Thursday, December 27, 2012

சுலைமான் தாத்தாவின் தோட்டம்





செவ்வக வடிவில் அமைந்திருக்கும் ஐந்து மாடி குடியிருப்புப்பகுதி, அதன் நடுவில் உள்ள இடத்தில் ஒரு பெரிய பூங்கா... குடியிருப்பின் கீழ்த்தளம் முழுவதும் வணிக நிறுவனங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அதில் ஒரு பகுதியில் எங்கள் புதிய அலுவலகம் அமைந்துள்ளது... 

இந்த அலுவலகத்திற்கு சென்ற நாள் முதலே அவரைக் கவனித்து வந்திருக்கிறேன்... வயதான பெரியவர்...  பெயர்: சுலைமான்.

புன்னகையுடன், சலாம் அலைக்கும் பாய் ஜான் - வாஅலைக்கும் சலாம் என்று மட்டும் சொல்லிக் கொண்டு நாள்தோறும் தொடர்ந்தது எங்கள் நட்பு. 

என்னவோ ஓர் ஈர்ப்பால் அவரோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசத் தொடங்கினேன்... எந்நேரமும் மரம் செடி கொடிகளோடுதான் இருப்பார்... ஓய்வாக அவர் இருந்து நான் பார்த்த நிகழ்வுகள் மிகவும் குறைவே... ஏன் இல்லையென்று கூடச் சொல்லலாம்... நான் அவரோடு பேசிய பொழுதுகளில் தன் வேலையை விட்டுவிட்டு அவர் என்னோடு பேசியதில்லை... சலாம் சொல்லும்போதும், நலமா இருக்கிறீர்களா எனக் கேட்கும் போது மட்டுமே நிமிர்ந்து நம் முகத்தைப் பார்ப்பார்.
 




பின்பு, நீண்ட குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுதல், களை வெட்டுதல், கூடுதலாக வளர்ந்திருக்கும் செடிகளை அழகாக ஒழுங்கு படுத்துதல் என தன் பணியைச் செய்து கொண்டேதான் பேசுவார்...  அவருக்கு யாருடனாவது பேசுவது மிகவும் பிடிக்கும், இருப்பினும் யாரையும் தேடிப் போய் பேசுவதில்லை, தான் வேலை செய்து கொண்டிருக்கும் போது யாராவது வந்து பேசினால் அவர்களோடு பேசுவார். அவ்வளவுதான்...

அவரோடு பேசிக்கொண்டிருந்ததில், சில வியப்பான நிகழ்வுகள் எனக்குண்டு... அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.... பகிர்வதில் பெருமிதமும் கொள்கிறேன்...

எத்தனை ஆண்டுகளாக வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சரியாகத் தெரியவில்லை, அமீரகத்திற்கு வேலைக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும், எனக்கு மகன் பிறந்தான் அவன் பெரியவனானதும் திருமணம் செய்து வைத்தேன், இப்பொது அவனுக்கு மகன் இருக்கிறான் என்று கூறி தனது பேரனின் படத்தை போட்டோ ஆல்பத்திலிருந்து எடுத்துக் காட்டினார்...  நாம் அந்த ஆல்பத்தை பார்க்கும் போது அவர் கண்ணில் ஒரு பெருமையும் மகிழ்ச்சியும் தெரிந்தது.



இனி அவர் சொன்னதை அவர் சொல்வது போலவே கேட்போம்...

நான்: எத்தனை ஆண்டுகளாக இந்த வேலை பார்க்கிறீர்கள்

அவர்: இங்கு வந்ததிலிருந்தே இந்த வேலைதான் பார்க்கிறேன்

நான்: நீங்க இங்க வந்த பொழுது, இந்த இடம் எப்படி இருந்தது?

அவர்: வெறும் மண்ணுதான் இருந்தது... இதைப் பூங்காவாக மாற்றுவதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலை.

நான்: நீங்கதான் ஒவ்வொன்னா உருவாக்குனீங்களா?

அவர்: ஆமாம், முதலில் இந்த மண்ணில் செடி வளர்க்க ரொம்ப கடினமா இருந்தது... கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு செடியா நட்டேன்... தண்ணீர் விட்டாலும் பட்டுப் போகும்.... நாள்தோறும் தவறாமல் தண்ணீர் விடுவேன்... கருகிய இலைகளை அகற்றி விடுவேன்.... எப்பவும் செடிகளைப் பச்சையா பார்க்கிறது எனக்குப் பிடிக்கும்...

நான்: இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்லுங்க...

அவர்: ஆமாம்... எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை, இந்த மரம் செடி கொடிகளும் மனிதன் மாதிரித்தானே, அவைகளை ரொம்பவும் நேசிக்கிறேன்... எந்தச் செடி நல்லா  வளருது, எது காய்ந்து போயிருக்கு, எது பிழைக்கும் எது செத்துப் போகும் என எல்லாம் எனக்கு அத்துப்படி... என் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களை நேரத்தை இந்த இயற்கையோடு செலவளித்து விட்டேன்... வேற எதுவும் எனக்குத் தெரியாது....

நான்: இங்க இருக்கிறவங்களுக்கு உங்களைப் பற்றி தெரியுமா?

அவர்: ம்ம்ம் எல்லாருக்கும் தெரியும், பார்க்கும் போது சிலர் சலாம் சொல்லுவாங்க... புதிதாய் குடி வருபவர்கள் போகப் போகத் தெரிஞ்சுக்குவாங்க... சிலர் மட்டும் என்னிடம் பேசுவார்கள். பலர் புன் சிரிப்புடன் என்னைக் கடந்து செல்வார்கள்...

நான்: அவர்கள் இந்தப் பூங்காவை எப்படி பாத்துக்கிறாங்க....

அவர்: கோடைகாலத்தில் யாரும் இங்கு அதிகம் நடமாட மாட்டாங்க... வெயிலில் யாரும் இங்க நிற்க கூட முடியாது.... நான் மட்டும் தவறாமல் தண்ணீர் பாய்ச்சிருவேன்... குளிர்காலத்தில் நிறைய பேர் குழந்தைகளுடன் வந்து விளையாடுவார்கள்... இருக்கைகளில் அமர்ந்து பேசுவார்கள்.... அப்போது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.  

ஆனால், சிலர் பூக்களை வெடுக்கென பிடுங்குவது , இலைகளை கிள்ளி எறிவதும் எனக்குப் பிடிக்காது... அதுவும் மனிதன் மாதிரித்தானே, ஏன் அதன் உறுப்பை சேதப்படுத்தணும்...பார்த்து ரசிக்கத்தான் பூக்கள், அதைப் பிடுங்கி கையில் வைத்து கசக்கி எறிபவர்களை காணும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்... ஆனால் நான் ஒன்றும் சொல்வதில்லை....




இப்படியாக அவருடன் பேசிக் கொண்டிருந்த போது நான் அறிந்த தகவல்கள் இவை. இன்னும் நிறைய பேசியிருக்கிறேன் அவருடன்.... மரம் செடி கொடிகளை எப்படி பராமரிப்பது, எப்படி அழகு படுத்துவது என பல தகவல்களைப் பேசுவார்...அவருக்கு செடி கொடிகளோடு படம் எடுத்துக் கொள்ள ரொம்ப பிடிக்கும்... நான் அந்த வழியாக செல்லும் போதெல்லாம் அவரைப் படமெடுக்கச் சொல்லுவார். மொபைல் கேமராவில் படமெடுத்து அவரிடம் காட்டுவேன், அவருக்கு அது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்....

வெறும் மண்ணாக இருந்த இடத்தில், என்னென்ன வளர்த்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள விருப்பமா?

அரச மரம், வேப்ப மரம், ஈச்ச மரம், நிறைய பூச்செடிகள், பூசணிக்காய், முருங்கை மரம், ஆவாரம் பூ, செவ்வந்திப் பூக்கள்,இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத மரங்கள், பூச்செடிகள் என அழகான பூங்காவை உருவாக்கிப் பராமரித்து வருகிறார்.



எத்தனையோ பேர் மரம் நடுகிறேன் என பேருக்கு போட்டோ மட்டும் எடுத்து விட்டு, பின்பு கண்டுகொள்ளாமல் செல்லும் இவ்வுலகில் சுலைமான் தாத்தாவை மரியாதையோடு பிரமிப்பாய்ப் பார்க்கிறேன்... என்னதான் சம்பளத்திற்கு வேலை பார்த்தாலும், அவரின் ஈடுபாடும், இயற்கையின் மேல் கொண்ட காதலும், வேலையையும்  தாண்டி அவர் செய்யும் பெரும் சேவையாகவே எனக்குப்படுகிறது...

அரிய மனிதர்களை எங்கோ செய்தித்தாளில் படித்திருப்போம், ஆனால் நம்மைச் சுற்றியே சில அரிய மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சுலைமான் தாத்தா மூலம் நான் அறிந்து கொண்டேன். 

இந்தப் பதிவில் இருக்கும் பூக்கள் செடிகள் படங்கள் எல்லாம் அவர் உருவாக்கிய தோட்டத்தில் எடுத்தவைகள்தான்...


மேலும் சில படங்களைக் காண இங்கு செல்லுங்கள்:

நன்றி.



Monday, December 17, 2012

பாலைவனப் பயணம் - Desert Safari



அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே,

ஒவ்வொரு ஊரிலும் பார்க்கவேண்டிய இடங்கள் எத்தனை எத்தனையோ இருக்கும். பெரும்பாலும் உள்ளூர்க்காரர்கள் பார்த்திராத அல்லது கண்டு கொள்ளாத இடங்களை வெளியூரிலிருந்து சுற்றுலா வருபவர் கண்டு ரசித்துச் செல்வார்கள். மதுரையிலேயே பிறந்து வளர்ந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலை முழுமையாகச் சுற்றிப்பார்த்தவர்கள் கொஞ்சம் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள்... ஆனால் அதே மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிப்பார்க்க இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், உலகெங்கும் இருந்தும் பலர் நாள்தோறும் வந்து செல்கிறார்கள்.

ஒருமுறை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த அண்ணபூரணி கோயிலைப் பற்றி உள்ளூர்க்காரர் ஒருவர் சொன்ன தகவல் என்னை ஆச்சரியப்படுத்தியது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து பிடி மண் எடுத்தே அண்ணபூரணி கோயிலைக் கட்டினார்கள் என்று அவர் கூறினார். எந்தளவுக்கு அந்தத் தகவலில் உண்மை என்று எனக்குத் தெரியவில்லை, இருப்பினும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி அவர் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது எனக்குப் பெருமையாகவும், உள்ளூர மகிழ்ச்சியாகவும் இருந்தது... நானும் மதுரைக்காரன்ல... :-)


டெசர்ட் சஃபாரி என்று சொல்லிவிட்டு மதுரையிலேயே நிற்கிறேன் என்று பார்க்கிறீர்களா?!
சரி வாருங்கள் டெசர்ட் சஃபாரிக்கு கூட்டிச் செல்கிறேன்.

அமீரகத்தில் வசிப்பவர்களும் , சுற்றுலா வருபவர்களும் கண்டிப்பாக ஒரு முறையாவது பயணித்து ரசிக்கவேண்டிய ஒன்று பாலைவனப் பயணம் எனும் டெசர்ட் சஃபாரி (Desert Safari).

