Saturday, May 9, 2020

லெபான் அப் எனும் மோர்


அமீரகம் வந்த அன்று முதலில் உண்ட உணவு ஷவர்மா. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்,வீட்டிலேயே கோழி அடித்துக் குழம்பு வைத்துச் சாப்பிடும் வழக்கத்தில் வந்திருந்த எனக்கு, எலும்பில்லாத கோழிக்கறியை ஒரு ரொட்டிக்குள் சுற்றி அதை மதிய உணவு என்று தந்தார்கள்… சாப்பிடும் போதே திட்டுமுட்டு அடிச்சு, கறி மூஞ்சில அடிச்சிருச்சு… அப்போதுதான் பார்த்தேன் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் பாக்கெட்டில், வினிகரில் ஊற வைத்த காரட், முள்ளங்கி மற்றும் மிளகாய் ஆகியவற்றை வெஞ்சனமாகத்  தந்திருந்தார்கள்… அப்புறம் அந்த வெஞ்சனத்தைத் தொட்டுக்கிட்டுத்தான் ஷவர்மாவைச் சாப்பிட்டு முடிக்க முடிந்தது… இப்ப எனக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஷவர்மாவும் ஒன்றாக இருந்தாலும், முதல்நாள் முதல் ஷவர்மா என்னவோ அன்றைக்கு பெரிசாக மனசுக்குப் பிடிக்கவில்லை…

நான் வந்த காலம் நல்ல வெயில் காலம்… வெயில்காலத்தின் உச்சகட்ட  மாதத்தில் அமீரகம் வந்திருந்தேன்… பணியின் பொருட்டு முதன் முதலாக வேலைக்குச் சென்றது நல்லதொரு அருமையான மொட்டைப் பாலைவனத்திற்கு நடுவே கட்டப்பட்டிருந்த அனைத்து வசதிகளுடன் கூடிய அல்ட்ரா மாடர்ன் கட்டிடத்தில்… (இப்போது அந்த இடம் பாலைவனச் சோலையாக இருக்கிறது)

அந்தக் கட்டிடத்தின் தரை தளத்தில் நிறைய அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் அரேபிய உணவகங்கள் இருந்தன… அப்போது என்னுடைய மேலாளர்களே அந்த உணவகங்களில் சாப்பிடும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இல்லை… அப்புறம் நான் எங்கிட்டுச் சாப்பிடுறது… 

எங்கள் வாகன ஓட்டுனர், அப்புறம் கூட வேலை செய்யும் சில தெரிந்தவர்கள் அங்கிருந்து ஒரு நான்கு கிலோமீட்டர் தள்ளி உள்ள ஒரு பெட்ரோல் ஸ்டேசனில் இருக்கும் , காஃபெடேரியாவிற்கு சாப்பிடச் செல்லும் போது என்னையும் இணைத்துக் கொண்டார்கள்…

எந்த ஒரு சுவையும் எள் முனையளவு கூட இல்லாத நீளவாக்கில் இருக்கும் ஒரு ”பன்”னிற்கு நடுவே, ஒரு ஆம்லெட்டை வைத்து அதன் பெயர் சாண்ட்விச் என்று சாப்பிடக் கொடுத்தார்கள். இரண்டு திர்ஹம்களும் எழுபத்தைந்து ஃபில்ஸ்களும்.

எந்த உணவைச் சாப்பிட்டாலும், சாப்பிட்டு முடிச்சவுடன் எங்கூர்ல நாங்க எப்படிச் சாப்பிடுவோம் தெரியுமா? அப்படினு சொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுலயும் சுவையான உணவுகளை மட்டுமே அல், பகல் அனைத்து வேளைகளிலும் கிடைக்கப் பெற்று, சாப்பிட்டு வந்த மதுரைக்காரர்களுக்கு எந்த ஒரு புது ஊர் உணவையும் உடனடியாக ஏற்றுக் கொள்ள மனசு ஒப்பாது… 

எல்லா உணவையும் அதன் சுவையையும் எங்க ஊர் உணவோடு ஒப்பீடு செய்து பார்க்கும் மனசு.. எப்பவும் எங்க ஊர் உணவுதான் தராசுல எடை கூட நிக்கும்…

அப்படியாக இருந்த எனக்கு, அந்த சாண்ட்விச்சை மென்று முழுங்கிய போது தெரிந்தது விதி வலியது என்று... ஏன்னா ஊர்ல எல்லாத்துக்கும் நொட்டை சொன்ன காட்சிகள் கண் முன்னே வந்து போகுமா இல்லையா?

சரி என அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் ”லெபன் அப்” என்ற ஒரு அரிய பானத்தை குடிக்கக் கொடுத்தார்கள், எழுபத்தைஞ்சு ஃபில்ஸ் விலை. அந்த டப்பவைப் பார்க்கும் போதே பசக்குனு மனசுக்குப் பிடிச்சுப் போச்சு… என்னங்கய்யா இதுனு கேட்டேன், ”மோர்”தான் குடிங்கன்னாங்க…



முதலில் அந்த டப்பாவை எப்படிப் பிரிப்பது என்றே தெரியவில்லை… எந்தப் பக்கமும் திறப்பு இல்லை, நம்மூர் ஃப்ருட்டி மாதிரி ஏதும் ஓட்டையும் ஸ்ட்ராவும் இருக்குமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அப்புறம் அவர்களே அந்த டப்பாவைத் திறக்கும் தொழில்நுட்பத்தைச் சொல்லித் தந்தார்கள்.. சிந்தாமல் குடிப்பதும் ஒரு கலை…

ஒரு மடக்கு உள்ளே போனதும்தான் தெரிந்தது, அட அட அட இது தேவாமிர்தம்யா… அந்த வெயிலில் அலைந்து திரிந்து வந்து, லெபான் அப் குடித்ததும், அது வாயிலிருந்து வயிற்றுக்குப் போகும் பாதை முழுவதும், மோரின் சுவையையும், அது தரும் இன்பத்தையும் முடிந்தது… 

அப்படி ஒரு சுவையான மோரை இதற்கு முன்னால் எங்கும் குடித்ததில்லை… குடித்து முடித்ததும் நாக்கு அண்ணத்தில் சப்புக் கொட்டுவது உறுதி… வெயில் காலத்தில், குறிப்பாக நோன்பு காலங்களில் இஃப்தாரில் லெபான் அப் பருகும் போது உடலிலிருந்து வெப்பமெல்லாம் வெளியேறுவது போல உணரமுடியும்.

லெபான் அப் எனும் மோர் – அட்டைப் பெட்டிக்குள் நிரப்பப்பட்டிருக்கும் ”தேவாமிர்தம்”

4 comments:

விசு said...

மலரும் நினைவுகள் நண்பரே! வளைகுடாவில் கிட்டத்தட்ட பத்து வருடம் குப்பை கொட்டியவன் தான் அடியேன்। இந்த லேபான் பணம் நாம் அப்பத்தா செஞ்ச மோர் போல தான் இருக்கும்! வெயிலோ குளிரோ இதன் சுகமே தனி!

அந்த ஆம்லெட் சன்ட்விச் அதை சன்ட்விச்என்றால் ஆம்லேட்டே நம்பாது! அரேபியா உணவுகளில் எனக்கு பிடித்த உணவு ஷவர்மா தான்! முறையாக செய்யப்பட்டால் மிகவும் ருசியாக இருக்கும்।

நினைவை தூண்டியதற்கு நன்றி।

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள்.

நம் ஊர் உணவைச் சுவைத்து அங்கே சென்று அன்னிய உணவைச் சாப்பிடுவது கடினம் தான்.

லேபான் அப் எனும் மோர் - ஆஹா சுவைக்க வேண்டும் எனத் தோன்றுகிறது1

Balaji said...

மிக்க நன்றி

Balaji said...

மிக்க நன்றி