Thursday, December 27, 2012

சுலைமான் தாத்தாவின் தோட்டம்





செவ்வக வடிவில் அமைந்திருக்கும் ஐந்து மாடி குடியிருப்புப்பகுதி, அதன் நடுவில் உள்ள இடத்தில் ஒரு பெரிய பூங்கா... குடியிருப்பின் கீழ்த்தளம் முழுவதும் வணிக நிறுவனங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அதில் ஒரு பகுதியில் எங்கள் புதிய அலுவலகம் அமைந்துள்ளது... 

இந்த அலுவலகத்திற்கு சென்ற நாள் முதலே அவரைக் கவனித்து வந்திருக்கிறேன்... வயதான பெரியவர்...  பெயர்: சுலைமான்.

புன்னகையுடன், சலாம் அலைக்கும் பாய் ஜான் - வாஅலைக்கும் சலாம் என்று மட்டும் சொல்லிக் கொண்டு நாள்தோறும் தொடர்ந்தது எங்கள் நட்பு. 

என்னவோ ஓர் ஈர்ப்பால் அவரோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசத் தொடங்கினேன்... எந்நேரமும் மரம் செடி கொடிகளோடுதான் இருப்பார்... ஓய்வாக அவர் இருந்து நான் பார்த்த நிகழ்வுகள் மிகவும் குறைவே... ஏன் இல்லையென்று கூடச் சொல்லலாம்... நான் அவரோடு பேசிய பொழுதுகளில் தன் வேலையை விட்டுவிட்டு அவர் என்னோடு பேசியதில்லை... சலாம் சொல்லும்போதும், நலமா இருக்கிறீர்களா எனக் கேட்கும் போது மட்டுமே நிமிர்ந்து நம் முகத்தைப் பார்ப்பார்.
 




பின்பு, நீண்ட குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுதல், களை வெட்டுதல், கூடுதலாக வளர்ந்திருக்கும் செடிகளை அழகாக ஒழுங்கு படுத்துதல் என தன் பணியைச் செய்து கொண்டேதான் பேசுவார்...  அவருக்கு யாருடனாவது பேசுவது மிகவும் பிடிக்கும், இருப்பினும் யாரையும் தேடிப் போய் பேசுவதில்லை, தான் வேலை செய்து கொண்டிருக்கும் போது யாராவது வந்து பேசினால் அவர்களோடு பேசுவார். அவ்வளவுதான்...

அவரோடு பேசிக்கொண்டிருந்ததில், சில வியப்பான நிகழ்வுகள் எனக்குண்டு... அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.... பகிர்வதில் பெருமிதமும் கொள்கிறேன்...

எத்தனை ஆண்டுகளாக வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சரியாகத் தெரியவில்லை, அமீரகத்திற்கு வேலைக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும், எனக்கு மகன் பிறந்தான் அவன் பெரியவனானதும் திருமணம் செய்து வைத்தேன், இப்பொது அவனுக்கு மகன் இருக்கிறான் என்று கூறி தனது பேரனின் படத்தை போட்டோ ஆல்பத்திலிருந்து எடுத்துக் காட்டினார்...  நாம் அந்த ஆல்பத்தை பார்க்கும் போது அவர் கண்ணில் ஒரு பெருமையும் மகிழ்ச்சியும் தெரிந்தது.



இனி அவர் சொன்னதை அவர் சொல்வது போலவே கேட்போம்...

நான்: எத்தனை ஆண்டுகளாக இந்த வேலை பார்க்கிறீர்கள்

அவர்: இங்கு வந்ததிலிருந்தே இந்த வேலைதான் பார்க்கிறேன்

நான்: நீங்க இங்க வந்த பொழுது, இந்த இடம் எப்படி இருந்தது?

அவர்: வெறும் மண்ணுதான் இருந்தது... இதைப் பூங்காவாக மாற்றுவதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலை.

நான்: நீங்கதான் ஒவ்வொன்னா உருவாக்குனீங்களா?

அவர்: ஆமாம், முதலில் இந்த மண்ணில் செடி வளர்க்க ரொம்ப கடினமா இருந்தது... கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு செடியா நட்டேன்... தண்ணீர் விட்டாலும் பட்டுப் போகும்.... நாள்தோறும் தவறாமல் தண்ணீர் விடுவேன்... கருகிய இலைகளை அகற்றி விடுவேன்.... எப்பவும் செடிகளைப் பச்சையா பார்க்கிறது எனக்குப் பிடிக்கும்...

நான்: இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்லுங்க...

அவர்: ஆமாம்... எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை, இந்த மரம் செடி கொடிகளும் மனிதன் மாதிரித்தானே, அவைகளை ரொம்பவும் நேசிக்கிறேன்... எந்தச் செடி நல்லா  வளருது, எது காய்ந்து போயிருக்கு, எது பிழைக்கும் எது செத்துப் போகும் என எல்லாம் எனக்கு அத்துப்படி... என் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களை நேரத்தை இந்த இயற்கையோடு செலவளித்து விட்டேன்... வேற எதுவும் எனக்குத் தெரியாது....

