Friday, September 10, 2021

கீழக்குயில் குடி - ஓர் அனுபவம் - #ஊர்_ஞாபகம்

 ஊருக்கு வந்ததும் எல்லாரும் செய்வது போலனு சொல்லலாமானு தெரியல, ஆனா நான் செய்றது, முதல் வேலையா குலசாமியப் பாத்து கும்பிட்டு விழுந்துட்டு வந்திர்றது… அப்புறம் மத்த வேலையெல்லாம் தானா நடக்கும், நாள் போறதே தெரியாது… இந்த தடவையும் வந்ததும் நேரா எங்கள் சங்கையாவைக் கும்பிட்டுட்டு வந்ததும் அடுத்தடுத்த வேலைகள் மூன்றாண்டுகளாய்த் தேக்கி வைத்திருந்த வேலைகளைச் செய்யத் தொடங்கி விட்டேன்…

முதலில் நண்பர்கள் சந்திப்பு, பின்பு உறவினர்கள் சந்திப்பு… இந்தப் பயணத்தில் நல்லது, பெரும்பாலும் கெட்டது நடந்து வீடுகளுக்குச் சென்று விசாரித்து விட்டு வருவதே கொரோனா எனும் கொடுந்தொற்றின் தாக்கமாக இருந்தது… என்று முடியோமோ தெரியல…

கொஞ்சம் கையக் கால நீட்டி அக்கடானு ஒக்காந்ததும் அண்ணன் முத்துக்கிருஷ்ணனுக்கு போன் செய்தேன் அண்ணே உங்களைப் பாக்கணும்னு… உடனே சந்திப்பு ஏற்பாடு ஆகி, அண்ணன் வீட்டில் ஒரு மாலை வேளையில் நீண்ட நேர உரையாடல்… நிறையப் பேசினோம்… பேசினோம் என்பதை விட நிறையக் கேட்டேன் கேட்டேன்…  மதுரையில் தொடங்கி எங்கெங்கோ அழைத்துச் சென்றார்… அவ்வளவு தகவல்கள்… அவர் அறிந்து வைத்திருக்கும் தகவல்களையெல்லாம் சொல்லி விட போதுமானதாக சூம் மீட்டிங்குகள் இல்லை மாறாக அவரின் பேச்சைக் கட்டுப்படுத்துகிறது என்றே கருதினேன்… கொரோனா எல்லாம் போயி மக்கள் கூடும் நிலை வரும் போது, அமீரகத்திற்கு அழைத்து வந்து இவரைப் பேச வைக்க வேண்டும்… குழந்தைகள், நகர் வாழ் பெரியவர்கள் எல்லாரையும் கேட்க வைக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்…

தம்பி ஞாயித்துக்கிழம சமணர் மலைக்குப் போவோம் வாடான்னார்… சரிண்ணே என் மக்களோடு வந்து விடுகிறேன் என்று சொல்லிட்டு எத்தனை மணிக்கு என்று கேட்டேன்… அதிகாலை 5:45க்கு என்றார்… மேலூரிலிருந்து கிளம்பி கீழக்குயில்குடி சமணர் மலைக்குச் சென்றாகி விட்டது… அருமையான காலநிலை… அந்த அதிகாலைத் தென்றலோடு அங்கே காத்திருந்தார் அண்ணன் முத்துக்கிருஷ்ணன்… அவரோடு அவர் நண்பர் பட்டாளமும் அங்கே குழுமியிருந்தது… வாங்கப்பா மலை ஏறுவோம் என்று அழைத்துச் சென்றார்கள்…


 

