Wednesday, October 16, 2019

மணல் பூத்த காடு

மணல் பூத்த காடு

ஒரு நாவலைப் படிக்கும் போது பார்வையாளனாக தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது ஒரு வகை… அந்த நாவலுடன் சக பயணியாக பயணிப்பது இன்னொரு வகை… கதையின் நாயகன் அனிஸூடன் பயணித்துக் கொண்டேதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன்…
முதன்முதலாக ஃபேஸ்புக்கில் இரண்டு பதிவுகள் ஒரு முன்னோட்டமாக பதிவிடப்பட்டன…. பெரும்பாலும் ரீட் மோர் என்று குறிப்போடு வரும் நீண்ட பதிவுகளைப் படிப்பதி்ல்லை… தெரிந்தவர்கள் வேண்டியவர்கள் என்றால் விருப்பக்குறியோ இதயக்குறியோ இட்டுவிட்டு கடந்து செல்வது வழக்கம்… ஆனால் இந்த முன்னோட்டப் பதிவுகள் தானாகவே விரும்பி ரீட் மோர் சுட்டியை அழுத்திப் படிக்க வைத்தன…. என்னடா அதுக்குள்ள முடிஞ்சிருச்சு என்பது போல இருந்தன அந்தப் பதிவுகள்…
பின்பு ஒரு நன்னாளில் என் கையில் ”மணல் பூத்த காடு” கொடுத்தார் முஹம்மது யூசுஃப் அண்ணன்…


ஒருவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள அவனுடன் பயணம் செய்தால் போதும் என்பது நபிகள் நாயகத்தின் பொன்மொழி… இதுவே இந்த நாவலின் முன்னுரையின் முதல் வரியும் ஆகும்…. ஆகவே குறைந்த காலத்தில் நிறையப் பயணங்கள் செய்திருந்த எனக்கு, அந்த வரிகள் அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்ட ஆவலைத் தந்தன….
எடுத்தவுடன் அரேபியாவின் பாலைவனப் பகுதியின் பால்வெளிச்சத்திற்கு, நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களை, உக்கார்ந்த இடத்திலிருந்து அப்படியே தூக்கிக் கொண்டு போய் அங்கே விட்டு விடுகிறார்… அங்கிருந்து நீங்களும் பயணம் செய்து கொண்டேயிருப்பீர்கள்… அங்கே ஒட்டகம் மேய்க்கும் ஹனீஃப்க்கும் அவர் மகனுக்கும் நடக்கும் உரையாடலும் அந்தக் காட்சி அமைப்பு அவர் அழைத்துச் செல்லும் இடங்கள் எல்லாம் உங்களை நெகிழ வைக்கும்…
அனீஸ் அவன்தான் கதையின் நாயகன். உங்களை அரேபியா முழுவதும் சுற்றிக் காட்டப் போகிறவன். சர்வீஸ் துறையில் இருந்து ஊர் ஊராய் நேரங்காலமில்லாமல் அலைந்து திரிந்தவர்கள் திரிபவர்கள் எல்லாரும்தான் இந்த அனீஸ்… அந்த அனுபவங்கள் உள்ளவர்கள் அனீஸ் பயணத்தில் தாங்களும் இரண்டறக் கலந்து விடுவார்கள்…
கடனோடு இருப்பது கொடுமை. வேலையில்லாமல் இருப்பது இன்னும் கொடுமை… கல்யாணம் ஆகி கடனும் கூடி வேலையுமில்லாமல் இருப்பது அதனினும் கொடுமை. அப்படி ஒரு சூழல் வரும் போது என்ன வேலை கிடைச்சாலும் செய்ய மனம் ஆயத்தமாகிவிடும். பலர் இந்தச் சூழலைக் கடந்து வந்திருக்கக் கூடும். அப்படியான சூழல்களில் ஒன்றில் சிக்கிய அனீஸ் அரேபியாவிற்கு வேலைக்குச் செல்கிறான். அவனுடைய பயணங்கள், அங்குள்ள மனிதர்கள், அவனோடு பயணித்த மனிதர்கள், இன்பம் துன்பம் என எல்லாவற்றையும் அனீஸின் வழியாக முஹம்மது யூசுப் அண்ணன் சொல்லும் கதைதான் ”மணல் பூத்த காடு”
சௌதி அரேபியாவில் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லாரும் இந்த நாவலைப் படிக்கும் புதுப்புது இடங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அந்த இடங்களைப் பற்றிய வரலாற்றுப் பின்னனியையும் அறிந்து கொள்வார்கள்.... அவ்வளவு தகவல்களை இந்த நூலில் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.... அங்குள்ள மரம் செடி கல் மலை இடம் என எதையும் விட்டு வைக்கவில்லை... அதன் பெயர், வரலாறு, சிறப்பு பெருமை என எல்லாத் தகவல்களையும் போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போகிறார்... மருத்துவத்துறை சார்ந்த பல எந்திரங்கள் அதன் பெயர்கள் அது வேலை செய்யும் முறை என விரிவான தகவல்கள் என போதுமான அளவுக்கு தந்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் குடும்பத்தினரை விட்டு, நண்பர்கள் மட்டும் சூழ வாழும் வெளிநாட்டு வாழ்க்கை முறை, விடுமுறை நாள் கொண்டாட்டங்கள் என இங்குள்ள வாழ்வியலைப் அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். நண்பர்களுக்கிடையேயான பேச்சுகள் என எல்லாம் படிக்கும் நமக்கும் பல நினைவுகளுக்கு இழுத்துச் செல்லும்... இடைஇடையே மனைவிக்கும் அனுப்பும் கடிதங்களும் அதில் கொட்டி வைத்திருக்கும் உணர்வுகளும் இங்கு குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்திருக்கும் எல்லாருக்குமான எழுத்து வடிவமாகப் பார்க்கிறேன் நான்.
ஆன்மீகம் சார்ந்து பல கருத்துகளையும் தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார், அது பலருக்கு பலவிதமான கேள்விகளை எழுப்பக் கூடும்... ஜெபல் அல் நூர் என்னும் மலையைப் பற்றியும் அங்கு நடந்த வரலாற்று நிகழ்வுகளையும் படிக்கும் போது கண்டிப்பாக நெகிழ்ந்து போவீர்கள்... மனசு இலகுவாகும் என்பதில் எனக்கு ஐயமில்லை... இன்னும் நிறைய இருக்கு, நீங்களே மணல் பூத்த காடு வாங்கிப் படிக்கும் போது அதன் எல்லாப் பரிமாணங்களையும் உணர்வீர்கள்...
என்னைக் கவர்ந்ததென்னவென்றால், இந்த அனீஸ் போலவே நானும் பல இடங்கள் சுற்றித் திரிந்தவன் என்பதால் என்னால் எளிதாக இந்த அனீஸோடு இணைந்து அவன் போகும் வழியெல்லாம் பயணிக்க முடிந்தது... சில இடங்களில் இவர் நம்ம கதையை ஊர் ஆள் பேர் மாத்தி வெளியிட்டு விட்டாரோ என சிந்திக்க வைத்தது... கிட்டத்தட்ட முன்னூறு பேர் போரில் மடிந்த பத்ரு என்ற இடத்தில் அனீஸ் நின்று வரலாற்று நினைவுகளில் மூழ்கிக் கொண்டிருந்த போது, பல ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக குருஷேத்திரம் போர் நடந்த இடத்தில் நான் நின்றிருந்த நினைவு வந்து போனது.... ஊர் ஊராக சுத்துகிற எல்லாருக்கும் இம்மாதிரியான இணை கற்பனைகளோ அல்லது அனுபவங்களோ ஏற்பட்டிருக்கும்... குறிப்பாக மொழி தெரியாத ஊரில் சுத்தியவர்களுக்கு... கிட்டத்தட்ட நாவலில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்வுகளில் என்னையும் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு இழுத்துச் சென்றதே இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்கான காரணமாகும்..


உடல்நலம் இருக்கும் வரை ஆண் அஞ்சுவதில்லை, எல்லாத் திமிரும் இருக்கும்... ஆனால் உடல்நலம் குன்றும் போது குழந்தையாகிப் போவான், எங்கிருந்தாலும் தனக்கு எத்தனை வயதானலும் தன் அம்மாவைத்தான் தேடுவான்... அதும் மொழிதெரியாத ஒரு ஊரில் தனியா இருக்கும் போது உடல்நலம் குன்றிப் போனால் அவன் பாடு என்னாகும்; மணல் பூத்த காடு படித்துப் பாருங்கள்...
அனீஸின் கூடவே ஒரு கரும்பன் பூனை சுத்துகிறான்; யாருமில்லை என்ற நீண்ட வாக்கியத்தை கமா போல தோன்றி உடைத்ததால் அந்தக் கரும்பன் அனீஸுக்கு உறவாகிப் போகிறான்... அவன் யாரென்று புரிந்து கொண்டால், வளைகுடாக்களில் பொருளுக்கு அலைந்திடும் மனிதர்கள் வாழ்க்கை புரிந்துவிடும்.
நாடு, மனிதர்கள், மொழி, ஆன்மீகம், பழக்கவழக்கங்கள் என பலவற்றின் மீது நாம் கொண்டுள்ள முன்முடிவுகளை மாற்றிக் காட்டியிருக்கிறது மணல் பூத்த காடு.
படித்துப் பாருங்கள்; மணல் பூத்த காட்டின் ஈரமும் வெம்மையும் வாசமும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்....

No comments: