Wednesday, October 30, 2019

குட்டிகோரா


பொதுத் தமிழுக்கு எப்போதுமே ஈர்க்கும் திறன் குறைவு வட்டார வழக்கை ஒப்பிடும் போது… வட்டார வழக்கில் பேசப்படும் போது எழுதப் படும் போது மட்டுமே உணர்வுகள் உள்ளபடியே கடத்தப் படுவதவாக நம்புகிறவன் நான். வட்டார வழக்குத் தமிழே தேன்… முக்கனிச் சுவை வட்டார வழக்குத் தமிழ்...

நாஞ்சில் வழக்கில் தம்பி தெரிசை சிவாவின் சிறுகதைத் தொகுப்பு - குட்டி கோரா…





ஒரு நூலை வட்டார வழக்கில் எழுதுவதம் மூலம்  என்னென்ன செய்து விட முடியும்? மண்ணை மண்ணின் நிறத்தை மணத்தை பரப்பை மக்களை உணவை நீரை கல்லை மலையை காற்றை செடியை பூவை மரத்தை என என்னென்ன முடியுமோ எல்லாவற்றையும் தன் எழுத்தின் வழி கொண்டு வந்து காட்டிவிட முடியும்…. பகிர்ந்து கொள்ள முடியும்… உணர்த்தி விட முடியும்…. நாஞ்சில் பகுதியில் இருக்கும் மக்களின் பேச்சு, அவர்களுக்குண்டான குணநலன்கள், விழாக்கள், சாமிகள், இன்னும் என்னென்னவோ எல்லாவற்றையும் குட்டிகோரா தொகுப்பின் மூலம் கடத்தியிருக்கிறார் தம்பி சிவா… சுடலை மாடனும், இசக்கியும், முண்டனும் நூலின் எல்லாப் பக்கங்களிலும் படுத்தும் நின்றும் நடந்தும் கொண்டிருக்கிறார்கள்… முறுவல் கெட்டி கரிசல் தோசை ரச வடை, சாமி கொண்டாடி, படைப்புச் சோறு, பலி உதிரம், ஆராதனைக் கொட்டு, வில்லுப் பாட்டு, அக்குப்பிரை, இளையராஜாவின் இசை வீச்சு, சாமியார்களின் பூஜை அட்டூழியங்கள், துரைப்பாட்டா நாட்டு வைத்தியங்கள், முதல் தலைமுறை பட்டதாரி மகன் அப்பாவின் வேலை பார்க்க வைக்கப் படும் போது ஏற்படும் சிக்கல்கள், அப்புறம் சுடலை சுடலை சுடலை சுடலை இசக்கி இசக்கி முண்டன் என கலந்து கட்டி ஆடியிருக்கார் தம்பி சிவா….

தோசை… படிக்கத் தொடங்கியங்கியதுமே அவர் சொல்லி வரும் அத்தனை வகை தோசைகளும் ரச வடையும் நாக்குல எச்சி ஊற வைக்கும்… எளிமையான மொழி நடை கதை ஓட்டம் அழுத்தமான கருத்துகளுடன் கூடிய முதல் கதை… ரசிச்சுப் படிச்சேன்… கோயிலும் வேண்டாம் மசூதியும் வேண்டாம் ஒரு பல்கலைக்கழகத்த கட்டுங்கப்பா என்பது நல்ல தீர்வாக என் மனசுக்கும் பட்டது....

ஆதிமூல பெருமாள் எனும் அண்டியைப் பற்றியும் அவன் உருவத்தைப் பற்றியும் சிவா எழுதியிருப்பதைப் படித்தாலே சிவாவின் நக்கலும் நையாண்டியும் நன்றாகத் தெரியும். அதிலும் குறிப்பாக அண்டியின் வேட்டியின் நிறம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது செம… ரொம்ப ரசித்த காட்சிகள் பச்சை மட்டைய கொண்டு போய் போட்டுட்டு யோய் பெருசு இன்னும் நீ சாகாலையானு கேக்குறது… பேப்பர் போடுற வேலைக்குப் போயிட்டு வாத்தியார் வீட்டு வாசல்ல கத்தி அந்தப் பெரிய மனுசன்மானத்த வாங்குறது யப்பா நல்லா சிரிச்சேன் சிவா…

அணுகுண்டு
ஒன்னுமேயில்லாமா எவனாவாது எதையாவது கெளப்பிவிட்டுட்டுப் போனதுக்கு நாம இம்புட்டு நாளு சேத்து வச்ச அம்புட்டும் போய், படாதபாடு படவேண்டியிருக்கவேண்டிய நிலையவும், மத ரீதியான ஆபத்து நிலையையும் ரொம்ப எளிமையா இதுல காட்டிட்டுப் போயிட்டார்… மேக்கொண்டு இதுல பேசுறதுக்கு ஒன்னுமில்லை… ஆனா ஒரு பொரணிய யாரெல்லாம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் பேசுறாய்ங்கனு இந்தக் கதெ தொடங்கும் போது சொல்லி வாராரு பாருங்க அது செமயா இருக்கும்…. வேலை வெட்டி இல்லாம பொரணி பேசுறதுக்குனே கன பேரு இப்படித் திரியிறான், இப்ப வாட்ஸாப் க்ருப்லாம் ஆரம்பிச்சித் திரியிறான்...

கும்பாட்டக்காரி
பச்சை பச்சையா பேசுனாலும் அதுல இருக்குற உண்மை நாகரீகமான பூசி மொழுகிற பேச்சுக்கு எப்பவுமே இருக்கிறதில்லை… அந்த வேலை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்தான் அதுக்கப்புறம் வேற வேலை பாத்தே ஆக வேண்டியிய கட்டாயம் அல்லது உசுர முடிச்சுக்கணும்… அது அவுகளுக்கும் தெரிஞ்சதுதான்…வேற வழியுமில்லை… ”வாழ்க்கை ரொம்ப கஷ்டமாகும் போது இந்த மாதிரி பாட்டைக் கடைசி ஒரு வாட்டி கேக்கணும்… அந்தால…பால்டாலை அடிச்சுச் சாகணும்னு” என்று வள்ளியம்மை என்னும் பாட்டுக் கிறுக்கி சொல்வதன் மூலம், இளையராஜாவே இவர்களின் காயங்களுக்கு களிம்பு என்று சொல்வதாகக் கருதுகிறேன்… இதற்கு எழுத்தாளர் சிவாவின் எண்ணவோட்டம் என்னவென்று அறியவும் ஆவல்….

சடலச்சாந்தி
இது ஒரு சிறப்பான சம்பவம்… அவன் இவன் ஜிஎம் குமார்தான் ஜமீனாக என் கண் முன்னாடி இருந்தார்… சிவாவின் எழுத்தின் வலிமை காட்சிகளைக் கண்முன்னே விரித்துக் காட்டுவது… படித்துக் கொண்டிருக்கும் போது அப்படியே உங்களை அந்தக் காட்டுக்குள்ளும் அந்த பூஜையறைக்குள்ளும் இழுத்துச் சென்றுவிடுவார்… சாம்பிராணி மணமும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…. ஆண்டைகளின் ஆணவம், விசுவாசத்தால் மாண்டு போதல், ஆணவக் கொலைகள் என வரிசையாக நடந்து முடிகிறது…

வெத்தலப்பெட்டி…
இந்தத் துரைப்பாட்டா இல்லாத ஊரே இல்லைங்கலாம்… அப்படி எல்லா ஊர்லயும் இப்படி ஒரு ஆளு இருப்பார்…. எவன் பேச்சையும் மதிக்கிறதில்ல… அவரு கண்ணுக்குத் தெரியாம ஊருக்குள்ள எதுவும் வரவோ போகவோ முடியாது… இவுக பெரும்பாலும் பெட்டிக்கடைத் தொழிலதிபதிர்களோ இல்லைனா மந்தைல வெட்டியா படுத்திருப்பவராகவோ இருப்பார்…. செம கேரக்டர்… இப்பக் கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமா மாறியிறியிருந்தாலும் பழைய போக்குவரத்தெல்லாம் ஞாபகம் வச்சு பேசுற பழைய கூட்டாளியான ஒரு நண்பன் இன்னும் இந்த துரைப்பாட்டாக்களுக்கு நட்பாக இருப்பது ஒரு சொகம்தான்… நிறைய பேர் அப்படிப் பாத்தும் இருக்கேன்... அந்த ரெண்டு பேரும் சேர்ந்து பேச ஆரம்பிச்சா பல பேரு கதை நாறிப் போகும்... அம்புட்டு ரகசியம் அவுக வச்சிருப்பாக... ரொம்ப ரசிச்ச கதை…

மலையாளப்பேய்கள்… அந்த பைக் பின்னாடியே உக்காந்து வந்தேன்யா… கிராந்தி பூ வாசம்லாம் வந்துச்சு…. இன்னும் அஞ்சாறு கதை உங்க வழக்குல படிச்சுட்டா உங்கூரு பேச்சும் வந்துரும் போல…. அந்த பல்லல்லால்ல உச்சரிக்க ரொம்ப குழறுதுப்பா…. J

பேண்ட்
நெஞ்சத் தொட்ட கதைப்பா… கடைசில கிளிசேவா அப்பன கொன்றுவீங்களோனு பயந்துட்டேன்… நல்லவேளையே நல்லபடியா முடிச்சீங்க… நாஞ்சில் வழக்குல அவுக போடுற காரசாரமான சண்டைக் காட்சிகள் வசனங்களெல்லாம் எனக்கு படிக்கும் போது செம சிரிப்பாத்தான் இருந்துச்சு…. கடைசில என்னால உனக்கேண்ட்டா அவமானம் மகனேனு, தொடையே கிளிஞ்சாலும் பேண்ட் போட்டுத் திரிஞ்ச அப்பா பாகுபலி சிலை மாதிரி உயர்ந்துட்டார்…. நெஞ்சு கனத்துப்  போச்சுப்பா…

ஆசான்…
செம… ஆசான்… வகுப்பெடுப்பதும் அந்த மாணவர்களிடம் அள்ளி விடுவதும்… யப்பப்பா செம.. அதுலயும் கத்தில சுண்ணாம்பு எடுத்து கொடுப்பேனு அடிச்சு விட்டது செம நகைச்சுவை…. என்னுடைய ஒரு ஆசிரியரை ஞாபகப் படுத்தியது…. இராத்திரி தண்ணியப் போட்டுட்டு நடந்து வர்ற காட்சியை, படுத்துக்கிட்டு வாசிச்சிக்கிட்டிருந்தவன் சிரிச்சுக்கிட்டு எந்திரிச்சு உக்காந்து வாசிக்க ஆரம்பிச்சிட்டேன்… சுடுகாட்டுல கனகா டீச்சரக் கண்டு வந்தவரு, பேய எத்துறேனு அரைப்போதைல கல்லுக்கால எத்தப் போறாருனு நினைச்சேன் அதே மாதிரி கல்லுக்கால எத்தி கட்டுப் போட்டுக் கெடப்பாரு… செம சிரிப்பு ஆசான்… பொண்டாட்டிய வேற திட்டுவாரு பாருங்க அது இன்னும் செம…

முடியன்… 
மொத்தக் கதைத் தொகுப்புல ரொம்ப ரசிச்ச கதைப்பா இந்த முடியன்… யம்மாடி… என்னா செலம்பல் பண்ணிட்டான் இந்த முடியன்… யே யாத்தே… அதும் சுடலையும் முடியன் பேசுற பேச்சு வார்த்தை ஆத்தாடி ஆத்தா… வேற யாரும் இப்படி பேசிக்கிற முடியாது… சுடலை ரொம்ப வெகுண்டு பேசுனா எப்படி இருக்குமோ அப்படியே எழுத்தில வடிச்சிருக்காப்ள தம்பி…. பாத்து பத்த வைங்கடா சூடத்த இருக்க ஒரு வேட்டியும் பத்திக்கப் போகுதுங்கிறதா இருக்கட்டும், எம்புட்டு நேரமா நிக்கிறேன் எனக்கு கால் வலிக்காதாங்கிறதா இருக்கட்டும், யோவ் பலி வேண்டாம்னு சொல்லுயானு முடியன் நடத்துற பேச்சு வார்த்தையா இருக்கட்டும், சரினு பலியத் தடுக்க ரெண்டு பேரும் போடுற திட்டமா இருக்கட்டும், கடைசில திருப்பதி சாமியா பிறக்கணும்டாயப்பானு புலம்புறாதா இருக்கட்டும்,  யம்மாடி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சுப் போச்சு… 

என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்கு இதான் இலக்கியம். இதோடு எனக்கான இலக்கியத் தேடல் முடிஞ்சு போச்சு…. சுடலையாக சிவாவும் முடியானாக நானும் டப்பிங் கொடுத்தால் எப்படி  இருக்கும் என்று கற்பனை செய்து கூடப் பார்த்தேன் செம  நகைச்சுவை….

இன்னும் இருக்கும் குட்டிகோரா, உலக்கருவி, நருவல் போன்ற மூன்று கதைகளும் சிறப்பாகவே உள்ளன…. நல்லா கருத்தாவும் அழகாவும், முற்போக்குச் சிந்தனை உள்ளனவாகவும் எழுதியிருக்கார் தம்பி…  அது எனக்கு எப்படிப் பட்டது என்றால், மற்ற நமக்கு அறிமுகமில்லாத ஆனாலும் பெரிய எழுத்தாளர்களின் இலக்கியத் தரமான கதை போல இந்த மூன்று சிறுகதைகளை, தம்பி சிவா எழுதியுள்ளதாகப் பட்டது…
வாழ்த்துகள் தம்பி சிவா…

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு அறிமுகம். தமிழகம் வரும்போது வாங்க வேண்டிய புத்தகப் பட்டியலில் குறித்துக் கொண்டேன். நன்றி.