Sunday, September 9, 2012

இயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...



அனைவருக்கும் வணக்கம்,

இப்ப நான் சொல்லப் போறது, இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேரு சொல்லிக் கொண்டிருப்பதுதான்... இருந்தாலும் இன்றைய சூழலின் தேவையைக் கருத்தில் கொண்டு நானும் என் பங்குக்குச் சொல்ல வேண்டும் என்ற ஒரு விருப்பத்தில் இதை எழுதுகிறேன்.

இயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...

நாமெல்லாம் இப்ப ரொம்ப வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்... குகை வாழ்க்கை மனிதன் வாழ்ந்தானு படிச்சிருக்கோம்...ஆனா பார்த்ததில்லை...இருந்தாலும் நமது இளம் பருவத்தில், இப்படியான ஒரு கான்க்ரீட் காட்டுக்குள் வாழ்க்கையைத் தொடங்கவில்லை... அழகான, பசுமையான கிராமத்தில்தான் நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையைத் தொடங்கினோம்... ஆனால் நம் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை பெரும் பெரும் கட்டிடங்களுக்கு நடுவில்தான் தொடங்குறார்கள்.

நாம் பார்க்க எத்தனையோ எத்தனையோ மாற்றங்கள் நம் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டு விட்டன. இன்னும் சொல்லப் போனால் ஏற்படுத்தி விட்டோம். மிக வேகமான வளர்ச்சி, மக்கள் தொகை, நம்முடைய தேவை என பல காரணிகள் நம்மைத் தூண்டிவிட்டு, ஒரு வித சுயநலத்தோடு நாம் பசுமையை மறந்து, கான்க்ரீட் காட்டுக்குள் வாழப் பழகிவிட்டோம். பசுமை இப்போது புதிதாய் கட்டப்பட்ட வீட்டுச் சுவறில் வாஸ்து பரிந்துரைத்த வண்ணமாகத்தான் இருக்கின்றது.

போட்டியும், ஏக்கமும், ஆற்றாமையும் நம்மை வேகமாக ஓடத் தூண்டுகிறது. உலகம் , உலக வெப்பமயமாதல் பற்றிய கவலை எல்லாருக்கும் இருந்தாலும், வெளிக்காட்ட முடியாத சூழலில் நம் வாழ்க்கை நம்மை அழைத்துச் செல்கிறது.வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும், ஓடிக்கொண்டே இருக்கின்றோம், நம் ஓட்டத்திற்கு விஞ்ஞானம் வேகமாய் வழி காட்டுகிறது, அதன் விலையோ நம் இயற்கை.   

ஆமால்ல, ஒரு காலத்துல எங்க வீட்டுல, தோட்டத்துல பசுமையா இருந்துச்சு... அப்ப எங்க வீட்டு முன்னாடி ரெண்டு பெரிய வேப்ப மரம் நின்னுச்சு.... இந்த இடமெல்லாம் ஒரே பசுமையா இருந்துச்சு என்கிற ஏக்கத்துடனே வாழ்க்கையை அதன் போக்கில் ஒத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளுக்கு நேரில் காட்ட முடியாமல், சொல்லக் கூடிய கதைகளாய் மாறிப்போச்சு நாம் வாழ்ந்த இயற்கை ஒத்த வாழ்வு.


என்ன செய்யலாம்... வீடுகளை இடித்து விட்டு மரங்களை நட்டு, சிறு குடிசை போட்டு வாழ்ந்து விடலாமா என்றால், என்னைத் தூக்கிப் போட்டு எத்தி விடுவீர்கள்.... வேறென்ன செய்யலாம்.... நம்முடைய தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது... தேவை மிஞ்சிய தேடலில் நம்மை விழுங்கும் நிழல்களாய் நம்முடைய எதிர்பார்ப்புகள் இந்த வாழ்க்கையின் மேல் பெருகிக் கொண்டே இருக்கின்றது.  என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என சிந்தித்திக் கொண்டிருக்கும் வேளையில், நம்மில் சிலர், நம் நாட்டைச் சேர்ந்தவர்கள், என்ன செய்திருக்கிறார்கள் என்பதையும் சற்றுப் பார்ப்போமா!?

இவர்களைப் பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள், இருந்தாலும் பகிர்ந்து கொள்கிறேன்.

திம்மக்கா...

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு வயது இப்பொழுது 80 ஆகிறது, இவரது கணவர் பெயர் சிக்கண்ணா. இவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லை. இதன் பொருட்டு உற்றார் உறவினர்களின் அவதூறுப் பேச்சுகளால் மனம் நொந்து போயிருந்த திம்மக்கா, தனது 28 வயதில் தனது கூதூர் கிராமத்தின் சாலையின் இரு மருங்கிலும் ஆல மரத்தை நட்டு இருக்கிறார். ஆனால் அப்பொழுது அந்த ஊரில் தண்ணீர் அவ்வளவாக கிடைக்கவில்லையாம். அதற்காக நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி மரங்களைப் பிள்ளைகள் போல பேணி வளர்த்திருக்கிறார். பின்பு ஊரிலேயே சில குட்டைகளை உருவாக்கி, மழைத் தண்ணீரை சேமித்து மரங்களுக்கு ஊற்றி வளர்த்திருக்கிறார் கடந்த ஐம்பது ஆண்டுகளாக.


அவரைப் பெருமைப்படுத்தும்விதமாக, சுற்றுச்சூழலின் நண்பன் என்ற விருதை அமெரிக்கா அவருக்கு வழங்கியிருக்கிறதாம், அது போக மேலும் பல விருதுகளை வாங்கியிருக்கிறாராம். கர்நாடக அரசு அவருக்கு உதவித் தொகையாக மாதம் ரூ500 வழங்கி, பெங்களூருவில் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் வழங்கியிருக்கிறதாம். தன்னுடைய கணவர் சிக்கண்ணா இறந்து பிறகும், கூதூரில் இருக்கும் என் பிள்ளைகளாகிய மரங்களை விட்டு வர இயலாது என்று கூறி பெங்களூரு வீட்டை அரசிடமே திருப்பி கொடுத்து விட்டு, கூதூரிலேயே அரசின் ஓய்வூதியத்தோடு வாழ்ந்து வருகிறாராம்.

திம்மக்காவின் பிள்ளைகளாகிய மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாய், அரசுக்குச் சொந்தம். எப்பேர்பட்ட தன்னலமற்ற சேவையை இந்த நாட்டிற்கு வழங்கியிருக்கிறார் என்று நாமும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தச் சுற்றுச் சூழலுக்கு ஒரு மரம் கூட நாம் இதுவரை நாம் வளர்க்காத வேளையில் ஒரு தாய் எத்தனை மரங்களை வளர்த்து பராமரித்திருக்கிறார், அவரால் கூதூர் கிராமம் இன்று குளுமையாக இருக்கின்றது. அந்தத் தாயுள்ளம் வாழ்க.

மேலும் தகவல்களுக்கு இவரைப் பற்றி இணையத்தில் தேடலாம்...


ஜாதவ் பயேங்:


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாதவ் பயேங் என்பவர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறாராம். 1979 ஆண்டு பிரம்புத்திரா ஆற்றில் வந்த  வெள்ளம் வடிந்த பிறகு, அங்கு பல ஊர்வன பறப்பன இறந்து கிடந்திருக்கின்றன. மரங்கள் இல்லாத்தால் வெப்பத்தால் இந்த உயிரினங்கள் அழிந்தன என்று அறிந்த அவர் வனத்துறையை அணுகி விசாரித்ததில் மணல் படுகையில் மரங்கள் வளராது, மூங்கில் மரங்களை வேண்டுமானால வளர்க்க முயற்சி செய்யலாம் என்று கூறியிருக்கின்றனர்.



அப்போது அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் 200 ஹெக்டேர் மணற்படுகையில் சமூக காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரம் வளர்க்கும் பணியில் இவரும் இணைந்திருக்கிறார். பணி முடிந்து அனைவரும் திரும்பியதும், இவர் மட்டும் அனுமதி கேட்டு அங்கேயே தங்கியிருந்திருக்கிறார். பின்பு மற்ற மரங்களை வளர்க்க முயற்சித்திருக்கிறார், மணல் ஏதுவாக இல்லாததால்,  தன் கிராமத்தில் சிவப்பு எறும்புகளை கொண்டு வந்து அங்கே விட்டிருக்கிறார்.  சிவப்பு எறும்புகள் மண்ணின் தன்மையை செழிப்பாக மாற்றுமாம். பின்பு அங்கு பல மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். இப்பொழுது 300 ஹெக்டேர் பரப்பளவில் பெரும் காடாக மாறியிருக்கிறது அந்த இடம். பல பறவைகளும் விலங்குகளும் வாழுமிடமாக மாறியிருக்கிறது.

வாழ்க ஜாதவ் பயேங்.

மேலும் தகவல்களுக்கு இவரைப் பற்றி இணையத்தில் தேடலாம்...


வெளியூர்க்காரங்களா சொல்லிக்கிட்டு இருக்கேனா? நம்ம ஊரு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எவ்வளவோ கண்டுபிடிச்சு சொல்லியிருக்கார்



அவரைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். அவர் சொன்னதில் ஒரு கருத்தை மட்டும் இங்க சொல்லிக்கிறேன். அதாவது,
ஒவ்வொருத்தரும் பிள்ளை மாதிரி ஒரு மரமாவது வளருங்கள்.” இன்னும் இவர் சொல்லும் இயற்கை விவசாயம், உணவு முறை என பல கருத்துக்கள் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன. நேரம் கிடைத்தால் தேடிப் பாருங்கள்

மேலே கூறிய மூவரைப் பற்றியும் செய்தித்தாள்களில் படித்தவற்றை தங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.


