் கொலையை இறுதி அத்தியாயத்தில் தரமாக முடித்தது என திரைக்கதை செம... அய்யனாரண்ணே இந்த நாவலை ஒரு திரில்லர் சினிமாவாவே எடுக்கலாம்... 

வாழ்த்துகள் அய்யானர் அண்ணே...

No comments: