Monday, August 27, 2012

முன்பொரு நாள் மழை பெய்தது - மழையைக் காட்டினேன் என் மகளுக்கு...

பளிச்சென வெளிச்சம் ....

சன்னல் கண்ணாடி ஊடுறுவி மின்னல் அறை நிறைத்தது...
தூரத்தில் விளையாடிய மகள் வந்து என்னைக் கட்டிக் கொண்டாள்....
கடும் புழுதிக் காற்று பேரிரைச்சலோடு.....
கூடவே வந்தது டம் டும் என சத்தம்...

மனசுக்குள் பைய ஒரு விதமான மகிழ்ச்சி பொங்குகிறது, 

ஆம் மழை வரப்போகுது....
எனக்கு மிகவும் பிடித்த மழை வரப் போகிறது.....
மழை இறைவன் கொடுத்த கொடை, 
எண்ணிலடங்கா மகிழ்ச்சி மழையை வரவேற்க... 
ஆஹா மழை பார்க்கப் போகிறேன் துபாயில்...




அப்பா, யாரோ க்ராக்கர்ஸ் போடுறாங்க... 

இல்லம்மா அது க்ராக்கர்ஸ் இல்ல, அதான் இடி...

இடினா என்னப்பா? 

இடினா,அதான்மா தண்டர், 
அதாவது மேகமெல்லாம் இருக்குல்ல, 
அதுக ரெண்டும் முட்டிக்கும் போது வர்ர சத்தம்தான் இடி.... 

ஏன்பா அவய்ங்க முட்டிக்கிறாய்ங்க.....

அதுவாம்மா, வெளில பாரு காத்து வேகமா அடிக்குதா, இருட்டா வேற ஆகிருச்சா... 
அதான் அவய்ங்க கண்ணு தெரியாம வேகமா போயி முட்டிக்கிறாய்ங்க.....

அப்படியாப்பா..... ஆமாம்மா




மா வேகம் மழை வேகம் அல்லவா...

தடதடவென கொட்டத் தொடங்கியது மழை....

துள்ளிக் குதித்தாள் என் மகள்....


அப்பா மழைப்பா, மழை.....


ஆமாம்மா மழைதான்.... 

அழைத்துச் சென்றேன் வாசலுக்கு...
மழையைக் காட்டினேன் என் மகளுக்கு...

அங்கே பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் 

பெற்றோர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்....
அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி... 
மழை அதுவும் இங்கு பெய்யும் மழை மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது....

கொஞ்ச நேரம் மழைச்சாரல் எங்களை நனைக்கும் படி நின்று கொண்டு வேடிக்கை பார்த்தோம்....


மழை மனதை ஏதோ ஏனோ இலகுவாக்கியது....

ஒவ்வொரு மழையும் எதோ ஒரு நினைவுகளை சுமந்தே இருக்கிறது....
எத்தனையோ நிகழ்வுகள் இந்த மழைக் காலத்தில் நடந்தேறியிருக்கிறது, 

அத்தனையும் என் நினைவில்.... 

மழை பார்த்து ரசிக்கும் மகிழ்ச்சியில் 
இருந்த என் மனம், 
மெல்லப் பின்னோக்கி சென்றது...



நீங்களும் வாங்க என்னோடு என் ஊருக்கு....


மழை வாசம், மண் வாசம்...


மழை பெய்யும் போது 


யாருமில்லாத சாலையில் நனைந்து கொண்டு புல்லட் ஓட்டும் சுகம்....

உடல் நடுங்க எத்தனை பயணங்கள் இந்த மழையில்....  
மழை ஆரம்பிக்கவும் கூடு தேடி குஞ்சுகளோடு ஓடி வரும் கோழிகள்
ஆடுகளும் மாடுகளும் எழுப்பும் சத்தம்..
மழை பெய்தவுடன் வீட்டில் அம்மா செய்யும் திடீர் பலகாரங்கள். சூடான காஃபி...
கிராமங்களில் நுழைவாயிலில் இருக்கும் சிறிய கடை அல்லது டீக்கடையில்
மழைக்காக அண்டியிருக்கும் மனிதர்களும் கால்நடைகளும்....


மழை நின்ற பின் 


வரும் நட்டுவாக்காலிகள்...

முறையான இடைவெளியுடன் தவளைகள் எழுப்பும் சத்தம்....
கூரையில் இருந்து சொட்டும் மழைத்துளியின் சத்தம்....
சிறிய மரம் செடியை உலுப்பி உருவாக்கும் செடி மழை...

மழை பெய்த மறுநாள் 


திடீரென தூய்மையான சாலைகள்,

உதிர்ந்து கிடக்கும் பன்னீர்ப் பூக்கள்,
புற்றை விட்டு வெளிக்கிளம்பும் ஈசல்கள்...
சிவப்பு வண்ண வெல்வெட் பூச்சிகள்....
தீடீரென முளைக்கும் காளான்கள்
மழை நீர் ஓடி உருவான ஆற்றுப் படுகைகள் போல சின்னஞ்சிறு வாய்க்கால்கள்

கூடவே டீக்கடை பெஞ்சுகளில் நடக்கும் 

முதல் நாள் மழை பற்றிய புள்ளி விவரங்கள், வர்ணனைகள்,விவாதங்கள், தீர்ப்புகள், ....
சூடாக டீ குடித்துக் கொண்டு அவர்கள் பேச்சைக் கேட்டிருக்கிறீர்களா!?
அதுவும் ஒரு சுகம்தான்...

நேத்து மானம் கருத்தப்பவே சொன்னேன்ல

எக்கண்டமும் மழைன்னு இருக்குன்னு .... பாத்தியா.... ராவெல்லாம் கொட்டித் தீர்த்திருச்சுய்யா...
ஆமாய்யா பேப்பர்ல போட்டிருக்குயா.... பெரும்பகுதி மழையாம்யா... (எழுதப் படிக்க தெரிஞ்சவர் இவர்)
இனி வராதுப்பா, மானம் வெளுத்திருச்சு...

இப்படி பல விதமான பேச்சுகள் நடக்கும் மழை ஆரம்பிச்சு முடிக்கிற வரைக்கும்.....


ம்ம்ம் மழை விட்டதும் திரும்பியது

என் நினைவுகள் மீண்டும் துபாய்க்கு...

மீண்டும் எப்போது வரும் மழை...

மனதைக் குழந்தையாக்கும் மழை...
வா மழையே வா...
ஆண்டுக்கொரு முறையேனும் வா...

No comments: