Thursday, July 28, 2022

பூவார் சென்னி மன்னன் - திருவாசகம் - இளையராஜா

பூவார் சென்னி மன்னன் - திருவாசகம் - இளையராஜா 

எவ்வளவு பெரிய கூட்டத்திற்குள் சுற்றி இயங்கிக் கொண்டிருந்தாலும் மனம் திடீரென தனிமைக்குக்கு ஏங்கும், தேடிச் செல்லும். நேரங்காலமின்றி ஓடித் திரிய வேண்டிய சூழல், அக புற அழுத்தங்கள்  எப்படா அக்கடானு உட்காருவோம்னு ஏங்கும் மனது;

இப்படியாக ஒவ்வொரு நாளும் தேடித் திரியும் போது மன ஓய்வுக்கு எங்காவது தலைசாய்த்து சற்றே ஓய்வெடுத்தால், அமைதிப்படுத்தினால் நலமென்று தோன்றும். இப்படியே தொடர்ந்து ஓடி கடமைகளில் மூழ்கி அவைகளை நிறைவேற்றுவதிலேயே பெரும்பகுதி செலவிட்டு இறுதி நோக்கிச் செல்லும் போது ஒவ்வொன்றாக அறுபடும்

பெரிதாக நினைத்தது, இன்றி அமையாததென்று நினைத்தது, போற்றிப் பேணிக் காத்தது எலலமே அதன் மதிப்பை இழக்கத் தொடங்கும்மனதில் அதற்காக உண்டாக்கி வைத்திருந்த பிம்பங்கள் எல்லாமே சிறிதாகிப் போகும், எதும் இல்லாமல் கூடப் போகும்என்ன வேணாலும் ஆகிக்கோ எனக்கொன்னும் கவலையில்லை, எல்லாம் அவன் செயல் என மெல்ல மெல்ல பற்றறும். அப்படியொரு நிலை, ஒரு நாள் எதற்கும் இறுதி எட்டும் போது உறுதியாக வரும்.

பற்றறுதல் ஆன்மீகத்தில் குறிப்பாக சைவத்தில் மிகவும் முக்கியமான கூறு. எளிதில் இயலாத செயல் என்றாலும் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படுவது பற்றறுத்தல். திருவாசகம் சைவத்தின் முத்துகளில் ஒன்று. ஐம்பத்தியொரு பகுதிகளையும் அறுநூற்றி ஐம்பத்தெட்டு பாடல்களையும் கொண்ட ஒரு பக்தி இலக்கியம் திருவாசகம். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது மூதுரை வாக்கு. உண்மைதான். செய்யுள் ஓசையின் இனிமையும் இசையும் கேட்போரை பாடுவோரைத் தன்னிலை மறக்கச் செய்யும். திருவாசகத்தில் யாத்திரைப்பத்து என்ற தலைப்பு நாற்பத்தைந்தாவது பகுதியாக வருகிறது. எல்லாம் முடித்து கிளம்புவோம், அவனடி சேர்வோம் பயணத்திற்கு கிளம்புங்கள் என்று அழைக்கும் நோக்கில்  எழுதப்பட்ட பாடல்எல்லாம் துறந்து விட்டு பொய்யான இவ்வுலக வாழ்வை விட்டு, நம்மை உடையவனின் காலடியில் போய்ச் சேர்வோம் என்று அழைக்கும் பாடல்

யாத்திரைப் பத்து பாடல்களை முழுமையாகப் பொருள் உணர்ந்து அவற்றை உள்வாங்கிப் பாடும் போது நம்முள் இனிமையான ஒரு வெறுமை உண்டாகும்அது நம் சிந்தையைப் பக்குவப்படுத்தும். முடிவுகள் எடுக்கும் போது ஒரு பெருந்தன்மை உண்டாகும்

இப்படியாகப்பட்ட பாடலுக்கு இக்கால இசையும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? இசையின் ராஜா இளையராஜா  திருவாசகத்திற்கு சிம்பொனி அமைப்பதற்காக ஆறு பாடல்களை எடுத்தாண்டிருக்கிறார். அதில் முதல் பாடலாக வருவது பூவார் சென்னி மன்னன் எனத் தொடங்கும் யாத்திரைப் பத்து பாடல். சிவபுராணம் சொல்லித் தொடங்கும் திருவாசகத்திற்கு சிம்பொனி அமைத்தை இளையராஜா ஏன் பூவார் சென்னி மன்னனிலிருந்து தொடங்கினார் என்று ஆராய்வோமானால் அவரின் ஆன்மீக முதிர்ச்சி தெளிவாகத் தெரிகிறதுஇதைப் பற்றி இன்னும் நிறையவே பேசலாம் எழுதலாம்நிற்க.