நாம் என்ன செய்யப் போகிறோம்:

சரி, இவர்கள் செய்ததைப் பார்த்தோம், நாம் என்ன செய்யப் போகிறோம். இவர்களைப் போல மரங்களோ, காடுகளோ நம்மால் உருவாக்க முடியுமா?
பெரிய கேள்வி தொக்கி நிற்கிறது! இயற்கையைப் பேணி காக்க நம்மால் இயன்றதை நேரடியாகவே மறைமுகமாகவோ செய்யலாம்.  

இந்த மாதிரி நம் வசிக்கும் கட்டிடம் முழுவதும் மரம் வளர்க்க முடியாவிட்டாலும்



நம் வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு இடத்தில், இடமிருந்தால் ஒரு மரத்தை வளர்க்கலாம்... மரம் வளர்க்கும் அளவுக்கு இடமில்லையா? ஒரு செடியையாவது வளர்க்கலாம்... தொட்டிகளில் செடி வளர்க்கலாம்... இது ஒரு பொழுது போக்காகவும் இருக்கும், ஒரு நல்ல மன அமைதியையும் கொடுக்கும். அலுவலகம் கிளம்பும் முன், வேலை முடிந்து வந்த பின்பு அல்லது ஓய்வு நேரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, செடியையோ மரத்தையோ சுற்றிப் பார்க்கும் போது ஒரு வித மகிழ்ச்சி கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

இது எதுவும் செய்ய இயலவில்லையா? சரி இன்னொன்று செய்யலாம் வாருங்கள். அவ்வப்போது திடீரென சில சமூக ஆர்வலர்கள் எதாவது ஒரு திட்டத்தின் கீழ் ஆங்காங்கே மரங்களை நட்டு, அதை ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டு, பின்பு அதைச் சுற்றி கம்பி வலை போட்டு விட்டு, அன்றோடு மறந்து போயிருப்பார்கள். ”மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவானுஅந்த மரமும் ஏங்கித் தவித்து கடைசியில் கருகிப் போகும். சுற்றிப் போடப்பட்டிருந்த கம்பி வலை எங்கோ ஒரு பழைய இரும்புக் கடையில் கிடக்கும். அது போல பராமரிப்பாரற்றுப் போன மரங்களையோ செடியையோ கண்டால் நம்மால் இயன்றளவுக்கு நாள்தோறும் தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம்.

அடப்போங்க, இதெல்லாம் எங்க போய் தேடுறதுனு நினைச்சா, இன்னொன்னும் செய்யலாம்... மறைமுகமாக மரம் வெட்டுவதைத் தடுக்கலாம். அலுவலகத்தில் ப்ரிண்டர் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எதை எடுத்தாலும் பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்குவதை தவிர்க்கலாம். இப்பொழுது எல்லா கோப்புகளையும் கைபேசியில் அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து நிற்கிறது. கணினி மயமான உலகத்தில் எலக்ட்ரானிக் கோப்புகளை பாதுகாக்க, பல ஜிபி (Gigabyte) கொள்ளவு கொண்ட USB Flash Drive கள் கிடைக்கின்றன. காகிதங்களில் பிரதி எடுக்காமல் வேண்டுமானவற்றை இவற்றில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். .

அதற்கும் மேலாக மேகத்திலும் சேமித்து வைக்க தொழில்நுட்பம் துணைபுரிகிறது, என்னங்க குழம்பிட்டீங்களா, Cloud Storage தொழில்நுட்பத்தைச் சொன்னேன். இன்றைய தகவல் தொழில்நுட்பம் அளிக்கும் இந்தச் சேவையை பயன்படுத்தி மேலே மேகத்தில் ஏற்றி வைத்து விட்டு, வேணுங்கிறப்ப இறக்கிப் பார்த்துக் கொள்ளலாம் :-). காகிதங்களை வீணாக்க கூடாது என்பதை அறிவுறுத்துவதற்காகவே இப்பொழுது அலுவலக மடல்களின் சிக்னேச்சரில் P Think GREEN - Natural resource isbalanced on our planet, do not consume more than required - be considerate & rational inuse !! இது போன்று சேர்த்துக் கொள்கிறோம். தயவுசெய்து காகிதங்களை வீணாக்காமல், தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோம்.

மரம் வளர்ப்பை மற்றும் பேசுகிறேனே, தண்ணீரைப் பற்றி பேசவில்லை என்று நினைக்கிறீர்களா... மரம் வளருங்கள்... தண்ணீர் தானா வரும்....

இயற்கையைப் பேணுவொம்...

மரம் வளர்ப்போம்....

அலுவலகங்களில் தேவையில்லாமல் பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்....

