Friday, May 22, 2020

நிலாச்சோறு


ஹாஸ்டல் - அது சிறிய வயதிலேயே ஒரு பெரிய மனிதனின் பொறுப்புணர்ச்சியுடன் சிறுவர்களைச் செயல்பட வைக்கும்… எதும் செய்து கொடுக்கத் தாய் தந்தை உடன் பிறந்தோர் என யாரும் இருக்க மாட்டார்கள்… விழிப்பு மணி அடித்தவுடன் எழுந்து, பாய் படுக்கையைச் சுருட்டி வைத்து விட்டு,  கழிப்பறைக்குச் செல்வதில் இருந்து இரவு தூங்கச் செல்லும் வரை என்னென்ன செய்யணுமோ அத்தனையையும் நாமே செய்யணும்… ஹாஸ்டல்ல படிச்சவனுக்கு கொஞ்சம் பொறுப்புணர்ச்சி கூடவேதான் இருக்கும்… தன்னுடைய வேலைகளுக்கு அவன் அடுத்தவரைச் சார்ந்திருப்பதை விரும்புவதில்லை என்பது என் கருத்து..

சரி… ஹாஸ்டல்ல டெய்லி ப்ளேஸ் என்பது எழுத்தில் இல்லாத ஆனா அடிப்படையான கட்டாய விதி… ஹாஸ்டல் வாழ்க்கைல எல்லாமே டெய்லி ப்ளேஸ்லதான் நடக்கணும்… குளிக்கிற ஷவர், படிக்கிற கூடம், சாப்பாட்டுக் கூடம், விளையாட்டுத் திடல், உறங்குமிடம் என எல்லாவற்றிலும் டெய்லி ப்ளேஸ் என்று அந்த ஆண்டு முழுவதும் முதலில் எங்கு இருக்கத் தொடங்கினார்களோ அதே இடத்திலேயே இருப்பார்கள்… சாப்பாட்டுக் கூடத்தில் டெய்லி ப்ளேஸ் மாத்திட்டா சிறு சண்டைகள் நடக்கும், தட்டுகள் மோதிக் கொள்ளும் சில வேளைகளில்.

எந்தச் சூழலிலும் டெய்லி ப்ளேஸை மாற்றுவது இயலாத செயல்… வேறு வழியே இல்லை மாற்றி ஆக வேண்டுமென்றால், வார்டனிடம் முறையிட்டு அவர் வந்து மாற்றித் தருவார்… ஹாஸ்டலைப் பொறுத்த மட்டும் அவர் சொன்னதே கட்டளை, அதுவே சாசனம்… சில நேரங்களில், அந்த அதிகாரத்தில் சிறிதளவு அந்தந்தத் துறை மானிட்டர்களுக்கு வார்டனால் கொடுக்கப்பட்டிருக்கும்… மானிட்டர்கள் வார்டனுக்கு அடுத்து  அதிகாரம் மிக்கவர்கள்…

காலையில் எழுந்ததும் ம்யூசிக் ரூம் மானிட்டர் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மத பக்திப் பாடல்களை ஒலிக்க விடுவார்… லெய்ஸர் ஹவரில் மட்டும் சினிமாப் பாடல்கள் ஒலிக்க விடுவார்…  ஒரு நாள் ”எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே” என்றால், மறுநாள் ”இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை” என்பார் நாகூர் ஹனிபா, அடுத்த நாள் ”திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்” என்பார் சீர்காழி கோவிந்தராஜன்…

இப்படியாகத்தான் அதிகாலை 5:30 மணிக்கு அன்றைய நாள் விடியும்… எதோ ஒரு சாமி, பாடல்கள் வழியாக எழுப்பியதும், உடனே வாரிச் சுருட்டி எழுந்து, காலைக்கடன் முடித்து குளிப்பதற்கு டெய்லி ப்ளேஸ் ஷவர் வரிசையில் நின்று குளித்து நாள் தொடங்குவதிலிருந்து இரவு தூங்கும் அறையில் டெய்லி ப்ளேஸில் போய்த் தூங்குவது வரை எல்லாம் ஒரு ஒழுங்கோடு இருக்கும்…

ஹாஸ்டல் வாசிகள் டே ஸ்காலர்களைப் பார்த்து பொறாமை அவர்களின் முடிவெட்டு, நினைத்ததும் அவர்கள் வாங்கி வரும் புதுப்புது ஸ்டேஷனரிப் பொருட்கள், எல்லாவற்றிற்கும் மேலாக ஏங்குவது, டே ஸ்காலர்கள் அவர்கள் அம்மா அப்பாவைப் பற்றிப் பேசுவதைக் கேட்கும் போது… சில நேரம் நமக்குக் கண்கலங்கிடும்…

சில டே ஸ்காலர்கள் ஹாஸ்டல் வாசிகளைப் பற்றிப் பொறாமைனு சொல்ல முடியாது, ஏக்கம்னு சொல்லலாம்… அதாவது ஹாஸ்டல் காரர்கள் உண்ணும் உணவு வகைகள்… ஒவ்வொரு ஞாயிறும் அசைவம் என்பது அந்தச் சில டே ஸ்காலர்களுக்கு ஏக்கமாகவே இருக்கும்…

டெய்லி ப்ளேஸ்ல இருந்து எங்கெங்கோ போயிட்டேன்… ஆம், அந்த டெய்லி ப்ளேஸ் என்பது இல்லாத நாட்கள் என்று சில உண்டு ஆண்டுக்கொரு முறை நடக்கும் ஹாஸ்டல் ஆண்டு விழா… அது பெரிய கோலாகலமா இருக்கும்… பெற்றோர்கள் வந்து, புதிய ஆடைகள் அணிந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருக்கும்…

