Sunday, April 15, 2018

ஓரிதழ்ப்பூ - ஒரு கதம்பம்

ஓரிதழ்ப்பூ





இந்நாவலைப் பற்றி எழுதுவதற்கு மாமுனியைப் போல் பூக்கட்டிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. நாறு இருநூறு ஐநூறு ஆயிரம் எனக் கோத்த கோவையின் நீளம் முடிவிலியாக தொடரவேண்டும் என்ற ஆவல் நீள்கிறது.  பூக்களையே நாராக்கி கோக்கப்பட்ட கதம்பம் இது... 

பலபூக்களின் மகரந்தச்சேர்க்கை எப்படி இவர் மூளைக்குள் சூழ் கொண்டதோ தெரியவில்லை. பெண்ணியம் மணக்கும் பூக்கூடையை நாவலாக்கித் தந்திருக்கிறார் அய்யனார் எனும் மாமுனி. அல்லது மாமுனி எனும் அய்யனார்.

கதையில் பூத்திருக்கும் பூக்களெல்லாம் என் தோட்டத்தில் என் தெருவில் என் ஊரில் என்னைச் சுற்றி பூத்துக் கிடந்தவைகளே. எனக்குத் தெரிந்த, பயணித்த பூக்களின் பெயர்களுக்கு இவர் வேறு பெயர் சூட்டி அழைத்திருக்கிறார். வேறொரு வேறுபாடு நான் அறியவில்லை.

மாமுனி இறங்கி வந்த வேகமே இந்நாவலுக்குள் நம்மை இழுத்துச் செல்லும் வேகம். மாமுனியும் ரமணரும் காக்கையும் பேசிக்கொள்ளும் பக்கங்கள் கள்ளிப்பழம். முள் நீக்கி உண்ணும் வித்தை கைகூடினால் இனிக்கும். 

நம் ஆள்மனக் கிடக்கைதான் ஆனாலும் நிகழ்வில் நம்மால் இயலாதவைகளை கதைகளாக பார்க்கவோ படிக்கவோ ஆவலும் விறுவிறுப்பும் கூடி தன்னிலை மறந்து புன்னகையோடு ஆர்ப்பரிப்பரிப்பது நம் இயல்பு.  அப்படியாகத்தான் இந்தக் கதையைச் செதுக்கி அவரவர் கதாபாத்திரங்களுக்கு மதிப்பளிக்க நம்போக்கில் நம்மிடமே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார் அய்யனார். 

நாவலின் போக்கில் கிடைக்கின்ற எல்லா இடத்திலும் பொருத்தமான பூக்களால் நிரப்பத் தவறவில்லை. அமுதாக்கா வீட்டு எழவுக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோக்கார நண்பன் முதற்கொண்டு நாவலின் ஓட்டத்திற்கு துணைசெய்யும் கருவியே... எல்லாருக்கும் இப்படியாக ஒரு நண்பன் ஊரில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறான்...

சங்கமேஸ்வரன்கள் ஒரு ஊசியாகச் அவரவர் இடத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... உரிய இலை காய்ந்த சருகாய் காற்றில் நிலையின்றி அலையும் போது,  முற்றிப் பெருத்தவை வெடித்துச் சிதற சங்கமேஸ்வரன்கள் தேவையாகத்தான் இருக்கிறார்கள்... அழுத்தத்தில் இருப்பவை தானாக தளர்வதை விட ஒரு வெடிப்பை வேண்டியே நிற்கின்றன. அதுவே நியாயமும் கூட. 

அமுதாக்கள், ரமாக்கள் மலர்ச்செல்விகள் சாமிகள் ரவிகள் அறியாத / இல்லாத வாழ்வை ஒரு நாற்பது வயதொத்தவன் கடந்திருப்பானா என்பது ஐயம்தான்... 

துர்கா துர்கா துர்கா... அரற்றத்தான் தோன்றுகிறது... பாகுபலியின் தேவசேனையாகவும் தோன்றுகிறாள் ராஜமாதாவாகவும் தொன்றுகிறாள்... இன்னும் என்னென்னவாகவோ தோன்றுகிறாள்... மொத்தத்தில் ஒரு சிலைக்குள்ளோ, ஒரு பாத்திரத்திற்குள்ளோ அவளை அடைத்துப் பார்க்க இயலவில்லை... மழை அடங்கிய இரவில் எங்கிருந்தோ கேட்கும் ஒரு பெருங்காற்றின் ஒலி அவள்....  வெளியெங்கும் மரிக்கொழுந்தாக மணக்கிறாள் ...

சாமானியனின் மனஓட்டங்களை எந்த ஒரு வரையறுக்கப்பட்ட ஒழுக்கக்கட்டுப்பாட்டுக்குள் பூசிமொழுகாமல் அப்படியே இயல்பாக பூத்திருக்கிறது ஓரிதழ்ப்பூ. ஆனாலும்
கனவுகளில் இருந்து திடீர் திடீரென ஏன் அவர்கள் அவ்வளவு அவசரமாக விழித்தெழுகிறார்கள்... இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம் அவர்களின் கனவுகள்...

விமர்சனக்கூட்டத்தில் காமம் காமம் என்றார்கள். தேடிப்பார்த்தேன் காணவில்லை. 
இது இலக்கியம் இல்லை என்றார்கள். எனக்கு அது என்னவென்று தெரியாது, தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை... இது போதுமென்று நிறைகிறேன்...

மாமுனியின் இருநூறு ஆண்டுகள் அறியாத விடையானது விமர்சனங்களில் குழப்பமாக வெளிப்படக் கண்டேன். இவ்வளவு பெண்ணியம் போற்ற முடியுமா? இப்படிப் போற்றப்பட்ட பெண்களை தம்வாழ்வில் போற்றி ஏற்றுக் கொள்வோமோ என்பதும் வினாக்குறியே...  


ஓரிதழ்ப்பூ ஒரு கதம்பம்... வாழ்த்துகள் அய்யனார்...