நாம் பயணத்தில் காணப்போகும் பட்டியல்:

> பாலைவனப் பயணம்
> ஒட்டகப் பயணம்
> சிற்றுண்டி
> ஹூக்கா
> மெகந்தி
> கந்தூரா டான்ஸ்
> இரவு உணவு
> பெல்லி டான்ஸ்

பாலைவனம்:

உள்ளூர் அரபி நண்பர் என்னிடம் சொன்னது, பாலைவனமும் கடலும் ஒன்று... உள்ளே நெடுந்தொலைவு சென்று விட்டால் எல்லாத்திசையும் மணல்தான்... திக்குத்தெரியாமல் சிக்கிக் கொள்வோம்.... சரியான முன் அனுபவத்தோடு பயணம் செய்தால் மட்டுமே, எளிதாக திரும்பி வர முடியும்... 

உண்மைதான்... எங்கு பார்த்தாலும் மணல் மணல் மணல்... 




டெசர்ட் சஃபாரி:

இந்தப் பயணம் செய்வதற்கென்று நிறைய சுற்றுலா நிறுவனங்கள் இங்கு இருக்கின்றன. அவர்களிடம் பணம் கட்டி பதிவு செய்து விட்டால் நம்மை அழைத்துக்கொண்டு செல்வார்கள். ஒரு ஆளுக்கு 150 திர்ஹாம்ஸ்லிலிருந்து 300 திர்ஹாம்ஸ் வரை Desert Safari Packager tour கிடைக்கிறது. பாலைவன மணலில் ஓட்டுவதற்கு 4X4 வண்டிகள் பயன்படுத்துகிறார்கள், பெரும்பாலும் டொயோட்டா லேண்ட்க்ருசர்.  

பாலைவனத்தில் அணிவகுத்துச் செல்லும் கார்கள்:



சரி வாங்க உள்ளே போகலாம்:

பாலைவனத்திற்குள் நுழையும் முன்பு கார் டயரின் காற்றின் அளவை பாதியாக குறைத்துக் கொள்கிறார்கள். முழுமையாக காற்று இருந்தால் மணலுக்குள் சக்கரம் பதிந்து விடும், ஆகவே காற்றின் அளவை பாதியாக குறைத்துக் கொண்டு பாலைவனத்திற்குள் பயணம் தொடங்குகிறோம். 

இந்த ஓட்டுனர்கள் நல்ல பயிற்சி எடுத்திருக்கிறார்கள். மேடும் பள்ளமுமாக இருக்கும் பாலைவனத்தில் கார் பாய்ந்து செல்கிறது. காரை செங்குத்தாக மணல் மேட்டில் நிறுத்துவதும், செங்குத்தாக நின்று கொண்டிருக்கும் காரை அதே வேகத்தில் பின்னால் செலுத்துவது, ஒரு பக்கமாக காரை சாய்த்து நிறுத்துவதும் என பல வித்தைகளைக் காட்டினார் ஓட்டுனர். எனக்கு ஏசி காருக்குள் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்து விட்டது. மகிழ்ச்சியான பயம் கலந்த பயணமாக இருந்தது.

ஒரு மணல் மேட்டில் ஒரு ஐந்து நிமிடம் ஓய்வெடுத்து விட்டு, சுற்றுலா நிறுவனத்தார்கள் பாலைவனத்திற்குள் அமைத்திருக்கும் கேம்ப் எனும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.



செல்லும் வழியில் சில ஆமீரக இளைஞர்கள் தங்கள் சொந்த வண்டியில் பாலைவனத்தில் பாய்ந்து செல்கிறார்கள். இந்த வண்டிகள் பாலைவனத்திற்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்டவைகள்.



பயணத்தை முடித்து மாலை மங்கும் நேரத்தில், கேம்ப் எனும் இடத்திற்கு சென்று சேர்ந்தோம். சுற்றுலா தொகுப்பின் ஒன்றான ஒட்டகப்பயணம் அங்கே செல்லலாம். ஒட்டகத்தில் ஏறி பாலைவன காற்றை அனுபவித்து ஒரு சுற்று சுற்றி விட்டு வரலாம்.... பாலைவனத்திற்குள், காரில் பாய்ந்து பறந்து பயணம் செய்து விட்டு வந்த பிறகு இந்த ஒட்டகப்பயணம் மனதுக்கு இதமாக இருந்தது.



ஒட்டகப்பயணம் முடித்த பிறகு, கேம்பிற்குள் சென்றால் அங்கு அழகான மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் இருக்கைகள் போடப்பட்டு விளக்குகள் வைக்கப்பட்டிருக்கின்றன. 

ஷீஷா பார், மெஹந்தி ஏரியா, பரிசுப்பொருட்கள் விற்கும் கடை, உணவு பரிமாறும் இடம் என அனைத்தும் அந்த கேம்பிற்குள் உள்ளன.
ஷீஷா பாரில் சென்று ஷீஷா பயன்படுத்தலாம்... மெஹந்தி ஏரியாவில் பெண்களுக்கு கைகளில் அழகாக மருதாணி போட்டு விடுகிறார்கள்....

பின்பு சிக்கன் ஷவர்மா மற்றும் ஃபலாஃபல் சிற்றுண்டி உண்டு விட்டு கந்தூரா நடனம் பார்க்கலாம். மேடையில் கந்தூரா நடனமாடுபவர் வந்ததும் கைதட்டல்கள் பறக்கின்றன. ஒரே இடத்தில் நின்று கொண்டு சுமார் பத்து நிமிடம் சுற்றுவது நமக்கு இயலாத செயல்.  

இந்த காணொளியைப் பாருங்கள். ஒரு இடத்தில் நின்று கொண்டு சுற்றிக் கொண்டேயிருக்கிறார். இவரது உடை இவர் சுற்ற சுற்ற வட்டமாக மாறி பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது. அவருடைய நடனத்தைப் பார்த்த பிறகு நமக்கு கொஞ்சம் நேரம் தலைசுற்றுவது உறுதி.

நடனமாடியவர்:


நடனத்தில் ஒரு காட்சி:



கந்தூரா நடனம் முடிந்த பிறகு, இரவு உணவு புஃபே முறையில் வழங்கப்படுகின்றது. நிறைய கபாப் வகை உணவுகள், அரபிக் ரொட்டிகள், நூடுல்ஸ், ஹமூஸ், பார்பிக்யூ என வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு மேடைக்கருகே வந்து அமர்ந்து கொள்ள வேண்டியதுதான். 

இரவு உணவுக்குப் பின் பெல்லி டான்ஸ் நடைபெறுகிறது. ஒரு அழகான பெண் வந்து பெல்லி டான்ஸ் ஆடுகிறார்.  நம்மூரில் கரகாட்டம் ஆடும் போது, தலையில் கரகத்தை வைத்து ஆடுவது போல, இவர் ஒரு வாளை இடுப்பிலும் பின்பு  தலையிலும் வைத்து கீழே விழாமல் ஆடுகிறார். 




பெல்லி நடனம் முடிந்தபிறகு, காரில் ஏறி இரவு நேர பாலைவனப்பயணம் மீண்டும் தொடர்கிறது. இருட்டில் பாலைவனத்தில் பாய்ந்து செல்லும் கார் கொஞ்சம் நம்மை பயமுறுத்துகிறது. ஒரு வழியாக ஒரு வித்தியாசமான பயணம் செய்து விட்டு, வீடு வந்து சேர்ந்தேன்.


படங்கள் அனைத்தும் நான் எடுத்தது.

நன்றி: வீடியோ இணையத்தில் கிடைத்தது.

அனைவருக்கும் நன்றி.






Sunday, December 2, 2012

41வது UAE National Day

Spirit of the Union

வணக்கம் நண்பர்களே,

அமீரகம் வாழ் மக்கள் அனைவருக்கும் தேசிய நாள் வாழ்த்துகள்....

