Sunday, August 26, 2012

வெள்ளிக்கிழமை -- ஒரு பெட்டி ஒரு பை


வெள்ளிக்கிழமை மற்றவர்களுக்கு எப்படியோ வளைகுடா பகுதியில் வேலை பார்க்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியான நாள். ஆறு நாட்கள் கடும் வேலைக்குப் பின் கிடைக்கும் ஒரு ஓய்வு நாள். எல்லாரும்தான் வேலை பார்க்கிறோம் என்றாலும் கட்டுமானப் பணி என்பது எளிதான ஒன்றல்ல. பணி மட்டுமல்ல அவர்கள் வேலை செய்யும் இடமும் அவர்களுக்கு அயர்வை தருகிற ஒரு காரணி. வெயிலும் குளிரும் இங்கு தன் உச்சத்தை காட்டும். இவ்வாறான சூழ்நிலையில் வேலை பார்த்து, வாரத்தில் ஒரு முறையாவது ஒரு துளி ரத்தமாவது சிந்தி உழைக்கும் இவர்களுக்கு கிடைக்கும் ஒரு ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை. 

ஆம், அந்த வெள்ளிக்கிழமை, ஒரு மாலை நேரம், லேபர்கேம்ப் நோக்கிப் போவோம் வாங்க....

கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்கள் தங்குவதற்கென பல இடங்களில் லேபர்கேம்ப்களை கட்டி வைத்துள்ளனர். லேபர் கேம்ப் (தொழிலாளர்கள் தற்காலிகமாக தங்குமிடம்) என்பது இரண்டு மாடி அல்லது மூன்று மாடி உள்ள AC செய்யப்பட்ட கட்டிடங்கள்.  ஒரு அறையில் பங்கர் பெட் எனப்படும் அடுக்கு கட்டில்களாக ஆறு கட்டில்கள். ஒரு பெட்டி ஒரு சின்னப் பையுடன் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப் பொருட்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கட்டுமானத் தொழிலாளர்கள். பெரும்பாலும் ஒரே மொழி மற்றும் ஒரே நாடு சார்ந்தவர்கள் ஒவ்வொரு அறையிலும் இணைந்தே தங்க வைக்கப்படுகிறார்கள்.

பல லேபர்கேம்ப்கள் இருக்குமிடத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட், சின்ன க்ராசரிகள்,சில உணவகங்கள் இருக்கின்றன. இங்கு அனைவரும் வெள்ளிக்கிழமை அன்று கூடிப் பேசிக் கொள்கிறார்கள். இந்தியர்கள், பட்டான்கள், பெங்காலிகள், பிலிப்பினோக்கள், நேபாளிகள் என பல நாடுகளைச் சேர்ந்த மற்றும் பல மொழிகளைப் பேசும் தொழிலாளர்கள். 

கூட்டாமாக நிற்கும் அவர்களுக்கு நடுவே நின்று கொண்டு ஓவ்வொருவரின் பேச்சுவார்த்தையையும் கவனித்தால் ஆறு நாள் உழைத்த களைப்பை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பேசித் தீர்ப்பதில் அவர்களின் வேகம் தெரிந்தது. மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தாலும் ஒவ்வொருவரின் பேச்சிலும் பேசுபொருளாக ஒருமுறையேனும் தங்கள் குடும்பம் இருக்கிறது. அந்நேரம் அவர்களை அறியாமல் ஒரு ஏக்கம் அவர்களைத் தொற்றிக் கொள்கிறது.

பொறுமையாக, இன்னும் சொல்லப் போனால் நின்று நிதானமாக பேசுபர்கள் மிகவும் குறைவே. இருக்கின்ற ஒரே நாளில் எல்லாத் தேவைகளையும் முடிக்க வேண்டிய கட்டாயம். வீட்டுக்குப் ஃபோன் பேசனும், ஒரு வாரத்திற்கு சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும், வேறு லேபர் கேம்பில் வசிக்கும் நண்பர்களிடமும் பேச வேண்டும், ஊருக்குப் பணம் அனுப்ப போகனும் இப்படி ஒவ்வொருத்தருக்கும் பலதரப்பட்ட தேவைகள்.  ஒவ்வொருவரும் அவரவர் தேவையை அவரவரே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இருப்பதோ ஒரே நாள்.

கூட்டமாக நின்று கொண்டிருக்கும் டாக்ஸி ஓட்டுனர்கள், ஷேரிங் முறையில் மற்றொரு லேபர் கேம்ப் இருக்கும் இடத்திற்கு செல்ல இருப்பவர்களை கவர்வதில் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க, இந்தக் கூட்டத்திற்கு நடுவே ஒரு டிஜிட்டல் எடை பார்க்கும் எந்திரத்தை வைத்து தரையில் அமர்ந்து ஒரு திர்ஹாமிற்கு வருபர்களின் எடை பார்த்து சம்பாதிப்பவர். ஊரில் முடிவெட்டும் தொழில் செய்து வந்தாலும் இங்கு வந்த பிறகு கட்டுமானத் துறையில் ஈடுபடுபவர்களில் சிலர், வெள்ளிக்கிழமைகளில் ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலி ஒரு சிறு கண்ணாடி கொண்டு வெள்ளிக்கிழமை மட்டும் அங்குள்ளவர்களுக்கு முடிவெட்டி சம்பாதிப்பவர்கள், சாலை ஓரத்தில் அமர்ந்து சாட்பட்(வட இந்திய சிறு தீனி) விற்பவர்கள், சிந்தாமணி என்று சொல்லப்படும் பயறுகளை விற்பவர்கள் என பலதரப்பட்ட மக்களை காண முடிந்தது.  

வெள்ளிக்கிழமையில் கிடைத்த நேரத்தில் இப்படி சம்பாதிப்பவர்களும் இருக்கையில், சேர்த்த பணத்தை குடியில் செலவிட்டு ஆங்காங்க சாலையை அளந்து கொண்டும், சுவறுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டும் இருப்பவர்களையும் காண முடிந்தது. ஏன் இப்படி வீணாய் குடிக்கிறார்கள் என்று கேட்க முடியாது, ஏனெனில் எல்லாருக்கும் ஒரு காரணம் இருக்கும். இல்லையெனில் குடிப்பதற்காக காரணத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். சில நேரம் இரு நாடுகளுக்கு இடையே சண்டை நடக்குமாம், சில நேரம் நம் தமிழர்களுக்கிடையே சாதிச் சண்டை கூட நடந்திருக்கிறதாம். பிழைக்க வந்த இடத்தில் சாதி இன்னும் இருக்கிறது என்று கேட்ட போது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. 

ஒவ்வொருவரும் ஒரு கனவோடு, ஒரு கடமையோடு, இது ஏதும் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக கடனோடு இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். எஜெண்ட் சொல்லியனுப்பிய கூலி இங்கு வந்தபின் கிடைப்பது என்பது எல்லாருக்கும் அமைவதல்ல. சிலருக்கு ஏமாற்றம் மிஞ்சுகிறது. வந்த கடன் அடைக்க குறைந்தது ஓராண்டு காலமாவது உழைக்க வேண்டிய கட்டாயம், பின்பு அவரவர் உழைப்பிற்கும் பழக்க வழக்கத்திற்கும் ஏற்ப கொஞ்சம் பணம் மிஞ்சுகிறது. இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கிறது. 

கடைசியாக அங்கிருந்து கிளம்பும் போது என் நண்பனிடம் கேட்டேன் ஏன் மாப்ள, அடுத்து எப்ப சந்திக்கலாம்... சொல்றேன் அடுத்த சைட்(கட்டுமானம் நடைபெறும் இடம்) மாறிட்டா எந்தக் கேம்ப்ல போடுவாங்கனு தெரியாது. எங்க வாழ்க்கை இப்படித்தான் மாப்ள, அதான் ஒரு பெட்டி ஒரு பையோடு எங்க வாழ்க்கை போகுது. எப்ப கிளம்புனு சொன்னாலும் நாங்க கிளம்ப தயாரா இருப்போம். அடுத்து எங்கனு உறுதியா சொல்ல முடியாது....

அட ஆமாம், எதும் உறுதியா சொல்ல முடியாது மாப்ளனு சொல்லிட்டு நானும் கிளம்பிட்டேன்.

No comments: