Sunday, September 2, 2012

தமிழ் இனி மெல்லச் சாக வேண்டாம்... பண்ணியைத் தொலைப்போம்...


அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் இனி மெல்லச் சாவதற்கு நம்முடைய பிறமொழி மீதான ஈர்ப்பு, தமிழ் மொழியில் உள்ள சொற்கள் பற்றிய அறியாமை அல்லது பேச கூச்சமாய் கருதுவது!?! என அவரவர் சிந்தனைக்கேற்ப சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று இணையத்தின் அளவிட முடியாத வளர்ச்சியில் எத்தனையோ நல்லதும் கெட்டதும் இருந்தாலும், நம் தாய்மொழி சார்ந்த பங்களிப்பில் இணையத்தின் பங்கு ஒரு பெரும் பலமாகவே இருக்கின்றது. ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒரளவுக்குப் படித்த இளைஞனிடம் தமிழ் , எழுத்தாளர்கள் பற்றிக் கேட்டால் குறிப்பிட்டு ஒரு நாலைந்து பெயர்களை சொல்லியிருப்பான். ஆனால் இன்றோ, இந்த இணையத்தின் பெரும் வளர்ச்சிக்குப் பின், எண்ணிலடங்கா எழுத்தாளர்கள் இணையம் முழுவதும் விரவிக் கிடக்கிறார்கள். 

ஒவ்வொருவரும் இணையத்தில் ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொண்டு, தான் கண்டது, கேட்டது, சிந்தித்தது, கற்பனையில் கருவாக்கியது,புறம் பேசுதல் என அனைத்தையும் எழுதி வைக்க தொடங்கிட்டாங்க.... இணையத்தில் எழுத இலவசமாக பல தளங்கள் கிடைப்பதால், என்னை மாதிரி ஆட்களும், தங்களுக்காக ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொண்டு,பதிவுகள் என்ற பெயரில் எதை எதையோ எழுதி வைத்துக்கொண்டு உங்களை படிக்கச் சொல்லி கொடுமைப் படுத்துகிறார்கள் :-)  எது எப்படியோ இது ஒரு நல்ல வளர்ச்சி...

தமிழ் மெல்லச் சாவதற்கும், இப்ப நான் உளறுவதற்கும் என்ன தொடர்பு என நினைக்கிறீர்களா? இதோ வந்துட்டேன்... 

செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி, எங்கள் தாய்மொழி...

தாய்மொழி தமிழ்மொழி என்று சொன்னதுமே நம் மயிர்க்கால்கள் கூச்செறியும்... ஒரு வித பெருமை நம்மை ஆட்கொள்ளும்...திருவள்ளுவர், பாரதியார்லாம் கண்ணுக்கு முன்னால வந்து நிப்பாங்க... உலகத்துல உள்ள பழமையான மொழிகளில் நம்ம தமிழ்மொழி ஒன்று... கல்தோன்றி மண் தோன்றா காலத்தே.... அப்படி இப்படினு பேச ஆரம்பிச்சிருவோம்.... அப்பப்ப தமிழ் மொழியில் எண்கள்... அறிவியலில் நம் முன்னோர்கள்... அந்த அடர்ந்த காட்டுக்குள் கோயிலைக் கட்டியது நம் தமிழன், தமிழர்களின் கட்டடக் கலை அப்படி இப்படினு பல இடங்களில் படங்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்வோம். 

இது ஒரு பெருமை பாராட்டும் நல்ல உணர்வு, நம் இயல்பு என்றும் சொல்லலாம்... நானும் பெருமையாகச் சொல்லிக் கொண்டும் இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்டும் இருக்கிறேன் இன்று வரை.... இது போக அடுத்த மொழிக்காரன் நமக்கு தீங்கு ஏற்படுத்துகிறான் என்ற புலம்பல்களும் அவ்வப்போது வந்து போகின்றன... 

நாம் இன்று பேசும் இயல்பான பேச்சு வழக்கில், பாதிக்குப் பாதி என்று கூட சொல்லலாம், ஆங்கிலம் கலந்து விட்டது.... நமக்குள்ளே பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு வேளை உணர்ச்சி வசப்பட்டால் திடீரென ஆங்கிலம் வந்து குதிக்கிறது, அதுவரை தமிழில் பேசிக்கொண்டிருந்தவர்கள் திடீரென, ”I don't know how to explain” என்கிறார்கள், விளக்கமளிக்க தமிழ் மொழியில் சொற்களுக்கு பஞ்சமோ என்னமோ தெரியவில்லை.