இன்று டிசம்பர் 2 ம் தேதி 41 வது UAE National Day கொண்டாடப்பட்டு வருகின்றது . ஏழு எமிரேட்களான அபுதாபி,துபாய், சார்ஜா, உம் அல் குவெய்ன், அஜ்மான், ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமா ஆகியன இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் உருவான நாள் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி.



மேலதிக விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/United_Arab_Emiratesஇந்த லிங்கில் பார்க்கலாம்...

தேசிய நாளை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை. தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை.  ஆமீரகத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் மற்றும் அனைத்து அலுவலகங்களிலும் தேசியக்கொடி பறக்க விட்டிருக்கிறார்கள்...



ஆமிரக குடிமக்களும், இங்க வேலைக்காக வந்து வசிப்பவர்களும் தேசிய நாளைக் கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், தங்கள் வாகனங்கள் உடைகள் என அனைத்திலும் தேசிய நாள் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார்கள்.



தனியா நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் பல இடங்களில் தேசிய நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து , கலாச்சார நிகழ்வாக கொண்டாடி வருகிறார்கள். அமீரகத்தில் எங்கு பார்த்தாலும் கடந்த ஒரு வாரமாக தேசியக்கொடியும், தேசியக் கொடியின் நிறத்தில் பெரும்பாலான பொருட்களையும் காண முடிந்தது... 




அமீரக அரசின் சார்பில் அமீரகம் முழுவது பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.... 

விரிவான விவரங்கள் இந்த லிங்கில் http://www.dubaicalendar.ae/en/event/events/uae-national-day-2012-1.html.





இதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக சிறப்பான ஒரு நிகழ்வு ஒன்று உள்ளது. அதாவது துபாய் ஆட்சியாளாரும், அமீரகத்தின் துணை அதிபரும் ஆன His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum அவர்கள், அமீரக மக்களுக்கு மரம் நடக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு பெயர் Union Tree. மேலதிக தகவல்களுக்கு http://gulfnews.com/news/gulf/uae/government/shaikh-mohammad-plants-union-tree-1.1104866 இங்கு சென்று பாருங்கள். 



Happy UAE National Day 2012.



(நன்றி: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து.)

Saturday, December 1, 2012

மழை -- மலை -- கடல் -- நீண்ண்ண்ண்ட பயணம்....

வணக்கம் நண்பர்களே,

UAE National Day முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை...

நேற்று ஊர் சுத்தலாம்னு முடிவெடுத்து குடும்பத்துடன் கிளம்புனோம்...

கிளம்பும் போதே நல்ல மழை... 

இடி மின்னல் மழை என இயற்கை பட்டையைக் கிளப்பியது...





துபாய் தெருவெங்கும் வெள்ளப்பெருக்கு...




செல்லும் வழியில் சில இடங்களில் கார்கள் தண்ணீருக்குள் மூழ்கி ஸ்டார்ட் செய்ய முடியாமல் கிடந்தன.... 

http://www.7daysindubai.com/pictures/PHOTOS-Rains-bring-road-chaos-UAE/pictures-17477539-detail/pictures.html இந்த லிங்கில் பாருங்க.... நான் செல்லும் வழியில் இந்தக் கார் மிதந்து கொண்டிருந்தது...



பெரிய சாலைகளில் இருக்கும் டிஜிட்டல் எச்சரிக்கைப் பலகைகளில் “Drive Slowly ,watch water ponds” என எச்சரிக்கை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன...


சரி எவ்ளோ தூரம் போக முடியோமோ போய் பார்த்துட்டு வருவோம் என்று காரோட்டிக் கொண்டிருந்தேன்...

ஒரு இடத்தில் சரியான போக்குவரத்து நெரிசலில் சிக்கி 5 கி.மீ தூரத்தை ஒன்னரை மணிநேரம் ஓட்டி கடந்து சென்றோம்...ம்ம்ம்ம் ... 

Rescue Team மற்றும் Police வந்து விரைந்து செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்து வழி ஏற்படுத்திக் கொடுக்கவும், பயணம் வேகம் பிடித்தது...

செல்லும் வழியில் வானம் நீலமாகி மழை நின்றிருந்தது....




வரிசையாக பல கார்கள் சென்று கொண்டிருக்க, இதற்கு முன்பு பல முறை பயணித்த பாதைதான்... இருந்தாலும் மழை பெய்திருந்ததால் தூய்மையாக பளிச்சுனு அழகாக தெரிந்தது சாலைகள்....



செல்லும் வழியில் உள்ள  சிறு சிறு குன்றுகளை ஒட்டி உள்ள மேடு பள்ளங்களிலெல்லாம் பலர் குடும்பம் குடும்பமாக கூடாரம் அமைத்து சாப்பிட்டுக் கொண்டும், குழந்தைகளோடு விளையாடிக் கொண்டும் இருந்தார்கள்.... Four wheel drive கார் உள்ளவர்கள்  குன்றுகளின் கொஞ்சம் மேலே ஏறி மட்டமாக இருக்கும் இடத்தில் அமர்ந்திருந்தார்கள்...




எங்களுக்கும் பசி எடுக்க, நாங்களும் ஓரிடத்தில் நிறுத்தி ப்ளாஸ்டிக் பாயை விரித்து , செய்து கொண்டு போயிருந்த உணவுகளை எடுத்து வைத்து சாப்பிடத் தொடங்கினோம்....  நாங்கள் இப்போது அமர்ந்திருக்கும் இடத்தில் , வெயில் காலத்தில் வந்தால், ஒரு நிமிடம் கூட நிற்க முடியாது.... அப்படியாகப் பட்ட மொட்டைப்பாறை... இன்றைக்கு மழை குளிரின் பொருட்டு அழகான இடமாக மாறியிருந்தது....

மேகங்கள் மெல்ல மலைகளின் மீது இறங்கவும், குளிர் கூடி, மழைத்தூறத் தொடங்க, விரைவாக உணவு உண்டு விட்டு, காரில் ஏறி பயணத்தை தொடங்கினோம்...



நெடுந்தூரப் பயணங்களுக்கென்றே இருக்கும் தனிப்பட்ட mp3 folderல் இருந்து இளையராஜாவின் இசை காரெங்கும் பரவிக் கிடக்க... எதோ ஒரு சொல்லத்தெரியாத மகிழ்ச்சியான உணர்வில் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது....

180 கி.மீ பயணம் செய்து, நாங்கள் செல்ல வேண்டிய கடற்கரைக்குச் சென்று அமர்ந்தோம்.... 

கருமேகங்கள் மேலும் சூழ, பெருஞ்சத்தத்துடன் மழை மீண்டும் வந்தது.... 



மா வேகம் மழை வேகம் என்பார்கள்....

ஓடி வந்து காருக்குள் ஏறும் முன் ஓரளவு நனைந்து விட்டோம்...

இரவாகி விட்டது.... 

மழையின் அளவு கூடவும், முன்னால் செல்லும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.... ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் வந்து போக.... தொடர்ந்து பயணம் செய்து கொண்டேயிருந்தோம்... ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு எந்த வண்டியும் வரவில்லையென்றாலும், சாலை கண்ணுக்குத் தெரியாமல் போக, மெதுவாக வண்டி ஓட்டிக் கொண்டே ஒரு வழியாக துபாய் வந்து சேர்ந்தேன்....

காலை 11.00 மணிக்கு தொடங்கிய பயணம் இரவு மீண்டும் துபாய் திரும்பி வர இரவு 10.30 ஆகிவிட்டது....


ரொம்ப மகிழ்ச்சியான ஆனால் கொஞ்சம் பயம் கலந்த பயணம்....