பூவார் சென்னி மன்னன்பாடல் தொடங்கும் முதல் இசையாக பலமாக டம்மென கேட்கும் டிரம் இசை. முன்பு சொன்னது போல எத்தனை அழுத்தங்களால் நாம் இறுகியிருந்தாலும், இந்தப் பாடலைக் கேட்கத் தொடங்கியவுடன் முதல் ஒலியிலேயே ஒன்னுமில்லப்பா பதறாத ஒக்காரு ஒக்காரு பாத்துக்கலாம் என்பதைப் போல ஒரு ஆறுதல்பேரிரைச்சலாக இருக்கும் வகுப்பறையில் ஆசிரியர் குச்சியை வைத்து மேசையில் அடித்ததும் நிலவும் பேரமைதி போல அந்த டிரம் இசை கேட்டவுவன் மனது தன்னுள் இருந்த இரைச்சல்களையெல்லாம் அடக்கி அமைதியை நோக்கிப்  பயணிக்கும்

தொடரும் பாடல் உங்களை முதல் பத்து நொடிகளாகத் தொடர்ந்து விழும் அடிகளில் ஓரளவுக்கு கேட்க ஏதுவான மனநிலைக்கு அமைதிக்கு மனது வந்து விடும். பின்பு அடுத்த இருபத்தைந்து நொடிகள் தொடரும் கோரஸ் ஒருமுகப்படுத்தும்கிட்டத்தட்ட மௌனம் சாத்தியமாகிவிடும்…  அதன் பின்பு இளையராஜாவின் குரலில் பூவார் சென்னி மன்னன் எனத் தொடங்கி அடுத்த ஏழரை நிமிடங்கள் செல்லும் பாடல் உங்களை ஈர்த்து மயக்கும்

காது கேட்கும் அளவிற்கு ஒலி அளவில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு இந்தப் பாடலைக் கேட்கத் தொடங்குங்கள்உங்களுக்குள் இருக்கும் இறுக்கங்கள் தளர்வதை உணர்வீர்கள்

தாமே தமக்குச் சுற்றமும்

தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார்

என்ன மாயம் மாயம் இவைபோக

என நமை இளையராஜா இசையோடு இழுத்துச் செல்லும் போது கண்கலங்கினாலும் வியப்பில்லைஇசை மகத்தானது. பொருள் பொதிந்த இந்த திருவாசகப் பாடல்களுக்கு இசை அமைந்திருக்கும் ஒழுங்கு மனித கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு நடந்த தெய்வச் செயலாகப் பார்க்கிறேன்.

”அடைவோம் நாம் போய்ச் சிவபுரத்துள்” என்று உயர்த்திப் போகும் போது நம் ஆன்மாவை உண்மையிலேயே பிரித்து சிவபுரத்திற்கு கொண்டு போய் விடுவாரோ என்று எண்ணத் தோன்றும்அப்படியான இசையும் பாடலும் குரலும்…

”புடைபட்டுருகிப் போற்றுவோம்” என்று இறங்கி வரும்போதுதான் நம் உடம்புக்குள் உயிர் திரும்ப வந்தடைவது போன்ற நெகிழ்வு கிடைக்கும்அதற்கடுத்து துள்ளி வரும் இசை கொஞ்சம் மகிழ்ச்சியின் வெளிப்பாடுதன்னிலை மறந்து மனம் துள்ளும்..

இருக்கிறவங்க இருக்கட்டும் நாம் கிளம்புவோம் என்பதை ”நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே” என்று வரும் போது நம் கைப்பிடித்து  இழுத்துச் செல்லும் உணர்வு; மாயை களைந்த பெருமகிழ்ச்சி

”பெறுதற் கரியன் பெருமானே” எனப் பாடி முடித்து பின்பு வரும் டிரம் ஒலி மீண்டும் மன ஒழுங்குக்கு கொண்டுவரும்… 

எனக்கு மிகவும் நெருக்கமான உயிரில் கலந்த பாடலும் இசையும் இதுவென்று சொல்வேன். எப்பொழுதெல்லாம் என் மனதின் சமநிலை கெடுகிறதோ, இல்லை மனது அலைபாய்கிறதோ, மனதிற்கு ஓய்வு தேவைப் படுகிறதோ அப்பொழுதெல்லாம் ஒருங்கமைக்க, நிலைபெற இந்தப் பற்றறும் பாடலைக் கேட்பதுண்டு

#திருவாசகம்

#மாணிக்கவாசகம்

#இளையராஜா

#யாவும்_நலம்

#இசை