Tuesday, October 1, 2013

பசி

ஒரு வேளை சாப்பிடலைனா என்னென்னவோ செய்யுது உடம்புக்குள்ள... கண்ணக்கட்டி காதடைத்து விடுகிறது... எல்லாமே மந்தமாகி விடுகிறது....

எங்கெங்கோ ஓடுகிறோம், என்னென்னவோ செய்கிறோம், கடுமையாக உழைத்து செல்வம் சேர்க்கிறோம்... வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வதற்கு படாத பாடுபட்டாலும், இத்தனை பாடும் ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் என்று முடிக்கிறோம்...

பணம் இருந்தும் வசதி இருந்தும் உண்ண நேரமில்லை என்றும், இந்த உணவு எனக்குப் பிடிக்கவில்லை என்றும் சில நேரங்களில் உண்ணாமல் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறோம்...

பட்டினி கிடப்பவனுக்குத்தான் தெரியும் பசியின் கொடுமை... அடுத்த வேளை உணவு கிடைத்து விடும் அல்லது நாளையாவது உண்ண உணவு கிடைத்து விடும் என்று நம்பிக்கையில் இருப்பவர்களை விடவும், கிடைக்குமா கிடைக்காதா என்று உறுதியே இல்லாமல் வாழ்க்கையில் உழன்று கொண்டிருப்பவர்களுக்குத்தான் பசியின் கொடுமை அதிகம்...

இவர்கள் ஒரு பக்கமென்றால், தனக்கு பசிக்குதா பசிக்கலையா என்று சுயநினைவின்றி சாலையோரங்களில் அழுக்கோடு அழுக்காய் பரவி படுத்துக்கிடப்பவர்கள் ஒரு வகை...

இவர்களுக்கும் பசி இருக்கும் என்பது நமக்கு தோன்றுவதில்லை...உச்சு கொட்டி பரிதாபத்தோடு கடந்துவிடுவோம்... இவர்களுக்கெல்லாம் உதவி செய்ய நம்மிடம் ஏது வசதி, எங்கே இருக்கிறது நேரம் என்று நாமெல்லாம் கடந்து போயிக்கொண்டிருக்கையில், நம்மோடு இதே சமூகத்தில் வாழும் சிலரின் அரும்பணிகள் மெய்சிலிர்க்க வைத்தன... 

நம்மோடு வாழும் அந்தச் சிலர் பற்றிய தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...

தூத்துக்குடி திரு. ராஜாராம் அவர்களைப் பற்றி நீங்களும் அறிந்திருப்பீர்கள்... அவர்கள் குடும்பத்தின் முழு ஆதரவு இன்றி அவர் செய்யும் அரும்பணி செயல்பாட்டுக்கு வந்திருக்காது... காலையில் எழுந்து சோற்றுப் பொட்டலங்களைக் கட்டிக்கொண்டு ஊரில் ஆதரவற்று இருக்கும் மனநோயாளிகள் ஏழைகளுக்கு வழங்கி வருகிறார்... அவர் பற்றிய செய்தித் தொகுப்பைக் காண இங்கே சொடுக்கவும்....  





மதுரை திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களைப் பற்றியும் முன்பே நீங்கள் அறிந்திருப்பீர்கள்...  சிஎன்என் - நாயகர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்...



சாலையோரத்தில் தன் நினைவின்றி பசிக்கொடுமையால் தன் மலத்தை எடுத்து தானே தின்ற ஒரு மனிதனைக் கண்டு மனம் நொந்து, இவர்களைப் போன்ற ஆதரவற்றவர்களுக்கு பசியாற்ற வேண்டும் என்று உயரிய நோக்கில், தனக்கு கிடைத்த நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையை உதறிவிட்டு, அட்சயா என்ற ட்ரஸ்ட் மூலம் ஒவ்வொரு நாளும் பல ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகிறார்... 





இவர்களைப் போன்று இன்னும் எத்தனையோ பேர் வெளியில் தெரியாமல் இருக்கலாம்... அமைதியாக தங்கள் அரும்பணியைச் செய்து கொண்டிருக்கலாம்...

நாமும் நம்மால் இயன்ற அளவு உதவுவோம்... வாய்ப்பு கிடைக்கும் போதோ அல்லது வாய்ப்பை ஏற்படுத்தியோ, நமக்குத் தெரிந்த / தெரியாத ஒருவரின் பசியையாவது போக்குவோம்...


Tuesday, September 10, 2013

குஞ்சுத்தாக்கோழி...

வீட்டில் கோழி வளர்ப்பவர்களுக்கு இது தெரிந்திருக்க கூடும்...

கோழி அடைக்கு கத்தியதும் ஒரு தட்டுக்கூடையில் மணல் பரப்பி, அதில் முட்டைகளை பரவலாக அடுக்கி அடை வைப்பார்கள்... திறந்தே வைத்திருக்கலாம்... கோழி எங்கும் போகாமல் அடைகாக்கும்... நாம் கிட்ட போனால், ஒரு வித ஒலி மட்டும் கொடுக்கும்... உணவு உண்ணாமல், எங்கும் செல்லாமல் அடையிலேயே அமர்ந்திருக்கும்.... மலம் கழிக்க கூட எப்போதாவதுதான் வெளியே சென்று வரும்...

Inline image 2

குஞ்சு பொரித்தவுடன் உடைந்த முட்டையின் தோலையே நொறுக்கி குஞ்சுகளுக்கு தின்னக்கொடுக்கும் குஞ்சுத்தாக்கோழி... பின்பு அடையை விட்டு வெளியே எடுத்து , (இப்போது இந்தக் குஞ்சுகளைத் தொட்டுப்பார்க்கவேண்டுமே, அவ்ளோ மென்மையாக இருக்கும்) பஞ்சாரத்தில் அடைத்து வைப்பார்கள்... 

குஞ்சுகளுக்கு இரையாக பச்சரிசியை அம்மியில் வைத்து மென் குருணையாக அரைத்து கொடுப்பது வழக்கம்... புழுங்கல் அரிசி கடினமாக இருப்பதால் பச்சரியையே முதலில் கொடுப்பார்கள்..

என்னதான் நாம் குருணையாக நுணுக்கி கொடுத்தாலும், குஞ்சுத்தாக் கோழி தன் அலகால் மேலும் அதை நுணுக்கி, தன் குஞ்சுகள் தின்ன ஏற்ற அளவில் கொடுக்கின்றது... தாய்க்கோழி நுணுக்கிப் போட்ட குருணையை குஞ்சுகள் உண்ணும்...

அதன் பின்பும் காக்கா, பருந்து மற்றும் வல்லூறு போன்ற பறவைகளிடமிருந்தும், காட்டுப்பூனைகளிடமிருந்தும் காப்பாற்ற அந்தத் தாய்கோழியின் எச்சரிக்கையான பார்வையும், பதற்றமும், ஆபத்தை உணர்ந்தவுடன் எச்சரிக்க அது செய்யும் ஒலியும் கோழி வளர்த்தவர்கள் நன்கறிவார்கள்... 

எதாவது நடக்கப் போகிறதென்றால், ஓடி வரும் குஞ்சுகளை தன் இறக்கைக்குள் அடைத்துக் காக்கும் தாயன்பு மிகச்சிறந்தது... 

Tuesday, May 7, 2013

பயணங்களில் கண்டவை...

பயணங்கள் என்றுமே பாடங்கள்தான்...

ஒவ்வொரு பயணத்திலும் நிறைய அறிந்து கொள்ளலாம்... நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கொஞ்சம் கவனித்தால் அறிந்து கொள்ள ஆயிரம் தகவல்கள் கிடைக்கும்...

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது நிறைய பயணங்கள் செய்ய வேண்டியிருந்தது... மின்வெட்டிலிருந்து தப்பிக்க எதாவது ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருப்பதும் ஒரு இன்பமான செயலாக இருந்தது... ஆனால் பேருந்து கட்டண உயர்வு கொஞ்சம் சிந்திக்க வைத்தது... பேருந்து கட்டணம் என்றில்லை எல்லாமே விலை உயர்ந்து இருக்கின்றது...

கடும் வெப்பமும் மின்வெட்டும் இணைந்து மிரட்டுகின்றது... மின்வெட்டு மக்களிடையே சகிப்புத்தன்மையை கூட்டியிருக்கிறது என்று ஒரு நண்பர் சொன்னார்... அதுவும் உண்மைதான்...மின்சாரம் இன்றியும் வாழ முடியும் என்று மக்கள் வாழ்க்கையைப் பழக்கி கொண்டிருக்கிறார்கள்... கணிசமான அளவில் வீடுகளில் இன்வெர்ட்டர் பொருத்தியிருக்கிறார்கள்...

பயணங்களில் கண்டவை...


ஒரு நகரத்திற்குள் / ஊருக்குள் செல்லும் போது சில வீடுகள் நம்மைத் திரும்பி பார்க்க வைக்கின்றன... இப்பொழுது புதிதாய் கட்டப்பட்டிருக்கும் வீடுகளில் அவர்கள் அடித்திருக்கும் வெளிப்புற நிறம்தான் அப்படி நம்மை இழுக்கின்றது...

கண் கூச வைக்கும் நிறங்கள்...




இந்தப் படத்தில் இருக்கும் எல்லா நிறங்களும், சில வீடுகளின் வெளிப்புறச் சுவரில்  நிறங்களாக அடித்திருப்பதைப் பார்த்தேன்... என்னானு கேட்டப்ப வாஸ்து நிறம்னு நண்பர் சொன்னார்... உண்மையானு தெரியல... ஆனால் இந்த நிறங்களால் அந்த வீடுகள் தனித்து தெரிகின்றன... 

நல்ல வெயிலில் இந்த வீடுகளை கொஞ்சம் நேரம் பார்த்தால், கண்ணுக்கு பாதிப்பு வருமோ என்று அஞ்சுகிறேன்... யாரு கண்ணும் பட்டுடக் கூடாதுனு கூட இந்த நிறங்களை அடித்திருப்பார்களோ என்ற ஐயமும் எனக்கு உண்டு. 

ஏதேனும் அறிவியில் காரணங்கள் கூட இருக்கலாம் :-)

சாய் பாபா: 


மாலை நேரத்தில் சாய்பாவிற்கு வழிபாடு செய்து விட்டு, படைக்கப்பட்ட  ஒரு தோசை / ஒரு அப்பம் வீட்டில் கொண்டு வந்து வைத்தால், காலையில் அது இரண்டு எண்ணிக்கையாக மாறி விடுகிறதாம்... ஒவ்வொரு வீட்டு வழிபாடு முடியவும் மற்றொரு வீட்டிற்கு தோசையோ அப்பமோ எடுத்துச் செல்லப்படுகின்றது... பின்பு மறுநாள் அது இரட்டிப்பானதாக பெருமையாகவும் பக்தியாகவும் பேசிக்கொள்கிறார்கள்...

எங்க வீட்டுல இரண்டா மாறிடுச்சுல்ல.... அவுக வீட்டுலயும் இரண்டா மாறிடுச்சாம்... என்று ஆங்காங்கே சிலர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன்...

நத்தம் என்ற ஊருக்குச் செல்லும் வழியில், ஓரிடத்தில், முச்சந்தியில் இருந்த பிள்ளையார் சிலையை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்க போல... பிள்ளையாருக்குப் பதிலாக, யாரோ அங்கே பள பளவென சாய்பாபா சிலையை வைத்திருக்கிறார்கள்... சாய்பாவின் முன்னால் பிள்ளையாரின் மூஞ்சூரு வாகனம் இருந்தது.... அந்தச் சிறிய கோயிலின் எல்லாப் பொருட்களும் பழமையாகவும், சாய்பாபா மட்டும் புதிதாய் பளிச்சென்று இருந்தார்...

அழகர் கோயில் அருகில் உள்ள ஒரு சாய்பாபா கோயிலுக்கு சென்று வந்தேன்... ஜுனூன் தமிழில் அழகான சாய்பாபா பாடல்கள் நிறைய பாடி, கடைசியில் ”ஜெய் சாய்நாத் மஹராஜ்கி” என்று எல்லோரும் வலது கையைத் தூக்கிக் காட்டி வழிபாட்டை முடித்தார்கள்...

அது மட்டுமல்ல, ஆங்காங்கே நிறைய சாய்பாபா கோயில்கள் முளைத்திருக்கின்றன....  ஷீரடி சாய்பாபா மெல்ல நம்ம பக்கம் வந்திக்கிட்டு இருக்கார் போல...

ஐயங்கார் டீ,காபி & கேக் ஷாப்


சேலத்தில் இருந்து மதுரை வரும் வழியில் பல இடங்களில் இந்தப் பெயருள்ள கடைகளைக் கண்டேன்... ஒரே மாதிரியான பெயர்ப் பலகை... விளக்கு வடிவமைப்புகள்... ஆனால் இந்தக் கடையில் இறங்கி போய் என்னா எப்படி இருக்குனு சாப்பிட்டு அறிந்து கொள்ள நேரம் கிடைக்கவில்லை....


VKC Pride காலணிகள்:



நான் கவனித்த மட்டில், என் கிராமத்திலும், என் நகரத்திலும், மதுரை மாநகரத்திலும் பெரும்பாலானோர் அணிந்திருந்த காலணிகள் VKC Pride காலணிகள்...
அடேங்கப்பா... யார பாத்தாலும் இந்தச் செருப்புதான் போட்டிருந்தாங்க...

கேரளா கம்பெனினு கேள்விப்பட்டேன்...


அதே சென்னை ஆனா குழப்புது


அதே சென்னைதான்... அதே விரைவான மக்கள்தான்... ஆனா ரொம்ப நாட்களுக்குப் பிறகு சென்னைக்குச் சென்றால் கொஞ்சம் குழம்பிப் போவோம்...  


இயல்பாகவே இருக்கும் போக்குவரத்து நெரிசலும் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து நெரிசலும் சேர்ந்து கொஞ்சம் படுத்துகிறது... 

சாலையில் சில தடுப்புகளும், மாற்றுப் பாதைகளும் இருப்பதால், பயணத்தின் போது எந்த இடத்தில் நாம் சென்று கொண்டு இருக்கிறோம் என்று உடனடியாக கணிக்க இயலவில்லை..

சில இடங்களுக்கு செல்லும் பாதையை ஒரு வழிச்சாலையாக மாற்றியிருப்பதால் , குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு ஆகும் ஆட்டோ கட்டணத்தை விட, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே  திரும்பி வருவதற்கு முன்பை விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவே ஆட்டோ கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது... ஏங்கனு ”கேட்டா, சுத்தி போகணும் சார் - இது ஒன்வே சார்” ங்கிறாங்க... நியாம்தான்...

சென்னை ஆட்டோக்களுக்கும் மற்ற மாநிலங்கள் போல எப்பொழுது மீட்டர் கட்டணம் செயல்படுத்துவார்கள் என்று தெரியவில்லை...

என்ன இருந்தாலும் வந்தாரை வாழ வைக்கும் சென்னையல்லவா... வாழ்க சென்னை....


Monday, May 6, 2013

இப்ப அதுவே பழகிடுச்சு....

ஓராண்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நம்மூருக்கு விடுமுறைக்காக சென்று வந்தேன்...

எங்கூருல அதே மக்கள்தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் செயல்பாட்டில் பல மாற்றங்கள்... ரொம்ப திட்டமிட்டு செயல்படுகிறார்கள்... எல்லா பாராட்டும், நன்றியும் தமிழக மின்வாரியத்திற்கே சேரும்...



சித்தப்பா இப்ப கரண்டு போயிரும்.... சொன்ன மாதிரியே டான்னு கரண்டு போயிருது... 

மாப்ள இப்ப கரண்டு வந்துரும்டா... சொன்ன மாதிரியே டான்னு கரண்டு வந்திருது... 

அனைவருக்கும் தெரிந்திருக்கிறது கரண்டு எப்ப போகும் எப்ப வரும்னு... சில நேரங்களில் நேர மாறுதல்களும் செய்யப்படுகிறது... ஆகா நேரத்த மாத்திட்டாய்ங்களே... இன்னைக்கு 10 மணிக்கு போயிருச்சா, அப்ப 12 மணிக்குத்தாண்டா வரும்... என்று முடிவுசெய்து கொள்கிறார்கள்...

நேர மேலாண்மை, நேரந்தவறாமை என எல்லாத்தையும் தமிழக மின்வாரியத்திடம் கற்றுக் கொள்ள உலகின் பல பகுதிகளில் இருந்து ஆட்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை... அவ்ளோ செம்மையாக செயல்படுகிறார்கள்...

12 மணி நேரம் 14 மணி நேரம்னு மின்சாரம் இல்லாத நேரங்களே, ஒரு நாளில் மிகுந்து இருக்கின்றது....

தமிழக மக்கள் வாழ்க்கை முறையும், தொழில்களும் மின்சாரத்தின் இருப்பைப் பொறுத்து மாறியிருக்கின்றது...

எடுத்துக்காட்டாக... ஒரு ஜெராக்ஸ் எடுக்கப்போனால், அங்க ஒரு போர்டு வச்சிருக்காங்க... மின்சாரம் இருந்தால் 1 ரூபாய், மின்சாரம் இல்லாவிட்டால் 2 ரூபாய் என்று... ஆக, பல தொழில்கள் மின்சாரம் இருந்தால் ஒரு விலை இல்லாவிட்டால் ஒரு விலை என்றாகி விட்டாது...

மின்சாரம் இருக்கும் போது செய்ய வேண்டிய வேலை, இல்லாத போது செய்யவேண்டிய வேலை என மக்கள் அழகாக திட்டமிட்டு செயல்படுகிறார்கள்... வேற வழியில்லையே....  

இன்னைக்கு சட்னிலாம் கிடையாது... கரண்டு வர இரண்டு மணி நேரம் ஆகும்.. பொடிய தொட்டுச் சாப்பிட்டுப் போங்க...  என அன்றாடஉணவு முறையைக் கூட மின்சாரம் தீர்மானிக்கிறது...  துணி துவைக்கிறது, முகச்சவரம் செய்வது, உணவு சமைப்பது, குளிப்பது என எல்லாவற்றையும் மின்சாரம் இருக்கும் நேரமே இப்பொழுது தீர்மானிக்கின்றது...

இன்வெர்ட்டர் விற்பவர்களுக்கு இது ஒரு அறுவடை காலம் என்றே சொல்லலாம்... இப்பொழுதெல்லாம் வரதட்சணையாக இன்வெர்ட்டரும் கேட்கிறார்கள் என்று நகைச்சுவைகள் வந்தன... அது உண்மையாகவும் இருக்கலாம்....

கடும் வெயில், இருக்கும் ஒரு சில மரங்களிலும் கொஞ்சம் கூட அசையாது நிற்கும் இலைகள், வெப்பம்... தாங்க முடியாத வெப்பம்... குழந்தைகள் பெரியவர்கள் என்றில்லை அனைவரும் படும் துன்பம் சொல்லி மாளாது... 

பழைய ஆட்சி மாறியதற்கு பல காரணங்கள் சொன்னாலும், உண்மையான, முக்கியமான காரணம் மின்வெட்டு... அதனால் ஆட்சி மீது மக்களுக்கு உண்டான வெறுப்பு...

கடந்த ஆட்சியிலிருந்து இந்த ஆட்சியின் தொடக்ககாலம் வரை, பல போராட்டங்கள் மின்வெட்டிற்காக செய்த மக்கள் இப்பல்லாம் மின்வெட்டிற்காக பெரிதாக எதும் போராட்டம் நடத்துவதாகத் தெரியவில்லை....


இன்றியமையாத அடிப்படைத் தேவை  மின்சாரம் ஆனால் அது இன்றியே இப்பொழுது மக்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பழகிவிட்டார்கள்...


கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரம் இல்லாத நேரங்கள் மிகுந்து மிகுந்து, 
இப்ப அதுவே பழகிடுச்சு...



Thursday, March 21, 2013

வாழ்த்துகளை மட்டுமாவது சொல்லி வைப்போம்...


பாலச்சந்திரனின் பார்வை, நெஞ்சில் பாய்ந்த ஐந்து குண்டுகள், அந்த ஒரே படம் எத்தனையோ இதயங்களைத் துளைத்துச் சென்று விட்டது... 


மாணவர்களிடம் பற்றி எரிகிறது உணர்வுத் தீ...

எதெல்லாம் தமிழ்நாட்டில் நடக்காது என்றிருந்தோமோ அதெல்லாம் நடக்கத் தொடங்கிவிட்டது... கட்சி சார்ந்த இனமாக பிரிந்து, மெல்லவும் இயலாமல் முழுங்கவும் இயலாமல் நொந்திருந்த தமிழின குடும்பங்கள் அனைத்தையும் ஒரே பார்வையில் பார்க்க வைத்திருக்கிறது மாணவர் போராட்டம்... எல்லாருக்கும் இப்பொழுது இனப்படுகொலை  பற்றித் தெரியவருகிறது...

இத்தனை நாட்கள் , தமிழர்கள், ஈழம், இனப்படுகொலை என இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறதென்றே அறியாதிருந்த மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, எங்கள் கூட வேலை செய்யும் நண்பர்களிடமும் இந்த மாணவர் போராட்டம், இத்தனை நாட்களாக நடந்த நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. ”ஓ சேட்...” என்று பாலச்சந்திரன் படம் பார்த்தவர்கள் வருந்துகிறார்கள்... மாணவர்களின் போராட்டத்தை வரவேற்று பேசுகிறார்கள்...

இந்த உணர்வு மிகுந்த மாணவர் போராட்டத்தில், பொது மக்களும் குறிப்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் பலரும் பங்கேற்கத் தொடங்கிவிட்டனர்... எல்லாத் துறையைச் சார்ந்தவர்களும் இயன்றளவு பங்கேற்க தொடங்கிவிட்டனர்... 

நம்பிக்கை வருகிறது நல்லது நடக்குமென... 

இந்தப் போராட்டத்திற்கு நாமென்ன செய்திருக்கிறோம் என்று எண்ணிப்பார்த்தால் ஒன்றுமில்லை...

எத்தனையோ e-போராளிகளைக் கண்டு வருகிறோம் இணைய உலகின் பழக்கம் வந்த பிறகு... பெரும்பாலும் ஸ்டேடஸ் பகிர்வதிலும், அரசியல்வாதிகளைத் திட்டுவதிலும், சினிமாக்காரர்களைத் திட்டுவதிலும், பழகியவர்களையும் இழிவாகப் பேசுவதிலும்தான் தங்களின் தமிழுணர்வைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்... இவர்களைப் பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்பீர்கள்...

இவர்களின் தமிழுணர்வு கணினியை ஷட் டவுன் செய்தவுடன் அடங்கிவிடும் மறுநாள் மறுபடியும் கணினியைத் திறக்கும் வரை.... 

சரி, தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்தப் போராட்டத்தில் நான் கலந்து கொண்டிருப்பேனா என்றால் அதுவும் ஐயப்பாட்டிற்கு உரியதுதான்... இந்தப் போராட்டங்களுக்கு வாழ்த்துச் சொல்லும் பலரும் தம் குடும்பத்தில் உள்ள மாணவர்களை போராட்டக் களத்துக்கு அனுப்புவார்களா என்றால் அதுவும் ஐயப்பாட்டிற்கு உரியதுதான்....பல சூழ்நிலைக் காரணங்களைச் சொல்லி என்னால் இயலவில்லை என்று தப்பித்துக் கொண்டிருக்கலாம்... சுயநலமும், பயமும், நமக்கு ஏன்பா இதெல்லாம் என்ற எண்ணமுமே சூழ்நிலைக் காரணங்களின் உட்பொருளாக இருக்கும்....  

இப்படியாக இந்தப் போராட்டங்களைப் பற்றிய செய்திகளையும், சில தகவல்களையும் இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, 
ஐடி துறையினரின் மனிதச் சங்கிலி போராட்டத்தில், எனக்குப் பழக்கமான தம்பி திரு.வினோத்தின் களப்பணியைப் கண்டதும், சற்றே மனம்  கூசி விட்டது.... சே... நம்மால் இயலவில்லையே என்று.... என்னுடைய இயலமை ஆற்றாமை எல்லாம் சேர்ந்து கொஞ்சம் அவமானமாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது....

குழுமங்களிலும் , சமூக வலைத்தளங்களிலும் சில e-போராளிகளை கண்டு நொந்திருந்த வேளையில், தம்பி வினோத்தின் உணர்வு மிகுந்த களப்பணி பெரும் மரியாதையும், உணர்வையும் ஏற்படுத்தி விட்டது... நான் செய்ய அஞ்சும் அல்லது என்னால் செய்ய இயலாததை களத்தில் நின்று செய்யும் தம்பி வினோத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்...




நம்மால் இயலாததை பிறர் செய்யும் போது, வாழ்த்துகளை மட்டுமாவது சொல்லி வைப்போம்...

நன்றி....

பெருமையாக இருக்கின்றது தம்பி...

Thursday, March 7, 2013

இப்படிக்கு, தோட்டக்காரன்...


ஓடி விளையாடும் குழந்தைகள்
கண்காணிக்கும் பணிப்பெண்கள்...

கால்நீட்டி அமர்ந்து
கதை பேசும் பெற்றோர்கள்...

சக்கரநாற்காலியில் சாய்ந்தமர்ந்து 
வானம் பார்த்திருக்கும் முதியவர்...

குப்பை பொறுக்குபவர்கள்
வேலை செய்து களைத்தவர்கள்...

உடல் இளைக்க நடப்பவர்கள்
உடல் இறுக்க ஓடுபவர்கள்...

காதுள் இசை கேட்டு 
கண் மூடி கரைந்திருப்பவர்கள்...

மண்ணுள் புதைந்த 
உணவைக் கிளறி உண்ணும் 
சின்னஞ்சிறு பறவைகள்...

மரக்கிளைகளில் கதைபேசி
மகிழ்ந்திருக்கும் பெரும்பறவைகள்...

சிதறிக் கிடந்த ரொட்டிகளை
உண்டு ஓய்ந்திருக்கும் பூனைகள்...

காலுறை மாட்டப்பட்ட
செல்ல நாய்கள்...

வண்டுகள்
எறும்புகள்
இன்னும் எத்தனையோ உயிர்கள்...

மஞ்சள்
சிவப்பு
ஊதா
வெள்ளையாய் 
வண்ண வண்ண பூக்களோடு
கனியும்,நிழலும் தரும் 
மரங்கள், செடிகள்...

என,

தோட்டத்தில் சில நேரம் 
தங்கிச் செல்வோரையும்
நின்று வாழ்வோரையும்

மேகத்திரை நீக்கி 
வானம் நீ, கீழ் பார்க்க ...

என் தாவரங்களோடு பேசிக்கொண்டே
தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறேன்...

இப்படிக்கு,

தோட்டக்காரன்.


Thursday, January 31, 2013

பர்மீஸ் தமிழர்...

பர்மீஸ் தமிழர்

குடும்பத்துடன், காய்கறி மற்றும் வீட்டுக்கான பொருட்கள் வாங்க ஒரு சூப்பர்மார்க்கெட் சென்றிருந்தோம்...

பணம் செலுத்துமிடத்தில் பெரும்பாலும் பிலிப்பினோக்களும், அரபி பேசுபவர்களும், இந்தியர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள்.... நான் பார்த்த மட்டும், இந்தப் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும், நல்ல சிவப்பாக இருப்பார்கள்...

அன்றுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்... என் போல கருப்பாக ஆனால் வடிவாக இருந்தார்... என்னவோ அவருடைய வரிசையில் நின்று பணம் கட்ட வேண்டும் என்று தோன்றியது.... ஹாய் என்று ஆங்கிலத்தில் பேசினேன் அவர் எங்களிடம் தமிழில்  பேசினார்...

எனக்கு எப்பவும் தமிழ்க்குரல் கேட்கும் போது மனம் ஒரு வித இனம்புரியா மகிழ்ச்சியடையும்.... அதுவும் முன்பின் தெரியாத ஒருவர் பேசும் போது, நம் முகம் இயல்பா மலர்ந்து போகும்... எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது....  ஆனால் அவர் பேசும் பேச்சு வழக்கு வித்தியாசமாக இருந்தது... எந்த ஊர்த் தமிழ் என்று என்னால் கணிக்க இயலவில்லை.... இதுவரை இந்த மாதிரி பேச்சு வழக்கைக் கேட்டதில்லை....

ஆ வணக்கம், நீங்க தமிழா... என்று கேட்டு பேச்சைத் தொடர்ந்தேன்...

ஆமாம் சார்... 

உங்க பேச்சு வித்தியாசமா இருக்கே....

நாங்க பர்மீஸ் தமிழர்கள் சார்...

ஓ அப்படியா.... நலமா? 

நல்லா இருக்கேன் சார்...

எங்கள் பொருட்களை விலை போட்டபடி வேகமாகவே பேசிக்கொண்டிருந்தோம்....

பர்மால நிறைய தமிழர்கள் இருக்காங்களா....

இருக்காங்க சார்...

இங்க எப்ப வந்தீங்க....

ஒன் யியர் இருக்கும் சார்...

இவ்வாறு பேச்சுத் தொடர்ந்தது....

பின்பு அவரின் குடும்ப நிலையையும், இங்கு (துபாய்) வந்து சேர்வதற்குள், பர்மாவில் பட்ட துன்பங்களையும், ஏஜெண்டுக்கு கட்டிய பணத்தையும், கூடப்பிறந்த அண்ணன் எங்கிருக்கிறார் என்றே தெரியாத நிலையையும், தன் குடும்பத்தைக் காக்க வேண்டிய கடமைமையும் சிரித்துக்கொண்டே வேகமாகவும் சுருக்கமாகவும் சொல்லி முடித்தார்....

மகிழ்ந்து மலர்ந்திருந்த என் முகம், அவர் கதை கேட்டு சுருங்கிப் போனது...

கவலைப்படாதீங்க, சிவனருளால் எல்லாம் சரியாகும், வேண்டிக்கிறேன் என்று நான் சொன்னதும், அவர் முகம் முன்பை விட இன்னும் மலர்ந்து, தேங்க்ஸ் சார் என்று சொன்னார்....

எங்கள் பொருட்களை, ட்ராலியில் வைத்து தள்ளிக் கொண்டு கிளம்ப எத்தனித்த போது, மீண்டும் எங்களைப் பார்த்து, 

சார்,

சொல்லுங்க....

ரொம்ப நன்றி சார்.... 

மகிழ்ச்சி என்று பதில் சொல்லிவிட்டு கிளம்பினேன்...

சுலைமான் தாத்தா...


அனைவருக்கும் வணக்கம்,

நாள்தோறும் எத்தனையோ நிகழ்வுகள் நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது... சிலவற்றை கண்டுகொள்ளாமல் செல்கின்றோம்... சில நிகழ்வுகள் நம்மைக் கொஞ்சம் நின்று பார்க்க வைக்கின்றன.... 

என் பயணங்களில் நான் சந்திக்கும் நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
.....................................

சுலைமான் தாத்தாவுடன் என் பயணங்கள்: 

பாலாஜீஈஈஈஈஈ - 

அவரின் குரல் தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்து எனக்குக் கேட்டது.... 
சுலைமான் தாத்தா கூப்பிடுகிறார்...

அவரோடு வழக்கம் போல கிடைத்த இடைவேளையில் பேசிக்கொண்டிருந்தேன்... 
நல்லா இருக்கியா.... அல்லா உனக்கு மகிழ்ச்சியை அளிப்பான்.... 
என சொல்லி பேச்சைத் தொடர்கிறார்...

அவர் தம் தோட்டத்தில், பயிரிட்டிருக்கும் பல காய்கறிச் செடிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்...  

இங்க பார் தக்காளி போட்டிருக்கேன்... 

பூசணி பூ வச்சிருக்கு.... 

இந்தச் செடி வாடியிருக்கு...

முருங்கைக் கீரை பறிச்சிக்கிறேனு சொன்னியே, ஏன் இன்னும் பறிக்கலை... பறிச்சிக்கோ...

காகிதப்பூ வண்ணத்தைப் பார்...எவ்ளோ அழகா இருக்கு...

நீயும் இந்த இடத்தில் ஒரு செடி நடு, நான் வளர்த்து விடுகிறேன்..

இப்படியாக பேசிக் கொண்ட்டே, ஒவ்வொரு செடியாக கூட்டிப் போய் காட்டுகிறார்... 

செடி கொடிகளை நான் நேசித்து வளர்ப்பதால், என்னை அல்லா நன்றாக பார்த்துக் கொள்கிறான் என்கிறார்...

சில நாட்களில் வேலை நிமித்தமாக அவரைச் சந்திக்க இயலாமல் போனதுண்டு.... 

இரண்டு நாட்களாக எங்கே போனாய்... நேற்று உன்னைப் பார்க்கவில்லையே என்று கேட்பார்...

வேலை , வெளில போய்ட்டேன் என்று சொல்வேன்...

சரி சரி வேலையைப் பார் என்பார்....

பூக்களைப் பார்க்கும் போதும் என்னிடம் காட்டும் போதும் அவர் மனமும் , முகமும் பூக்கத் தவறுவதில்லை... 

பாலாஜி ஃபோட்டோ நிக்கால் என்கிறார்... 

பூக்களோடு அவரை ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன்... 

அந்தப் படத்தைப் பார்த்ததும் மேலும் அவருக்கு மகிழ்ச்சி...

இன்றைக்கு எந்தெந்த வேலை செய்யவேண்டும் என்பதைக் கூறிவிடுகிறார்... 

அந்த மரத்தின் கிளைகள் தாழ்ந்து இந்தச் செடியை அமுக்குகின்றன... 

அதை வெட்டிச் சரிசெய்ய வேண்டும்... 

நேற்று வேலை செய்யும் போது கையை அறுத்துக் கொண்டேன்... 

என் காயத்தைப் பார்... புண் பாதிக் காய்ந்திருக்கிறது... சீக்கிரம் சரியாகிடும்....

சிரித்துக்கொண்டே சொல்கிறார்...

நேற்றுதான் இந்த இடத்தை தூய்மைப் படுத்தினேன்... 

இங்க பார் மறுபடி குப்பையைப் போட்டிருக்கிறார்கள்... 

மரம், செடிகளின் மேலே மாடியிலிருந்து இவர்கள், ப்ளாஸ்டிக் பையில் சுருட்டி வீசுகின்ற குப்பை அருவருப்பாய் இருக்கிறது என்கிறார்... 

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பைப் பற்றி பேசிக் கவலைப்படுகிறார்... 

மனிதர்களிடம் மனிதாபிமானம் இல்லை என்று வருந்துகிறார்...

அவர் என்னுடன் பேசும் போது நான் குறுக்கே பேசுவதில்லை...

சிரித்துக் கொண்டே அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்...

அவர் பேசிக் கொண்டே இருக்கிறார்... 

நான் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் பேசிக் கொண்டே இருக்கிறார்... 

சில நேரங்களில் ஏற்கனவே சொன்னதையும் மறுபடி சொல்கிறார்... 

புதிதாய் கேட்பது போலவே கேட்டுக்கொண்டிருக்கிறேன்... 

கொஞ்ச நேரம் சென்றதும், நேரத்தை உணர்ந்து, சல், தேரா காம் கரோ என என்னை அனுப்பி விடுகிறார்.

சுலைமான் தாத்தா என்னிடம் எதோ உணர்த்த முற்படுகிறார் அவரை அறியாமலே... 

எனக்குப் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது...

எது எப்படியோ, அவரோடு செலவிடும் சில நிமிட நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்... அவரும் மகிழ்ச்சியாக உணர்வார் என நம்புகிறேன்...

இவரைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்... 


சுலைமான் தாத்தாவின் தோட்டம்




Monday, January 28, 2013

மொத மரியாதை...




சின்ன வயசுல எதோ ஒரு திருவிழாவில் நடந்த நிகழ்ச்சி இது:

மதுரையில் ஒரு தெரு:

அந்தத் திருவிழாவை முன்னிட்டு எங்கள் தெருவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்... விழா அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி.... இன்னார் குழுவினரின் ஆடல்பாடல் நிகழ்ச்சி... அனைவரும் வாரீர்...  என தெருவெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன... ஒவ்வொரு வயது ஒத்த நண்பர்களும் பல திட்டங்கள் போட்டிருந்தனர்... நாங்க என் நண்பர்களும் போட்ட திட்டம், முதல் வரிசைல இடம்பிடிச்சு உக்காந்திரணுங்கிறதுதான்... முழுசா நிகழ்ச்சி பார்ப்பதும், பாட்டுக்கெல்லாம் ஆடுவதுமே எங்கள் நோக்கம்...

திருவிழா அன்று, அப்போதைய தெரு இளைஞர்கள் ஒரே மாதிரி சட்டை வாங்கிப் போட்டுக்கொண்டு தெருவில் வலம் வந்து கொண்டிருந்தனர்... கிராமங்கள் போல விழாக்கள் நடத்த பொது இடம் இல்லாததால், தெருவின் நடுவிலேயே மேடைகள் அமைக்கப்பட வேண்டும்... மதிய நேரம் வந்ததும், தெருவின் நுழைவு வாயில் மறிக்கப்பட்டு, தெருவுக்கு நடுவே பெரிய மேடை அமைக்கும் பணி நடைபெற்றது... மேடையின் இருபக்கமும் இரண்டு சக்கர வண்டிகள் போகும் அளவுக்கு மட்டும் இடம் விட்டிருந்தார்கள்... மேடையின் பின்னால் ஒரு சிறிய அறை அமைத்தார்கள்... இது நடனக்குழுவினர் தங்கள் உடைகளை மாற்றிக் கொள்வதற்கும், ஒப்பனை செய்வதற்கும்....

நாங்கள், கடையில் நொறுக்குத் தீனிகளை வாங்கித் தின்று கொண்டு மேடை அமைக்கும் பணியை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்... விழாக் குழுவைச் சேர்ந்தவர், பணியாளர்களை விரைவு படுத்திக் கொண்டிருந்தார்... கொஞ்சம் கொஞ்சமாக மேடை முழு வடிவம் அடையத் தொடங்கியது...மேடை அமைத்துக் கொண்டிருக்கும் போதே, சவுண்ட் சர்வீஸ் அண்ணன் அவருடையைப் பணியைத் தொடங்கிவிட்டார்... குழாய் ரேடியோக்களை நான்கு மூலையிலும் கட்டி பாடல்களை அலறவிட்டுக் கொண்டிருந்தார்... பாடல்களுக்கு ஏற்ப மேடைக்கு முன்னால் சிறுவர்கள் ஆட்டமும் தொடங்கியது.... விரைந்து செயல்பட்ட பணியாளர்கள் மேடையை முழுமையாக முடித்திருந்தார்கள்... ட்யூப்லைட், ஸ்பீக்கர், குழாய் ரேடியோ, சீரியல் பல்பு வடிவமைப்புகள் என அனைத்தையையும் சவுண்ட் சர்வீஸ் அண்ணன் முடித்திருந்தார்...


இரவாகிவிட்டது....

விழாக்குழுவினரில் ஒருவர் மட்டும் மேடையில் மைக்கைப் பிடித்து பேசிக் கொண்டிருந்தார்... பேசிக்கொண்டிருந்தார் என்பதை விட உத்தரவுகளை இட்டுக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம்... 

யேய் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆர்கெஸ்ட்ரா பார்ட்டிக வந்திருவாய்ங்கப்பா... எல்லாரும் சீக்கிரம் சாப்பிட்டு ஓடியாந்திருங்க.... ஏய் இந்த சின்னப்பயகள கெளப்பி விடுங்கப்பா... இங்கனையே நிண்டுகிட்டு ஆடிக்கிட்டு இருக்காய்ங்க.... டேய் போய் சாப்பிட்டு வாங்கடா.... ஓடுங்கடா.... 

அவர் சொல்லியும் நாங்க கேட்கல.... அங்கனையேதான் நின்று கொண்டிருந்தோம்.... அவுகவுக அப்பா அம்மா அப்பத்தா வந்து மண்டைல தட்டி கூட்டிட்டுப் போனாங்க...வேகவேகமா சாப்பிட்டுட்டு மேடைக்கு முன்னாடி போய் நின்னோம்.... 

அப்பவும் அவர் மேடைல நின்று அறிவிப்புகள் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.... இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்துருவாய்ங்கப்பா என்று ரொம்ப நேரமா சொல்லிக்கொண்டு இருந்தார்.... சவுண்ட் சர்வீஸ் பாடல்களைப் போட்டு அலற விட்டுக் கொண்டிருந்தார்... நாங்க ஆடி ஆடி அசந்து போனோம்... 

அப்ப தூரத்துல ஒரு மகிந்த்ரா டூரிஸ்ட் வேன் வந்தது.... ஹேய்னு கத்திக்கிட்டு அந்த வேன் நோக்கி ஓடினோம்.... மேடை அருகே வந்து நின்றதும், ஆர்கெஸ்ட்ரா ஆளுங்க  ஒவ்வொருத்தரா இறங்கி வந்தாங்க... நிறைய இசைக்கருவிகள் கொண்டு வந்திருந்தாங்க.... வந்த வேகத்தில் அவர்கள் பணியில் இறங்கினார்கள்... மேடையில் அவரவர் இடங்களைத் தேர்ந்தெடுத்து இசைக்கருவிகளைப் பொருத்த தொடங்கினார்கள்... இடையே டெஸ்ட்டிங் டெஸ்டிங் என மைக்கில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்... ட்ரம்ஸ், கீ போர்டு போன்ற கருவிகளை அப்பப்ப சோதனைக்காக வாசித்து ஒலி எழுப்பினார்கள்...

ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடங்கப்போகிறது என்பதே மனதுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.... கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சேரத் தொடங்கியது.... முன்னாள் போடப்பட்டிருந்த இருக்கைகளில் நெருக்கிப் பிடித்து உக்காந்திருந்தோம்... 

விழாக்குழு தலைவர், மைக்கைப் பிடித்து, பல ”அவர்களே” சொல்லி, அனைவருக்கும் வணக்கம் சொல்லி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.... 

பின்பு ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்த ஒருவர் மைக் பிடித்து பேச தொடங்கினார்... அவர் பேச்சே எங்களுக்கு ரொம்ப வித்தியாசமாக இருந்தது... ரொம்ப ஏற்ற இறக்கமாகப் பேசினார்... அவர் பேசும் போது எதிரொலி அதிகமாகக் கேட்டது.... 

சூப்பர்ஸ்டார் பாட்டப் போடு சூப்பர்ஸ்டார் பாட்டப் போடுனு பின்னாடி இருந்து பெரும் சத்தம்... ஆர்கெஸ்ட்ரானா முதலில் சூப்பர்ஸ்டார் பாட்டுப் பாடுவது என்பது அப்போது ஒரு நியதியாக இருந்தது போலும்.... இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்...

கண்டிப்பா முதலில் சூப்பர்ஸ்டார் பாட்டுத்தான் என்று உறுதியளித்து, பின்பு ஒருவர் எஸ்பிபி குரலில் , சூப்பர்ஸ்டார் பாட்டு ஒன்றைப் பாடினார்.... விசில் தூள் பறந்தது.... பாட்டுச் சத்தத்தையும் தாண்டி விசில்கள் பறந்தன... முன்வரிசையில் இருந்த நாங்கள் எழுந்து ஆடத் தொடங்கியாச்சு..... பாட்டு முடிந்ததும் பலத்த கைதட்டல்கள்.... சிகரெட் அட்டையில் வாழ்த்து எழுதி, 5 ரூபாய்  பணமும் அன்பளிப்பாக சிலர் அளித்திருந்தனர்... 

அதை ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்தவர் மேடையில் நன்றியுடன் தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில்,  சத்தமாக கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டிக் கொண்டே ஒருவர் மேடையின் பின்புறம் இருந்து ஓடி வந்து மேடையில் ஏறினார்... 

வேற யாரும் இல்ல அவர், அவருதான் எங்க தெரு ரவுடி....  அவரால் நேராக நிற்க முடியவில்லை... நல்ல சாராய போதையில் இருந்த அவர், ஆடிக்கிட்டே மைக்கிட்ட வந்து, ”டேய்................................................... எனக்கு மொத மரியாதை கொடுக்காம என்னாடா ஆர்கெஸ்ட்ரா நடத்துறீங்க.... என்று கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தார்...
விழக்குழுவினர் பயந்து பயந்து பேசிக்கிட்டு இருந்தாங்க.... மைக்க அமத்திட்டாங்க.... ஆனா எங்க தெரு ரௌடி பொசுக்குனு கையில் இருந்த கத்திய எடுத்து காற்றில் சுத்திக் காட்டிட்டு கோபமா  பேசிக் கொண்டு இருந்தார்.... 

மேடையில் இதெல்லாம் நடப்பதைப் பார்த்து ரொம்ப பயந்து போயிருந்தோம்... ஆர்கெஸ்ட்ரா குழுவினார் உறைந்து போய் நின்றிருந்தார்கள்... அவசர அவசரமாக, அங்கிருந்த ஒரு ரோஜா மாலையை எடுத்து அந்த ரௌடிக்கு போட்டுவிட்டனர் விழாக்குழுவினர்... அப்புறம் சரி போப்போ போப்பானு அவரைக் கெஞ்சி அனுப்பி வைத்தார்கள்.... ரௌடியும் கீழே இறங்கினார்.... அப்பாட பிரச்சனை முடிஞ்சிருச்சுனு மகிழ்ச்சியா இருந்தோம்.... ஆனா நிகழ்ச்சியே முடியப் போகுதுனு அப்ப எங்களுக்குத் தெரியலை...

கீழே இறங்குன ரவுடி, மேடையில் ட்ரம்ஸ் வாசிப்பவரின் (நல்லா குண்டா இருந்தார்) நாற்காலியோடு அவரை இழுத்து தரையில் போட, சண்டை தொடங்கிவிட்டது.... விழாக்குழுவினர் ரௌடியோடு போராடி அவரை அனுப்பி வைத்தார்கள்...  

அவங்க அனுப்பி வைச்சுட்டு வரதுக்குள்ள ஆர்கெஸ்ட்ரா பெட்டியைக் கட்டத் தொடங்கிட்டாங்க....  விழாக்குழுவினர் ரொம்ப நேரம் பேசிப் பார்த்தார்கள்.... ம்ஹும்ம் ஒன்னும் முடியல.... ட்ரம்ஸ் வாசிக்கிறவர் கீழே விழுந்து தெறிச்சுப் போய் கெடக்குறார், எங்களால் வாசிக்க முடியாது பாதுகாப்பில்லைனு சொல்லிட்டு எல்லா இசைக்கருவிகளையும் உறையில் போட்டுக் கிளம்பிட்டாங்க...

எங்க தெரு பெருசுகளெல்லாம் அந்த ரவுடியைத் திட்டித் தீர்த்தார்கள்...  
இளைஞர்களெல்லாம் ஆற்றாமையில் நொந்து போய் நின்றார்கள்.. 
நாங்க முன் வரிசைல இடம்பிடிச்சும் ஒரு பாட்டுக்கு மேல நிகழ்ச்சி நடக்கலையேனு ரொம்ப நொந்து போய் அவரவர் வீட்டுக் கிளம்பினோம்... 
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

இப்பவும் அது மாதிரி சிலரை காண நேரிடுகிறது....