Sunday, July 21, 2019

யாப்பு - காப்பியக்கோ திரு. ஜின்னா ஷர்ஃபுதீன் - அமீரக எழுத்தாளர் வாசிப்பாளர் குழுமம்

அனைவருக்கும் வணக்கம்...
சிறுவயதில் தமிழ், இலக்கணம் படித்திருந்தாலும் எதுவும் இப்போது நினைவில் இல்லை… பேசுகிறோம் எழுதுகிறோம் ஆனால் அதுவெல்லாம் சரியா என்று தெரியாது... நமக்குத் தெரிந்ததெல்லாம் வஞ்சப்புகழ்ச்சி அணி, சில செய்யுள்கள், திருக்குறள் போன்றவை. பத்தாவது படிக்கும் போது ”குனித்த புருவமும்” மனப்பாடச் செய்யுள்; அதே காலகட்டத்தில் தளபதி படத்தில் இசைஞானியின் இசையில் ராக்கமா கையத்தட்டு பாடலில் “குனித்த புருவமும்” வருவதால் அந்தச் செய்யுள் மனப்பாடம் செய்ய எளிதாக இருந்தது. அதுவே பத்தாவது பொதுத்தேர்வில் கேள்வியாகவும் வந்ததால் அப்படியே அடி மாறாமல் எழுதி முழு மதிப்பெண்ணும் பெற்றோம்.
ஆகவே நெடுநாட்களாகவே இந்த யாப்பு அணி தொடை இலக்கணம் வெண்பா தளை அது இது என என்னென்னவோ சொல்கிறார்களே அதெல்லாம் என்னவென்று அறிந்துகொள்ள ஆசை. எங்கள் அமீரக எழுத்தாளர் வாசிப்பாளர் குழுமத்தில் எழுத்து வாசிப்பு சார்ந்து பலர் இயங்கி வருகிறார்கள்… என்னைப் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருமே சிறந்த படைப்பாளிகள்… தலைக்கு நாலைந்து நூல்களுக்கு மேல் ஏற்கனவே எழுதி வெளியிட்டுள்ளார்கள்… இன்னும் சிலர் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்கள், விரைவில் நூல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறலாம்… நான் நன்றியுரையும் ஆத்தலாம்…
கடந்த ரமதான் காலத்தில் ஒரு இஃப்தார் மாலையில் அண்ணன் ஆசிஃப் மீரான் அவர்களின் சத்திரத்தில் கூடிய போது, சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய ஐயா, காப்பியக்கோ திரு. Ahamed Jinnahsherifudeen அவர்கள் வந்திருந்தார்கள்… நோன்பு திறந்ததிற்கு பின்பு வழக்கம் போல நண்பர்கள் அரட்டை அடிக்க, ஐயாவும் எங்களோடு கலந்து கொண்டார்கள்…
ஐயாவின் பேச்சைக் கேட்க ஆவலாக காத்திருந்த எங்களுக்கு ஐயாவைப் பற்றிய அறிமுகம் தருவதற்காக தம்பி முஹையத்தின் பாஷா அவர்கள் மைக்கைப் பிடித்தார்கள், அன்றுதான் மைக்கிற்கு புது பேட்டரிலாம் போட்டு வச்சிருந்தேன்… மைக் பேட்டரி தீரும் வரை அறிமுக உரையே ஆத்திக்கொண்டிருந்தார் தம்பி… சரி மறுநாள் ஸஹர் சாப்பாட்டுக்குத்தான் ஐயாவைப் பேச விடுவார் போல என்று எல்லாரும் பதறியிருந்த போது ஒரு வழியாக ஐயாவிடம் மைக்கைக் கொடுத்து பேச அனுமதித்தார்… நல்லவேளை முஹையத்தின் பாஷாவே யாப்பிலக்கணமும் எடுத்து விடுவாரோ என்று அஞ்சியிருந்தோம்… இவ்வளவு பெரிய அறிமுக உரைக்குப் பிறகு ஐயா புதிதாக என்ன பேசப் போகிறார், இப்படிக்கு, ஜின்னாஹ் ஷர்புதீன் என்று சொல்லி முடிக்கப் போகிறார் என்றுதான் நினைத்திருந்தோம்… ஆனாலும் பெரிய மனுசன் பெரிய மனுசந்தான்… நமது மொழி, அதன் சிறப்பு, வெண்பா, இலக்கணம் நாட்டு நடப்பு என இயல்பாக எங்கள் அலைவரிசைக்கு இறங்கி வந்து பேசினார்கள்… அனைவரும் அவரின் பேச்சில் மகிழ்ந்திருந்த போது எங்களுக்கும் யாப்பிலக்கணம் கற்றுக் கொள்ள ஆவல் பிறந்தது… ஐயா தாமே முன் வந்து நான் அறிந்ததை உங்களுக்குக் கடத்த விரும்புகிறேன்…. உங்களுக்கு யாப்பிலக்கணம் வெண்பா எழுதுவதெல்லாம் சொல்லித் தருகிறேன, அமீரக விசா காலம் குறைவாக இருக்கிறது, ஆகவே அதற்கான ஏற்பாடுகளைச் செய் மகளே என்று ஜெஸிலாவிடம் என்று அன்புக் கட்டளையிட்டார்.
