Sunday, April 15, 2018

ஓரிதழ்ப்பூ - ஒரு கதம்பம்

ஓரிதழ்ப்பூ

இந்நாவலைப் பற்றி எழுதுவதற்கு மாமுனியைப் போல் பூக்கட்டிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. நாறு இருநூறு ஐநூறு ஆயிரம் எனக் கோத்த கோவையின் நீளம் முடிவிலியாக தொடரவேண்டும் என்ற ஆவல் நீள்கிறது.  பூக்களையே நாராக்கி கோக்கப்பட்ட கதம்பம் இது... 

பலபூக்களின் மகரந்தச்சேர்க்கை எப்படி இவர் மூளைக்குள் சூழ் கொண்டதோ தெரியவில்லை. பெண்ணியம் மணக்கும் பூக்கூடையை நாவலாக்கித் தந்திருக்கிறார் அய்யனார் எனும் மாமுனி. அல்லது மாமுனி எனும் அய்யனார்.

கதையில் பூத்திருக்கும் பூக்களெல்லாம் என் தோட்டத்தில் என் தெருவில் என் ஊரில் என்னைச் சுற்றி பூத்துக் கிடந்தவைகளே. எனக்குத் தெரிந்த, பயணித்த பூக்களின் பெயர்களுக்கு இவர் வேறு பெயர் சூட்டி அழைத்திருக்கிறார். வேறொரு வேறுபாடு நான் அறியவில்லை.

மாமுனி இறங்கி வந்த வேகமே இந்நாவலுக்குள் நம்மை இழுத்துச் செல்லும் வேகம். மாமுனியும் ரமணரும் காக்கையும் பேசிக்கொள்ளும் பக்கங்கள் கள்ளிப்பழம். முள் நீக்கி உண்ணும் வித்தை கைகூடினால் இனிக்கும். 

நம் ஆள்மனக் கிடக்கைதான் ஆனாலும் நிகழ்வில் நம்மால் இயலாதவைகளை கதைகளாக பார்க்கவோ படிக்கவோ ஆவலும் விறுவிறுப்பும் கூடி தன்னிலை மறந்து புன்னகையோடு ஆர்ப்பரிப்பரிப்பது நம் இயல்பு.  அப்படியாகத்தான் இந்தக் கதையைச் செதுக்கி அவரவர் கதாபாத்திரங்களுக்கு மதிப்பளிக்க நம்போக்கில் நம்மிடமே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார் அய்யனார். 

நாவலின் போக்கில் கிடைக்கின்ற எல்லா இடத்திலும் பொருத்தமான பூக்களால் நிரப்பத் தவறவில்லை. அமுதாக்கா வீட்டு எழவுக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோக்கார நண்பன் முதற்கொண்டு நாவலின் ஓட்டத்திற்கு துணைசெய்யும் கருவியே... எல்லாருக்கும் இப்படியாக ஒரு நண்பன் ஊரில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறான்...

சங்கமேஸ்வரன்கள் ஒரு ஊசியாகச் அவரவர் இடத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... உரிய இலை காய்ந்த சருகாய் காற்றில் நிலையின்றி அலையும் போது,  முற்றிப் பெருத்தவை வெடித்துச் சிதற சங்கமேஸ்வரன்கள் தேவையாகத்தான் இருக்கிறார்கள்... அழுத்தத்தில் இருப்பவை தானாக தளர்வதை விட ஒரு வெடிப்பை வேண்டியே நிற்கின்றன. அதுவே நியாயமும் கூட. 

அமுதாக்கள், ரமாக்கள் மலர்ச்செல்விகள் சாமிகள் ரவிகள் அறியாத / இல்லாத வாழ்வை ஒரு நாற்பது வயதொத்தவன் கடந்திருப்பானா என்பது ஐயம்தான்... 

துர்கா துர்கா துர்கா... அரற்றத்தான் தோன்றுகிறது... பாகுபலியின் தேவசேனையாகவும் தோன்றுகிறாள் ராஜமாதாவாகவும் தொன்றுகிறாள்... இன்னும் என்னென்னவாகவோ தோன்றுகிறாள்... மொத்தத்தில் ஒரு சிலைக்குள்ளோ, ஒரு பாத்திரத்திற்குள்ளோ அவளை அடைத்துப் பார்க்க இயலவில்லை... மழை அடங்கிய இரவில் எங்கிருந்தோ கேட்கும் ஒரு பெருங்காற்றின் ஒலி அவள்....  வெளியெங்கும் மரிக்கொழுந்தாக மணக்கிறாள் ...

சாமானியனின் மனஓட்டங்களை எந்த ஒரு வரையறுக்கப்பட்ட ஒழுக்கக்கட்டுப்பாட்டுக்குள் பூசிமொழுகாமல் அப்படியே இயல்பாக பூத்திருக்கிறது ஓரிதழ்ப்பூ. ஆனாலும்
கனவுகளில் இருந்து திடீர் திடீரென ஏன் அவர்கள் அவ்வளவு அவசரமாக விழித்தெழுகிறார்கள்... இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம் அவர்களின் கனவுகள்...

விமர்சனக்கூட்டத்தில் காமம் காமம் என்றார்கள். தேடிப்பார்த்தேன் காணவில்லை. 
இது இலக்கியம் இல்லை என்றார்கள். எனக்கு அது என்னவென்று தெரியாது, தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை... இது போதுமென்று நிறைகிறேன்...

மாமுனியின் இருநூறு ஆண்டுகள் அறியாத விடையானது விமர்சனங்களில் குழப்பமாக வெளிப்படக் கண்டேன். இவ்வளவு பெண்ணியம் போற்ற முடியுமா? இப்படிப் போற்றப்பட்ட பெண்களை தம்வாழ்வில் போற்றி ஏற்றுக் கொள்வோமோ என்பதும் வினாக்குறியே...  


ஓரிதழ்ப்பூ ஒரு கதம்பம்... வாழ்த்துகள் அய்யனார்...

Friday, November 4, 2016

NSK - என் எஸ் கிருஷ்ணசாமி ஐயா

என்னுடைய இயல்பு வாழ்க்கையில், எப்பொழுதெல்லாம் ஆங்கில இலக்கணம் பற்றிய பேச்சோ, தேவையோ ஏற்படும் போது அவர்தான் நினைவுக்கு வருவார்...
ஒன்பதாம் வகுப்பு, மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் படித்தேன்... எங்கள் வகுப்பாசிரியரும், ஆங்கில ஆசிரியரும் ஆன மரியாதைக்குரிய திரு. என். எஸ். கிருஷ்ணசுவாமி ஐயா அவர்கள் அன்று கற்றுக் கொடுத்த ஆங்கிலம்தான் இன்றுவரை ஆங்கிலத்தின் மீது அதிக பயம் இல்லாமலும், அந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈர்ப்பு ஏற்பட்டு போனதற்கும் காரணம்...
பள்ளி நேரம் போக சிறப்பு வகுப்புகள் எடுத்து, ஆங்கிலத்தையும் அதன் இலக்கணத்தையும் எளிதாகவும், புரியும்படியும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்...
NSK sir.. (சுருக்கமாக இவ்வாறு அழைக்கப்படுவார்)
ஒரு இண்ட் சுசுகி பைக்கில் வருவீர்கள்... மற்ற ஆசிரியர்கள் ஸ்கூட்டரில் வரும் போது, நீங்கள் பைக்கில் வருவதைப் பார்க்கவே வித்தியாசமாக இருக்கும்... கம்பீரமாகவும்...
NSK sir... நீங்கள் சொல்லிக் கொடுத்த ஆங்கிலம்தான், என் வாழ்வில் நான் கற்றுக்கொண்ட, பேசுகின்ற, எழுதுகின்ற எல்லா ஆங்கிலத்திற்கும் எல்லாம் அடிப்படை...
மிக்க நன்றி NSK sir...


Sunday, October 4, 2015

காலஞ்சென்றபின் வருந்தி என்ன பயன் !?

வயதான நம் குடும்பத்தின் மூத்தவர்கள், சுயநலமில்லாமல் வாழ்நாள் முழுவதும் நமக்காகவே ஓடி ஓடி உழைத்துவிட்டு, இறுதி வந்துவிட்டதென அறிந்தபின், உடல் மனதுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தளர்ந்து போய் இருக்கும் போது, அவர்கள் எதிர்பார்ப்பது அன்பைத்தவிர வேறெதுவுமில்லை...
மருத்துவமனைக்கு அவ்வப்போது அழைத்துச்செல்ல, அவர் வாழ்நாள் கதைகளை நேரம் ஒதுக்கி கேட்க, சாப்பிட்டீங்களா, நலமா என அன்பாய் கேட்க, அவ்வப்போது வீட்டைவிட்டு வெளியே அழைத்துச்செல்ல என அன்பான ஒரு உள்ளம் மட்டுமே...
அவர்களுக்காக நம் மனமிசைந்து, நேரம் ஒதுக்க வேண்டும்... அவர்கள் தன் துணையை இழந்தவர்களாக இருப்பின் இன்னும் கூடுதலாகவே நேரம் ஒதுக்க வேண்டும்... ஏனெனில் அவர்களின் மனம் படும் துன்பம் சொல்லில் விளக்க இயலாது...


