Thursday, October 24, 2019

ஒரு பாட்டில் உயரம் தொட இது சினிமா அல்ல. வாழ்க்கை.


இழுத்துச் செல்வதற்கோ, ஓடிப்போவதற்கோ முன்பாக, ஒருநொடி சுயநலமின்றி சிந்தியுங்கள். உங்கள் பெற்றோரையும், உங்களுக்கு அடுத்து இருக்கும் உங்கள் உடன்பிறப்புகளையும், உங்கள் துணையுடன் நீங்கள் வாழப்போகும் எதிர்காலத்தையும்.
ஒரு பாட்டில் உயரம் தொட இது சினிமா அல்ல. வாழ்க்கை.
ஓடிப்போன பின் நீங்கள் நல்ல வாழ்வு வாழ்ந்தாக வேண்டும். அதையேதான் பெற்றோரும் மனதார வேண்டுவார்கள். ஆனாலும் அவர்களின் நொறுங்கிய மனதை தேற்ற, ஆற்ற நீங்கள் இன்னொரு பிறவி எடுத்தாலும் இயலாது.

சாதி மதம் பொருளாதாரம் என எந்த வகையிலும் மற்றவர்களை விட மேம்பட வேண்டுமெனில் தன்னுடைய அறிவாலும், உழைப்பாலும், நடத்தையாலும் மேலோங்க நினைக்கவேண்டும். அதைவிடுத்து, நெடுநாளாக ஒருவரை குறிவைத்துத் திட்டமிட்டு, அன்பு காதல் என அதற்கு சாயம் பூசி, அந்த ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து அதன் மூலம் ஆதாயம் அடைவது மேன்மையாகாது. இழிவு.

காதல் சாயம் பூசி உங்கள் இளமை பயன்படுத்தப் பட்டபின், சூழ்ச்சியால்தான் உங்களை இழுத்துச் சென்றிருக்கிறார்கள் என்று நீங்கள் தூக்கி எறியப்பட்ட / கைவிடப்பட்ட அன்று, நீங்கள் உண்மையைப் புரிந்து கொள்ளும் போது உங்களைத் தாங்க பெற்றோர்கள் மட்டும்தான் இருப்பார்கள்.
ஓடிப்போகும் போது உறுதுணையாக இருந்த நண்பர்கள், நீங்கள் குப்பையாக வீழ்ந்து கிடக்கும் போது, உங்களைத் தாங்குவதாக எந்த சினிமாவிலும் இதுவரை நான் கண்டதில்லை.
கிராமம் நகரம் எல்லாம் ஒன்றுதான் என்று சொல்லிவிட முடியாது. கிராமத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கிராமத்தில் உள்ளவர்களின் முகங்களை ஒவ்வொரு நாளும் காண்கிறார்கள். அவர்களுடன் பேச வேண்டியும் இருக்கும். குடும்பத்திற்கு அவமானம் எனில் மற்றவர்கள் முகத்தில் விழிக்க இயலாமல் அஞ்சிக் கூனிக் குறுக வேண்டியிருக்கும்.
நகரங்களில் அப்படி இருக்க வேண்டியதுமில்லை. வாய்ப்புமில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் முகங்கள் கூட பலருக்கு பல நாட்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முன்பெல்லாம் பாலுணர்வைத் தூண்டும் காரணிகள் இலை மறை காயாக இருந்த மட்டில் நன்றாக இருந்தது. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் கையடக்க கருவிகள் மூலம் எல்லாம் எல்லாருக்கும் வயது வேறுபாடின்றி வெளிப்படையாகக் காணக்கிடைக்கிறது. அதைக் கட்டுப்படுத்தவும் இயலாது.
இருவரின் எல்லாமும் நொடிப்பொழுதில் டிஜிட்டலாகப் பதிவு செய்யப்பட்டு பொதுவில் பகிரப்படுகிறது. ஆதலால் எதிலும் எப்போதும் கவனமாக இருத்தலே நம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு. எல்லாவற்றிற்கும் மீறி விதி என்ற ஒன்று இருப்பதாக நம்பிக்கொள்ள வேண்டியதுதான். அதுதான் ஆறுதலும் ஆகும்.
குழந்தைகளை காதலின் பேரில் இழந்து, காணாமல் தவித்து புகார் செய்ய வரும் பெற்றோரை கொஞ்சம் மரியாதையுடன் கனிவோடும் காவல்துறையினர் நடத்தவேண்டும். உங்களுக்கு ஒரு நாளில் வரும் ஆயிரம் புகார்களில் இதுவும் ஒன்றுதான். ஆனால் பெற்றோர்கள், பிறந்ததிலிருந்து தன் குழந்தையை இத்தனை நாள் வளர்த்த நினைவுகளோடும், ஏமாற்றப்பட்ட வலியோடும், தன் குழந்தையின் எதிர்காலம் என்னாகுமோ என்ற பெருங்கவலையோடும் உங்களைச் சந்திக்க வருகிறார்கள். அவர்கள் வேதனையை ஒரு பெற்றோராக நீங்கள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

No comments: