Thursday, September 22, 2022

ஆஃபினா - ருபினி - தெரிசை சிவா

தம்பிய ரொம்பப் பிடிக்கும்அமைதியான பையன், தன்மையான பேச்சுஅதிலும் நாஞ்சில் வழக்கு, பேசிக் கேட்க எனக்குப் புதுமையான ஒன்றுகொஞ்சம் குசும்பான முகம்.. எமது குழுமத்தில் உள்ள ஆக்கப்பூர்வமான எழுத்தாளர்களில் தெரிசை சிவாவும் ஒருவர்… 

முதல் நூல் குட்டிக்கோராவை ஆசிப் அண்ணன் சத்திரத்தில் 2018 டிசம்பர் 22ம் தேதி நடந்த நிகழ்வொன்றில் சந்தித்த போது எனக்குப் பரிசாகத் தந்தார்ஒரு ஓய்வு நாளில் வாசிக்கத் தொடங்கியவன் முழுத் தொகுப்பையும் வாசித்து முடித்து பின்புதான் நூலை வைத்தேன்… 


நான் இதுநாள் வரை வாசித்த கதைகளில் மிகவும் ரசித்துச் சிரித்து மகிழ்ந்த கதைத் தொகுப்பு குட்டிகோரா என்னும் சிறுகதைத் தொகுப்புஇந்தச் சிறுகதைத் தொகுப்பை படித்த முடித்தபின் இந்தப் படைப்பாளியின் மீது அன்பும் நெருக்கமும் கூடிப் போனது…  

உடனே இந்தச் சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ஒரு பதிவெழுதினேன், பின்பு எமது குழுமம் சார்ந்து நடந்த விமர்சனக் கூட்டத்தில் விரிவாகப் பேசியிருந்தேன்… 

விரைவிலேயே தன்னுடைய அடுத்த படைப்பான திமில் நூலுடன் வந்தார்.. அதை நமது குழுமம் சார்பில் இயக்குநர் திரு. மனோபாலா அவர்கள் சூம் காணொளி வழியாக திமில் நூலை வெளியிட்டுச் சிறப்பித்திருந்தார்கள்வழக்கம் போல சிறப்பான நிகழ்வாக அது அமைந்தது

பொன்னுலஷ்மி கதையைப் பற்றி மிகவும் வியந்து பேசினார் திரு. மனோபாலா அவர்கள்அதில் வரும் இடுகாட்டு மோட்சம் என்ற கதையைப் படித்து விட்டு நான் சிரித்த சிரிப்பை நண்பர்கள் நன்கறிவார்கள்… 

இன்னமும் நண்பர்களிடம் பேசும் போது தம்பியைப் பற்றிய பேச்சு வந்தால் இடுகாட்டு மோட்சம் பற்றியும் முண்டன் தண்ணீருக்குள் முங்கிப் போயி மூச்சடைத்த கதையையும் நான் பேசாமல் இருந்ததில்லைஅவ்வளவு சிறப்பான கதை

இந்தச் சமூகத்தில் தன் முன்னால் நடக்கும் அத்தனையையும் கதைக்குள் கொண்டு வந்து ஆங்கே நகைச்சுவையும் கூடவே கருத்தும் வட்டார வழக்கில் சிறப்பாக வருமாறு கவனமாக கையாள்வார்எழுத்து இழுத்துச் செல்லும்…

இப்படியாக நல்லா எழுதிக்கிட்டிருந்த தம்பி, திடீர்னு வேற ஒரு அரிதாரம் பூசி, ருபினி என்றொரு புனைவு நாவலை அடுத்த படைப்பாகக் கொண்டு வந்தார்இதுவும் நன்றாகவே எழுதியிருக்கிறார்… 

வித்தியாசமான கதைக்களம்வேறொரு உலகம், வேறுபட்ட மனிதர்கள்வசியம், அமானுஸ்யம், சித்தர் பாடல்கள், நாடி ஜோஸ்யம் அது இதுனு எல்லாரும் கற்பனைகளையும் தூண்டிவிடும் வண்ணம் அருமையான எழுத்தில் ருபினி எனும் அழகிய நாவல்

மனுசன் என்னென்ன சிந்திக்கிறான் எப்படியெல்லாம் எழுதுறான் புதுசா ஒரு உலகத்தை எப்படியெல்லாம் எழுத்தில் படைக்கிறான் என்று வியந்து போனேன்… 

இந்நூலுக்கான விமர்சனக் கூட்டத்தை விரைவில் நடத்துவது என்று முடிவெடுத்து நமது ஆசிப் அண்ணன் அறிவித்தார்அவர் அறிவித்தவுடன் உடனடியாக அபுதாபி நண்பர்கள் இம்முறை அபுதாபியில்தான் நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்… (அங்கு போனதும் மிரட்டினார்கள் என்பது வேறு கதை)

அபுதாபியில் விழா நடத்துவது என்று முடிவானதும், நமது அபுதாபியைச் சேர்ந்த விஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் சிறுமி ஆஃபினாவிற்கு நமது குழுமம் சார்பில் பாராட்டு விழாவையும் சேர்த்து இருபெரும் விழாவாக நடத்தி விடலாம் என்று ஆசிப் அண்ணன், தம்பி ஃபிர்தௌஸ், நண்பர்கள் எல்லாம் கூடிப் பேசி முடிவெடுக்கவும் செப்டம்பர் 18ம் தேதி நடத்தலாம் என்று நாள் குறிக்கப்பட்டது…  




விழாவொன்று ஏற்பாடாகிறதென்றால் அதில் உள்ள சிக்கல்கள் பல… இடம் பொருள் ஆள் அம்பு சேனை எல்லாம் தேவைப்படும்… அவை சரியாக அமையணும்… அமைந்தது… ஏனெனில் அதன்பின் ஃபிர்தௌஸ் மற்றும் நண்பர்களின் உழைப்பு முக்கியமானது… அனைவருக்கும் பாராட்டுகள்…

அந்த நாளும் வந்தது, திட்டமிட்டபடி
செப்டம்பர் 18ம் தேதி அபுதாபியில் செட்டிநாடு உணவகத்தில் விழா… அழைப்பின் மகிழ்வில் குழுமம், அழைப்பை ஏற்று அபுதாபி வாழ் ஆன்றோர் சான்றோர் அனைவரும் வந்திருந்தார்கள்… முதல் நிகழ்வாக சிறுமி ஆஃபினாவிற்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது… அமீரக எழுத்தாளர் வாசகர் குழுமம் சார்பாக இளம் இசைக்குயில் பட்டமும் நினைவுப்பரிசும் மகிழ்ச்சியுடன் வழங்கினோம்… பின்பு எஃப் ஜே டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் சார்பாக நினைவுப் பரிசும், கேலக்ஸி புத்தங்கள் சார்பாக நினைவுப் பரிசும் மகிழ்ச்சியுடன் வழங்கினோம்…

 

சிரித்த முகத்துடன் அன்றலர்ந்த மலர் போல ஆஃபினா நமது நிகழ்வில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாது, மகிழ்ச்சியாக இரண்டு பாடல்களையும் பாடினார்… இசைஞானியின் இசையில் ராசாவே உன்னை நம்பியும், திரு. இமான் அவர்களின் இசையில் கண்ணக் காட்டு போதும் பாடலும் பாடி எங்களையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்… என்ன குரல் என்ன திறமை… இறையருள் நிறைந்திருக்கிறது அந்தக் குழந்தைக்கு… அந்தக் குழந்தையின் இத்தகைய பெரும் வளர்ச்சியில்  பெற்றோர்களின் உழைப்பும் ஆதரவும் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை அன்று நேரிலேயே பார்த்து உணர முடிந்தது, பயணம், கேள்வி பதில், மீடியா வெளிச்சத்தினால் ஏற்படும் சிக்கல்கள் என எல்லா எந்த அழுத்தமும் தங்கள் குழந்தையை முழுமையாக நெருங்கி நெருக்கி விடாமல் மிகவும் பக்குவமாகவும் கையாள்கிறார்கள், தனிமனித உயர்வுக்கு மிகவும் இன்றியமையாதது ”பணிவு” அதை மிக அழகாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்… பெற்றோர்களுக்கு வாழ்த்துகள்… இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகள் ஆஃபினா..