ஆஹா…”காவல் கோட்டம்” படித்திருந்ததால் இந்த மலை ஏற ஏற பல ஞாபகங்களும், காட்சிகளும் கண் முன்னே விரிந்தது… ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மலை ஏறுபவர்கள் அவர்கள் குழாம், ஆகவே வெகு வேகமா முன்னேறிச் சென்றார்கள்… என்னதான் என்னைக் கிராமத்தான் என்று நானே அழைத்துக் கொண்டாலும், துபாயின் வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்ட என் உடல் அவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை… பொறுமையாக நின்று நின்று அழைத்துச் சென்றார்… ஒவ்வொரு இடமாக நிறுத்தி அவற்றின் பெயர், வரலாற்றுச் சிறப்புகள் எல்லாம் சொல்லி, புது அனுபவம் தந்தார்… இது பற்றி ஏற்கனவே படித்திருந்த எனக்கும், இது எதும் தெரியாமல் முதன் முதலாக இப்படி ஒரு அனுபவம் கிடைக்கப் பெற்ற என் பிள்ளைகளுக்கும் மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது…

 மலை உச்சியில் நின்று கொண்டு சூரிய உதயத்தைப் படம் எடுக்கக் காத்திருக்கையில், கீழக்குயில்குடியின் ஏதோவொரு வீட்டில் சத்தமாக வைக்கப் பட்ட ரேடியோவில் இருந்து “முத்துமணி மாலை என்னைத் தொட்டுத் தொட்டுத் தாலட்ட” என பாட்டு… காற்றும் தன் பங்கிற்கு இசைஞானியோடு இணைந்து பாட்டின் ஒலியைக் கூட்டியும் குறைத்து எங்களுக்கு கேட்க வைத்து இசை விருந்து படைத்துக் கொண்டிருந்தது… நண்பர்களிடம் சொன்னேன், தமிழ் மண் பரப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு வீசும் காற்றிலெல்லாம் ராசாவின் இசை கலந்திருக்கும்… நம் வாழ்வியலின் பின்னனி இசை ராஜாதானே…



முத்துக்கிருஷ்ணன் அண்ணன் நல்ல படக்கலைஞரும் கூட… சூரிய உதயம் தொடங்கி நிறைய படங்கள் எடுத்து பிரமிக்க வைத்தார்… ரசித்து ரசித்துப் படம் எடுத்தார்… பழக்கப் பட்ட இடம் போல அவர் மலை உச்சியில் பின்னால் நடந்தெல்லாம் படம் எடுக்கும் போது, அண்ணே பாத்துனு சொல்லவேண்டும் போல பதட்டமா இருந்தது…



சமணர் படுகை, சிற்பங்கள், கண் இமை, தமிழி எழுத்துகள் என ஒவ்வொன்றாகக் காட்டி விளக்கி பேச அங்கே அவர் நண்பர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்…குறிப்பாக சர்வேஷ் சரவணன் என்கிற சின்னப் பையன் எங்கள் கூடவே வந்து ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று விளக்கிச் சொன்னார்… தம்பிக்கு என் முத்தங்கள்… ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டு அந்த அருமையான காற்றோடு அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது மனதுக்கு உற்சாகம் தரும்… கொஞ்சம் அசை போட்டால் மதுரை வரலாற்றுப் பக்கங்களில் சில கண் முன்னே விரியும்…





அண்ணே பசிக்குதேண்ணே என்றேன்… இருப்பா மலை இறங்கினதும் அதற்குண்டான வேலையைச் செஞ்சிரலாம் என்றார்… மலை இறங்குதல் இன்னும் என்பது இன்னும் சாதனையான செயலாக இருந்தது… சரவணன் அண்ணன் மட்டும் இல்லையென்றால் ரொம்பவே கதறியிருப்போம்… பாறையிடுக்கில் இறங்குகையில் எங்கள் கால்களை அவர் கைகளில் தாங்கி சறுக்கி வரச்சொல்லி பத்திரமாக இறக்கி விட்டார்… நீங்க நல்லா இருக்கணும்ண்ணே என்று வாழ்த்தி இறங்கினேன்…


வரும் வழியில் பேச்சிப் பள்ளத்தில் சமணர் சிற்பங்கள் முன்பு எனக்கு இரண்டு புத்தங்களை வழங்கினார்… திரு. ஆர். பாலகி
ருஷ்ணன் எழுதிய ”சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” மற்றும் ”சங்கச்சுரங்கம் முதலாம் பத்து கடவுள் ஆயினும் ஆக” ஆகியன… இதுவும் அன்றைய நாளின் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு…

