Monday, December 30, 2019

”வாழ்க்கையை வாழப்போறேன்”

பாய்ஜான் ஊருக்குப் போறேன் ...
ஏன் பாய்ஜான் என்னாச்சு...
என்னத்த சொல்ல, வந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆச்சு பாய்ஜான்... 900 சம்பளத்துக்கு வந்தேன்... இப்பத்தான் 2000 கிட்ட சம்பளம் வந்திருக்கு... வந்த நாள் முதல் என் உழைப்பிற்கு தேவையான உடல்நிலையைத் தக்க வைக்க உணவுக்காக மட்டும் பணம் செலவளித்திருக்கிறேன். வேறு எந்தச் செலவும் செய்யததில்லை, இங்கே எங்கெங்கு என்னென்ன இடங்கள் இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது.இப்படி இறுக்கிப் பிடிச்சு சேர்த்த காசெல்லாம் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தேன்.
நான் இங்கு வந்த மூன்றாண்டுகளில் மனைவிக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது, அனுப்பிய பணமெல்லாம் அவளின் வைத்தியத்திற்கே செலவு செய்தாகிவிட்டது. இரண்டு பிள்ளைகளும் ஹைஸ்கூலில் படிக்குமளவுக்குப் பெரியவர்களாகிவிட்டார்கள். பெரியவர்களானால் அம்மா அப்பா பேச்சைக் கேட்க கூடாது என எதும் எழுதிவைத்து விட்டானா எனத் தெரியவில்லை. அம்மாவின் பேச்சைப் பிள்ளைகள் கேட்பதுமில்லை, அவளால் அவர்களைக் கட்டுப்படுத்தவும் இயலவில்லை.
எனக்கும் அவர்களுடன் நாள்தோறும் பேசவோ கேட்கவோ வசதியில்லை. அதான் முடிவா ஊருக்குப் போயிராலாம்னு முடிவுபண்ணிட்டேன் பாய்ஜான். மனைவியின் உடல்நிலை ஒருவேளை நான் அருகிலிருந்தாலே சரியாகிடுமோ என்னமோ தெரியல. ஆனாலும் நான் அவளை கூடவே இருந்து பாத்துக்கணும்னு நினைக்கிறேன், என் இறுதி வரை அல்லது அவள் இறுதி வரை. அவள் எனக்கு ஒரு குடும்பத்தைத் தந்தவள் பாய்ஜான்.
ஆனால் என் பிள்ளைகளுக்குத்தான் நான் எதோ வெளியாள் மாதிரி ஆகிட்டேன் இப்போ. அவர்களும் வளர்ந்து நிமிர்ந்து விட்டார்கள் என் பேச்சைக் கேட்பார்களா எனத் தெரியவில்லை. நான் ஊரில் இருந்தால், அப்பானு ஒருத்தன் இருக்கானேனு அவர்களுக்குக் கொஞ்சம் நினைப்பாவது இருக்கும்.
எப்ப ஊருக்குப் போகிற நேரம் வரும்னு வந்திறங்கிய நாள் முதல் நாள்தோறும் நினைச்சிக்கிட்டு இருந்தேன். என்னமோ எனக்கு இப்பத்தான் அந்த நேரத்தை வழங்கியிருக்கிறான் இறைவன். போய் இனி சம்பாரிக்க முடியுமானு தெரியல, ஆனா வாழ்க்கையை வாழப்போறேன் பாய்ஜான். என்று சொல்லி முடிக்கும் போது கண்கள் கலங்கிவிட்டது
இறைவன் நாடினால் எல்லாம் சரியாகிடும் பாய்ஜான் , பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள், மனைவிக்கு எல்லாம் சரியாகிவிடும் பாய்ஜான் என சொல்லிவிட்டு நகரும் போது என் கண்ணும் கலங்கிப்போச்சு. ”வாழ்க்கையை வாழப்போறேன்” எனும் கனத்த சொல் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.