அடுத்த பதிவில் நீர் வளம் மற்றும் பாதுகாப்பைப் பற்றிப் பார்க்கலாம்..



அனைவருக்கும் நன்றி....

(நன்றி: அனைத்துப் படங்களும் இணையத்தில் இருந்து)

Saturday, September 8, 2012

உணவு வகைகள் -- பார்பிக்யூ: (Barbecue, BBQ)...



                   வாங்க உணவு வகைகள் தொடரில் பார்பிக்யூ சிக்கன் & மட்டன் பற்றிப் பார்ப்போம்...
பெரும்பாலும் குளிர்காலம் தொடங்கி விட்டால் பார்பிக்யூ செய்து சாப்பிடுவது அதிகம்... இறைச்சியை நன்கு (அவரவர் விருப்பத்திற்கேற்ப) தேவையான பொருட்கள் கலந்து, நெருப்பில் சுட்டு சாப்பிடுவதுதான் பார்பிக்யூ... என்ன பழங்காலத்துக்கு போயிட்டோம்னு பார்க்கிறீங்களா... அதான் உண்மை... பச்சையா சுட்டு சாப்பிட்டோம்... இப்ப கொஞ்சம் மசாலா கலந்து சுட்டுச் சாப்பிடுகிறோம்... :-)

பார்பிக்யூவின் பிறப்பிடம் எந்த நாடுனு தெரியல... எல்லா நாட்டையும் சொல்லலாம்... ஏன்னா எல்லாரும் ஒரு காலத்தில் சுட்டுத்தானே சாப்பிட்டிருப்போம்.... :-) ஆனா இங்க அமீரகத்தில் இதுவும் பிரபலமான உணவு வகை. இங்குள்ள பூங்காங்களிலும், சில கடற்கரைகளிலும் பார்பிக்யூ செய்ய அனுமதி உண்டு. அரேபியர்கள்,வெள்ளைக்காரர்கள், பிலிப்பினோக்கள் மற்றும் இந்தியர்கள்தான் அதிகம் பார்பிக்யூ செய்வதை நான் பார்த்திருக்கிறேன். 

அடுப்பு:

இதற்கென்றே பல விதமான அடுப்புகள், ஒவ்வொரு அளவிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. சுமார் 30 திராம்ஸ் மதிப்புள்ள சிறிய அடுப்பிலிருந்து, 

விலை அதிகமுள்ள மின்சார அடுப்புகள் வரை பல விதங்களில் கிடைக்கின்றன.


என்னதான் மின்சார அடுப்புகள் இருந்து வீட்டில் செய்து சாப்பிட்டாலும், இந்த பார்பிக்யூ வகை உணவுகளை பூங்கா அல்லது கடற்கரைக்கு சுற்றுலா போல, ஒரு விடுமுறை நாளில், நண்பர்களின் குடும்பத்துடன் சென்று செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

ஏனென்றால் இதைத் தயாரிக்க அதிக நேரம் எடுக்கும்... நிறைய நேரம் செலவிடலாம்... குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பேசி பொழுதைக் கழிக்க நன்றாக நேரம் கிடைக்கும்... 
எப்படினு பார்க்கலாம்... வாங்க....

தேவையான பொருட்கள்:

அடுப்பு
சிக்கன் & மட்டன் இறைச்சி (அவங்கவங்க விருப்பம் போல :-), ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே தேவையான மசாலாக்கள் கலந்து ஊற வைத்து விட வேண்டும் அல்லது  சூப்பர் மார்க்கெட்டுகளில் தயாராகவே கிடைக்கும், வாங்கிக் கொள்ளலாம். 

சார்க்கொல் (நிலக்கரி)  


நிலக்கரியைப் பத்த வைக்கிற சூடம் மாதிரி ஒரு பொருள்.



இவற்றையெல்லாம் எடுத்துட்டு கிளம்ப வேண்டியதுதான்.

பொதுவாக இங்கே சில பூங்காங்கள் மற்றும் கடற்கரைகளில் பார்பிக்யூ அனுமதிக்கப்பட்டிருக்கும். அங்கெல்லாம் இது போல நிலையான பார்பிக்யூ அடுப்புகள் ஆங்காங்கே அமைத்திருப்பார்கள். 

நாம் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளலாம். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஏற்கனவே யாராவது பார்பிக்யூ செய்து விட்டு, கங்கோடு விட்டுட்டு போயிருப்பார்கள். இல்லையென்றால் முதலிருந்து நாம், நிலக்கரியை எரித்து கங்கு உருவாக்க வேண்டும்.


இனிதான் ஆம்பிளைகளுக்கு வேலை ஆரம்பிக்கும்....  

நிலக்கரியை அடுப்பில் போட்டு, அந்த சூடம் போன்ற பொருளை எல்லாப் பக்கமும் உதிர்த்து விட்டு(நன்றாக எரிவதற்கு துணை புரியும்), மண்ணெண்ணை  போல ஒரு எண்ணெய் இங்கு கிடைக்கிறது, அதை எல்லாப் பக்கமும் ஊற்றி, நெருப்பு பற்ற வைத்து, சிறிய விசிறி அல்லது தட்டினால் வீசிக் கொண்டே இருக்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் நல்ல கங்காக மாறும். 


நிலக்கரியை கங்காக மாற்றுவதற்குள் பார்பிக்யூவே வேணாம், எங்கயாவது போய் ஒரு ஷவர்மா வாங்கி சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போயிடலாம்னு தோனும். :-) ஆனாலும் மனம் தளராம போராடி வெற்றி பெறணும். 

இதற்கிடையில் பெண்கள், இறைச்சியை ஒரு குச்சி அல்லது கம்பியில் குத்தி இப்படி தயார் பண்ணிக்கிட்டு இருப்பாங்க....


நிலக்கரி கங்காக மாறியதும், இந்த குச்சியில் கோர்க்கப்பட்ட இறைச்சியை இவ்வாறு சுட்டு எடுக்க வேண்டியதுதான். வேக வேக பக்கத்தில் நின்று கம்பியை சுற்றி எல்லாப் பக்கமும் வேக வைக்க வேண்டும். இதோ சுவையான சுட்ட கறி தயார். 



சுடுபவர்களுக்கான ஒரு எச்சரிக்கை:

இதைச் செஞ்சுக்கிட்டு இருக்கும் போதே, சுடச் சுட ஒவ்வொருத்தரா வந்து எடுத்துச் சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க... நாம கடைசில சாப்பிடுவோம்னு சொல்லிட்டு, கடமையே கண்ணாகி, சுட்டுக்கிட்டே இருந்தீங்கன்னா, கடைசில ஒன்னும் கிடைக்காது...  அதனால சுட்டுக்கிட்டு இருக்கும் போதே, அப்பப்ப நாமளும் சாப்பிட்டுக் கொள்ளணும் :-)


அடுத்து மண்டி பிரியாணி மற்றும் சில உணவுகள்...................

தொடர்ந்து வாருங்கள்...............

Friday, September 7, 2012

உலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய்




அனைவருக்கும் வணக்கம்...

இதுவரை துபாய் பார்க்காதவங்களுக்காகவே இந்தப் பதிவு... ஏற்கனவே துபாய் பார்த்தவர்களும் சும்மா படிச்சுப் பாருங்க...

துபாய்:

ஏழு அமீரகங்கள் இணைந்துதான் ஐக்கிய அரபு அமீரகங்கள் (United Arab Emirates) என்கிற நாடு. இதில் துபாய் என்பது இரண்டாவது பெரிய அமீரகம்.
ஏழு அமீரங்கள் என்பன, அபுதாபி (தலைநகரம், பெரிய அமீரகம்), துபாய், சார்ஜா, ரஸ் அல் கைமா, உம் அல் குவைன், அஜ்மான் மற்றும் ஃபுஜைரா.
உள்ளூர்க்காரர்கள் துபாயை  துபை என்று உச்சரிக்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் டுபாய் என்று உச்சரிக்கிறார்கள். பல விதமான கலாச்சாரங்கள், இன மக்கள் இணைந்து வாழும் இடம் துபாய்.

சரி, இப்ப நாம பார்க்கப் போறது சில சிறப்பான தகவல்கள்... "உலகிலேயே" என்ற சொல் ஒன்று இருக்கிறது. அது அதிகமாக பயன்படுத்தப்பட்டது துபாயில்தான் என்று சொல்லலாம். :-) உலகிலேயே நீளமான, உயரமான, பெரிய என்று பல சிறப்பானவைகள் துபாயில் இருக்கின்றன. இதுவரை சுமார் 102 கின்னஸ் சாதனைகளை UAE படைத்திருக்கிறது என்றொரு தகவல் இருக்கின்றது.

அவற்றில் சில சிறப்பானவைகளை இங்கு பார்ப்போம்...

தொடங்குவதற்கு முன்பு துபாய்ல பஸ் ஸ்டாண்ட் இருக்கு எனபதை தெரிவித்துக் கொள்கிறேன். என்னமோ உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டு மாதிரி சொல்றேனு வடிவேலு மாதிரி கேட்கக்கூடாது. ஒரு தகவலுக்காகச் சொல்றேன். துபாயின் அல் குபைபா பஸ்ஸ்டாண்ட் என்பது பர் துபாய் எனும் இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து துபாயிலுள்ள இடங்களுக்கும் மற்ற அமீரகங்களுக்கும் பேருந்துகள் கிடைக்கும். அங்க ஒரு காஃபிட்டேரியா இருக்கு, அங்க மாலை வேளைகளில் சூடான பஜ்ஜி, சமோசாலா போட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். அப்படியே நம்மூரு பஸ்ஸ்டாண்ட் மாதிரி ஒரு உணர்வு வரும். 

துபாய் பஸ்:

முழுவதும் ஏர் கண்டிசன் செய்யப்பட்ட பேருந்து
பேருந்தினுள் பெண்கள் குழந்தைகளுக்கு தனியாக ஒரு பகுதி உண்டு. 
மாற்றுத்திறனாளிகளூக்கான சிறப்பு வசதிகள்.

என எல்லா வசதிகளும் உண்டு. டிக்கெட் எடுப்பதற்கு 09.09.2009 முதல் ஸ்மார்ட்கார்ட்தான் பயன்படுத்துகிறோம்.  பின்பு இந்த முறை பற்றி விரிவாக எழுதுகிறேன்.

இதான் துபாய் பஸ்... பாருங்க...
(படம் இணையத்திலிருந்து)




சரி, இனி ”உலகிலேயே” என்ற சொல் பற்றி பேசுவோம். 

க்ரேன்(Crane): 

துபாய் மிக வேகமா வளர்ந்து வரும் அமீரகம். உலகிலுள்ள கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் பொறியாளர்கள் தங்களுக்கு என்னென்ன கற்பனையில் தோன்றியதோ, அத்தனை வடிவங்களையும் இங்கு கட்டிடங்களாக கட்டி வைத்திருக்கிறார்கள். அழகழகான கட்டிடங்கள், எங்கு பார்த்தாலும், கண்ணாடிச் சுவறால் சூழப்பட்ட அழகான கட்டிடங்கள்.  இந்தக் கட்டிடங்கள் கட்டுவதிலேயே ஒரு சாதனை இருக்கின்றது. உயரமான கட்டிடங்கள் கட்டுவதற்கு க்ரேன் என்ற கருவியைப் பயன்படுத்துகிறார்கள். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த செய்திப் படி, உலகிலுள்ள 125000 க்ரேன்களில், 30000 க்ரேன்கள் அதாவது 24 % க்ரேன்கள் துபாயில் பயன்படுத்தப்பட்டு வந்ததாம். இதுவே சொல்லும், எந்தளவுக்கு கட்டுமானப் பணிகள் இங்கு நடந்து கொண்டிருக்கின்றன என்று.

(படம் இணையத்திலிருந்து)


இத்தனை க்ரேன்கள் வைத்து கட்டிடம் கட்டுகிறார்கள் என்றால் அதிலும் ஒரு சாதனை வேண்டுமல்லவா.... வாருங்கள் பார்க்கலாம்...


இன்றைக்கு உலகிலேயே உயரமான கட்டிடம் புர்ஜ் கலீஃபா ; மொத்தம் 828 மீட்டர் (2,716.5 அடி) உயரம்,  160 மாடிகள் கொண்ட கட்டிடம்.
உலகிலேயே அதிமான மாடிகள் உள்ள கட்டிடம்
உலகிலேயே அதிக தூரம் பயணம் செய்யும் லிஃப்ட் உள்ள கட்டிடம்
இப்படி பல சிறப்புகள் உள்ள கட்டிடம் புர்ஜ் கலீஃபா. 

புர்ஜ் கலீஃபா கட்டப்பட்ட போது எடுத்த படம்(இணையத்திலிருந்து)




இப்ப புர்ஜ் கலிஃபா இப்படி அழகாக காட்சியளிக்கிறது.  என் நண்பர் நௌஃபல் எடுத்த படம் இது.



இந்த புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் 124 மாடிக்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். முன் கூட்டியே ஆன்லைனில் பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

அடுத்து 
துபாய் மால்:


......................................




(தொடர்ந்து வாருங்கள், நன்றி)



Sunday, September 2, 2012

தமிழ் இனி மெல்லச் சாக வேண்டாம்... பண்ணியைத் தொலைப்போம்...


அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் இனி மெல்லச் சாவதற்கு நம்முடைய பிறமொழி மீதான ஈர்ப்பு, தமிழ் மொழியில் உள்ள சொற்கள் பற்றிய அறியாமை அல்லது பேச கூச்சமாய் கருதுவது!?! என அவரவர் சிந்தனைக்கேற்ப சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று இணையத்தின் அளவிட முடியாத வளர்ச்சியில் எத்தனையோ நல்லதும் கெட்டதும் இருந்தாலும், நம் தாய்மொழி சார்ந்த பங்களிப்பில் இணையத்தின் பங்கு ஒரு பெரும் பலமாகவே இருக்கின்றது. ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒரளவுக்குப் படித்த இளைஞனிடம் தமிழ் , எழுத்தாளர்கள் பற்றிக் கேட்டால் குறிப்பிட்டு ஒரு நாலைந்து பெயர்களை சொல்லியிருப்பான். ஆனால் இன்றோ, இந்த இணையத்தின் பெரும் வளர்ச்சிக்குப் பின், எண்ணிலடங்கா எழுத்தாளர்கள் இணையம் முழுவதும் விரவிக் கிடக்கிறார்கள். 