நான்: இங்க இருக்கிறவங்களுக்கு உங்களைப் பற்றி தெரியுமா?

அவர்: ம்ம்ம் எல்லாருக்கும் தெரியும், பார்க்கும் போது சிலர் சலாம் சொல்லுவாங்க... புதிதாய் குடி வருபவர்கள் போகப் போகத் தெரிஞ்சுக்குவாங்க... சிலர் மட்டும் என்னிடம் பேசுவார்கள். பலர் புன் சிரிப்புடன் என்னைக் கடந்து செல்வார்கள்...

நான்: அவர்கள் இந்தப் பூங்காவை எப்படி பாத்துக்கிறாங்க....

அவர்: கோடைகாலத்தில் யாரும் இங்கு அதிகம் நடமாட மாட்டாங்க... வெயிலில் யாரும் இங்க நிற்க கூட முடியாது.... நான் மட்டும் தவறாமல் தண்ணீர் பாய்ச்சிருவேன்... குளிர்காலத்தில் நிறைய பேர் குழந்தைகளுடன் வந்து விளையாடுவார்கள்... இருக்கைகளில் அமர்ந்து பேசுவார்கள்.... அப்போது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.  

ஆனால், சிலர் பூக்களை வெடுக்கென பிடுங்குவது , இலைகளை கிள்ளி எறிவதும் எனக்குப் பிடிக்காது... அதுவும் மனிதன் மாதிரித்தானே, ஏன் அதன் உறுப்பை சேதப்படுத்தணும்...பார்த்து ரசிக்கத்தான் பூக்கள், அதைப் பிடுங்கி கையில் வைத்து கசக்கி எறிபவர்களை காணும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்... ஆனால் நான் ஒன்றும் சொல்வதில்லை....




இப்படியாக அவருடன் பேசிக் கொண்டிருந்த போது நான் அறிந்த தகவல்கள் இவை. இன்னும் நிறைய பேசியிருக்கிறேன் அவருடன்.... மரம் செடி கொடிகளை எப்படி பராமரிப்பது, எப்படி அழகு படுத்துவது என பல தகவல்களைப் பேசுவார்...அவருக்கு செடி கொடிகளோடு படம் எடுத்துக் கொள்ள ரொம்ப பிடிக்கும்... நான் அந்த வழியாக செல்லும் போதெல்லாம் அவரைப் படமெடுக்கச் சொல்லுவார். மொபைல் கேமராவில் படமெடுத்து அவரிடம் காட்டுவேன், அவருக்கு அது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்....

வெறும் மண்ணாக இருந்த இடத்தில், என்னென்ன வளர்த்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள விருப்பமா?

அரச மரம், வேப்ப மரம், ஈச்ச மரம், நிறைய பூச்செடிகள், பூசணிக்காய், முருங்கை மரம், ஆவாரம் பூ, செவ்வந்திப் பூக்கள்,இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத மரங்கள், பூச்செடிகள் என அழகான பூங்காவை உருவாக்கிப் பராமரித்து வருகிறார்.



எத்தனையோ பேர் மரம் நடுகிறேன் என பேருக்கு போட்டோ மட்டும் எடுத்து விட்டு, பின்பு கண்டுகொள்ளாமல் செல்லும் இவ்வுலகில் சுலைமான் தாத்தாவை மரியாதையோடு பிரமிப்பாய்ப் பார்க்கிறேன்... என்னதான் சம்பளத்திற்கு வேலை பார்த்தாலும், அவரின் ஈடுபாடும், இயற்கையின் மேல் கொண்ட காதலும், வேலையையும்  தாண்டி அவர் செய்யும் பெரும் சேவையாகவே எனக்குப்படுகிறது...

அரிய மனிதர்களை எங்கோ செய்தித்தாளில் படித்திருப்போம், ஆனால் நம்மைச் சுற்றியே சில அரிய மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சுலைமான் தாத்தா மூலம் நான் அறிந்து கொண்டேன். 

இந்தப் பதிவில் இருக்கும் பூக்கள் செடிகள் படங்கள் எல்லாம் அவர் உருவாக்கிய தோட்டத்தில் எடுத்தவைகள்தான்...


மேலும் சில படங்களைக் காண இங்கு செல்லுங்கள்:

நன்றி.



5 comments:

ஆத்மா said...

மற்றவர்களின் சந்தோஷத்தில் தன் மன நிம்மதி கொள்வோர் சொற்பமே..
சுலைமான் தாத்தாவின் சேவை பாராட்டப்பட வேண்டியது..
நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு கௌரவிப்பு விழா நடத்தினால் என்ன...
உள்ளம் பூரித்துப் போவாரே

Balaji said...

நன்றி ஐயா...
முயற்சி செய்கிறோம்...

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Balaji said...

புத்தாண்டு வாழ்த்துகள்....

மிக்க நன்றி மதுரைத்தமிழன்...

அ.மு. நெருடா said...

நம்மை சுற்றி இருக்கும் பல சுலைமான் தாத்தாக்களை கானாமல் நாம் கடந்து செல்வதே இந்த சமூகத்தின் சாபக்கேடு. அந்த மொபல் புகைப்படத்தை பார்த்து மகிழும் மனசு...