ஆகா, உடனே நான் ஆங்கிலத்துக்கு எதிரி என்று நினைத்து விட வேண்டாம்... ஆங்கிலம் அல்லது எந்த மொழியாக இருந்தாலும் நமது கருத்தை அடுத்தவரிடம் சென்று சேர்க்க உதவுமானால் நல்லதுதானே.... ஆகவே ஆங்கிலத்திற்கோ அல்லது வேறு எந்த மொழிக்குமோ எதிர்ப்பாக இதை இங்கு நான் எழுதவில்லை. தமிழர்களாகிய நாம், நமக்குள்ளே பேசும் போது முடிந்தளவு ஆங்கிலத்தையோ, வேறு எந்த மொழியை வேண்டுமென்றே கலப்பதை தவிர்க்கலாமே என்ற ஒரு வேண்டுகோளாய் இந்தப் பதிவு. எண்ணற்ற சொற்கள் நம் தமிழில் இருக்கும் போது, அடுத்த மொழியின் உதவி நாடி நம்மையறியாமலே நாம் ஏன் நிற்க வேண்டும் என்றொரு கேள்வி.

உடனே petrol, car, plastic, auto rickshaw, bakery, train, rocket, facebook,  போன்றனவற்றிற்கு தமிழ்ப்பெயர்களை உருவாக்கி அல்லது கண்டறிந்து அவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள பெரும்பாடு படவேண்டாம்... மேலும் அவற்றை தமிழ்ப் படுத்தும் போது, அந்தப் பெயர்கள் சரியாகப் பொருந்தாமல் எதோ உறுத்தலாகவே இருக்கின்றன.

பொதுவாக பெயர்ச்சொற்கள் ஒவ்வொரு நாளும் இந்த அறிவியல் உலகத்தில் புதியதாய் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் வினைச்சொற்கள் எல்லாம் பெரும்பாலும் பழமையானதுதானே.... 

எடுத்துக்காட்டாக கீழே உள்ளவற்றை கொஞ்சம் பாருங்களேன். நம்மில் பெரும்பாலானோர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். என் நினைவுக்கு வந்த வரை, பொதுவாக நாம் ஆங்கிலம் கலந்து பேசும் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை இங்கு தந்திருக்கிறேன்.

use பண்றேன் - பயன்படுத்துகிறேன்
face wash பண்ணிட்டு வாரேன் - முகம் கழுவிட்டு வாரேன்
happy  - மகிழ்ச்சி
taste ஆ இருக்கு - சுவையா இருக்கு
try பண்றேன் - முயற்சி செய்கிறேன்
call பண்றேன் - கூப்பிடுறேன், அழைக்கிறேன்
stop பண்ணிட்டேன் - நிறுத்திட்டேன்
send பண்ணிட்டேன் - அனுப்பிட்டேன்
create பண்ணேன் - உருவாக்கினேன்
sharp பண்ணேன் - தீட்டினேன், கூர்மையாக்கினேன்
rest  எடுக்கிறேன் - ஓய்வெடுக்கிறேன்
smell நல்லாயிருக்கு - மணம் நல்லாயிருக்கு
mix பண்ணு  - கலந்து விடு
mail receive ஆனதும் - மெயில் கிடைச்சதும்
think பண்றேன் - சிந்திக்கிறேன்
search பண்றேன் - தேடுகிறேன்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... நீங்களும் கொஞ்சம் சிந்திச்சு பாருங்க, எந்தளவுக்கு அடுத்த மொழியை நம் தமிழில் கலக்கிறோம் என்று... நண்பர்களே, தயவுசெய்து முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள்...

இதுல எல்லாம் பார்த்தீங்கன்னா, பிற மொழியை கலப்பதற்கு ஏதுவாக”பண்ணி” என்பது வினைச்சொற்களுக்கு அடுத்து வந்திருக்கும்... இந்தப் பண்ணியைத் தொலைத்தால் தமிழில் பிற மொழி கலப்பதை கொஞ்சமாவது தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.

இதுவரை படித்ததில் ஏதேனும் பிழையிருப்பின், தமிழறிஞர்கள் தயவுசெய்து பொருத்தருளவும்.


தமிழர்களாகிய நாம் நமக்குள் பேசும் போது முடிந்தளவு தமிழில் பேசுவோம்.

அனைவருக்கும் நன்றி.

20 comments:

Shankar M said...

அருமை பாலாஜி... சிந்திக்க வைத்த பகிர்வு.

Balaji said...

நன்றி சங்கர்... உங்கள் பதில் ஊக்கமளிக்கிறது.

Unknown said...

நல்லா சிந்திச்சிருக்கீங்க.. நானும் Try பண்ணி பாக்குறேன் பாலாஜி..

Balaji said...

ஹா ஹா ஹா!!! நல்லா ட்ரை பண்ணுங்க நியாசு.......

settaikkaran said...

ஆக்சுவலி, உங்க ஃபீலிங்க்ஸைப் படிச்சதும் எனக்கு ரொம்பவே கரெக்டாத் தெரிஞ்சுது! நைஸ் ஆர்ட்டிகிள்! :-)

Balaji said...

நன்றி சேட்டைக்காரன் ஐயா....

மகி said...

"ஆக்சுவலி, உங்க ஃபீலிங்க்ஸைப் படிச்சதும் எனக்கு ரொம்பவே கரெக்டாத் தெரிஞ்சுது! நைஸ் ஆர்ட்டிகிள்! :-)"
ததாஸ்து....:-)))


Balaji said...

"ஆக்சுவலி, உங்க ஃபீலிங்க்ஸைப் படிச்சதும் எனக்கு ரொம்பவே கரெக்டாத் தெரிஞ்சுது! நைஸ் ஆர்ட்டிகிள்! :-)"
ததாஸ்து....:-)))

:-))))))

பால கணேஷ் said...

நா்ன இது மாதிரி இயன்ற வரை ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.உங்கள் எழுத்தும் கருத்தும் அருமை.

Balaji said...

மிக்க நன்றிங்க...

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு... பாராட்டுக்கள்...

(http://minnalvarigal.blogspot.com/2012/09/11.html) மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…

Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

Tamilthotil said...

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... நீங்களும் கொஞ்சம் சிந்திச்சு பாருங்க, எந்தளவுக்கு அடுத்த மொழியை நம் தமிழில் கலக்கிறோம் என்று... நண்பர்களே, தயவுசெய்து முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள்...

இந்த நிலை மாற மனிதனின் அத்தியாவசிய தேவையான உணவு உடை, இருப்பிடத்தில் இருந்து மாற வேண்டும்.எல்லாம் கலப்படம் தான். மம்மி நூடுல்ஸ் வேணும். ஜீன்ஸ் பேண்ட் தான் வேணும். டிரிபிள் பெட்ரூம் பிளாட் தான் வேணும். பார்போம் நிச்சயம் மீண்டும் மாற்றம் வரும். நல்ல பதிவு
எனது இந்த பதிவை நேரமிருப்பின் சென்று பார்க்கவும்
http://tamilraja-thotil.blogspot.com/2012/09/blog-post_6.html

Balaji said...

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே...

Balaji said...

மிக்க நன்றி தமிழ்ராஜா அவர்களே...

வெங்கட் நாகராஜ் said...

மின்னல் வரிகள் மூலம் உங்கள் தளம் வந்தேன்..

இனி தொடர்ந்து வருவேன்...

தொடரட்டும் உங்கள் இனிய பகிர்வுகள்.

Balaji said...

ரொம்ப நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே...

Thozhirkalam Channel said...

மிக அருமையான பதிவு,,, தொடர்ந்து இதே போன்று பல பதிவுகள் எழுதுங்கள் சகோ,,,


தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி வேண்டுமா..? சொடுக்குங்கள்

Balaji said...

நன்றி சகோ.

Barari said...

இந்த பதிவு படித்தவுடன் தமிழனை (டமிலனை) செவிட்டில் அறைந்தது போல் இருந்தது.குறிப்பாக பெரு நகரங்களில் வாழும் தமிழர்கள் (ட்டமிலர்கள்) தங்களை திருத்தி கொள்ள முன் வரவேண்டும்.மிக சிறந்த பதிவு அன்பு கூர்ந்து தொடரவும்.

Balaji said...

மிக்க நன்றி திரு. Barari