Sunday, October 4, 2015

காலஞ்சென்றபின் வருந்தி என்ன பயன் !?

வயதான நம் குடும்பத்தின் மூத்தவர்கள், சுயநலமில்லாமல் வாழ்நாள் முழுவதும் நமக்காகவே ஓடி ஓடி உழைத்துவிட்டு, இறுதி வந்துவிட்டதென அறிந்தபின், உடல் மனதுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தளர்ந்து போய் இருக்கும் போது, அவர்கள் எதிர்பார்ப்பது அன்பைத்தவிர வேறெதுவுமில்லை...
மருத்துவமனைக்கு அவ்வப்போது அழைத்துச்செல்ல, அவர் வாழ்நாள் கதைகளை நேரம் ஒதுக்கி கேட்க, சாப்பிட்டீங்களா, நலமா என அன்பாய் கேட்க, அவ்வப்போது வீட்டைவிட்டு வெளியே அழைத்துச்செல்ல என அன்பான ஒரு உள்ளம் மட்டுமே...
அவர்களுக்காக நம் மனமிசைந்து, நேரம் ஒதுக்க வேண்டும்... அவர்கள் தன் துணையை இழந்தவர்களாக இருப்பின் இன்னும் கூடுதலாகவே நேரம் ஒதுக்க வேண்டும்... ஏனெனில் அவர்களின் மனம் படும் துன்பம் சொல்லில் விளக்க இயலாது...


தன் துணை பற்றிய நினைவுகளை, உணர்வுகளை, தன்னைவிட இருபத்தைந்து, முப்பது வயது குறைந்த மகனிடமோ, மகளிடமோ, ஐம்பது வயது குறைந்த பெயரன்,பெயர்த்தியிடமோ வெளிப்படையாக அவர்கள் பெரும்பாலும் பேசுவதில்லை...
நடமாட்டம் குறைந்த நிலையில் நண்பர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் அவர்களுக்கில்லை... ஏன் அவர்களின் நண்பர்கள் கூட எப்போதோ சென்றிருக்கலாம்...
உள்ளழுகையை மறைக்கும் சிரிப்பை அனுபவத்தில் கற்ற அவர்கள், மனதுக்குள் மட்டும் எண்ணி எண்ணி உருகிக்கொண்டிருப்பார்கள்... சில நேரம் தன் துணையின் அன்பையும், தான் வாழ்ந்த வாழ்க்கையையும், தற்போது கவனிக்கப்படாமல் இருப்பதையும் ஒப்புநோக்கி உக்கிப்போயிருப்பார்கள்...
வயதானவர்களை வாழும்போது கவனிக்காமல், அவர்கள் பேசுவதை பொறுமையாகக் கேட்க கொஞ்ச நேரம் கூட ஒதுக்காமல், மனம் நோக நடந்துவிட்டு, அவர்கள் காலஞ்சென்ற பின் வருந்தி என்ன பயன் !?
மகனுக்கோ, மகளுக்கோ அவர்களின் பெயர்கள் வைத்து என்ன பயன் !?
அவர் படங்களுக்கு மாலையிட்டு, விளக்கேற்றி என்ன பயன் !?
மனம் வருந்தி மன்னிப்புக்கேட்க அவர்கள் இனி வரப்போவதில்லை...

Thanks for the photo: http://www.trekearth.com/gallery/Europe/Serbia/North/Serbia/Belgrade/photo686574.htm

மீண்டவர் எவருமில்லை


நல்லதோ கெட்டதோ நேர்ல போய் நிக்கணும் , உறவுக்கும் நட்புக்கும் தோளோடு தோளாக... 

நல்லதுக்கு நமக்கு முடிஞ்சாலும், ஏதாவது ஒரு காரணத்தினால் போகாமல் சில நேரம் இருந்திடலாம்... ஆனா கெட்டதுக்கு நமக்கு முடியலனாலும், எப்பாடுபட்டாவது போய் நின்னுரணும்... 

ஏனெனில்
கடைசி வரை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளப்படாமல் இருந்த ஏதோ ஒருவரின் அன்பும், ஆசையும், ஏக்கமும் அன்றோடு மொத்தமாய் மௌனமாகிப் போகும்... 


#மீண்டவர்_எவருமில்லை