Friday, April 10, 2020

மைக்ரெய்ன் தலைவலி


அமீரகம் வந்த காலந்தொட்டு எப்போதும் உடனிருந்தது தலைவலி… தலைவலியென்றால் வெறும் தலைவலியல்ல… எமத் தலைவலி… அதற்கு பெயர் மைக்ரெய்ன். தலையின் முன்புறம், பக்கவாட்டில், ஒரு பக்கமாக, காதின் பின்புறம் அல்லது முழுத் தலையும் என அதன் விருப்பப்படி பிடித்து ஆட்டுவிக்கும் …

சரி எப்ப தலைவலி வரும் என்றால், படைத்த பிரம்மனுக்கே தெரியாத சுகப்பிரசவ பிள்ளைப் பேறு போலத்தான்  மைக்ரெய்ன் முதலில் இருந்தது… பின்னர் சீசரியன் போல நமக்கு நன்றாகவே தெரிந்து விடும் இதோ இன்னும் பத்து பதினைந்து நிமிடத்திற்குள் தலைவலி வந்துவிடும் என்று… இத்தனை ஆண்டு காலத்தில், அப்படியாக மைக்ரெய்ன் வரப்போவதற்கான அறிகுறி வந்த பிறகு ஒரு நாள் கூட தவறியதில்லை, அது மரணம் போல உறுதியாக வந்தது…

கூடுதலான வெயில், குளிர், வெளிச்சம், பசி வந்த பின் உணவுண்ண நேரம் சிறிது தவறினால், தொலைதூரப் பயணம், கடல் குளியல், குளிர்ந்த உணவு, மிகவும் சூடான உணவு, காத்திருத்தல், மஞ்சள் விளக்கு,  கணினி கூடுதலாகப் பார்த்தல், வெயில் நிற்றல், கோபம், துக்கம், ரொம்ப சத்தமாக சிரித்தல், அழுத்தம், புழுக்கம், இளம் இசையமைப்பாளர்களின் இசை, முட்டை பல்பு, குழந்தையின் அழுகைக் குரல், அளவுக்கதிகமான ஒலி ஆகியன மைக்ரெய்ன் தலைவலி உண்டாக்கூடிய காரணிகளில் சில…

தலைவலி வந்துவிட்டால் என்னென்ன ஆகும் என ஃபேஸ்புக்கில் சில போஸ்ட்கள் சில நேரங்களில் இட்டதுண்டு..

”அறையை மணக்கச் செய்ய எதோ வாசனைத் திரவியத்தைத் தூவுகிறார்கள்.
தலைவலி இஸ் ஆன் த வே என்று என் மூளை கூவுவதை அவர்களுக்கு எப்படிச் சொல்வேன்?

சுவர்க்கடிகார நொடிமுள்ளின் ஒலி கூட பேரிடியாய் தலையில் இறங்கும் தலைவலி வந்தவுடன்...
பசி வந்தால் மட்டுமல்ல, தலைவலி வந்தாலும் பத்தும் பறந்து போகும்...
என் விண்வெளி தலைக்கு மேல் திறந்ததோ அடடா...
ஆமாம்ப்பா அப்படித்தான் மொத ஆரம்பிக்கும், அப்புறம் விண்வெளி என்ன தலையே திறந்த மாதிரி கடுமையா வலிக்கும்... அதான் மைக்ரெய்ன் தலைவலி...

எத்தனை மாத்திரைகள் சாப்பிட்டாலும், டைகர்பாம், ஆக்ஸ் ஆயில் என மருந்துகளைத் தேய்த்தாலும் கொஞ்சம் கூட அசராமல் என்னைக் கொடுமைப்படுத்தும் தலைவலி, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால்தான் என்னை விட்டு விலகுகிறது...

யாராவது தலை வலிக்கிறது என்று சொன்னால், உடனே அவர் மேல் இரக்கம் உண்டாகிறது... ம்ம்ம்ம்ம்....

தனக்கு வந்தால்தான் எந்த வலியையும் உண்மையாக உணர முடிகிறது...

தலைவலி வரப்போவதை முன்கூட்டியே அறிந்து மாத்திரை எடுத்துக்கொள்பவனே மைக்ரேன் அறிவாளி.
என்ன ஒன்று; இந்த மைக்ரேன் தலைவலியை எப்படி முற்றிலுமாக வராமல் நிறுத்துவது என அறியாத முட்டாளும் அவனே.

Hi headache, I truly appreciate your punctuality and the schedule that you are keeping up. Kindly consider giving me a break for an hour at least. Thanks.

என்னது நாலஞ்சு நாளா தலைவலி வரலையேனு நினைச்சாலே போதும். அன்றே உங்களுக்குத் தவறாமல் வந்துவிடும். “

 சரி… இதற்கான மருத்துவம் என்னவென்று தெரியாமல், அறியாமைதான், தொடக்கத்தில் பெனாடோல் ஒன்று எடுத்துக் கொள்வதுண்டு… பின்பு ஒரே நேரத்தில் இரண்டு எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்… பின்பு தூங்கி எழுந்தால் தலைவலி குணமாகும்… தலைவலி வந்து போன போனபிறகு உடலே இலகுவாக இருக்கும்… எதோ இறக்கை முளைத்தது போல ஓர் உணர்வும் புத்துணர்ச்சியும்…


இப்படியாகத் தொடர்ந்த தலைவலிக்கு வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்று பொது மருத்துவர் ஒருவரைப் பார்த்தேன்… அவர் அப்பொழுது சந்தையில் வந்திருந்த ஒரு மைக்ரெய்ன்க்கான தலைவலி மாத்திரையைப் பரிந்துரைத்தார்… இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் தலைவலி வரும் போது புதுமாத்திரை எடுக்கத் தொடங்கினால் எதோ சரியானது போல் தோன்றும்… பின்பு வழக்கம்போல எந்த மாத்திரைக்கும் கட்டுப்படாத சண்டியராக தலைவலி வெறியாட்டம் தொடங்கி விடும்… 


அதன் பின் நான்கைந்து முறை வெவ்வேறு பொது மருத்துவராகப் பார்த்து விட்டு, அவர்கள் அந்த நாளில் சந்தையில் இருந்த மைக்ரெய்ன் மாத்திரையைப் பரிந்துரைத்தார்கள்… எல்லாம் தின்றாகிவிட்டது… வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை எடுக்க வேண்டியதாகிப் போனது… அதும் ஒரே நேரத்தில் இரண்டு மாத்திரை… அதும் பெனாடொல் எக்ஸ்ட்ரா போன்ற கூடுதல் சக்தியுள்ள மாத்திரைகள்… எதற்கும் கட்டுப்படமாட்டேன் என்று விஸ்வரூபம் எடுத்தாடியது தலைவலி… 

இப்படியே நாட்கள் கடந்தன… காரில் தலைவலி மாத்திரை, அலுவலகத்தில் தலைவலி மாத்திரை, வீட்டில் எப்போதும்… என எல்லா நேரத்திலும் சூழலிலும் தலைவலி மாத்திரையைக் கையில் வைத்துக் கொண்டே அலைய வேண்டிய கட்டாயம்… மைக்ரெய்னுக்கென்று விற்கப்பட்ட அனைத்து விதமான மாத்திரைகளையும் சாப்பிட்டிருக்கிறேன் என்று சொல்லலாம்… வாரத்தில் நான்கைந்து முறை குறையாமல் இருந்தது… என்னுடன் பழகுபவர்கள் என்னைத் தெரிந்தவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் நான் தலைவலிக்காரன் என்று நன்றாகத் தெரியும்… யாராவது தனக்குத் தலைவலிக்கிறது என்றால் அவர்கள் மேல் எனக்கு ஒரு அனுதாபமே வந்துவிடும்… ஆறுதலாகப் பேசத் தோன்றும்…

இப்படியாக கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தொடந்து ஆட்டிப்படைத்த தலைவலி, அன்றொரு நாள் எதோ ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்து (நிகழ்ச்சி நன்றாகத்தான் இருந்தது) வீட்டிற்கு வந்ததும் உச்சத்திற்கு சென்றது… இது எப்போதும் போல இல்லை… கடுமை கூடுதலாக இருந்தது ஒருவேளை மண்டை வெடித்து விடுமோ என்றும் தோன்றியது… உடனடியாக இரண்டு மாத்திரை போட்டுவிட்டு படுத்து விட்டேன்… ஒரு நிலைக்குமேல் இது ஏதோ நம்மைக் கொல்லப் போகிறது என்றஞ்சி கிட்டத்தட்ட மயங்கிவிட்டேன்… 

பின்பு தம்பி வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான், அங்கு வேலை பார்த்த தங்கை என்னண்ணே உங்களுக்கு பிபி இப்படி கூடுதலாக இருக்கிறது என்று பயந்து உடனடியாக மருத்துவரிடம் காட்டினார்கள்… மருத்துவர் தலைவலியால்தான் அழுத்தம் கூடியிருக்கிறது என்று உடனே ஒரு வலி குறைக்கும் மருந்தை நரம்பு வழி ஏற்றச் சொன்னார்… அதன் பின் சரியாகி வீடு வந்து சேர்ந்தேன்… அந்த மருத்துவர் சொன்னது போல் வெயிலில் நிற்காமல், குளிரில் நிற்காமல், வெயிலை நேரடியாகப் பார்க்காமல் இன்னும் பல பல கட்டுப்பாடுகளுக்குள் என்னைப் பழக்கிக் கொண்டிருந்ததால் சில மாதங்களுக்கு வாரத்தில் மூன்று முறைதான் வந்தது மைக்ரெய்ன்.

அடுத்த தாக்குதல் 2019 அக்டோபர் மாதம் நடந்தது.. அதே போல் கடுமையான தலைவலி, மண்டை வெடித்து விடும் என்ற நிலைதான் என்றாலும் இம்முறை கடந்த முறையை விட கூடுதலாக இருந்தது… செயலிழந்து விழுந்து விட்டேன்… மனைவி எங்கள் குடும்ப நண்பரை ஃபோனில் அழைக்க, அவர்கள் வந்து என்னை மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் சேர்த்து அதே போல் வலி குறைக்கும் மருந்தை நரம்பில் ஏற்றி ஒரு வழியாகச் சரி செய்தார்கள்… 

அந்த மருத்துவமனையில் எனக்கு அவசர சிகிச்சை செய்த மருத்துவர் சொன்னார், இத்தனை ஆண்டுகள் மைக்ரெய்ன் வாழ்க்கையில், நரம்பியல் நிபுணரை மைக்ரெய்னுக்காகப் பார்த்திருக்கிறீர்களா ? இல்லை என்றேன்… நாளை அந்த நிபுணரைப் பாருங்கள், அப்போதுதான் உங்கள் தலைவலிக்கான மருத்துவத்தைத் தொடங்குகிறீர்கள் என்று பொருள் என்றார்…

அதன் பின்பு தம்பி ஒருவர் என்னை நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்றார்… எல்லாம் கேட்டுவிட்டு, எம் ஆர் ஐ எல்லாம் பார்த்து விட்டு, உங்கள் தலையில் ஒன்றுமில்லை அதாவது பயப்படும்படியாக எந்தப் பிரச்சனையுமில்ல, இனி உங்கள் மைக்ரெய்ன் தலைவலிக்கான மருத்துவத்தைத் தொடங்கலாம் என்று தொடங்கினார்… ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டும், அத்தனை நாட்களாக வெறும் வலி மாத்திரைகளை மட்டும் தின்று கொண்டிருந்த நான் முதல் முறையாக மருத்துவம் பெற்றேன்… 

ஊரு விட்டு ஊரு வந்து வாழும் இந்த வாழ்வில் என்னைச் சுற்றி நண்பர்கள் மட்டும் இருப்பதால் நானும் இயங்கிக் கொண்டிருக்கிறேன். எல்லா அவசர காலத்திலும் நண்பர்கள் துணை நின்றிருக்கிறார்கள்.. அவர்கள் நண்பர்களாதலால் நன்றி சொல்லத் தேவையுமில்லை. இன்னும் சொல்லப் போனால், நெருக்கமான நண்பர்கள் இந்தத் தலைவலிக்குச் சொன்ன சில வழி முறைகளையும் பின்பற்றி வருவதால், தலைவலியை நான் கண்டு பல நாட்களாகி விட்டன… Go Slow… It helps,really… Don’t invite that villain by hurrying up things…

வாரத்திற்கு ஐந்தாறு முறை என்றிருந்த மைக்ரெய்ன் அக்டோபர் 2019 தாக்குதலால் நரம்பியல் மருத்துவரைப் பார்த்த பிறகு, இன்று வரை மாதத்திற்கு இரண்டு முறை வருவது கூட அரிதாகிப் போனது… 

ஆகவே ”மைக்ரெய்ன் தலைவலி உள்ளவர்கள், வெறும் தலைவலி மாத்திரைகளை உண்ணாமல், நரம்பியல் நிபுணரைச் சந்தித்து முறையான தேவையான, முறையான மருத்துவத்தைப் பெறுங்கள்.” 

(இந்த இரண்டு வரியை எழுதுறதுக்குத்தான் இவ்வளவு பெரிய பதிவா?? என வையாதீக)