 

விழா முடிந்து நல்லதொரு சுவையான விருந்து உண்டுவிட்டு, கெடா வெட்டிற்கு அதாவது விமர்சனக் கூட்டத்திற்குத் தயாரானோம்… தொடங்கும் முன்பே சிரித்த முகத்துடன் சிவாவைப் போட்டோ எடுத்துக் கொள்வோம் என்று நகைச்சுவையாக் சொல்ல, ஏற்கனவே விழாவில் அமர்களப்படுத்திய சுபஹான் அண்ணனும், ஹபியும், ரியாஸும் தாங்கள் கற்ற மொத்த வித்தைகளையும் புகைப்படக் கருவியில் காட்டத் தொடங்கினார்கள்…

 

புதிதாக விமர்சனக் கூட்டம் பார்த்தவர்களுக்கு இது ஒரு மாறுபட்ட நிகழ்வாக அமைந்திருக்கும், என்னடா இது இப்படிப் பேசுகிறார்கள்? என்று.. ஆஹா ஓகோ அருமை என்ற பொய்ப் பாராட்டு விழாவாக அல்லாமல் வாசித்த அனைவரும் தம் மனதில் அப்படியே பேசுவதுதான் நம் குழுமத்தின் வழக்கம், வலு, சிறப்பு எல்லாம்…  அவ்வாறே அன்றும் மிகச்சிறப்பாக அவரவர் விமர்சனமும், பின்பு எழுத்தாளர் தம்பியின் மிகவும் பக்குவமான பெரும்பாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஏற்புரையும் இருந்தன… நண்பர்கள் மகிழ்ச்சியையும் வாசிப்பதற்கு புத்தகங்களையும் பரிமாறிக் கொண்டனர்… சிறப்பான நாளாக அமைந்தது…

 

தம்பி சிவாவைப் பற்றி இங்கே கொஞ்சம் எழுத வேண்டும்.. தன்னைப்பற்றி தானாக எதையும் சொல்லாதவர், நாமாகத்தான் ஓவ்வொன்றாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்… ஒருநாள் ஓய்வாகப் பேசிக் கொண்டிருக்கையில்தான் அறிந்து கொண்டேன் தம்பி வேதியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்… நன்றாகக் கவனிக்கவும் படித்து டாக்டர் வாங்கியவர்இலக்கியம் அவரது பெரு விருப்பம்… திரைத்துறையில் தடம்பதிக்கவுள்ளார்… தம்பிக்கு வாழ்த்துகள்…

 

எப்போதுமே எல்லா நிகழ்வுகளுக்கும் தவறாமல் வரும் தம்பி கௌசர் இந்த நிகழ்வில் வர இயலாமல் போனது எனக்கு கொஞ்சம் வருத்தமாவும், தம்பி ஞாபகமாகவும் இருந்தது…

 

பாராட்டுகள்:

ஒரு நிகழ்ச்சி என்றால் அதை எப்படி நடத்த வேண்டும் தொகுக்க வேண்டும் கலகலப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் எல்லோரையும் எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் நிருபித்தும் எங்களுக்கு கற்றுக் கொடுத்தும் வரும் அண்ணன் ஆசிப் மீரானுக்கு மகிழ்ச்சியுடன் பாராட்டுகள்.

நிகழ்ச்சி நடத்துங்கள் என்று சொன்னதில்  இருந்து யார் யாரை அழைக்க வேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து மன நிறைவான விழாவாகச் செய்த தம்பி ஃபிர்தௌஸ்க்கு மகிழ்ச்சியுடன் பாராட்டுகள்… (இந்த கண்ணுலயே பேசுறது எப்படினு கத்துக் கொடுங்க தம்பி)

இருபெரும் விழாவைப் பால்க்கரசின் பிறந்தநாள் விழாவுடன் சேர்த்து முப்பெரும் விழாவாக மாற்றிய சிவசங்கரி குடும்பத்தார்க்கும் தம்பி ராஜாராமுக்கும் பாராட்டுகள்… பால்க்கரசின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இன்றும் என் நினைவில்…

 

நன்றி:

 

துபாயில் இருந்து அபுதாபி சென்று வர பயண ஏற்பாடுகள் செய்த எஃப் ஜே டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ரியாஸ் அவர்களுக்கும்

காலைச் சிற்றுண்டி தேநீருடன் வண்டியில் ஏறிய அண்ணன் ரியாஸ் அவர்களுக்கும்

நினைவுப்பரிசுகள் பொன்னாடைகள் ஏற்பாடு செய்த தம்பி பிலால் அவர்களுக்கும்

உணவு மற்றும் அரங்கு அளித்த செட்டிநாடு உணவக நிர்வாகிகளுக்கும்

அழைப்பை ஏற்று விழாவிற்கு வந்த ஆன்றோர் சான்றோர்களுக்கும்

 

மாலை மிக இனிப்பாக ஃபில்டர் காபி வீட்டிலிருந்தே போட்டுக் கொண்ட வந்த சகோதரி மஹாலட்சுமி அவர்களுக்கும்

 

விதவிதமாக ஒவ்வொரு உணர்வுகளையும் படம்பிடித்து டிஜிட்டல் ஆவணமாக்கித் தந்த அண்ணன்கள் சுபஹான், ஹபி, ரியாஸ் ஆகியோருக்கும்

வண்டிக்குள்ள இருக்கிற அம்புட்டு தலைப்பிரட்டு டிரைவர்களின் எந்தப் பேச்சையும் கேட்காமல், தன் வழி தனி வழினு  எந்த வம்புதும்பும் பண்ணாமல்,

பத்திரமாக துபாய் – அபுதாபி – துபாய் ஓட்டிய பட்டான் டிரைவருக்கும்

 

எமது மனமார்ந்த நன்றிகள்… மகிழ்ச்சியான நாள்…

 

#யாவும்_நலம்

#ஆஃபினா

#ருபினி

#தெரிசை_சிவா

 

 

 

 

 

Thursday, July 28, 2022

பூவார் சென்னி மன்னன் - திருவாசகம் - இளையராஜா

பூவார் சென்னி மன்னன் - திருவாசகம் - இளையராஜா 

எவ்வளவு பெரிய கூட்டத்திற்குள் சுற்றி இயங்கிக் கொண்டிருந்தாலும் மனம் திடீரென தனிமைக்குக்கு ஏங்கும், தேடிச் செல்லும். நேரங்காலமின்றி ஓடித் திரிய வேண்டிய சூழல், அக புற அழுத்தங்கள்  எப்படா அக்கடானு உட்காருவோம்னு ஏங்கும் மனது;

இப்படியாக ஒவ்வொரு நாளும் தேடித் திரியும் போது மன ஓய்வுக்கு எங்காவது தலைசாய்த்து சற்றே ஓய்வெடுத்தால், அமைதிப்படுத்தினால் நலமென்று தோன்றும். இப்படியே தொடர்ந்து ஓடி கடமைகளில் மூழ்கி அவைகளை நிறைவேற்றுவதிலேயே பெரும்பகுதி செலவிட்டு இறுதி நோக்கிச் செல்லும் போது ஒவ்வொன்றாக அறுபடும்

பெரிதாக நினைத்தது, இன்றி அமையாததென்று நினைத்தது, போற்றிப் பேணிக் காத்தது எலலமே அதன் மதிப்பை இழக்கத் தொடங்கும்மனதில் அதற்காக உண்டாக்கி வைத்திருந்த பிம்பங்கள் எல்லாமே சிறிதாகிப் போகும், எதும் இல்லாமல் கூடப் போகும்என்ன வேணாலும் ஆகிக்கோ எனக்கொன்னும் கவலையில்லை, எல்லாம் அவன் செயல் என மெல்ல மெல்ல பற்றறும். அப்படியொரு நிலை, ஒரு நாள் எதற்கும் இறுதி எட்டும் போது உறுதியாக வரும்.

பற்றறுதல் ஆன்மீகத்தில் குறிப்பாக சைவத்தில் மிகவும் முக்கியமான கூறு. எளிதில் இயலாத செயல் என்றாலும் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படுவது பற்றறுத்தல். திருவாசகம் சைவத்தின் முத்துகளில் ஒன்று. ஐம்பத்தியொரு பகுதிகளையும் அறுநூற்றி ஐம்பத்தெட்டு பாடல்களையும் கொண்ட ஒரு பக்தி இலக்கியம் திருவாசகம். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது மூதுரை வாக்கு. உண்மைதான். செய்யுள் ஓசையின் இனிமையும் இசையும் கேட்போரை பாடுவோரைத் தன்னிலை மறக்கச் செய்யும். திருவாசகத்தில் யாத்திரைப்பத்து என்ற தலைப்பு நாற்பத்தைந்தாவது பகுதியாக வருகிறது. எல்லாம் முடித்து கிளம்புவோம், அவனடி சேர்வோம் பயணத்திற்கு கிளம்புங்கள் என்று அழைக்கும் நோக்கில்  எழுதப்பட்ட பாடல்எல்லாம் துறந்து விட்டு பொய்யான இவ்வுலக வாழ்வை விட்டு, நம்மை உடையவனின் காலடியில் போய்ச் சேர்வோம் என்று அழைக்கும் பாடல்

யாத்திரைப் பத்து பாடல்களை முழுமையாகப் பொருள் உணர்ந்து அவற்றை உள்வாங்கிப் பாடும் போது நம்முள் இனிமையான ஒரு வெறுமை உண்டாகும்அது நம் சிந்தையைப் பக்குவப்படுத்தும். முடிவுகள் எடுக்கும் போது ஒரு பெருந்தன்மை உண்டாகும்

இப்படியாகப்பட்ட பாடலுக்கு இக்கால இசையும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? இசையின் ராஜா இளையராஜா  திருவாசகத்திற்கு சிம்பொனி அமைப்பதற்காக ஆறு பாடல்களை எடுத்தாண்டிருக்கிறார். அதில் முதல் பாடலாக வருவது பூவார் சென்னி மன்னன் எனத் தொடங்கும் யாத்திரைப் பத்து பாடல். சிவபுராணம் சொல்லித் தொடங்கும் திருவாசகத்திற்கு சிம்பொனி அமைத்தை இளையராஜா ஏன் பூவார் சென்னி மன்னனிலிருந்து தொடங்கினார் என்று ஆராய்வோமானால் அவரின் ஆன்மீக முதிர்ச்சி தெளிவாகத் தெரிகிறதுஇதைப் பற்றி இன்னும் நிறையவே பேசலாம் எழுதலாம்நிற்க.






பூவார் சென்னி மன்னன்பாடல் தொடங்கும் முதல் இசையாக பலமாக டம்மென கேட்கும் டிரம் இசை. முன்பு சொன்னது போல எத்தனை அழுத்தங்களால் நாம் இறுகியிருந்தாலும், இந்தப் பாடலைக் கேட்கத் தொடங்கியவுடன் முதல் ஒலியிலேயே ஒன்னுமில்லப்பா பதறாத ஒக்காரு ஒக்காரு பாத்துக்கலாம் என்பதைப் போல ஒரு ஆறுதல்பேரிரைச்சலாக இருக்கும் வகுப்பறையில் ஆசிரியர் குச்சியை வைத்து மேசையில் அடித்ததும் நிலவும் பேரமைதி போல அந்த டிரம் இசை கேட்டவுவன் மனது தன்னுள் இருந்த இரைச்சல்களையெல்லாம் அடக்கி அமைதியை நோக்கிப்  பயணிக்கும்

தொடரும் பாடல் உங்களை முதல் பத்து நொடிகளாகத் தொடர்ந்து விழும் அடிகளில் ஓரளவுக்கு கேட்க ஏதுவான மனநிலைக்கு அமைதிக்கு மனது வந்து விடும். பின்பு அடுத்த இருபத்தைந்து நொடிகள் தொடரும் கோரஸ் ஒருமுகப்படுத்தும்கிட்டத்தட்ட மௌனம் சாத்தியமாகிவிடும்…  அதன் பின்பு இளையராஜாவின் குரலில் பூவார் சென்னி மன்னன் எனத் தொடங்கி அடுத்த ஏழரை நிமிடங்கள் செல்லும் பாடல் உங்களை ஈர்த்து மயக்கும்

காது கேட்கும் அளவிற்கு ஒலி அளவில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு இந்தப் பாடலைக் கேட்கத் தொடங்குங்கள்உங்களுக்குள் இருக்கும் இறுக்கங்கள் தளர்வதை உணர்வீர்கள்

தாமே தமக்குச் சுற்றமும்

தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார்

என்ன மாயம் மாயம் இவைபோக

என நமை இளையராஜா இசையோடு இழுத்துச் செல்லும் போது கண்கலங்கினாலும் வியப்பில்லைஇசை மகத்தானது. பொருள் பொதிந்த இந்த திருவாசகப் பாடல்களுக்கு இசை அமைந்திருக்கும் ஒழுங்கு மனித கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு நடந்த தெய்வச் செயலாகப் பார்க்கிறேன்.

”அடைவோம் நாம் போய்ச் சிவபுரத்துள்” என்று உயர்த்திப் போகும் போது நம் ஆன்மாவை உண்மையிலேயே பிரித்து சிவபுரத்திற்கு கொண்டு போய் விடுவாரோ என்று எண்ணத் தோன்றும்அப்படியான இசையும் பாடலும் குரலும்…

”புடைபட்டுருகிப் போற்றுவோம்” என்று இறங்கி வரும்போதுதான் நம் உடம்புக்குள் உயிர் திரும்ப வந்தடைவது போன்ற நெகிழ்வு கிடைக்கும்அதற்கடுத்து துள்ளி வரும் இசை கொஞ்சம் மகிழ்ச்சியின் வெளிப்பாடுதன்னிலை மறந்து மனம் துள்ளும்..

இருக்கிறவங்க இருக்கட்டும் நாம் கிளம்புவோம் என்பதை ”நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே” என்று வரும் போது நம் கைப்பிடித்து  இழுத்துச் செல்லும் உணர்வு; மாயை களைந்த பெருமகிழ்ச்சி

”பெறுதற் கரியன் பெருமானே” எனப் பாடி முடித்து பின்பு வரும் டிரம் ஒலி மீண்டும் மன ஒழுங்குக்கு கொண்டுவரும்… 

எனக்கு மிகவும் நெருக்கமான உயிரில் கலந்த பாடலும் இசையும் இதுவென்று சொல்வேன். எப்பொழுதெல்லாம் என் மனதின் சமநிலை கெடுகிறதோ, இல்லை மனது அலைபாய்கிறதோ, மனதிற்கு ஓய்வு தேவைப் படுகிறதோ அப்பொழுதெல்லாம் ஒருங்கமைக்க, நிலைபெற இந்தப் பற்றறும் பாடலைக் கேட்பதுண்டு

#திருவாசகம்

#மாணிக்கவாசகம்

#இளையராஜா

#யாவும்_நலம்

#இசை