Friday, September 11, 2020

பயணம்

ஒரு கடுங் கோடை காலத்தில் இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டியில் டெல்லியில் இருந்து மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நோக்கிய பயணம் 

ஏற்கனவே நிறைய பயணங்கள் செய்து  அனுபவம் இருந்திருந்ததால் பயணத்திற்கு அதிக சுமை இல்லாமல் சிறிய பை மட்டும் வைத்துக் கொள்ளும் அளவிற்கு பக்குவம் அடைந்திருந்தேன்

தொலைவான பயணம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டி வரும் கடந்த முறை பார்த்ததில் சிலது இந்த முறை இருக்காது ஆனாலும் சிலது எத்தனை முறை சென்றாலும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே அங்கேயே இருக்கும் பயணித்துப் புரிந்து கொள்ளுங்கள்

தொலைவான இரயில் பயணங்களில் மிகவும் வியப்பானவை அந்த புதுப்புது மனிதர்கள் முதலில் யாரோ எவரோ என்று பார்த்துப் பின்பு ஓரளவுக்கு நன்றாகப் பேசிப் பழகத் தொடங்கி விடுவது 

இந்த இரயில் பயணங்களில் எனக்குச் சிக்கலாகப் படுவது வெப்பம் மற்றும் கழிப்பறை வெப்பம் வேறு வழியேயில்லை அதுவும் மதிய நேரங்களில்  ஓடும் இரயில் அனல் காற்றில் ரெசின் இருக்கைகள் கொதித்து கொடுமையாக இருக்கும் உறங்கவும் முடியாது வேர்த்து ஊத்தும் தலைவலிக்கும் இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், ஓடும் வண்டி இந்த வெயில் நேரத்தில் எங்காவது நின்று விட்டால் நரக வேதனைதான் நிறைய அனுபவப்பட்டிருக்கேன்

மொத்த இரயிலையுமே ஏசியாக்கினால் கூட ஒன்றும் அவ்வளவு செலவாகாது என்று நினைக்கிறேன் அறிஞர்கள் அறிவார்கள், அரசியலாகக் கூட இருக்கலாம்

கழிப்பறை ஐயோ அது ஆகக் கொடுமை வண்டி ஆடிக்கிட்டே போறதுன்னால அங்கிட்டு இங்கிட்டும் கொஞ்சம் அப்படி இப்படி சிதறத்தான் செய்யும் அதுக்கேத்த மாதிரி பெரிய ஹோஸ் பைப் எதாவது வைச்சிருந்தா ஒருவேளை தூய்மைப் படுத்த நினைக்கிறவன் கொஞ்சம் தண்ணி அடிச்சு தூய்மைப்படுத்திட்டு வருவான் இவய்ங்க வச்சிருக்கிறது ஒரு குமிழ மேல தூக்கினா தண்ணி வர்ற மாதிரி ஒரு அமைப்பு, அதை ஒரு குவளைல புடிச்சு கழுவிட்டு வரணும் கடவுளே, அதை வச்சு நம்மத கழுவிட்டு வர்றதே பெருசு இதுல் எங்கிட்டு கழிப்பறைய தூய்மையா வச்சிட்டு வர்றது 

நான் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை இதற்கென்றே வைத்துக்கொள்வது எனென்றால் அந்த கால்படி குவளையில், நான்கைந்து முறை வண்டி ஆட்டத்தில் மீண்டும் மீண்டும் பிடித்து கழுவி முடிப்பது கடினம் அல்லவாமுன்பு ஒரு நகைச்சுவை கூட வந்துச்சு இணையதளத்துல, Dear Railway, please extend that chain, because it does not reach the place where it supposed to என்று இந்தக் கொடுமைகள் இரண்டும் இரயில் பயணங்களில் பெரும் கொடுமைகள் 

இதைத் தவிர்த்து இரசிக்க ஆயிரம் ஆயிரம் உள்ளன, அதை அனுபவிக்க பயணித்தே ஆக வேண்டும்... ஒவ்வொரு ஊரும் கடக்கையில் புது ஊர் வாசம் மண், நிறம்,மனிதர்கள், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...குளிர்காலப் பயணங்கள் கொள்ளை இன்பம்... மழைக்காலங்களில் ஒழுகாத இரயில் கிடைத்து விட்டால் இன்னும் இன்னும் இன்பமே.... இரயிலில் பயணித்தால்தான் அந்த இன்பத்தை உணர முடியும்...

போபால் இரயில் நிலையத்தில் அப்போது இருந்த பெரிய குளியல் அறை தூய்மையாக இருந்து, ரொம்ப பிடித்திருந்தது அந்தக் க்ளாக் ரூமில் உடைமைகளை வைத்துவிட்டு, குளித்து விட்டேன்... அங்கிருந்து இந்தூரர் என்ற ஊருக்குச் செல்லவேண்டும் போக்குவரத்து என்ன வழி என்று உடைமைகள் காப்பாளைரைக் கேட்டால் 

நீ மதராஸியா

ஆமாம் 

இஞ்சினியரா? (இட்லி விக்க வந்தியானு கேட்கலை) 

ஆமாம்

எதாவது கார் நிற்கிறதா என்று பாருங்கள் என்று சொன்னார், உடைமைகள் காப்பாளர் 

ஏன் பேருந்து இல்லையானு கேட்டேன் இருக்கு அதெல்லாம் சரியா இருக்காது, அதோட உங்க நேரத்துக்கெல்லாம் கிடைக்காதுன்னார்அந்த நேரத்தில் என் கிராமத்திற்குள் மினி பஸ்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன என்று சொல்ல  எனக்கு நேரமில்லை...