ஒவ்வொருவரும் இணையத்தில் ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொண்டு, தான் கண்டது, கேட்டது, சிந்தித்தது, கற்பனையில் கருவாக்கியது,புறம் பேசுதல் என அனைத்தையும் எழுதி வைக்க தொடங்கிட்டாங்க.... இணையத்தில் எழுத இலவசமாக பல தளங்கள் கிடைப்பதால், என்னை மாதிரி ஆட்களும், தங்களுக்காக ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொண்டு,பதிவுகள் என்ற பெயரில் எதை எதையோ எழுதி வைத்துக்கொண்டு உங்களை படிக்கச் சொல்லி கொடுமைப் படுத்துகிறார்கள் :-)  எது எப்படியோ இது ஒரு நல்ல வளர்ச்சி...

தமிழ் மெல்லச் சாவதற்கும், இப்ப நான் உளறுவதற்கும் என்ன தொடர்பு என நினைக்கிறீர்களா? இதோ வந்துட்டேன்... 

செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி, எங்கள் தாய்மொழி...

தாய்மொழி தமிழ்மொழி என்று சொன்னதுமே நம் மயிர்க்கால்கள் கூச்செறியும்... ஒரு வித பெருமை நம்மை ஆட்கொள்ளும்...திருவள்ளுவர், பாரதியார்லாம் கண்ணுக்கு முன்னால வந்து நிப்பாங்க... உலகத்துல உள்ள பழமையான மொழிகளில் நம்ம தமிழ்மொழி ஒன்று... கல்தோன்றி மண் தோன்றா காலத்தே.... அப்படி இப்படினு பேச ஆரம்பிச்சிருவோம்.... அப்பப்ப தமிழ் மொழியில் எண்கள்... அறிவியலில் நம் முன்னோர்கள்... அந்த அடர்ந்த காட்டுக்குள் கோயிலைக் கட்டியது நம் தமிழன், தமிழர்களின் கட்டடக் கலை அப்படி இப்படினு பல இடங்களில் படங்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்வோம். 

இது ஒரு பெருமை பாராட்டும் நல்ல உணர்வு, நம் இயல்பு என்றும் சொல்லலாம்... நானும் பெருமையாகச் சொல்லிக் கொண்டும் இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்டும் இருக்கிறேன் இன்று வரை.... இது போக அடுத்த மொழிக்காரன் நமக்கு தீங்கு ஏற்படுத்துகிறான் என்ற புலம்பல்களும் அவ்வப்போது வந்து போகின்றன... 

நாம் இன்று பேசும் இயல்பான பேச்சு வழக்கில், பாதிக்குப் பாதி என்று கூட சொல்லலாம், ஆங்கிலம் கலந்து விட்டது.... நமக்குள்ளே பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு வேளை உணர்ச்சி வசப்பட்டால் திடீரென ஆங்கிலம் வந்து குதிக்கிறது, அதுவரை தமிழில் பேசிக்கொண்டிருந்தவர்கள் திடீரென, ”I don't know how to explain” என்கிறார்கள், விளக்கமளிக்க தமிழ் மொழியில் சொற்களுக்கு பஞ்சமோ என்னமோ தெரியவில்லை.

ஆகா, உடனே நான் ஆங்கிலத்துக்கு எதிரி என்று நினைத்து விட வேண்டாம்... ஆங்கிலம் அல்லது எந்த மொழியாக இருந்தாலும் நமது கருத்தை அடுத்தவரிடம் சென்று சேர்க்க உதவுமானால் நல்லதுதானே.... ஆகவே ஆங்கிலத்திற்கோ அல்லது வேறு எந்த மொழிக்குமோ எதிர்ப்பாக இதை இங்கு நான் எழுதவில்லை. தமிழர்களாகிய நாம், நமக்குள்ளே பேசும் போது முடிந்தளவு ஆங்கிலத்தையோ, வேறு எந்த மொழியை வேண்டுமென்றே கலப்பதை தவிர்க்கலாமே என்ற ஒரு வேண்டுகோளாய் இந்தப் பதிவு. எண்ணற்ற சொற்கள் நம் தமிழில் இருக்கும் போது, அடுத்த மொழியின் உதவி நாடி நம்மையறியாமலே நாம் ஏன் நிற்க வேண்டும் என்றொரு கேள்வி.

உடனே petrol, car, plastic, auto rickshaw, bakery, train, rocket, facebook,  போன்றனவற்றிற்கு தமிழ்ப்பெயர்களை உருவாக்கி அல்லது கண்டறிந்து அவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள பெரும்பாடு படவேண்டாம்... மேலும் அவற்றை தமிழ்ப் படுத்தும் போது, அந்தப் பெயர்கள் சரியாகப் பொருந்தாமல் எதோ உறுத்தலாகவே இருக்கின்றன.

பொதுவாக பெயர்ச்சொற்கள் ஒவ்வொரு நாளும் இந்த அறிவியல் உலகத்தில் புதியதாய் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் வினைச்சொற்கள் எல்லாம் பெரும்பாலும் பழமையானதுதானே.... 

எடுத்துக்காட்டாக கீழே உள்ளவற்றை கொஞ்சம் பாருங்களேன். நம்மில் பெரும்பாலானோர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். என் நினைவுக்கு வந்த வரை, பொதுவாக நாம் ஆங்கிலம் கலந்து பேசும் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை இங்கு தந்திருக்கிறேன்.

use பண்றேன் - பயன்படுத்துகிறேன்
face wash பண்ணிட்டு வாரேன் - முகம் கழுவிட்டு வாரேன்
happy  - மகிழ்ச்சி
taste ஆ இருக்கு - சுவையா இருக்கு
try பண்றேன் - முயற்சி செய்கிறேன்
call பண்றேன் - கூப்பிடுறேன், அழைக்கிறேன்
stop பண்ணிட்டேன் - நிறுத்திட்டேன்
send பண்ணிட்டேன் - அனுப்பிட்டேன்
create பண்ணேன் - உருவாக்கினேன்
sharp பண்ணேன் - தீட்டினேன், கூர்மையாக்கினேன்
rest  எடுக்கிறேன் - ஓய்வெடுக்கிறேன்
smell நல்லாயிருக்கு - மணம் நல்லாயிருக்கு
mix பண்ணு  - கலந்து விடு
mail receive ஆனதும் - மெயில் கிடைச்சதும்
think பண்றேன் - சிந்திக்கிறேன்
search பண்றேன் - தேடுகிறேன்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... நீங்களும் கொஞ்சம் சிந்திச்சு பாருங்க, எந்தளவுக்கு அடுத்த மொழியை நம் தமிழில் கலக்கிறோம் என்று... நண்பர்களே, தயவுசெய்து முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள்...

இதுல எல்லாம் பார்த்தீங்கன்னா, பிற மொழியை கலப்பதற்கு ஏதுவாக”பண்ணி” என்பது வினைச்சொற்களுக்கு அடுத்து வந்திருக்கும்... இந்தப் பண்ணியைத் தொலைத்தால் தமிழில் பிற மொழி கலப்பதை கொஞ்சமாவது தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.

இதுவரை படித்ததில் ஏதேனும் பிழையிருப்பின், தமிழறிஞர்கள் தயவுசெய்து பொருத்தருளவும்.


தமிழர்களாகிய நாம் நமக்குள் பேசும் போது முடிந்தளவு தமிழில் பேசுவோம்.

அனைவருக்கும் நன்றி.

தாஞ்சூர்

அவரை ஏற்கனவே இரண்டு முறை பார்த்திருக்கேன்....  பேசியிருக்கேன்.... 
ஒரு புது ப்ராஜக்ட் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இன்னைக்கு மறுபடி சந்திக்கிறோம்....

வணக்கம் சுந்தர் சார்...

ஹான். யெஸ்... பாலாஜி வணக்கம்...

வேலைலாம் எப்படி சார் போயிட்டுருக்கு....

ம்ம்... ஃபைன்.... ஸ்மூத் கோய்ங்...

எவ்ளோ நாளா சார் துபாய்ல இங்க இருக்கீங்க....

மோர் தென் செவன் யியர்ஸா இருக்கேன்... ஹௌ அபவுட் யூ....

மூனு வருசமா இருக்கேன் சார்....

இன்னைக்கு மீட்டிங் எப்படி சார் இருக்கும்....

அஸ் யூசுவல்... போரிங் ...பட் வித் நைஸ் காஃபி

ஹா ஹா ஹா!!!

(ஒரு வழியாக மீட்டிங் முடிந்த பிறகு, மீண்டும் அவரிடம் பேச வேண்டியிருந்தது)

அடுத்து இப்ப நான் என் சைடில் இருந்து என்ன சார் செய்யணும்?

யு டு ஒன் திங்,  ஃபர்ஸ்ட் செண்ட் தோஸ் ஃபைல்ஸ்... அண்ட் ஹேவ் எ கன்ஃபர்மேசன் வித் அவர் டீம் ... அப்புறம் ஐ வில் சீ டு இட்...

ஓகே சார்... அனுப்பிடுறேன்... கிளம்புறேன் சார்.... 

சீ யூ மேன் பை....

சார் ஒரு விசயம் ....

சொல்லுங்க ...

நீங்க எந்த ஊரு சார்....

தாஞ்சூர்....

பை சார்....