தன் துணை பற்றிய நினைவுகளை, உணர்வுகளை, தன்னைவிட இருபத்தைந்து, முப்பது வயது குறைந்த மகனிடமோ, மகளிடமோ, ஐம்பது வயது குறைந்த பெயரன்,பெயர்த்தியிடமோ வெளிப்படையாக அவர்கள் பெரும்பாலும் பேசுவதில்லை...
நடமாட்டம் குறைந்த நிலையில் நண்பர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் அவர்களுக்கில்லை... ஏன் அவர்களின் நண்பர்கள் கூட எப்போதோ சென்றிருக்கலாம்...
உள்ளழுகையை மறைக்கும் சிரிப்பை அனுபவத்தில் கற்ற அவர்கள், மனதுக்குள் மட்டும் எண்ணி எண்ணி உருகிக்கொண்டிருப்பார்கள்... சில நேரம் தன் துணையின் அன்பையும், தான் வாழ்ந்த வாழ்க்கையையும், தற்போது கவனிக்கப்படாமல் இருப்பதையும் ஒப்புநோக்கி உக்கிப்போயிருப்பார்கள்...
வயதானவர்களை வாழும்போது கவனிக்காமல், அவர்கள் பேசுவதை பொறுமையாகக் கேட்க கொஞ்ச நேரம் கூட ஒதுக்காமல், மனம் நோக நடந்துவிட்டு, அவர்கள் காலஞ்சென்ற பின் வருந்தி என்ன பயன் !?
மகனுக்கோ, மகளுக்கோ அவர்களின் பெயர்கள் வைத்து என்ன பயன் !?
அவர் படங்களுக்கு மாலையிட்டு, விளக்கேற்றி என்ன பயன் !?
மனம் வருந்தி மன்னிப்புக்கேட்க அவர்கள் இனி வரப்போவதில்லை...

Thanks for the photo: http://www.trekearth.com/gallery/Europe/Serbia/North/Serbia/Belgrade/photo686574.htm

மீண்டவர் எவருமில்லை


நல்லதோ கெட்டதோ நேர்ல போய் நிக்கணும் , உறவுக்கும் நட்புக்கும் தோளோடு தோளாக... 

நல்லதுக்கு நமக்கு முடிஞ்சாலும், ஏதாவது ஒரு காரணத்தினால் போகாமல் சில நேரம் இருந்திடலாம்... ஆனா கெட்டதுக்கு நமக்கு முடியலனாலும், எப்பாடுபட்டாவது போய் நின்னுரணும்... 

ஏனெனில்
கடைசி வரை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளப்படாமல் இருந்த ஏதோ ஒருவரின் அன்பும், ஆசையும், ஏக்கமும் அன்றோடு மொத்தமாய் மௌனமாகிப் போகும்... 


#மீண்டவர்_எவருமில்லை

Sunday, June 8, 2014

அல் ஜெபல் அல் அக்தர் -- ஒமான்...

வணக்கம் நண்பர்களே,

வார விடுமுறைப் பயணமாக ஒமான் சென்று வந்தேன்... எப்பொழுது ஒமான் சென்றாலும், என் நண்பன் வீட்டில், உண்டு உறங்கி பொழுதைக் கழிப்பதே என் வாடிக்கை...

இம்முறை நண்பர்கள் அல் ஜெபல் அல் அக்தர் எனும் சுற்றுலாத்தளத்திற்கு அழைத்துச் சென்றார்கள்...  மஸ்கட்டிலிருந்து நிஸ்வா(NIZWA) எனும் ஊருக்கு செல்லும் வழியில் சுமார் 180 கி.மீ தொலைவில் இந்த இடம் இருக்கின்றது... மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் ஒமானிகளின் பழைய வீடுகள் என இவைகள்தான் இங்கு பார்க்க வேண்டிய இடங்கள்...

மலையேறும் முன்பு ஒமான் காவல்துறையினர், சுற்றுலாப்பயணிகளின் அடையாள அட்டையை சரிபார்த்து, ஒரு காரில் எத்தனை பயணிகள் இருக்கின்றனர், கார் பற்றிய விவரங்கள் என அனைத்தையும் குறித்துக் கொண்டு அனுப்பி வைக்கின்றனர்.

இதுதான் முதல் முறையாக வருகின்றீர்களா எனக்கேட்டு விட்டு, மிகவும் செங்குத்தாக ஏறும் பாதை என்பதால் எப்படிக் கார் ஓட்ட வேண்டும் என அறிவுரையையும் ஓட்டுனர்களுக்கு சொல்லி அனுப்புகின்றனர். 

ஃபோர் வீல் ட்ரைவ் வசதி உள்ள கார்களுக்கு மட்டுமே மேலே ஏற அனுமதி தருகின்றனர்... மலை மீது அருமையான சாலை வசதி செய்து தந்திருக்கிறார்கள்... செல்லும் வழியில் சில ஊர்கள் இருக்கின்றன...


வழியெங்கும் பள்ளத்தாக்குகளும், ஆங்காங்கே சில இடங்களில் குறைவான எண்ணிக்கையில் சில வீடுகளும் இருக்கின்றன...


இப்படியாக பயணம் செய்து கடைசியாக பார்க்கவேண்டிய இடத்திற்கு வந்தாகி விட்டது...பள்ளத்தாக்கில் இறங்கி மறுபக்கம் ஏறினால் இந்த பழைய வீடுகளைப் பார்க்கலாம்...


கடும் வெப்பத்தில் பயணம் செய்து இந்த பள்ளத்தாக்கில் இறங்கியதுமே, மென்மையான குளிர் காற்று... செல்லும் வழியில் ஒரு சின்ன நீரோடை... மிகவும் குளிர்ச்சியான நீர்... பசுமையான பள்ளத்தாக்கு... அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு பின்பு மலை மீது ஏறினோம்... 

பழைய வீடுகளைப்பார்க்க... செல்லும் வழியில் இது போன்ற சிறு குகைகளும் கண்ணில் பட்டன...


அங்கு நான் பார்த்ததை நீங்களும் பாருங்கள்...


அதே பள்ளத்தாக்குகளில் தற்போது புதிதாய் கட்டப்பட்டிருக்கும் வீடுகள்...

மலையில் விவசாயம்...

பணிச்சுமைக்கு இடையே, இது போன்ற பயணங்கள் மனதை இலகுவாக்கி, மகிழ்ச்சி அளிக்கின்றன.

(அனைத்துப்படங்களும் MotoG மொபைல் கேமராவில் எடுக்கப்பட்டவை)

Monday, March 10, 2014

துபாயில் கந்தர் சஷ்டி திருவிழா ...

துபாயில் கந்தர் சஷ்டி திருவிழா (08.11.2013 - 09.11.2013) வெகு சிறப்பாய் நடைபெற்றது... மனமகிழ்ச்சியாக ஊரில் ஒரு திருவிழா கொண்டாடியது போன்ற உணர்வு...

வெற்றி வேல்... வீர வேல்...
Inline image 1

கந்தர்சஷ்டி விழா என்றவுடன் எதோ பூஜை பண்ணுவாங்க, போய் சாமி கும்பிட்டுட்டு வந்துடலாம் என்ற எண்ணத்தோடுதான் முதலில் சென்றேன்...

எமிரேட்ஸ் இங்லீஸ் ஸ்பீக்கிங் ஸ்கூல் எனும் பள்ளியின் அரங்கில் இந்த விழா எற்பாடு செய்திருந்தார்கள்... உள்ளே நுழைந்ததும் பெரும் ஆச்சரியமாக இருந்தது... சங்கர் படம் போல மிகப்பிரமாண்டமாக மேடை அமைத்திருந்தார்கள்...  கோயில் கருவறை போன்று அழகாய் அமைத்து அங்கே அழகன் முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி தந்தார்...


Inline image 1


மேடையின் ஒரு புறம், முருகன் பாடல்களை ஒரு குழுவினர் மிக அழகாய் பாடிக்கொண்டிருந்தனர்... 

Inline image 2

நாதஸ்வரம் மேள தாளத்துடன் அந்த பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது அப்படியே ஊரில் திருவிழா காண்பது போல இருந்தது...

வந்திருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி...

Inline image 3

அடுத்ததாக கரகாட்டம் மற்றும் காவடியாட்டம்...

தஞ்சாவூரில் இருந்து கலைக்குழுவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்...  

இங்கும் இந்தக் கலைக்குழுவினரைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சி... முதலில் கரகாட்டம் சிறப்பாக தொடங்கியது... மிக அழகாக ஆடினர் இந்தப் பெண்கள்...

Inline image 1

பின்பு தஞ்சாவூர் பால்ராஜ் அவர்களின் காவடியாட்டம்... இவரது வழுக்கை மண்டையில் காவடி என்னமாய் சுழல்கிறது... வியப்படையச் செய்துவிட்டார் காவடியாட்டத்தின் மூலம்...

Inline image 2

இவைகளை எல்லாம் கண்ட குழந்தைகளின் முகத்தில் ஒரு வித மகிழ்ச்சியைக் காண முடிந்தது... சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் விளக்கிக் கொண்டிருந்தார்கள்... அதுதான் கரகம் அதுதான் காவடி என்று...

தமிழர் கலைகளை இங்குவரை கொண்டு வந்து சேர்த்து, குழந்தைகளிடம் அறியச்செய்ததற்கு விழாக்குழுவினர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...

சூரசம்ஹாரம்...

இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கின்றது என அறிந்திருக்கிறேன்... அவ்ளோதான்...

முழுமையான விளக்கம் என்னவென்று தெரியாது... 

திருச்செந்தூர் முருகனுக்கு பூஜை செய்யும் ஐயரையே அழைத்து வந்திருக்கிறார்கள்... ஒவ்வொரு நிகழ்வையும் விளக்கமாகச் சொன்னார்... நாந்தான் மறந்துட்டேன் நிறைய....

Inline image 1

சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் வருகிறார்...

Inline image 2

முருகனைச் சிறுவன் என்றெண்ணி இறுமாப்புடன் இருக்கும் அசுரன்...

Inline image 3

Inline image 4

Inline image 5

முருகனை அவமானப்படுத்தும் விதமாக, முருகனின் இடதுபுறமாக இரண்டு முறை சுற்றி வந்தான் அசுரன்...

முருகனும் அவன் பிழைத்துப் போக, மூன்று முறை (சரியாக நினைவில்லை) வாய்ப்புத் தந்தார்... நிறைய தமிழ்ப்பாடல்கள் பாடினார்கள் முருகனுக்கும் அசுரனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை விளக்கும் விதமாக...

கடைசியா வெற்றி வேல் வீர வேல் என மக்களின் பெருங்குரலுடன், முருகன் தன்னுடைய வேலினால் அசுரனின் தலையைக் கொய்தார்...

Inline image 6

Inline image 7

Inline image 8

வீழ்ந்தான்...
Inline image 9

அடுத்ததாக சிங்கமுகாசுரன்...

பழைய தலையைக் கழட்டி விட்டு சிங்க தலையை மாட்டி விட்டார்கள்... அவனுடைய தேரும் முருகனுடைய தேரை சுற்றி வந்தது... அந்த வழியே கரகாட்டக்கலைஞர்களும் ஆட்டம் பாட்டமாக சுற்றி வந்தார்கள்...

Inline image 1

அடுத்ததாக யானைமுகாசுரன்...

Inline image 2

கரகாட்டம்...

Inline image 3

Inline image 4

அடுத்து மயூராசுரன்...

Inline image 5

கடைசியாக சேவலாக மாறி முருகனிடம் வந்தான்...

Inline image 6

சம்ஹாரம் என்பது கொலை செய்வது மட்டுமல்ல, அவர்களை நம்மோடு சேர்த்து கொள்வது என்று சொன்னார்கள்...

முருகனிடம் ஐக்கியமாகிவிட்டான் அசுரன்...

Inline image 7

திருக்கல்யாணம்...

காலையிலேயே குழந்தைகள் முருகன் பாடல்களை பாடத் தொடங்கிவிட்டனர்...

Inline image 1

Inline image 2


பின்பு சிறுமிகளின் காவடியாட்டம்...

Inline image 3

Inline image 8

சற்று நேரம் கிடைத்த ஓய்வில்... 
Inline image 4

பரபரப்பாக படம்பிடித்துக் கொண்டிருந்தவர்கள்...

Inline image 5

முருகன் வள்ளி தெய்வானை வேடமிட்டிருந்த குழந்தைகள்...
Inline image 6

Inline image 9

Inline image 10

Inline image 11

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடலுக்கு நடனம்...

Inline image 7

இதற்கடுத்து அறுபத்தி மூனோ நாலோ தெரியல, அத்தனை வகை சீர் வரிசைகளை பெண்கள் தாம்பாளத் தட்டில் கொண்டு வர, பின்பு முருகனின் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது...