வெளியூர் ஆட்டக்காரரே அப்படி இறங்கி வந்துவிட்டதும், உள்ளூர் ஆட்டக்காரரும், பிரபல கரும்புனல் நாவல், மற்றும் பல படைப்புகள் படைத்த அண்ணன் சுரேஷ் அவர்கள், எங்களுக்கு சந்திப்பிழைகளைப் பற்றிச் சொல்லித் தருவதாகச் சொன்னார். ஆஹா என்னடா இது திடுதிப்புனு கூட்டம் களைகட்டுதே, ஏற்பாடுகளை உடனடியாகக் கவனிச்சாகனுமே என்று பரபரப்பாக எதுவும் செய்யாமல் வழக்கம் போல மந்தமாகவே இருந்தோம்… நண்பர்கள் சிலர் ஊருக்குப் போயிருந்ததால், அவர்கள் எல்லாரும் உள்ளூரில் இருக்கும் போது இலக்கண வகுப்பு ஜெசிலா அவர்களின் அலுவலகத்தில் நடத்துவதாக முடிவு செய்தோம்.
அதன்படி 21ம் தேதி ஜுன் மாதம் சந்திப்பிழை பற்றிய வகுப்பை அண்ணன் பெனாத்தல் சுரேஷ் நடத்தினார்… இலவசக் கொத்தனார் மற்றும் சில நண்பர்களுடன் அவர்கள் சேர்ந்து பல்லாண்டுகளுக்கு முன்பு கடும் உழைப்பு உழைத்து செய்த பவர்பாயிண்ட் ப்ரசண்ட்டேசன் துணை கொண்டு சந்திப்பிழை பாடங்களை எங்களுக்குத் ”தொட்டால் தமிழ் மலரும்” என்ற பெயரில் நடத்தினார்… உண்மையிலேயே என்னைப் போன்றோர்க்கு இது புதிய பாடமாகத்தான் இருந்தது… இம்புட்டு நாளா என்னத்த எழுதிக்கிட்டிருந்தோம்னு கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது… அவ்வளவு எழுத்துப்பிழைகளைச் சுட்டிக்காட்டினார்… ஒற்று வைப்பதால் எப்படிப் பொருள் மாறுபடும் என்று பல பயிற்சிகளும் விளக்கப் படங்களும் காட்டி வியக்க வைத்தார்… உண்மையிலேயே இந்த நேரத்தில் இது சார்ந்து இயங்கிய திரு. சுரேஷ், இலவசக்கொத்தனார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் சொல்லிக் கொள்கிறேன்… இதில் சிறப்பென்னவென்றால் , இந்த முதல் வகுப்பில் 11 காப்பியங்களை எழுதிய, காப்பியக்கோ அவர்களும், எங்களோடு ஒரு மாணவராக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்… அவர்களின் எளிமையான இயல்பான இயைந்து பழகும் தன்மைக்கு இதுவே ஒரு சான்று… இந்த வகுப்பு முடிந்ததும் அடுத்த வாரம் வெள்ளி முதல் யாப்பிலக்கணம் வகுப்பு தொடங்கும் என அறிவிக்கப் பட்டது….
