Sunday, August 26, 2012

பழைய விளம்பரங்கள் ஒரு பார்வை ...


பழைய விளம்பரங்கள் ஒரு பார்வை...



நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைப் படுத்த, பெரும்பாலான விளம்பர முறைகளைக் கையாள்கின்றன. தொழில் நுட்ப புரட்சிக்கு முன்னால் விளம்பரங்கள் பெரும்பாலும் குறைந்த அளவில் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. மக்களிடம் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த பல முயற்சிகளை கையாண்டனர்.தொலைக்காட்சி, தகவல் தொழில் நுட்பம், மாடர்ன் ஃப்ளெக்ஸ் ப்ரிண்டிங் போன்ற ஊடகங்கள் வருவதற்கு முன்னால் விளம்பரங்கள் எப்படியெல்லாம் இருந்தன என்பதைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள். 

முன்பு சில பொருட்கள் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். எடுத்துக்காட்டாக, டொரினோ, பவண்டோ, ஒண்டிப்புலி சர்பத், மாணிக்க விநாயகர் சோடா இது போன்றவைகள் எல்லாம் எல்லாப் பகுதிகளிலும் கிடைத்தனவா என எனக்குத் தெரியவில்லை. ஆகவே, எங்கள் பகுதியில் நான் பார்த்த விளம்பரங்களைப் பற்றிய ஒரு பார்வை இந்தப் பதிவு. 

விளம்பரங்கள் முதலில் மக்களைச் சென்றடைய வேண்டும், அதற்கு மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பொதுவாய் பலரின் பார்வை படும் பொது இடங்களில் விளம்பரங்களைச் செய்ய வேண்டியிருந்தது. பளிச்சென்று வண்ணங்களில் எழுதப்பட்ட விளம்பரங்கள் மக்களை எளிதில் சென்றடையும். 

ஆகவே பெரும்பாலும் சிறிய சதுர/செவ்வகமான தகரத்தில் பெயிண்ட் அடித்து அதில் தங்கள் பொருட்களின் பெயர்களை அழகாக எழுதி ஆங்காங்கே தொங்க விட்டிருப்பார்கள். பேருந்து நிறுத்தங்களின் அருகில் உள்ள புளிய மரத்திலோ அல்லது மற்ற மரங்களின் மீதோ அந்தத் தகர விளம்பரங்கள் நான்கு மூலைகளில் ஆணியால் அடித்து வைக்கப்பட்டிருக்கும்....  எடுத்துக்காட்டு: T.S. பட்டணம் பொடி, டொரினோ, ரவீஸ் ஊறுகாய்....





ஊருக்குள்ள ஒன்று அல்லது இரண்டு பெட்டிக்கடைகள் இருக்கும், ஒரு டீக்கடை இருக்கும். பெரிய பேருந்து நிலையங்களுக்குச் சென்றால் அங்க பல பெட்டிக்கடைகள் இருக்கும். இந்தப் பெட்டிக்கடைகளின் முன்பு உள்ள பெட்டியிலும் இந்தத் தகர விளம்பரங்கள் ஆணி அடிக்கப்பட்டிருக்கும். பெட்டிக்கடைகளின் பெட்டியில் அழகாக பெயிண்ட் அடித்து, மேலே பிள்ளையார் சுழி போட்டு, குலசாமி பெயரை எழுதி பின்பு கடையின் பெயரையும் எழுதி, உரிமை:____________ என கடை முதலாளியின் பெயரையும் எழுதி,  பின்பு தங்கள் பொருளின் பெயரை இங்கு கிடைக்கும் என அழகாக எழுதிக் விளம்பரம் கொடுப்பார்கள்.

பின்பு கொஞ்சம் கூடுதல் செலவு பண்ணி விளம்பரங்களை கருப்பு வெள்ளையில் பிரிண்ட் செய்து ஒரு அட்டையில் ஒட்டி வைத்து கடைகளிலும், பொது மக்கள் கூடுமிடங்களிலும், பேருந்து நிலையங்களிலும் தொங்க விடுவார்கள். அந்தரங்கப் பிரச்சனைகள் பற்றிய விளம்பரங்கள் பேருந்து நிலைய கழிப்பறைக்கு நுழையும் இடங்களிலும் உள்ளேயும் சுவர்களில் ஒட்ட வைக்கப் பட்டிருக்கும். அதிலே பிரபல வைத்தியர் என்ற ஒருவரின் பெயரும் அவருடைய முகவரியும் இருக்கும்.  

இதெல்லாம் வரைந்து எழுதிக் கொடுக்க ஓவியர்கள் வேண்டுமல்லவா... அவர்களையும் பார்ப்போம்...

ஒவ்வொரு சிறு நகரங்களிலும் ஓவியர்கள் இருப்பாங்க... படம் வரையுற ஓவியர்கள், எழுத்து எழுதுகிற ஓவியர்கள்னு ஒவ்வொரு இடத்திலும் இருப்பாங்க.... படம் வரையுற ஓவியர்கள் விளம்பரத்துக்கு தேவையான, வாடிக்கையாளர் சொல்லிய படங்களை அழகாக வரைந்து முடிப்பார்கள், பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களின் படங்கள் வரையப்படும்.

எழுத்து ஓவியர்கள் எழுதும் போது எழுத்தின் அளவு சரியாக இருப்பதற்காக, வண்ணப்பொடியில் (பெரும்பாலும் நீல வண்ணப்பொடி) ஒரு கனமான நூலை முக்கி எடுத்து, பதாகையின் மேல் அந்த கனமான நூலை இழுத்துப் பிடித்துக் கொண்டு மெதுவாக சுண்டி விடுவார்கள். நூலிலுள்ள வண்ணப்பொடி ஒரு கோடாக மென்மையாக பதியும். இதே போல் இரண்டு கோடுகளை சரியான இடைவெளியில் சுண்டி மென்மையாக பதிய விடுவார்கள். இரண்டு கோடு நோட்டில் நாம எழுதிப் பழகியிருப்போம் அல்லவா அது போலவே இரண்டு கோடுகள் இருக்கும். பின்பு விளம்பரத்திற்கு தேவையான வாக்கியங்களை அந்த இரண்டு கோடுகளுக்கு இடையே, அந்தப் பதாகையில், கடையின் பெட்டியில், சுவறில் அழகாக எழுதுவார்கள்.  

விளம்பரம் வரைந்து எழுதி முடித்த பிறகு கடைசியாக, எதாவது மூலையில் அவர்களின் பெயர் அல்லது அவர்கள் நிறுவனத்தின் பெயரை எழுதி வைப்பார்கள். இது ஓவியர்களின் விளம்பரம். ஓவியர்கள், தங்கள் ஓவிய நிறுவனத்தின் பெயரையும் ரொம்ப வித்தியாசமாக கற்பனைத்திறனோடு அனைவரையும் கவரும் வண்ணம் எழுதி வைத்திருப்பார்கள். ஓவிய நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் உள்ள படத்தின் அழகிலேயே அந்த ஓவியரின் திறமை தெரிந்து விடும்.

அடுத்ததாக, ரேடியோ விளம்பரம். ரேடியோ விளம்பரங்கள். பெரும்பாலும் பாடல்களாகவும் உரையாடல்களாகவும் இருந்தன. ரேடியோ விளம்பரங்களில் இருவர் பேசுவதை நாம் கேட்கும் போது, அந்தக் காட்சி நம்முன்னே வர வேண்டும், அதற்கு மிகவும் கவனமாக ரேடியோ விளம்பரங்களை எடுத்து இருப்பார்கள்.

டாடா டில்டிங் வெட்கிரைண்டர்னு ஒரு பாட்டு வரும்... நல்லாயிருக்கும் கேட்க...

வேலைய விட்டு மட்டும் நிக்காதடி முனியம்மா, இன்னைக்கே அஞ்சு பாக்கெட் வீனஸ் க்ளீனிங் பவுடர் வாங்கித் தாரேனு ஒரு விளம்பரம்...

இப்படியாக விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கும்... ஆனாலும் ரேடியோக்கள் எல்லார் வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு மலிவான பொருள் அல்ல... ட்ரான்சிஸ்டர் வந்த பிறகு பெருமளவில் ரேடியோ விளம்பரங்களும் வர ஆரம்பித்தன.


அடுத்ததாக, மிக முக்கியமான சினிமா விளம்பரம்.

ஒரு புதிய படம் வெளி வருகிறது என்றால், போஸ்டர்கள் பொது இடங்களில் ஒட்டப்படும். பின்பு படம் வெளிவருவதற்கு இரு வாரத்திற்கோ அல்லது ஒரு வாரத்திற்கோ முன்பிருந்தே நாள் தோறும் மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பெரிய ட்ரை சைக்கிளில் இரு பக்கமும் பெரிய சினிமா பதாகையை வைத்து சினிமா தியேட்டரைச் சுற்றி உள்ள எல்லா பகுதிகளிலும் மக்கள் பார்க்கும் படி ஊர்வலமாக வருவார்கள். 

டிரை சைக்கிளின் பின்னால் ஒருவர் சிறிய சினிமா நோட்டிசை மக்களுக்கு கொடுத்துக் கொண்டு வருவார். ட்ரை சைக்கிளின் முன்னால் கரகாட்டம் ஆடி இரு பெண்கள் நடந்து வருவார்கள். தெரு முக்கில் கரகாட்ட மேளம் கேட்டவுடனே சிறுவர்கள் ஓடிச்சென்று அவர்கள் கூடவே ஆடி வருவார்கள். (நானும் அப்ப சிறுவனாகத்தான் இருந்தேன் :-)) இப்படி ஒரு வகையான சினிமா விளம்பரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.  இந்தக் கரகாட்டம் பார்ப்பதற்காகவே எல்லாரும் வீட்டு வாசலில் காத்திருப்பார்கள்.

படம் நூறு நாள் ஓடி விட்டது என்றாலும் இதே போன்ற விளம்பரங்கள் தொடரும். ரசிகர் மன்றங்களின் சார்பாக நூறாவது நாளன்று டிக்கெட் கவுண்டரில் மிட்டாய் வழங்கப்படும். (ஆரஞ்சு மிட்டாய் அல்லது எக்லேர்ஸ் சாக்லேட்) இன்றே இப்படம் கடைசி என்றாலும் போஸ்டர்கள் ஒட்டப்படம். 

பின்பு தொலைக்காட்சி வந்த பிறகு அந்த ஆண்டெனாவை சரியான திசையில் வைத்து புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல் டிவி பார்த்திடுவதே ஒரு பெரும் சாதனையா செயல். காற்று கொஞ்சம் பலமா அடிச்சதுனா போச்சு, மறுபடி ஆண்டெனாவை சரி செய்ய வேண்டும். தூர்தர்சன் என்ற தொலைக்காட்சி வந்த பிறகு விசுவலான விளம்பரங்கள் பெருமளவில் வர ஆரம்பித்தன... பெரும்பாலும் ஹிந்தி விளம்பரங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. நேரடித் தமிழ் விளம்பரங்கள் குறைவாகவே வந்தன.

சில மனதுக்குப் பிடித்த விளம்பரங்கள்:

வளரும் பையன் இவன் உயர உயரவே வளருபவன் - ஐ ஆம எ காம்ப்ளான் பாய்



சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய்
எதோ ஒரு சன் ஃப்ளவர் ஆயில் ( பெரிய பூரியும் பெரிய உளுந்த வடையும் காட்டும் போது செமயா இருக்கும்)
போயிந்தே போயே போச்சு இட்ஸ் கான் - அமிர்தாஞ்சன்



ரேமண்ட் சூட்டிங்ஸ் விளம்பரம் (இன்னமும் அதே இசை இந்த விளம்பரத்திற்கு)
சாலிடேர் டிவி
டைனோரா டிவி
ஒனிடா டிவி - அந்த மொட்ட மண்டையன பார்த்தா பயமா இருக்கும்
பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி - கபில்தேவ்
கோல்ட் ஸ்பாட் - சிங் திங்



சிட்ரா சூப்பர் கூலர்
நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா




இப்படியாக விளம்பரங்கள் பல வகையாய் வந்திருக்கின்றன. இப்பொழுது தொழில்நுட்ப புரட்சி மற்றும் ஊடங்களின் உதவியால் விளம்பரம் ஒரு பெருந்தொழிலாக மாறியிருக்கிறது. பெரிய அளவில், பெரும் பொருட்செலவில் இப்பொழுது விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பொருட்களை மக்கள் வாங்கத் தூண்டும் வகையில் அழகாய் காட்சிப் படுத்துகிறார்கள். விஷுவலான விளம்பரங்கள் ஒரு சில விநாடிக்குள் தாங்கள் சொல்ல வேண்டியதை, தங்களின் பொருட்களைப் பற்றிய பயனை மக்களிடம் சேர்க்க வேண்டும். சில விளம்பரங்கள குறைந்த கால நேரத்தில் மிகச் சரியாகப் பயன்படுத்தி தாங்கள் சொல்ல வேண்டிய கருத்தைச் சொல்லி விடுகின்றன.வெகு சில விளம்பரங்கள் முகம் சுளிக்க வைத்தாலும் பெரும்பாலும் விளம்பரங்கள் ரசிக்கத் தகுந்த வகையில் உள்ளன. 



இதுவரை படித்த அனைவருக்கும் நன்றி.

தங்கள் கருத்தையும் நீங்கள் ரசித்த விளம்பரங்களையும் சொல்லலாமே :-)

(நன்றி படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து)

நன்றி.

4 comments:

Shankar M said...

Good one....You took me back to the good old days...

kudikka vendam...appadiye saapiduven - vituteengale...

Balaji said...

நன்றி சங்கர்...

பரீத் said...

'எதோ ஒரு சன் ஃப்ளவர் ஆயில் ( பெரிய பூரியும் பெரிய உளுந்த வடையும் காட்டும் போது செமயா இருக்கும்)'

அது சனோலா சன்ஃப்ளவர் ஆயில் பாஸ்.

ரேடியோவில் கேட்ட தும்பைபூபோல் பொன் சிரிப்பு - உஜாலா விளம்பரம், எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க - நிஜாம் பாக்கு, டீவியில் வந்த வயலும் வாழ்வும், அதன் இடையில் வரும் பைப், பூச்சி மருந்து விளம்பரங்கள், எதிரொலி என்று எதாவது ஒன்று பார்க்க கிடைக்காதா என்று ஏக்கமாக இருக்கிறது.

Balaji said...

உண்மைதான்...