முன்பொருநாள் நண்பரின் புத்தக வெளியீட்டு விழாவில் பேச வாய்ப்புக்
கிடைத்த போது, நான் எப்பயும் போலதான் பேசிக்கிட்டிருந்தேன்… நான் பாதி பேசிக் கொண்டிருக்கும்
போதே அவர் எழுந்து வந்து என் கன்னத்தை தடவிக் கொடுத்துவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டார்… என்னடா நாம
பேசிக் கொண்டிருக்கும் போதே, ஒரு பெரிய மனுசன் எந்திரிச்சுப் போயிட்டாரேனு பக்குனு
இருந்துச்சு… அப்படிப் பேசியிருப்பேன் போல… அடுத்ததாக அபுதாபி தமிழ் மக்கள் மன்ற விழாவில்
சிறந்த இலக்கிய ஆளுமை விருது அவர்க்கு அறிவிக்கப்பட்ட போதும் அவரைப் பற்றி அறிந்து
கொள்ள முயற்சி செய்யவில்லை… அந்த விழாவில் ஆசிப் அண்ணனின் கணீர் குரலில் அவரைப் பற்றிய
காணொளி காட்டப்பட்டது… அருமையாக இருந்தது…
கானல் யூட்யூப் சேனல் தொடங்கியதும், அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர்
குழுமத்திலிருந்து ஒவ்வொருவரும் ஒரு நூலைப் பற்றிப் பேசியிருந்தோம்… ஆசிப் அண்ணன் முதல்
வீடியோவாக, உயிர்த்தலம் என்ற நூலையும் அதிலுள்ள மீஜான் சிறுகதையைப் பற்றியும் பேசினார்…
அப்போதுதான் எனக்கு அவரைப் பற்றியும், அவர் எழுத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆவல்
உண்மையாக வந்தது…
ஆபிதீன்..
எழுத்தாளர்தான் ஆனால் எள் முனையளவு கூட தற்பெருமை இல்லாத நல்ல மனுசன்… அவரோட பேசும் போதும் அவருக்கு
கமெண்ட் எழுதும் போது மட்டும் வலுக்கவனமா இருக்கணும்…எப்ப எப்படி திருப்பி அடிப்பார்னே
தெரியாது… வாயக் கொடுத்துட்டு எதிராளி சிக்கித் தவிப்பான்… கொஞ்சம் கூட சிந்திக்க நேரம்
கொடுக்காமல், உடனுக்குடன் திருப்பி அடிப்பார்… ஆனா யாருக்கும் மனம் நோகாது… சிரிச்சிக்கிட்டே
இருக்கலாம்….அப்படிப் பேசுவார் ஆனால் அதிர்ந்து பேசமாட்டார்…
எட்டு நூல்கள் புத்தக
வெளியீட்டு விழாவை அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமம் நடத்திய போதுதான் ஆபிதீன்
அண்ணனுடன் அமர்ந்து பேசும் வாய்ப்புக் கிடைத்தது… அன்று, கடைசி பெஞ்ச் மாணவர்களாக நாங்கள்
செய்த அலப்பறையை குழுமத் தலைவர் மேடையிலிருந்தே கண்டிக்கும் அளவுக்குப் போய்விட்டது…
சரி… இந்தாண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நண்பர் ஒருவரை அனுப்பி
உயிர்த்தலம் நூலை வாங்கி பின்பு இன்னொரு நண்பர் மூலம் வரவழைத்தேன்…
இந்த நூலைப் படிக்கத் தொடங்கியதும் என்னிடம் சிக்கிச் சின்னாபின்னமானாது
ஆசிப் அண்ணந்தான்…
ஒவ்வொரு பத்தியிலும் ஏன் சில கதைகளில் ஒவ்வொரு வரியிலும் சிரிப்பு
வெடியைக் கொளுத்திப் போடுகிறார்… சிரித்து சிரித்து வயிறு வலிக்கும்… அப்படி சிரிக்கும்
போதெல்லாம் ஆசிப் அண்ணனுக்கு ஃபோன் போட்டு ஒவ்வொரு வரியா படிச்சிக்காட்டிச் சிரிச்சிக்கிட்டிருப்பேன்…
சில வரிகளைச் சொல்கிறேன்… இதைப் படிச்சா உங்களுக்கும் அப்படிச் சிரிப்பு
வரும்…
வியாபாரமே இல்லையே முதலாளி என்று கதாநாயகன், அவர் முதலாளிட்ட சொல்வார்…
அதுக்கு ”கனிகளுக்காக தன்னை தயார் செய்கிறது மரம்” என்று கவிதை சொல்வாராம் முதலாளி… இதற்கு
அடுத்த வரியாக எழுதியிருப்பது ,
”கொஞ்சம் மேலே எழும் கம்பெனியின் தலை, கவிதையைக் கேட்டவுடனே பூமிக்குள்
புதைந்து விடும்… கவிதைகளின் சக்தி அது”
இந்தக் கடைசி வரியான ”கவிதைகளின் சக்தி அது” என்பதுதான் என்ன ஒரு அடாவடித்
தனம்…
இதுபற்றி அவரிடம், ஏன்ண்ணே இப்படிக் கவிதைகளைச் சொல்றீங்களேன்னு கேட்டப்ப,
கவிதை நல்லதுதான் பாலாஜி ஆனா அத நாம எழுதாம இருக்கணும்ன்னார்… இது நமக்கு அடுத்த அடி… :)
கதைல ஒரு இடத்துல முதலாளிக்கும் கதாநாயகனுக்கும் சண்டை வந்திரும், முதலாளி உன்னைய பத்தித் தெரியாதா யாராவது நூறு திர்ஹாம் கூட குடுத்தா என்னைய விட்டுட்டு அவனிடம் வேலைக்குப் போயிருவன்னு திட்டுவார்… உடனே நம்மாளுக்கு கோபம் வந்து, பொங்கி எழுற மாதிரித்தான் பதில்