யாப்பிலக்கணம்: காப்பியக்கோ திரு. ஜின்னாஹ் ஷர்ஃபுதீன்

மரபு முறையில் செய்யுள் இயற்றுவதற்குரிய விதிகளையும் விதிவிலக்குகளையும் கூறுவது யாப்பிலக்கணம் ஆகும். யாத்தல் என்றால் கட்டுதல் என்று பொருள் படும்… என்று கூறி யாப்பிலக்கணத்தைத் தொடங்கினார்… அடுத்து செய்யுளின் உறுப்புகளான எழுத்து அசை சீர் தளை அடி தொடை என விறுவிறுவெனவும் விருப்பமாகவும் வகுப்பு தொடர்ந்தது… எழுத்தினால் ஆனது அசை; அசைகளினால் ஆனது சீர்; சீர்களால் ஆனது அடி; அடிகளினால் ஆனது பா; சீரும் சீரும் சேரும் இணைப்பு தளை; எதுகை மோனை போன்ற அழகியல் அமைப்புகள் தொடை என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போனார்… அடுத்தாக எழுத்துகள் சார்பெழுத்துகள் அசைச்சீர்கள் என பாடம் தொடர்ந்தது…
தேமா புளிமா கருவிளம் கூவிளம் வரும்போது சின்ன வயசு பள்ளிக்கூட ஞாபகங்கள் மீண்டும் வந்தது… சொல்லிற்கு எப்படி அலகிடுவது அசை பிரிப்பது, இயற்சீர்களை நினைவில் வைத்துக்கொள்ளும் வாய்ப்பாடுகள் என்ன என்று தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார்…
நேர் நேர் – தேமா
நிரை நேர் – புளிமா
நிரை நிரை – கருவிளம்
நேர் நிரை – கூவிளம்
மாணவர்களின் பெயர்களை எழுதிப் போட்டு அவற்றை அசை பிரித்து எப்படி எழுதலாம் என்று சொல்லிக் கொடுக்கவும் இன்னும் விறுவிறுப்பாக இருந்தது… மறுநாள் ஃபோன் பேசும்போதெல்லாம் ஹல்லோ புளிமாங்கயா? நான் தேமாங்காய் பேசுறேங்ன்கிற அளவுக்கு தேறியிருந்தார்கள்….
வகுப்பில் ஐயா பாடம் நடத்த, இங்கிட்டு உள்ளூர் ஆட்டக்காரர் சுரேஷ் அண்ணன், நண்பர் பொய்யாமொழியோடு பின்னாடி பெருங்குரலோடு தனியாக வகுப்பெடுக்க, சட்டாம்பிள்ளையாக மாறிய ஆசிப் அண்ணன் அடிக்கடி முறைத்துப் பார்த்து அவர்களைக் கண்டிக்க, இடைஇடையில் ஷேக் பழைய பாடல்கள் எதையோ பாட, ஆசிப்பண்ணன் தலையில் அடித்துக்கொள்ள, “என்னைய கூட்டி வந்து என்னடா செய்ய இருக்கீங்க” என ஆசிரியர் ஐயா ஒருமாதிரி எங்களைப் பார்க்க, எப்படியோ எனக்கு மறுபடி கல்லூரிக்குப் போன மாதிரி ஒரு உணர்வு… மகிழ்ச்சி
அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று வெள்ளிக்கிழமைகள் என மொத்தம் நான்கு வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வந்து ஐயா எங்களுக்கு யாப்பிலக்கணப் பாடம் நடத்தி, எங்கள் குழுமத்தின் படைப்பாளிகளை, தமிழறிவு உள்ள பலரை பிழையின்றி வெண்பா எழுதவைத்தும், எள் முனை அளவு கூட தமிழறிவு இல்லாத என்னைப் போன்றோருக்கு தமிழின் தொன்மையையும், அழகையும், இலக்கண அறிமுகத்தையும் தந்து, தங்கள் நோக்கத்தில் வெற்றியும் பெற்றார்கள்…
இறுதி வகுப்பில் கம்பராமாயாண சொற்பொழிவாற்றினார். அப்போது ஐயா அவர்கள், தமிழின் பால் கொண்ட காதலும், மொழி ஆளுமையும் எங்களை வியக்க வைத்தன… கம்பனின் சொல்லாடலும், ஐயாவின் பார்வையும் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருந்தன…
வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்
இந்தப் பாடலையும், விளக்கத்தையும் ஐயாவின் குரலில் கேட்க வேண்டும்… இங்கே எழுதுமளவுக்கு எனக்கு அறிவில்லை…
உறங்குகின்ற கும்பகன்ன உங்கள்மாய வாழ்வெல்லாம்
இறங்குகின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்
இந்தப் பாடலை ராகத்தோடு பாடிக்காட்டிய விதம் அனைவரையும் கவர்ந்தது... அதே வேளையில் இப்போது பாடல்களைப் பிழையாக எழுதுவோர், பதிப்பிப்போர் மீது அவர் கொண்ட சினத்தைப் பார்க்கும் போது அவர் ஒரு குழந்தையாகவே தெரிந்தார்....