நிலாச்சோறு:

அடுத்ததாக டெய்லி ப்ளேஸ் இல்லாதது பௌர்ணமி இரவு… பெரும்பாலான மாதங்களில் பெளர்ணமி இரவில் நிலாச்சோறு அறிவித்து விடுவார்கள்… நிலாச்சோறு தடைபடுகிறதென்றால் ஏதேனும் தேர்வுகள் அப்போது நடைபெற வேண்டும் அல்லது மழைக்காலமாக இருக்க வேண்டும் …

என்னைப் பொறுத்தவரை ஹாஸ்டல் வாழ்க்கையில் இது ஒரு பொன்னான நிகழ்வு… பொதுவாக சாப்பாட்டுக் கூடத்தில் இருபக்கமும் அமர்ந்திருப்பவர்கள் நமக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ நாம் அங்கேதான் அமர்ந்து சாப்பிட வேண்டும்… குறிப்பாகக் சாப்பாட்டுக் கூடத்தில் பேசக்கூடாது… தப்பித்தவறிப் பேசிட்டோம்னா, எந்திருச்சு நின்னு சாப்பிடுன்னுடுவாரு மானிட்டர், இல்லைனா டெய்லி ப்ளேஸ மாத்தி நமக்கு ஆகாதவய்ங்கட்ட போட்டிருவாரு…

ஹாஸ்டலைப் பொறுத்தவரை விளையாட்டு நேரம், leisure hourல் மட்டும் பேசிக்கொள்ளலாம்… எங்காவது நாம் பேசிக் கொண்டிருப்பதை சாப்பாட்டுக்கூட மானிட்டர் பாத்துட்டார்னா உடனடியாக அவர் அதிகாரத்திற்குட்பட்ட சிறு தண்டனைகளை வழங்கிடுவார்… பெரும்பாலும் எழுந்து நிற்பதாகத்தான் இருக்கும்…இப்ப என்னாங்குற?னு எதுத்துட்டோம்னா வார்டன் அறைமுன் நின்று ஆராய்ச்சி மணிய அடிச்சிருவார் மானிட்டர்…அதன் பிறகு நடக்கும் விளைவுகளுக்கு மானிட்டர் பொறுப்பல்ல…  நல்லாப் பார்த்தோம்னா, அதுவும் சரிதான்…  கிட்டத்தட்ட இருநூறூ முன்னூறு மாணவர்களுக்கு பேச அனுமதி கிடைத்து  பேசிக்கொண்டிருந்தால் அந்த இடம் என்னவாகும்… கடினம்தான்…

சரி நிலாச்சோறுக்கு வருகிறேன்…

பௌர்ணமி அன்று விளையாட்டுத் திடலில், நிலாச்சோறாக புளியோதரையும் தயிர்சாதத்தையும் பெரிய சட்டிகளில் வைத்துக் கொண்டு, சாப்பாட்டு மாஸ்டர் காத்திருப்பார்… வரிசையில் சென்று அவரிடம் வேணும் உணவைப் பெற்றுக் கொள்ளலாம்… நான் படித்த மட்டும் அந்த மெனுவ மாத்தவே இல்லை 😊 தட்டு நிறைய சோற்றை வாங்கிட்டு வந்து நம்ம பிடித்த நண்பர்களோடு கூடி  வட்ட வட்டமாக அமர்ந்து பல கதைகள் பேசிச் சிரித்துக் கொண்டே உணவுன்பது அப்போதைக்கு கிடைத்த பேரின்பம்…

ஊர்க்கதைகள், தன் வீட்டில் நடந்தது, தான் செய்த வீர விளையாட்டுகள், எனக்கு நீச்சல் தெரியும், எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியும், குண்டு விளையாடுறது, எருமை வாலப் பிடிச்சிக்கிட்டு நீச்சல் பழகுனது, எனக்கு அப்பா இல்ல, நான் ஒரே பையன், நான் வீட்டுக்குத் தேவையில்லாத பையன், கண்மாயில் குளிப்பேன், புது விளையாட்டு, எனக்கு அம்மா இல்ல, எங்க அப்பா ஊர்ல இல்ல, வீட்டுல நான் நாய் வளர்க்கிறேன், புறா வளர்க்கிறேன்… பிடித்த சினிமா, நடிகர்கள், வெள்ளிக்கிழமை ஹாஸ்டல் என்ன படம் போடப் போறாங்க… என  இன்னும் என்னென்னவோ, பேசிப் பேசிப் இருக்கும் ஒரு மணிநேரத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பேசித் தீர்ப்பது… இறுதியாக, இந்த மாதம் எங்க வீட்டுல இருந்து என்னைய பாக்க வருவாங்கள்ல என்ற நம்பிக்கையோடு பேச்சு முடியும்…

அப்போது அந்தப் பௌர்ணமி ஒளியை இரசிக்க கூடிய மனநிலையோ பக்குவமோ எங்களுக்கு இல்லை.. அந்தப் பௌர்ணமி நிலா வேண்டுமானால் எங்களைப் பார்த்து இரசித்து மகிழ்ந்திருக்கலாம்…

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

கல்லூரி வரை எனக்கு ஹாஸ்டல் வாசம் வாய்க்கவே இல்லை. எல்லா சமயங்களிலும் டே ஸ்கார்லர் தான். உங்கள் ஹாஸ்டல் அனுபவங்கள், நிலாச்சோறு அனுபவங்கள் சுவை.

Balaji said...

மிக்க நன்றி

பாலு said...

இறுதி மூன்று வரிகள் முத்தாய்ப்பு.

Balaji said...

நன்றி