உடனே கம்பெனிக்கு ஃபோன் பண்ணி, ஐயா, இதான் நிலைமை நாளைக்கு நான் ஊதாரித்தனமா செலவு செஞ்சேன்னு சம்பளத்துல பிடிச்சிராதீங்கன்னு கார்ல போறதுக்கு உத்தரவு கேட்டேன், அவங்களும் சரி கார் ஷேரிங்னா பரவாயில்லனுட்டாங்க

போபால் இரயில் நிலையம் வெளியே வந்து ரோட்டி, தால் ஃப்ரை, ஹரி மிர்ச்சிய சாப்பிட்டு அந்த உணவகத்திலேயே இந்தூருக்குச் செல்லவேண்டும் என்றதும் அவர் ஒரு இடத்தைக் காட்டினார் அங்கே நிறைய கார்கள் நின்றிருந்த ஆனால் டாக்ஸி மாதிரி இல்லை ஓன் போர்டு கார்கள்தான் ஆனால் நான்கு பேர் சேர்ந்ததும் போபாலில் இருந்து இந்தூர்க்கு அழைத்துச் செல்கிறார்கள் 180 கிலோமீட்டர் தொலைவு என்று நினைக்கிறேன்

அது ஒரு நெடிய பயணம் ஓட்டுநருக்கு அடுத்த இருக்கை கொடுத்து விட்டார்கள் ஒருவேளை இஞ்சினியர் என்று மதித்ததால் இருக்கலாம்... போகும் வழியெங்கும் பேச்சு மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார், நேரு, திலகர், போபால் விசவாயு கசிவு எல்லாம் பேசி அன்றைய அரசியல் வரை பேச்சு. இடையே உணவுக்கு மட்டும் ஓரிடத்தில் நிறுத்தம்அவர்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய எந்த ஒரு தெற்கத்திய அரசியலோ வரலாறோ அவர்களுக்குக் காட்டப்படவேயில்லை என்று நன்றாகவே தெரிந்தது அவர்களிடம் நாம் பாரதியார், சி, கட்டபொம்மன், மருது பாண்டியர், வாளுக்கு வேலி என்று பேசத் தொடங்கினால் க்யா ஹே, அதெல்லாம் ஸ்வீட்டா காரமா என்றூ கேட்கும் அளவில்தான் அவர்கள் வரலாற்று அறிவு இருக்கிறது...  நாம் மட்டும்தான் வடநாட்டு வரலாறு படித்து வந்திருக்கிறோம் 

 ஒருவழியாக இந்தூர் சென்றடைந்தும் இடுப்பு கழன்று விடும் போலிருந்தது அந்தக் கார்ப் பயணம் இந்தூரில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியான வேலை வேலையெல்லாம் முடிந்து விட்டது மீண்டும் டெல்லி கிளம்ப வேண்டும்  போபால் செல்வதற்கு போபாலிலிருந்து கூட்டி வந்த காரோட்டியை அழைத்தேன், திரும்ப போபால் போவீங்களா, இல்லை உங்கள் நண்பர் யாரும் போவாங்களா? என்னைக் கூட்டிப் போக முடியுமா? என்று அவரே செல்ல இருப்பதால் என்னை அழைத்துச் செல்ல ஹோட்டலுக்கு வந்தார் 

சார் தமிழ்நாடுல நீங்க எங்கே என்றார் மதுரை என்றேன் 

மதுரையா

ஆமாம், ஏன்

இங்கே அன்னபூர்ணா கோயில் தெரியுமா

தெரியாதுப்பா 

சார் உங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயில்ல இருந்து பிடி மண் கொண்டாந்து கட்டுன கோயில்தான் இந்தூர் அன்னபூர்ணா கோயில் என்றார் 

அப்படியா மகிழ்ச்சிப்பா சரி போபால் கிளம்பலாம் என்று வண்டியில் ஏறினேன்...

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் என்று ஊரில் இருக்கும் அன்னபூர்ணா கோயிலுக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக அறிந்தது வியப்பான தகவலே... 

எனக்கு இன்னமும் இந்தத் தகவலை நம்ப முடியவில்லை உண்மையாகவும் இருக்கலாம் பயணங்கள் எதையாவது நமக்குப் புதுசா சொல்லும் அது பழசா இருந்தாலும்

 


1 comment:

வெங்கட் நாகராஜ் said...

மாறாத இரயில்வே கழிப்பறைகள் - வேதனையான உண்மை. மாற்றம் வந்தாலும் அதனை சரியாக பயன்படுத்தாத நம் மக்கள் உண்டு என்பதையும் உணர்ந்திருக்கிறேன் - கண்டிருக்கிறேன்.

போபால் பக்கங்களில் சுற்றியதுண்டு. இண்டோர் இது வரை சென்றதில்லை.