 


மலை இறங்குதல் பெரும் சவால்தான்… எல்லோரும் இறங்கிப் போய்விட, கடைசி ஆளாகத்தான் ஒருவழியாக இறங்கி வந்தேன்… வந்தது முத்துக்கிருஷ்ணன் அண்ணன் வடையோடு வரவேற்றார்… இங்கே ஜெயமணி அம்மாளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்… பல்லாண்டு காலமாக இங்கே சிறிய கடை நடத்தி வருகிறார்… இங்கே வருபவர்கள் பசியாற்றுபவர் இவர்தான்… முத்துக்கிருஷ்ணன் அண்ணன் எழுதிய ”மதுரை வரலாறு” நூலை இங்கு எழுத்தாளர் தொ.ப வெளியிட்ட போது அதைப் பெற்றுக் கொண்டு சிறப்புச் செய்தவர் ஜெயமணி அம்மாள்தான்… மதுரையைப் பற்றி அறிய வாங்கி வாசித்துப் பாருங்கள்… இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு எழுத்தாளர், வெளியிட்டவர் பெற்றுக் கொண்டவர் என மூவர்க்கும் பெருமையே…



கீழக்குயில்குடி அய்யனாரை கும்பிட்டு விட்டு, தாமரைக் குளத்தில் கால் நனைத்து விட்டு வந்தால், அண்ணன் தட்டு நிறைய வடைகளோடு நின்றிருந்தார்.. வடைகளைத் தின்று, இரண்டு டீயையும் குடித்து, வயிறு நிறைந்த பின்னர் அண்ணே கிளம்புறோம் என்று அனைவரிடமும் விடை பெற்று விட்டுக் கிளம்பினோம்…



அங்கே கிடைத்த நண்பர்கள் ஊடகவியலாளர் வெற்றிதாசனுக்கும் மருத்துவர் ராஜன்னாவுக்கும் என் அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்… வெற்றிதாசனின் நகைச்சுவைப் பேச்சு ஏற்ற இறக்கங்களில் ஏற்பட்ட களைப்பிற்கு இளைபாறுதல் தந்தது… 




இந்த விடுமுறையில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், தொழில், வேலை பற்றிய எந்தச் சிந்தனைகளும் இல்லாமல் வெறும் மனுசனாக ரொம்ப இயல்பா மகிழ்ச்சியாக இருந்த நேரங்கள் என்று கீழக்குயில்குடிப் பயணத்தைச் சொல்லுவேன்… அதற்கான அருமையான இந்த வாய்ப்பை எற்படுத்தித் தந்த அண்ணன் முத்துக்கிருஷ்ணனுக்கு என் மகிழ்ச்சியைம் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்…







என்ன இது, கீழக்குயில் குடி மலை மற்றும் அங்கிருப்பது எல்லாம் என்னவென்று நிறைய எழுதியிருக்கலமே, ஏன் எழுதவில்லை என்று நினைக்கலாம்.. அதான் ஏற்கனவே பலர் எழுதிவிட்டார்களே; மேலும் இணையமெங்கும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன….

இந்தப் பயணம் ஒரு அனுபவம்; அதை நீங்ளே போய்ப் பார்க்கவேண்டும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்… இந்தப் பதிவைப் படித்தவர்கள் மதுரை சென்றால் அண்ணன் முத்துக்கிருஷ்ணனைப் பாருங்கள்… சுற்றுலா செல்ல விரும்புவகர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்… அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறோம்… அந்த இரண்டு மணி நேரத்தில் உங்களுக்கு வாழ்நாளுக்கான ஒரு நல்ல ”ஞாபகத்தை” பரிசாக அளிப்பார்… நல்ல படங்களாகும் ஞாபகங்களாகவும் என்றும் அது உங்கள் நினைவில் நிற்கும்… அது உறுதி…





மகிழ்ச்சி..