Tuesday, October 1, 2013

பசி

ஒரு வேளை சாப்பிடலைனா என்னென்னவோ செய்யுது உடம்புக்குள்ள... கண்ணக்கட்டி காதடைத்து விடுகிறது... எல்லாமே மந்தமாகி விடுகிறது....

எங்கெங்கோ ஓடுகிறோம், என்னென்னவோ செய்கிறோம், கடுமையாக உழைத்து செல்வம் சேர்க்கிறோம்... வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வதற்கு படாத பாடுபட்டாலும், இத்தனை பாடும் ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் என்று முடிக்கிறோம்...

பணம் இருந்தும் வசதி இருந்தும் உண்ண நேரமில்லை என்றும், இந்த உணவு எனக்குப் பிடிக்கவில்லை என்றும் சில நேரங்களில் உண்ணாமல் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறோம்...

பட்டினி கிடப்பவனுக்குத்தான் தெரியும் பசியின் கொடுமை... அடுத்த வேளை உணவு கிடைத்து விடும் அல்லது நாளையாவது உண்ண உணவு கிடைத்து விடும் என்று நம்பிக்கையில் இருப்பவர்களை விடவும், கிடைக்குமா கிடைக்காதா என்று உறுதியே இல்லாமல் வாழ்க்கையில் உழன்று கொண்டிருப்பவர்களுக்குத்தான் பசியின் கொடுமை அதிகம்...

இவர்கள் ஒரு பக்கமென்றால், தனக்கு பசிக்குதா பசிக்கலையா என்று சுயநினைவின்றி சாலையோரங்களில் அழுக்கோடு அழுக்காய் பரவி படுத்துக்கிடப்பவர்கள் ஒரு வகை...

இவர்களுக்கும் பசி இருக்கும் என்பது நமக்கு தோன்றுவதில்லை...உச்சு கொட்டி பரிதாபத்தோடு கடந்துவிடுவோம்... இவர்களுக்கெல்லாம் உதவி செய்ய நம்மிடம் ஏது வசதி, எங்கே இருக்கிறது நேரம் என்று நாமெல்லாம் கடந்து போயிக்கொண்டிருக்கையில், நம்மோடு இதே சமூகத்தில் வாழும் சிலரின் அரும்பணிகள் மெய்சிலிர்க்க வைத்தன... 

நம்மோடு வாழும் அந்தச் சிலர் பற்றிய தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...

தூத்துக்குடி திரு. ராஜாராம் அவர்களைப் பற்றி நீங்களும் அறிந்திருப்பீர்கள்... அவர்கள் குடும்பத்தின் முழு ஆதரவு இன்றி அவர் செய்யும் அரும்பணி செயல்பாட்டுக்கு வந்திருக்காது... காலையில் எழுந்து சோற்றுப் பொட்டலங்களைக் கட்டிக்கொண்டு ஊரில் ஆதரவற்று இருக்கும் மனநோயாளிகள் ஏழைகளுக்கு வழங்கி வருகிறார்... அவர் பற்றிய செய்தித் தொகுப்பைக் காண இங்கே சொடுக்கவும்....  

மதுரை திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களைப் பற்றியும் முன்பே நீங்கள் அறிந்திருப்பீர்கள்...  சிஎன்என் - நாயகர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்...சாலையோரத்தில் தன் நினைவின்றி பசிக்கொடுமையால் தன் மலத்தை எடுத்து தானே தின்ற ஒரு மனிதனைக் கண்டு மனம் நொந்து, இவர்களைப் போன்ற ஆதரவற்றவர்களுக்கு பசியாற்ற வேண்டும் என்று உயரிய நோக்கில், தனக்கு கிடைத்த நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையை உதறிவிட்டு, அட்சயா என்ற ட்ரஸ்ட் மூலம் ஒவ்வொரு நாளும் பல ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகிறார்... 

இவர்களைப் போன்று இன்னும் எத்தனையோ பேர் வெளியில் தெரியாமல் இருக்கலாம்... அமைதியாக தங்கள் அரும்பணியைச் செய்து கொண்டிருக்கலாம்...

நாமும் நம்மால் இயன்ற அளவு உதவுவோம்... வாய்ப்பு கிடைக்கும் போதோ அல்லது வாய்ப்பை ஏற்படுத்தியோ, நமக்குத் தெரிந்த / தெரியாத ஒருவரின் பசியையாவது போக்குவோம்...