Thursday, January 31, 2013

பர்மீஸ் தமிழர்...

பர்மீஸ் தமிழர்

குடும்பத்துடன், காய்கறி மற்றும் வீட்டுக்கான பொருட்கள் வாங்க ஒரு சூப்பர்மார்க்கெட் சென்றிருந்தோம்...

பணம் செலுத்துமிடத்தில் பெரும்பாலும் பிலிப்பினோக்களும், அரபி பேசுபவர்களும், இந்தியர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள்.... நான் பார்த்த மட்டும், இந்தப் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும், நல்ல சிவப்பாக இருப்பார்கள்...

அன்றுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்... என் போல கருப்பாக ஆனால் வடிவாக இருந்தார்... என்னவோ அவருடைய வரிசையில் நின்று பணம் கட்ட வேண்டும் என்று தோன்றியது.... ஹாய் என்று ஆங்கிலத்தில் பேசினேன் அவர் எங்களிடம் தமிழில்  பேசினார்...

எனக்கு எப்பவும் தமிழ்க்குரல் கேட்கும் போது மனம் ஒரு வித இனம்புரியா மகிழ்ச்சியடையும்.... அதுவும் முன்பின் தெரியாத ஒருவர் பேசும் போது, நம் முகம் இயல்பா மலர்ந்து போகும்... எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது....  ஆனால் அவர் பேசும் பேச்சு வழக்கு வித்தியாசமாக இருந்தது... எந்த ஊர்த் தமிழ் என்று என்னால் கணிக்க இயலவில்லை.... இதுவரை இந்த மாதிரி பேச்சு வழக்கைக் கேட்டதில்லை....

ஆ வணக்கம், நீங்க தமிழா... என்று கேட்டு பேச்சைத் தொடர்ந்தேன்...

ஆமாம் சார்... 

உங்க பேச்சு வித்தியாசமா இருக்கே....

நாங்க பர்மீஸ் தமிழர்கள் சார்...

ஓ அப்படியா.... நலமா? 

நல்லா இருக்கேன் சார்...

எங்கள் பொருட்களை விலை போட்டபடி வேகமாகவே பேசிக்கொண்டிருந்தோம்....

பர்மால நிறைய தமிழர்கள் இருக்காங்களா....

இருக்காங்க சார்...

இங்க எப்ப வந்தீங்க....

ஒன் யியர் இருக்கும் சார்...

இவ்வாறு பேச்சுத் தொடர்ந்தது....

பின்பு அவரின் குடும்ப நிலையையும், இங்கு (துபாய்) வந்து சேர்வதற்குள், பர்மாவில் பட்ட துன்பங்களையும், ஏஜெண்டுக்கு கட்டிய பணத்தையும், கூடப்பிறந்த அண்ணன் எங்கிருக்கிறார் என்றே தெரியாத நிலையையும், தன் குடும்பத்தைக் காக்க வேண்டிய கடமைமையும் சிரித்துக்கொண்டே வேகமாகவும் சுருக்கமாகவும் சொல்லி முடித்தார்....

மகிழ்ந்து மலர்ந்திருந்த என் முகம், அவர் கதை கேட்டு சுருங்கிப் போனது...

கவலைப்படாதீங்க, சிவனருளால் எல்லாம் சரியாகும், வேண்டிக்கிறேன் என்று நான் சொன்னதும், அவர் முகம் முன்பை விட இன்னும் மலர்ந்து, தேங்க்ஸ் சார் என்று சொன்னார்....

எங்கள் பொருட்களை, ட்ராலியில் வைத்து தள்ளிக் கொண்டு கிளம்ப எத்தனித்த போது, மீண்டும் எங்களைப் பார்த்து, 

சார்,

சொல்லுங்க....

ரொம்ப நன்றி சார்.... 

மகிழ்ச்சி என்று பதில் சொல்லிவிட்டு கிளம்பினேன்...

சுலைமான் தாத்தா...


அனைவருக்கும் வணக்கம்,

நாள்தோறும் எத்தனையோ நிகழ்வுகள் நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது... சிலவற்றை கண்டுகொள்ளாமல் செல்கின்றோம்... சில நிகழ்வுகள் நம்மைக் கொஞ்சம் நின்று பார்க்க வைக்கின்றன.... 

என் பயணங்களில் நான் சந்திக்கும் நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
.....................................

சுலைமான் தாத்தாவுடன் என் பயணங்கள்: 

பாலாஜீஈஈஈஈஈ - 

அவரின் குரல் தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்து எனக்குக் கேட்டது.... 
சுலைமான் தாத்தா கூப்பிடுகிறார்...

அவரோடு வழக்கம் போல கிடைத்த இடைவேளையில் பேசிக்கொண்டிருந்தேன்... 
நல்லா இருக்கியா.... அல்லா உனக்கு மகிழ்ச்சியை அளிப்பான்.... 
என சொல்லி பேச்சைத் தொடர்கிறார்...

அவர் தம் தோட்டத்தில், பயிரிட்டிருக்கும் பல காய்கறிச் செடிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்...  

இங்க பார் தக்காளி போட்டிருக்கேன்... 

பூசணி பூ வச்சிருக்கு.... 

இந்தச் செடி வாடியிருக்கு...

முருங்கைக் கீரை பறிச்சிக்கிறேனு சொன்னியே, ஏன் இன்னும் பறிக்கலை... பறிச்சிக்கோ...

காகிதப்பூ வண்ணத்தைப் பார்...எவ்ளோ அழகா இருக்கு...

நீயும் இந்த இடத்தில் ஒரு செடி நடு, நான் வளர்த்து விடுகிறேன்..

இப்படியாக பேசிக் கொண்ட்டே, ஒவ்வொரு செடியாக கூட்டிப் போய் காட்டுகிறார்... 

செடி கொடிகளை நான் நேசித்து வளர்ப்பதால், என்னை அல்லா நன்றாக பார்த்துக் கொள்கிறான் என்கிறார்...

சில நாட்களில் வேலை நிமித்தமாக அவரைச் சந்திக்க இயலாமல் போனதுண்டு.... 

இரண்டு நாட்களாக எங்கே போனாய்... நேற்று உன்னைப் பார்க்கவில்லையே என்று கேட்பார்...

வேலை , வெளில போய்ட்டேன் என்று சொல்வேன்...

சரி சரி வேலையைப் பார் என்பார்....

பூக்களைப் பார்க்கும் போதும் என்னிடம் காட்டும் போதும் அவர் மனமும் , முகமும் பூக்கத் தவறுவதில்லை... 

பாலாஜி ஃபோட்டோ நிக்கால் என்கிறார்... 

பூக்களோடு அவரை ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன்... 

அந்தப் படத்தைப் பார்த்ததும் மேலும் அவருக்கு மகிழ்ச்சி...

இன்றைக்கு எந்தெந்த வேலை செய்யவேண்டும் என்பதைக் கூறிவிடுகிறார்... 

அந்த மரத்தின் கிளைகள் தாழ்ந்து இந்தச் செடியை அமுக்குகின்றன... 

அதை வெட்டிச் சரிசெய்ய வேண்டும்... 

நேற்று வேலை செய்யும் போது கையை அறுத்துக் கொண்டேன்... 

என் காயத்தைப் பார்... புண் பாதிக் காய்ந்திருக்கிறது... சீக்கிரம் சரியாகிடும்....

சிரித்துக்கொண்டே சொல்கிறார்...

நேற்றுதான் இந்த இடத்தை தூய்மைப் படுத்தினேன்... 

இங்க பார் மறுபடி குப்பையைப் போட்டிருக்கிறார்கள்... 

மரம், செடிகளின் மேலே மாடியிலிருந்து இவர்கள், ப்ளாஸ்டிக் பையில் சுருட்டி வீசுகின்ற குப்பை அருவருப்பாய் இருக்கிறது என்கிறார்... 

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பைப் பற்றி பேசிக் கவலைப்படுகிறார்... 

மனிதர்களிடம் மனிதாபிமானம் இல்லை என்று வருந்துகிறார்...

அவர் என்னுடன் பேசும் போது நான் குறுக்கே பேசுவதில்லை...

சிரித்துக் கொண்டே அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்...

அவர் பேசிக் கொண்டே இருக்கிறார்... 

நான் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் பேசிக் கொண்டே இருக்கிறார்... 

சில நேரங்களில் ஏற்கனவே சொன்னதையும் மறுபடி சொல்கிறார்... 

புதிதாய் கேட்பது போலவே கேட்டுக்கொண்டிருக்கிறேன்... 

கொஞ்ச நேரம் சென்றதும், நேரத்தை உணர்ந்து, சல், தேரா காம் கரோ என என்னை அனுப்பி விடுகிறார்.

சுலைமான் தாத்தா என்னிடம் எதோ உணர்த்த முற்படுகிறார் அவரை அறியாமலே... 

எனக்குப் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது...

எது எப்படியோ, அவரோடு செலவிடும் சில நிமிட நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்... அவரும் மகிழ்ச்சியாக உணர்வார் என நம்புகிறேன்...

இவரைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்... 


சுலைமான் தாத்தாவின் தோட்டம்




Monday, January 28, 2013

மொத மரியாதை...




சின்ன வயசுல எதோ ஒரு திருவிழாவில் நடந்த நிகழ்ச்சி இது:

மதுரையில் ஒரு தெரு:

அந்தத் திருவிழாவை முன்னிட்டு எங்கள் தெருவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்... விழா அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி.... இன்னார் குழுவினரின் ஆடல்பாடல் நிகழ்ச்சி... அனைவரும் வாரீர்...  என தெருவெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன... ஒவ்வொரு வயது ஒத்த நண்பர்களும் பல திட்டங்கள் போட்டிருந்தனர்... நாங்க என் நண்பர்களும் போட்ட திட்டம், முதல் வரிசைல இடம்பிடிச்சு உக்காந்திரணுங்கிறதுதான்... முழுசா நிகழ்ச்சி பார்ப்பதும், பாட்டுக்கெல்லாம் ஆடுவதுமே எங்கள் நோக்கம்...

திருவிழா அன்று, அப்போதைய தெரு இளைஞர்கள் ஒரே மாதிரி சட்டை வாங்கிப் போட்டுக்கொண்டு தெருவில் வலம் வந்து கொண்டிருந்தனர்... கிராமங்கள் போல விழாக்கள் நடத்த பொது இடம் இல்லாததால், தெருவின் நடுவிலேயே மேடைகள் அமைக்கப்பட வேண்டும்... மதிய நேரம் வந்ததும், தெருவின் நுழைவு வாயில் மறிக்கப்பட்டு, தெருவுக்கு நடுவே பெரிய மேடை அமைக்கும் பணி நடைபெற்றது... மேடையின் இருபக்கமும் இரண்டு சக்கர வண்டிகள் போகும் அளவுக்கு மட்டும் இடம் விட்டிருந்தார்கள்... மேடையின் பின்னால் ஒரு சிறிய அறை அமைத்தார்கள்... இது நடனக்குழுவினர் தங்கள் உடைகளை மாற்றிக் கொள்வதற்கும், ஒப்பனை செய்வதற்கும்....

நாங்கள், கடையில் நொறுக்குத் தீனிகளை வாங்கித் தின்று கொண்டு மேடை அமைக்கும் பணியை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்... விழாக் குழுவைச் சேர்ந்தவர், பணியாளர்களை விரைவு படுத்திக் கொண்டிருந்தார்... கொஞ்சம் கொஞ்சமாக மேடை முழு வடிவம் அடையத் தொடங்கியது...மேடை அமைத்துக் கொண்டிருக்கும் போதே, சவுண்ட் சர்வீஸ் அண்ணன் அவருடையைப் பணியைத் தொடங்கிவிட்டார்... குழாய் ரேடியோக்களை நான்கு மூலையிலும் கட்டி பாடல்களை அலறவிட்டுக் கொண்டிருந்தார்... பாடல்களுக்கு ஏற்ப மேடைக்கு முன்னால் சிறுவர்கள் ஆட்டமும் தொடங்கியது.... விரைந்து செயல்பட்ட பணியாளர்கள் மேடையை முழுமையாக முடித்திருந்தார்கள்... ட்யூப்லைட், ஸ்பீக்கர், குழாய் ரேடியோ, சீரியல் பல்பு வடிவமைப்புகள் என அனைத்தையையும் சவுண்ட் சர்வீஸ் அண்ணன் முடித்திருந்தார்...


இரவாகிவிட்டது....

விழாக்குழுவினரில் ஒருவர் மட்டும் மேடையில் மைக்கைப் பிடித்து பேசிக் கொண்டிருந்தார்... பேசிக்கொண்டிருந்தார் என்பதை விட உத்தரவுகளை இட்டுக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம்... 

யேய் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆர்கெஸ்ட்ரா பார்ட்டிக வந்திருவாய்ங்கப்பா... எல்லாரும் சீக்கிரம் சாப்பிட்டு ஓடியாந்திருங்க.... ஏய் இந்த சின்னப்பயகள கெளப்பி விடுங்கப்பா... இங்கனையே நிண்டுகிட்டு ஆடிக்கிட்டு இருக்காய்ங்க.... டேய் போய் சாப்பிட்டு வாங்கடா.... ஓடுங்கடா.... 

அவர் சொல்லியும் நாங்க கேட்கல.... அங்கனையேதான் நின்று கொண்டிருந்தோம்.... அவுகவுக அப்பா அம்மா அப்பத்தா வந்து மண்டைல தட்டி கூட்டிட்டுப் போனாங்க...வேகவேகமா சாப்பிட்டுட்டு மேடைக்கு முன்னாடி போய் நின்னோம்.... 

அப்பவும் அவர் மேடைல நின்று அறிவிப்புகள் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.... இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்துருவாய்ங்கப்பா என்று ரொம்ப நேரமா சொல்லிக்கொண்டு இருந்தார்.... சவுண்ட் சர்வீஸ் பாடல்களைப் போட்டு அலற விட்டுக் கொண்டிருந்தார்... நாங்க ஆடி ஆடி அசந்து போனோம்... 

அப்ப தூரத்துல ஒரு மகிந்த்ரா டூரிஸ்ட் வேன் வந்தது.... ஹேய்னு கத்திக்கிட்டு அந்த வேன் நோக்கி ஓடினோம்.... மேடை அருகே வந்து நின்றதும், ஆர்கெஸ்ட்ரா ஆளுங்க  ஒவ்வொருத்தரா இறங்கி வந்தாங்க... நிறைய இசைக்கருவிகள் கொண்டு வந்திருந்தாங்க.... வந்த வேகத்தில் அவர்கள் பணியில் இறங்கினார்கள்... மேடையில் அவரவர் இடங்களைத் தேர்ந்தெடுத்து இசைக்கருவிகளைப் பொருத்த தொடங்கினார்கள்... இடையே டெஸ்ட்டிங் டெஸ்டிங் என மைக்கில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்... ட்ரம்ஸ், கீ போர்டு போன்ற கருவிகளை அப்பப்ப சோதனைக்காக வாசித்து ஒலி எழுப்பினார்கள்...

ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடங்கப்போகிறது என்பதே மனதுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.... கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சேரத் தொடங்கியது.... முன்னாள் போடப்பட்டிருந்த இருக்கைகளில் நெருக்கிப் பிடித்து உக்காந்திருந்தோம்... 

விழாக்குழு தலைவர், மைக்கைப் பிடித்து, பல ”அவர்களே” சொல்லி, அனைவருக்கும் வணக்கம் சொல்லி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.... 

பின்பு ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்த ஒருவர் மைக் பிடித்து பேச தொடங்கினார்... அவர் பேச்சே எங்களுக்கு ரொம்ப வித்தியாசமாக இருந்தது... ரொம்ப ஏற்ற இறக்கமாகப் பேசினார்... அவர் பேசும் போது எதிரொலி அதிகமாகக் கேட்டது.... 

சூப்பர்ஸ்டார் பாட்டப் போடு சூப்பர்ஸ்டார் பாட்டப் போடுனு பின்னாடி இருந்து பெரும் சத்தம்... ஆர்கெஸ்ட்ரானா முதலில் சூப்பர்ஸ்டார் பாட்டுப் பாடுவது என்பது அப்போது ஒரு நியதியாக இருந்தது போலும்.... இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்...

கண்டிப்பா முதலில் சூப்பர்ஸ்டார் பாட்டுத்தான் என்று உறுதியளித்து, பின்பு ஒருவர் எஸ்பிபி குரலில் , சூப்பர்ஸ்டார் பாட்டு ஒன்றைப் பாடினார்.... விசில் தூள் பறந்தது.... பாட்டுச் சத்தத்தையும் தாண்டி விசில்கள் பறந்தன... முன்வரிசையில் இருந்த நாங்கள் எழுந்து ஆடத் தொடங்கியாச்சு..... பாட்டு முடிந்ததும் பலத்த கைதட்டல்கள்.... சிகரெட் அட்டையில் வாழ்த்து எழுதி, 5 ரூபாய்  பணமும் அன்பளிப்பாக சிலர் அளித்திருந்தனர்... 

அதை ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்தவர் மேடையில் நன்றியுடன் தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில்,  சத்தமாக கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டிக் கொண்டே ஒருவர் மேடையின் பின்புறம் இருந்து ஓடி வந்து மேடையில் ஏறினார்... 

வேற யாரும் இல்ல அவர், அவருதான் எங்க தெரு ரவுடி....  அவரால் நேராக நிற்க முடியவில்லை... நல்ல சாராய போதையில் இருந்த அவர், ஆடிக்கிட்டே மைக்கிட்ட வந்து, ”டேய்................................................... எனக்கு மொத மரியாதை கொடுக்காம என்னாடா ஆர்கெஸ்ட்ரா நடத்துறீங்க.... என்று கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தார்...
விழக்குழுவினர் பயந்து பயந்து பேசிக்கிட்டு இருந்தாங்க.... மைக்க அமத்திட்டாங்க.... ஆனா எங்க தெரு ரௌடி பொசுக்குனு கையில் இருந்த கத்திய எடுத்து காற்றில் சுத்திக் காட்டிட்டு கோபமா  பேசிக் கொண்டு இருந்தார்.... 

மேடையில் இதெல்லாம் நடப்பதைப் பார்த்து ரொம்ப பயந்து போயிருந்தோம்... ஆர்கெஸ்ட்ரா குழுவினார் உறைந்து போய் நின்றிருந்தார்கள்... அவசர அவசரமாக, அங்கிருந்த ஒரு ரோஜா மாலையை எடுத்து அந்த ரௌடிக்கு போட்டுவிட்டனர் விழாக்குழுவினர்... அப்புறம் சரி போப்போ போப்பானு அவரைக் கெஞ்சி அனுப்பி வைத்தார்கள்.... ரௌடியும் கீழே இறங்கினார்.... அப்பாட பிரச்சனை முடிஞ்சிருச்சுனு மகிழ்ச்சியா இருந்தோம்.... ஆனா நிகழ்ச்சியே முடியப் போகுதுனு அப்ப எங்களுக்குத் தெரியலை...

கீழே இறங்குன ரவுடி, மேடையில் ட்ரம்ஸ் வாசிப்பவரின் (நல்லா குண்டா இருந்தார்) நாற்காலியோடு அவரை இழுத்து தரையில் போட, சண்டை தொடங்கிவிட்டது.... விழாக்குழுவினர் ரௌடியோடு போராடி அவரை அனுப்பி வைத்தார்கள்...  

அவங்க அனுப்பி வைச்சுட்டு வரதுக்குள்ள ஆர்கெஸ்ட்ரா பெட்டியைக் கட்டத் தொடங்கிட்டாங்க....  விழாக்குழுவினர் ரொம்ப நேரம் பேசிப் பார்த்தார்கள்.... ம்ஹும்ம் ஒன்னும் முடியல.... ட்ரம்ஸ் வாசிக்கிறவர் கீழே விழுந்து தெறிச்சுப் போய் கெடக்குறார், எங்களால் வாசிக்க முடியாது பாதுகாப்பில்லைனு சொல்லிட்டு எல்லா இசைக்கருவிகளையும் உறையில் போட்டுக் கிளம்பிட்டாங்க...

எங்க தெரு பெருசுகளெல்லாம் அந்த ரவுடியைத் திட்டித் தீர்த்தார்கள்...  
இளைஞர்களெல்லாம் ஆற்றாமையில் நொந்து போய் நின்றார்கள்.. 
நாங்க முன் வரிசைல இடம்பிடிச்சும் ஒரு பாட்டுக்கு மேல நிகழ்ச்சி நடக்கலையேனு ரொம்ப நொந்து போய் அவரவர் வீட்டுக் கிளம்பினோம்... 
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

இப்பவும் அது மாதிரி சிலரை காண நேரிடுகிறது....