”இவ்வளவு நாள் உண்மையா உழைச்ச நான் யாராவது நூறு திர்ஹாம்ஸ்
கூட குடுத்தா போயிருவேன்னு எப்படி என்னைய அவமானப் படுத்தலாம்”, ஆனால் அதற்கு அடுத்து வரும் வரியைப் பாருங்க… ”நூறு என்னய்யா நூறு, எவனாவது நாலு திர்ஹாம்ஸ் கூட குடுத்தாக்கூட உடனே ஓடிப்போயிருவேன்”
:)
சர்வீஸ்
துறையில் இருப்பவர்களுக்கு இந்தச் சோகம் நல்லாத் தெரியும், பயனாளியை மனநிறைவடையச் செய்வதற்கு
என்னென்னவோ வித்தையெல்லாம் செய்வோம்… அன்றாடம் தொடர்ந்து செய்வோம்… என்றோ ஒரு நாள், எதோ ஒரு பிழை
அல்லது வேலையில் தாமதம் ஏற்பட்டு விட்டால் போதும், இத்தனை நாள் நாம் செய்த
சேவையெல்லாம் அடிச்சு நொறுக்கி ஒன்னுமேயில்ல, இவன் சரிப்பட்டு வரமாட்டான்னு
திட்டத் தொடங்கிருவாங்க… அதையே நான் முன்பொரு முறை ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸாக
”என்னதான்
99 விழுக்காடு சிறப்பாக பணி செய்தாலும், ஒரே
ஒரு விழுக்காடு பணித் தாமதம் ஏற்பட்டால் போதும், இத்தனை
நாள் சேர்த்து வச்ச மொத்தமும் சேதாரமாகிப் போகும்.
But you IT guys, go on
forever.”
என்று பொத்தாம் பொதுவா எழுதியிருந்தேன்… இந்த நூலில்
ஆபிதீன் அண்ணன் அதையே எப்படி நாம நம்ம நண்பர்களோட பேசுவோமோ அந்த மாதிரி
”பல்லுப்பட்டிருச்சாம்னு” செம்மையா எழுதியிருபபார்… படிச்சுப் பாருங்க செம
சிரிப்பா இருக்கும்….
இந்த நூலில் இத்தனை சிறுகதைகள் இருக்கின்றன…
மீஜான்
வாழைப்பழம்
ஹே சைத்தான்
ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்
மூடல்
பச்சை மணிக்கிளியே - சூஃபி
தினம் ஒரு பூண்டு
உயிர்த்தலம்
அமானுதம்
இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள்
ருக்கூ
பாட்டியாவின் மறதி
நாங்கோரி என்ற உறுப்பினர்
இந்த நாங்கோரி கதையைப் படிக்கும் போதுதான்
தெரிந்தது இந்த மனுசன் ஆளு ஒரு காலத்துல என்ன ஆட்டம் ஆடிருக்கார்னு...
பச்சை மணிக்கிளியே
படிச்சிட்டு , அதாவது முதல் பத்திய படிச்சிட்டு ஆசிப் அண்ணனுக்கு போன் போட்டுச் சிரிச்சிட்டு
அண்ணே இனிமேல் இவர் எழுதியதைப் படிக்க மாட்டேன்னுட்டேன்… என்னையா இது? ஒரு வரைமுறை
வேண்டாமா? இப்படியா? என சிரித்துக் கொண்டேயிருந்தேன்…
இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகளை
இஸ்லாமிய எழுத்தாளர்கள் படித்தால், அவர்கள் தங்களையறியாமல் வெடித்துச் சிரிப்பார்கள்…
அவ்வளவு நையாண்டி செஞ்சிருக்கார்…
கதையென்பது பொதுத் தமிழில் சொல்லப்படும்
போது அது அறிக்கை போல ஆகிவிடும்… வட்டார மொழி வழக்கில் சொல்லப்படும் போதுதான், கதையில்
ஒரு மண்வாசனை இருக்கும்… உயிர் இருக்கும்...
சினிமாக்களில், சென்னை மதுரை திருநெல்வேலி, கோயம்புத்தூர்
மற்றும் பிராமண மொழி வழக்குகளையே கேட்டிருப்பதால், இந்த நாகூர் வழக்கு புதியது எனக்கு…வாசிக்கும்
போது உச்சரிக்கவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது… குறிப்பாக ஆமாங்கனி என்னாங்கனி…
பேண்டமிக், கொரொனா என மிரட்டும் இன்றைய
சூழலில் மனுசனுக்கு ஏகப்பட்ட மன உளைச்சல்… நோய், வேலை இழப்பு, சம்பளக்குறைப்பு, ஊருக்குச்
செல்ல இயலாமை என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி சிக்கல்கள்… இம்மாதிரியான வேளைகளில்
வாசிப்பும் நெஞ்சை உருக்குவதாக இருந்தால், மனுசனுக்கு கிறுக்குப் பிடிச்சிரும்…
ஆதலால் உயிர்த்தலம் போன்ற கலகலப்பான நூலை வாசியுங்கள்… மனசு இலகுவாகும்… வாய்விட்டுச் சிரிக்கலாம்…
வாழ்த்துகள் ஆபிதீன் அண்ணே…
பி.கு
இந்த நூல் எழுதி 2007 ஆம் ஆண்டு முதல்
பதிப்பு செய்யப்பட்டது…
1 comment:
நன்றி பாலாஜி
Post a Comment