இந்த வகுப்பில் தமிழ் இலக்கணம் என்பதற்கும் அப்பாற்பட்டு, நான் மிகவும் வியந்தது ஐயாவின் ஈடுபாடு சுறுசுறுப்பு நினைவாற்றால்… தன் வாப்பாவிடம் கற்ற தமிழை, செய்யுளை இன்னும் நினைவில் வைத்து சொல்லிக் கொடுக்கிறார்… தந்தையார் ஷர்ஃபுதீன் அவர்கள் பெற்ற இலங்கையின் முக்கியப் பட்டங்களில் ஒன்றான புலவர்மணி பட்டத்தையும், அதை புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களே வந்து தந்தது பற்றியும், அதற்கு நன்றியாக அவர்கள் தந்தையார் எழுதிய வெண்பாவையும் நினைவில் வைத்து இத்தனை ஆண்டுகள் சென்ற பின்னும் ஞாபகம் வைத்துப் பிழையில்லாமல் எழுதிக்காட்டி வியப்பில் ஆழ்த்தினார்…
குழுமத்தில் அனைவரும் வெவ்வேறு துறை சார்ந்த நண்பர்கள், வெவ்வேறு பணிச்சூழலில் இயங்குபவர்கள் இருப்பினும் தமிழின் மேல் உள்ள பற்றாலும் தேடலாலும் அனைவரும் மகிழ்வுடன் பங்குகொண்டு இந்த வகுப்புகள் சிறப்பாக நடைபெற உறுதுணை அளித்தார்கள்… வீட்டுப்பாடமெல்லாம் எழுதிக் கொண்டு வரும் அளவுக்கு மாணவர்களின் ஈடுபாடானது, “என்னமோனு நினைச்சேன் இவய்ங்க இந்தளவுக்கு ஈடுபாடாத் திரிவாய்ங்கனு நினைச்சுக் கூடப் பார்க்கலையே” என ஆசிரியரே மலைத்துப் போயிருப்பார் என்று நம்புகிறேன்.
என்னைப் பொறுத்த மட்டில் என் மகளோடு சக மாணவனாக நான் இந்த வகுப்பில் கலந்துகொண்டது பெருமகிழ்ச்சி. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு காப்பியக்கோவின் நூல் வெளியீட்டு விழாவில் ஓர் ஓரத்தில் அமர்ந்து கலந்துகொண்டேன் இன்று அவரிடமே பாடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கிடைத்ததும் பேறாகக் கருதுகிறேன்.


தமிழ் வகுப்பின் மூலமாக அகமது ஜாயது எனும் தமிழார்வமுள்ள ஒரு தம்பி மற்றும் ஸ்ரீரோகிணி எனும் தமிழ் ஆராய்ச்சி செய்யும் தங்கை மற்றும் தமிழில் பேசக்கூடிய தமிழ் ஆர் ஜே தங்கை அஞ்சனா ஆகியோரது அறிமுகமும் கிடைத்தது. தங்கள் அலுவலகத்திலேயே வகுப்பறை ஏற்பாடுகள் செய்த ஜெஸிலாவிற்கும், இந்த அருமையான நிகழ்வை வாய்க்கச் செய்த அமீரக எழுத்தாளர் வாசிப்பாளர் குழுமத்திற்கும், தமிழின் மேல் ஈடுபாட்டுடன், தேடலுடன் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி
தன் குடும்பத்தோடு செலவிட வேண்டிய பொன்னான நேரத்தை, தமிழுக்காக, எங்களுக்காக ஒதுக்கி பாடம் கற்றுக் கொடுத்த காப்பியக்கோ ஐயா திரு ஜின்னாஹ் ஷர்ஃபுதீன் அவர்களுக்கு எங்கள் அனைவர் சார்பாகவும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழுக்கும் அப்பாற்பட்டு உங்களிடம் வேறு பல நல்லவற்றையும் கற்றுக் கொண்டேன் ஐயா...

No comments: