Wednesday, November 14, 2012

சைக்கிள்காரர் வீடு....







அப்பாவுக்கு வேலை மாற்றலாகி ஒரு கிராமத்திற்கு அருகில் இருக்கும் தொழிற்சாலையில், எஞ்சின் தயாரிப்பு பிரிவில் உற்பத்தி பொறியாளாராக பணி நியமனம் செய்திருந்தார்கள்... பிறந்ததிலிருந்து பனிரெண்டு ஆண்டுகள் வரை நகர வாழ்க்கை வாழ்ந்திருந்த எனக்கு ஒரு கிராமத்திற்குப் போகிறோம் என்ற எண்ணமே ஒரு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது... அப்பா முதலில் பயந்தார், மகன் அடம்பிடிப்பானோ, கிராம வாழ்க்கை பிடிக்குமா என்றெல்லாம்... ஆனா எனக்கோ கிராமம்னா எப்படி இருக்கும், புது இடம், பள்ளிக்கூடம் என்றெல்லாம் புதிய இடம் பற்றிய சிந்தனைதான்...

வேலைக்கு சேர வேண்டிய ஒரு வாரத்திற்கு முன் நானும் அப்பாவும் அந்தக் கிராமத்திற்குப் போனோம் தங்குவதற்கு வீடு தேடி... காலையில் பேருந்து ஓர் இடத்தில் எங்களை இறக்கி விட்டுச் சென்றது. பேருந்து இறக்கிவிட்ட இடத்திலிருந்த பெரிய ஆலமரத்தடியில் நின்று கொண்டிருந்த சிலர் அவர்களாகவே வந்து எங்களிடம் பேசினார்கள்...

நாங்கள் அணிந்திருந்த பேண்ட் சட்டையை அவர்கள் வெறித்துப் பார்ப்பது போல எனக்குத் தோன்றியது.... அப்பா எங்களைப் பற்றிய விவரம் சொல்லி வீடு வாடகைக்கு பார்க்க வந்திருக்கோம் என்று சொன்னதும் அவர்கள் பேச்சில் மரியாதை மேலும் கூடியது.... சார்வுக தான் எஞ்சின் பேட்டரிக்கு அதிகாரியா வந்திருக்காகனு அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். 

”சார் 2 மைல் நடந்து போகணும்... ஊருக்குள்ள போறதுக்கு பஸ்லாம் இல்லங்க சார்...”
.
”இந்தப் பாதையில நடந்து போயிட்டே இருங்க சார், சந்தைக்குப் போன வண்டிக இப்ப ஊருக்கு திரும்பி வந்துரும், அதுல ஏறிக்கலாம்” னு சொன்னாங்க....

2 மைல்னா எத்தனை தூரம்னு எனக்கு அப்ப தெரியல....அவர்கள் காட்டிய செம்மண் சாலையில் நடக்க ஆரம்பித்தோம்... மழைக்காலமாக இருந்ததால் ஆங்காங்கே செம்மண் சகதியாகவும் இருந்தது... பேண்ட்டை கொஞ்சம் மடக்கிவிட்டு கவனமாக நடந்தோம்...



ஆலமரத்தடியில் இருந்து ஒருத்தர் சத்தமாக கூப்பிட்டார்.... ”சார்........”

ரெண்டு பேரும் திரும்பி பார்த்தோம்...

”சைக்கிள்காரர் வீட்டுக்கு போகணும்னு கேளுங்க சார் , ஆருனாலும் வழி சொல்லுவாக”

அப்பா பதிலுக்கு சரினு சொல்லிட்டு என் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்....

சைக்கிள் காரர் வீடா? வீடு முழுவதும் சைக்கிள் வச்சிருப்பாரோ? இல்லனா சைக்கிள் கடை எதுவும் வச்சிருப்பாரோ !? நிறைய சைக்கிள் இருந்தா அப்பாவ எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரச் சொல்லணும்னு என மனதுக்குள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்க....

அப்பா பேசிக்கிட்டே வந்தார்.... தம்பி.... இருக்கப் போற இடம் பிடிக்குதோ பிடிக்கலையோ.... இனிமேல் இங்கதான் இருக்கணும்... அதுனால பிடிக்கும்னு நினைச்சுக்கிட்டே  ஊரப் பாத்துக்கிட்டு வான்னார்....

என்னமோ எனக்குப் பிடிச்சித்தான் இருந்தது... தானாக வந்து பேசிய மனிதர்கள்... எங்கள் பேண்ட் சட்டையைப் பார்த்த பார்வை... ஒவ்வொரு பேச்சிலும்  அவர்கள் சொன்ன ”சார்” ... செம்மண் சாலை என எதோ ஒன்று எனக்கு மகிழ்ச்சியைத் தநது கொண்டிருந்தது...

நடந்துக்கிட்டே இருந்தோம்....

கொஞ்சம் தூரம் நடந்த பிறகு மெல்ல எங்கள் காதுகளுக்கு மணியோசை கேட்டது.... அப்பா திரும்பி பார்க்காமலே சொன்னார்... மாட்டு வண்டிக வரப் போகுது.... திரும்பிப் பார்த்தேன்... வரிசையாக மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தன...



எங்கள் அருகில் வரவும் வண்டிகளை நிறுத்தி, சார்... ஏறிக்கங்கன்னார் வண்டி ஓட்டி வந்தவர்... 

ஆலமரத்தடியில் நின்றவர்கள் சொல்லி அனுப்பியிருப்பாங்க போல..

வண்டியில் அப்பா ஏறப்போனார்... இருங்க சார்னு சொல்லி தலைப்பாகை கட்டியிருந்த துண்டை எடுத்து வண்டியில் இருந்த தூசியைத் தட்டி விட்டு எறச்சொன்னார்...

அப்பா ஏறி அமர்ந்ததும், வண்டிச்சக்கரத்தில் உள்ள ஆரத்தில் கால் வைத்து என்னை ஏறி நானும் அமர்ந்தேன்...  

மழையில் நனைந்திருக்கும் போல மாட்டு வண்டி, பலகையெல்லாம் ஊறியிருந்தது.... மாடுகளின் கொம்புகளில் மணி அழகாக மாட்டப்பட்டிருந்தது... கழுத்திலும் ஒரு மணி தொங்கியது... செல்லும் வழியில் மக்கள் உழவுப் பணியில் ஈடுபட்டிருப்பதை பார்த்துக் கொண்டே சென்றேன்...



அப்பா வண்டிக்காரரிடம் பேசிக்கொண்டு வந்தார்.... சைக்கிள் காரர் வீட்டுக்குப் போகணும், வேலைக்கு வந்திருக்கேன், வீடு வாடகைக்கு பார்க்கணும்.... 

”ம்ம்ம் சொன்னாய்ங்க சார்... கம்மாக்கரைல இறக்கி விட்டுடுறேன் அங்கன விசாரிச்சுக்கிட்டு போங்க சார்” வண்டிக்காரர் சொன்னார்....

கொஞ்ச தூரப் பயணத்திற்குப் பின் ஓரிடத்தில் இறக்கி விட்டுட்டுப் போனார் வண்டிக்காரர்...

பெரிய ஏரி மாதிரி இருந்தது அந்தக் கண்மாய்...  ஒரு பத்து நிமிடம் அங்கே நின்றிருப்போம்... சட்டையில்லாமல் என் வயதையொத்த சிறுவன் வெள்ளாட்டு மந்தையை ஓட்டிக் கொண்டு வந்தான்.... கையில் ஒரு தொரட்டியும் ஒரு தூக்குவாளியும் வைத்திருந்தான்...

தம்பி சைக்கிள் காரர் வீட்டுக்கு எப்படிப்பா போறது.... எங்களை ஏற இறங்க பார்த்துட்டு, ஒரு திசையில் கையை நீட்டிச் சொன்னான்...

”இங்கிட்டு தெக்கால நடங்க சார்.... ஒரு மதகு வரும் அதைத்தாண்டிப் போங்க ஒரு ஒத்தையடிப் பாதை வரும்... அதுல போனீங்கனா ஊரு வரும்.... அங்கன ஆருட்டனாலும் கேளுங்க சார்.... ”

அவன் சொன்ன திசையில் நடக்கத் தொடங்கினோம்.... நான் திரும்பிப் பார்த்தேன்... அந்தச் சிறுவன் இன்னும் எங்களைப் பார்த்துக் கொண்டே அதே இடத்தில் நின்றிருந்தான்...

மதகைத் தாண்டி , ஒத்தையடி பாதையில் நடந்து ஒரு வழியாக ஊருக்குள் நுழைந்தோம்...

சிறிய கிராமம்... குடிசை வீடுகளும் ஓட்டு வீடுகளும் மாறி மாறி இருந்தன.... பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது... சில ஓட்டு வீட்டுத் திண்ணைகளில் சிவப்பும் வெள்ளையும் பட்டை பட்டையாக பெயிண்ட் அடித்திருந்தார்கள்.

அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர் எங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே எங்களோடு நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.... கொஞ்ச தூரம் போனதும் ஒருத்தர் வந்து பேசினார்...

”என்னாங்க சார் யாரைப் பார்க்கணும்...”

அப்பா எங்களைப் பற்றிய விவரம் சொல்லி, சைக்கிள்காரர் வீட்டுக்குப் போகணும்... என்று சொன்னார்...

ரொம்ப ஆவலா இருந்தேன்... சைக்கிள் காரர் வீட்டைப் பார்க்க.... சைக்கிள் நிறைய இருக்குமோ!? இன்னும் என் மனதில் அந்த எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது...

”அப்படியா... சரி சரி வாங்க சார்.... எங்க மாமா வீடுதான்... வாங்க வாங்க” ... சொல்லிட்டு எங்கள் முன்னாடி பெருமிதமாக நடந்து சென்றார்...

ஒரு பெரிய வீட்டுக்கு முன்னாடி கொண்டு போய் எங்கள நிறுத்தினார்... திண்ணைல உட்கார சொல்லிட்டு குரல் கொடுத்தார்... 

”மாமாய் உங்கள் பாக்க வந்திருக்காக... அசலூர்க்காரகளா இருக்காக....”

”தா வாரேன்... ஒக்காரச் சொல்லு” உள்ளேயிருந்து ஒரு கனத்த குரல் கேட்டது....

அந்த வீட்டின் அமைப்பே நல்லா இருந்தது... ஊருலயே இதான் பெரிய வீடா இருக்கும் போல.... வீட்டு முன்னாடி ஒரு கூட்டி வண்டியும், தூரத்தில் ஒரு பக்கம் மாட்டுக் கொட்டகையும் இருந்தன... இரண்டு பெரிய வேப்பமரங்கள் ஒரு வளைவு போல இருந்தன வீட்டிற்கு முன்னால்... ரொம்ப ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்...

வெள்ளை வேட்டியும், சல்லடை போல இருக்கும் பனியனும் அணிந்த ஒருத்தர் வீட்டுக்குள்ள இருந்து வந்தார்... 

”வாங்க ... வணக்கம்...”

அப்பா வணக்கம் சொன்னார்... நான் சைக்கிள்காரர பார்த்துக்கிட்டே இருந்தேன்....

”என்ன விசயமா வந்திருக்கீக சார்....”

அப்பா விவரம் சொல்ல தொடங்குமுன்னே... வீட்டுக்குள்ள திரும்பி “ஏ புள்ள ... மோர் கொண்டா” னு சொல்லிட்டு எங்கள பாத்து சொல்லுங்க சார்ன்னார்...

நான், சைக்கிள்கள் எங்காவது நிறுத்தி வச்சிருக்காரானு சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.... ம்ஹும் எங்கயும் காணாம்....

அப்பா வந்த விவரத்தைச் சொல்லி முடித்ததும்... 

அவர் முகம் கண்ணெல்லாம் கொஞ்சம் விரிந்தது.... அவருக்கும் கொஞ்சம் பெருமையாக இருந்திருக்கும் போல...

”ஓ அப்படியா சேதி... சரிங்க சார்... என் பழைய வீட்டுல தங்கிக்கங்க... இங்க காரை வீடு கட்டி வந்து பதினெட்டு வருசமாச்சு.... அங்க பழைய வீட்டுல பழைய தட்டு முட்டுச்சாமானா போட்டு வச்சிருக்கேன்... ஒரு வாரத்துல சுத்தம் பண்ணி மராமத்து செஞ்சுபுடுறேன்... பின்னாடியே கேணி இருக்கு.... எந்தப் பிரச்சனையும் இல்ல...  நீங்க தங்கிக்கலாம் சார்...

”வாடகை ?”

”ஹா ஹா.... அட விடுங்க சார்... வீட்டப் பாருங்க... பிடிச்சிருந்தா தங்கிக்கங்க... நீங்க குடுக்கிறத குடுங்க.... சும்மா கெடக்குற வீடுதானே....  மீண்டும் ஒரு சிரிப்பு சிரித்தார்...ஹா ஹா ஹா.....”

பேசிக்கொண்டிருக்கும் போதே , அவர் மனைவி , சிரித்த முகத்துடன் வந்து மோர் கொடுத்தாங்க...

குடிச்சிட்டு கிளம்புறோம்னோம்...

”சார் வீட்டப் போய் பாத்துட்டு வாங்க, சமைக்கச் சொல்றேன் சாப்பிட்டுப் போகலாம்...”

”இல்லங்க வீட்டப் பாத்துட்டு கெளம்புறோம்....”

”இல்ல சார்  வீட்டப் பார்த்துட்டு வாங்க, நீங்க இப்ப கெளம்புனாலும் டவுனுக்குப் போய்ச்சேர மதியம் மூனு மூன்ரை ஆயிரும்... சின்னப்பயல கூட்டியாந்திருக்கீக பசி தாங்குவானா.... சாப்பிட்டுப் போங்க சார்....”

அவர் பேச்சின் உண்மையும், அவரின் விருந்தோம்பலும் அப்பாவைச் சம்மதிக்க வைத்தது.... சரி வீட்டப் பார்த்துட்டு வாரோம்னார் அப்பா...

”ஏய் மாப்ள, களத்து வீட்ட காட்டிட்டு வாய்யா....  ”

அவர் மாப்ளயோடு போய் வீட்டப் பாத்துட்டு வந்தோம்... எங்களுக்குப் பிடிச்சுப் போச்சு...

பின்பு சைக்கிள் காரர் வீட்டுல சாப்பிட்டு , அவங்க ஏற்பாடு செய்திருந்த கூட்டு வண்டியில் பஸ் நிறுத்தத்திற்கு பயணமானோம்...



செல்லும் வழியில் வண்டி ஓட்டுறவரிடம் அப்பாவைக் கேட்கச் சொன்னேன்...

”சைக்கிள்காரர் வீடுனு சொல்றாங்களே... அங்க ஒரு சைக்கிள் கூட காணாமே, ஏன் அந்தப் பேரு வச்சிருக்காங்க..” அப்பா கேட்டார்....

”ஹா ஹா ஹா... அதா சார்.... எங்க ஐயாதான் ஊருலயே மொதமொதலா சைக்கிள் வாங்கியாந்து ஓட்டுனவக... எப்பயாவது டவுனுக்கு போகணும்னா வண்டிய வெளில எடுத்து ஓட்டுவாக.... மத்த நேரத்துலலாம் சுத்தமா தொடச்சு வீட்டுக்குள்ள வச்சிருப்பாக..... அதான் ஐயாவுக வீட்டுக்குப் பேரு சைக்கிள்காரர் வீடு.”

நாங்க பஸ்ஸ பிடித்து ஊர் வந்து சேர்ந்தோம்... அடுத்த வாரம் சைக்கிள்காரர் வீட்டுக்கு குடி போகணும்.


(நன்றி: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து....)





Sunday, November 4, 2012

குளோபல் வில்லேஜ் ஒரு பார்வை -- துபாய் Global Village

குளோபல் வில்லேஜ் 2012 -2013



அனைவருக்கும் வணக்கம்,

துபாயில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குளோபல் வில்லேஜ், 2012 அக்டோபர் 21 ம் தேதி தொடங்கி 2013 - மார்ச் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. 

குளோபல் வில்லேஜ் முதன்முதலாக கடந்த 1996 ஆம் ஆண்டு துபாயின் க்ரீக் என்னும் பகுதியில் சிறு சிறு கடைகளுடன் பல நாடுகள் கலந்து தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட ஆண்டில் ஏறத்தாழ 500,000 மக்கள் இந்த குளோபல் வில்லேஜை பார்வையிட வந்தனர்.

இரண்டாம் ஆண்டில் 18 நாடுகள் கலந்துகொள்ள 900,000 மக்கள் கலந்து கொள்ள பெரும் நிகழ்ச்சியாக நடந்தது...

இப்படி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த குளோபல் வில்லேஜ், பத்தாண்டுகள் கழித்த பின்பு, பங்குபெறும் நாடுகளின் எண்ணிக்கையும், உலகெங்கிலும் இருந்து வருகைதரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கூடியதால் 2005 ஆம் ஆண்டு முதல் துபாய் லேண்ட் (Dubai Land) என்னுமிடத்தில் குளோபல் வில்லேஜிற்காக நிரந்தரமாக ஒரு இடம் அமைக்கப்பட்டது...மிகப்பெரிய கார் நிறுத்திமிட வசதியும் செய்து கொடுத்திருக்கிறார்கள். துபாயிலிருந்து பேருந்து வசதியும் உள்ளது.


இது என்ன குளோபல் வில்லேஜ்... இதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் அதன் வரலாற்றைக் கூறுகிறேன் என்று பார்க்கிறீர்களா?

இதோ வருகிறேன்

குளோபல் வில்லேஜ்:  (Where the world comes together)

(21-அக்டோபர்-2012 முதல் 30-மார்ச்-2013 வரை)

உலகின் பலநாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி தங்கள் நாட்டு கலாச்சாரம், பொழுதுபோக்கு போன்றவற்றை வெளிப்படுத்தவும், சுற்றுலா இடமாகவும், தங்கள் நாட்டுக்கே உரித்தான சில சிறப்பான பொருட்களை வணிகம் செய்யவும் அமைந்துள்ள / அமைக்கப்பட்டுள்ள ஓர் இடம்தான் குளோபல் வில்லேஜ். 2010 ஆண்டு புள்ளி விபரத்தின் படி 28 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 4.5 மில்லியன் மக்கள் வந்து செல்கிறார்கள்.

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக காட்சி மாடங்கள் (Pavilion) அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தநாட்டிற்குரிய காட்சி மாடங்களில் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் கடை வைத்திருப்பார்கள். சிறப்பு என்னவென்றால் கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் நாட்டிற்குரிய பாரம்பரிய உடை அணிந்திருப்பார்கள்.... கடைகளின் உள் அமைப்பும் அவர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும்.

இந்தியா:



கார் நிறுத்துமிடத்திலிருந்து, குளோபல் வில்லேஜ் அரங்கிற்கு செல்ல சைக்கிள் ரிக்‌ஷா வசதியும் உள்ளது. நமது டெல்லியைச் சேர்ந்த ரிக்‌ஷாக்காரர் ஒருவர் இந்தப் படத்தில்.... 



இவர் படத்தை இவருக்கு அனுப்புமாறு என்னிடம் ஒரு விசிட்டிங் கார்டு குடுத்தார்.... அதில் அவர் இந்திய அலைபேசி எண் மட்டுமே உள்ளது... பின்பொரு நாள் அழைத்துப் பேசி இந்தப் படத்தை அவருக்கு அனுப்ப வேண்டும் :-)

இந்த ரிக்‌ஷாக்களில் அரபிகளும், வெள்ளைக்காரர்களும் விரும்பி பயணம் செய்கிறார்கள்... நம்ம ஆட்கள் ஏறுவது மிகவும் குறைவே :-)))

சரி வாங்க ரிக்‌ஷாவில் ஏறி குளோபல் வில்லேஜ் உள்ளே செல்லலாம்...

மிகப்பெரிய இடம்... ஆங்காங்க ஒவ்வொரு நாட்டின் காட்சி மாடங்கள்....ஒவ்வொரு நாடும் தங்களின் கலாச்சாரத்தை அனைவருக்கும் காட்டும் வகையில் தங்கள் இடங்களை அமைத்துள்ளன... 

எகிப்து:



வியட்நாம் & அஃப்கானிஸ்தான்



பலூன்கள், பொம்மைகள் விற்பவர்கள் ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்...



இது மட்டுமின்றி ஒரு தனி இடம் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே அனைவரும் விளையாடக்கூடிய வகையில் பல விளையாட்டுகள் நிறைந்திருக்கின்றன.



பலநாட்டு உணவகங்கள் உள்ளே அமைத்திருக்கிறார்கள். விதவிதமான உணவு வகைகளை உண்டு மகிழலாம்.

குளோபல் வில்லேஜின் உள்ளே ஆங்காங்கே பல மேடைகள் உள்ளன. அவற்றில் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். தங்கள் நாட்டு கலாச்சாரத்தை வெளிபடுத்தும் வகையில் கலைஞர்கள் நிகழ்சிக்களை நடத்திக் கொண்டிருப்பார்கள்....









பார்வையாளர்களைக் கவரும் விதமாக, கலைஞர்களின் அணிவகுப்பு அவ்வப்போது நடத்தப்படுகின்றது. உங்களோடு பகிர்ந்து கொள்ள அந்த காணொளியை பதிவு செய்திருக்கிறேன். கண்டு மகிழ இங்கே சென்று பாருங்கள்.



இது போல் நடக்கும் நிகழ்ச்சிகளில் பலூன் விற்பவர், பொம்மைக் கடைக்காரர்கள், ஓடியாடும் குழந்தைகள்,கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், மேடைப் பாடல்கள், தீ விளையாட்டு காட்டுபவர் என அனைவரையும் ஓரிடத்தில் கண்டு மகிழும் போது  என்னைப் போன்று இங்கிருப்பவர்களுக்கு, ஊரில் திருவிழாவிற்கு சென்று வரும் நினைவும் உணர்வும் வரும் என்பது உண்மை.

நன்றி.

Sunday, October 28, 2012

ஆஜீத் காலிக் -- பட்டம் வென்றான் எங்கள் இதயம் கொண்டான்... (Aajeedh Khalique)

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 - ஆஜீத் காலிக்


நாங்க எதிர்பார்த்துதான் இருந்தோம், இருப்பினும் உள்ளூர ஒரு பதட்டம்... என்ன நடக்கும்? எல்லாரும் வாக்களித்திருப்பார்களா? எங்கள் ஆஜித் வென்று விடுவானா? என ஒரு பதட்டம் கடந்த வாரம் முழுவதும் ஒரு பாதிப்பாய் இருந்தது... கடைசியா அந்த நாளூம் வந்தது, “”வந்தே மாதரம்” நீ முழங்கியதும்  உடலெல்லாம் உற்சாகம் கரை புரண்டோடியது... சந்தோச கண்ணீரே” என நீ பாடியதும், பார்த்தவர் அனைவருக்கும் சந்தோசக் கண்ணீர் வந்தது உண்மை.... பெரும் மகிழ்ச்சி... வழக்கம்போல பலர் எழுந்து நின்று வாழ்த்தினர்... 



விஜய் டிவி நேரடி ஒளிபரப்பு என நிகழ்ச்சி  தொடர்ந்து சென்று கொண்டிருந்தாலும், ஃபேஸ்புக்கில் ரசிகர்கள் உன் வெற்றியை அறிவித்த போது, என்னவென்று புரியாமல் சற்று குழம்பி போயிருந்தோம்... இறுதியாக நீ வென்ற செய்தி கேட்ட போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சிக்கு வருவார் என எதிர்பார்த்திருக்கவில்லை... அனைவருக்கும் பிடித்த ஏ ஆர் ரகுமானின் கையாலேயே நீ பட்டம் பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி... இசை உலகமே வியந்து பார்க்கும் ஏ ஆர் ரகுமான் உன்னை வியந்து பாராட்டியது உன் இசைக்கும், உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி.  இசைப்புயலின் வாயால் ”Born Superstar” பட்டம் பெற்றதும் உனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மகிழ்ச்சி.



கடுமையான போட்டிகளைத் தாண்டி, வென்றெடுத்தாய் பட்டத்தை... பட்டம் வெல்லத் தகுதியானவன் நீ... ஆனால் இத்தனை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து எங்கள் அனைவரையும் உன் இசையால் கட்டிப் போட நீ பட்ட பாடு உனக்கும் இறைவனுக்கும் மட்டும்தான் தெரியும். உன் கடின உழைப்பும் இறை அருளும் இன்றி இது ஏதும் நடந்தேறியிருக்காது....




ஆஜீத் காலீக்...
எங்கள் இதயம் கவர்ந்தவனே...

இனிதான் உனக்கு மேலும் கவனம் தேவை...
இன்னும் எத்தனையோ தூரம் நீ போக வேண்டியிருக்கிறது... 
இசை மட்டுமின்றி பல களம் நீ காண வேண்டும்... 
பல மேடைகள் உன்னை வரவேற்க காத்திருக்கும்... 
இதே உழைப்பும், கவனமும் இருந்தால்தான் அனைத்தும் உன் வசப்படும்.
புகழ் உன்னைச் சுற்றி வரும் இந்த வேளையில் 
இப்பொழுது போல் எப்பொழுதும் பணிவாய் தொடர்வாய்... 

சூப்பர் சிங்கர் மேடையில் வெற்றி கண்ட ப்ரகதி, யாழினி, சுகன்யா, கௌதம் மற்றும் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்....



இப்படி அருமையான கலைஞர்களை வெளிக்கொண்டு வரும் விஜய் டிவிக்கு நன்றி.


இனிய இசையே - எங்கள்...
இதயம் கவர்ந்தவனே...
பட்டத்திற்கு தகுதியானவனே...
பிறவிக் கலைஞனே...
இன்னும் நீ வெற்றி பெற
வாழ்த்துகள் ஆஜீத்...
இறைவனுக்கு நன்றி...

இப்படிக்கு,
உன் ரசிகன்.


(நன்றி: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து)

Sunday, October 21, 2012

Eid in Dubai



அனைவருக்கும் வணக்கம்,

துபாயின் பல இடங்களில் இது போன்ற வண்ண விளக்குகள் Eid in Dubai என அறிவித்துக் கொண்டிருக்கின்றன. 




துபாய் அரசாங்கத்தால், 2008 ஆண்டு முதல் தொடங்கப்பட்ட விழா Eid in Dubai ஆகும். Eid Al Fitr மற்றும் Eid Al Adha விழாக்களைக் கொண்டாடும் விதமாக Eid in Dubai தொடங்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கிறார்கள், மேலும் ஆண்டு முழுவதும் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆகவே,  குழந்தைகளும் , துபாய் வாழ் மக்களும், நாடுகள் வேறுபாடின்றி அனைவரும், அனைத்து வயதினரும் மகிழ்ச்சியுடன் இந்த விழாக்களைக் கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

Eid in Dubai விழாவின் ஒரு பகுதியாக துபாய் க்ரீக் பகுதியில் இரவு சரியாக 9 மணிக்கு கண்கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன்.


நம்ம ஊருல திருவிழாக் காலத்தில் என்னென்ன காண்போமோ, என்னென்ன வாங்கி உண்போமோ, அத்தனையும் இங்கும் கிடைக்கும்.... குழந்தைகளுடன் மாலை வேளையில் இந்த துபாய் க்ரீக் பகுதிக்கு சென்றால் நேரம் போவதே தெரியாது...

பஞ்சு மிட்டாய் சாப்பிடுறீங்களா...





மக்காச்சோளம்...



பலூன் வாங்கலாம்....


குழந்தைகள் விளையாட ரப்பர் பலூன் திடல்



இது மட்டுமில்லாமல் பல நாடுகளைச் சேர்ந்த கலைக்குழுவினரின் கலாச்சார ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



கென்யாவைச் சேர்ந்தவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்:



துபாயின் வெப்பநிலை மாறி குளிர தொடங்கி விட்டது,  பக்ரீத் பண்டிகையை ஒட்டி நீண்ட விடுமுறை வரப் போகிற மகிழ்ச்சியில் அனைவரும் காத்திருக்கின்றனர். இன்னும் அடுத்தடுத்து துபாயில் பல நிகழ்ச்சிகள் வர இருக்கின்றன. Dubai Global Village இன்று தொடங்கிவிட்டது.... முதல் நாள் அனுமதி இலவசம்.

Dubai Shopping Festival, Global Village ஆகியவற்றைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

படங்கள் அனைத்தும் நான் எடுத்தவை... மேலும் படங்களைக் காண இங்கே செல்லவும்...

அனைவருக்கும் நன்றி.

Sunday, October 7, 2012

ஆஜீத் காலிக் -- நீ வென்று விட்டாய்.... (Aajeedh Khalique)


ஆஜீத் காலிக் :




இசை உலகம் உன்னைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது.... 
எத்தனையோ ஆண்டு கால இசை அனுபவம் உள்ளவர்களெல்லாம் உன் பாட்டுக்கு எழுந்து நிற்கிறார்கள்.... 
உன் பாட்டிற்கு மதிப்பெண் இட வந்தவர்கள், உன் தேன் இசையில் மயங்கிக் கிடக்கிறார்கள்...
கருத்துச் சொல்ல சொற்களின்றி அவர்களின் குரல் தழுதழுக்கிறது... 
ஆனந்தக் கண்ணீரில் நனைகிறார்கள்

ஆஜீத் காலீக்: 

எத்தனையோ பாட்டுகளை நீ பாடி விட்டாய் இந்த மேடையில்... 
எந்தப் பாட்டிலும் உன் இசை எங்களை ஏமாற்றவில்லை... 
ஏங்க வைக்கிறாய்...
உருக வைக்கிறாய்...
சிலிர்க்க வைக்கிறாய்... 
மயங்கி கிடக்கிறோம்... 

எத்தனை முறை உன் பாட்டைக் கேட்டாலும் 
எங்களை கைகள் தானாகவே தட்டுகின்றன.... 
உன் இசை எங்கள் இதயம் தொட்டு இலகுவாக்குகிறது... 



பல பாடல்கள் ...
எத்தனை கடினமான பாடல்களாகட்டும்...
மிக எளிமையாக பாடி அசத்தி விடுகிறாய்...

மனப்பாடம் செய்து பாடலை பாடாமல்
மனதில் இறுத்தி உணர்வுகளைக் கொட்டி
எங்களை உன் இசையால் கட்டி வைக்கிறாய்...

உன் குரலில் உணர்ச்சிகளை வடிக்கிறாய்...
உன் கண்களில் பல காட்சிகளைக் காட்டுகிறாய்...
கட்டுப்பட்டுக் கிடக்கிறோம்... இன்னும்
காத்திருக்கிறோம்... 



தொடர்ந்து தா ஆஜீத்... 
எங்களை இதயங்களை இலகுவாக்கு...

மாசமா ஆறு மாசமா ஏங்கித் தவிச்சேன் 
என தொடங்கினாய் உன் வருகையை... 
அன்று முதல் உன் இசைக்காக 
ஏங்கிக் தவிக்கிறொம்
உலகில் பல கோடி ரசிகர்கள்...



முதல் வரியிலேயே எங்கள்
அனைவரையும் கொள்ளை கொண்டாய்...

உன் பாட்டில் உருகிப்போனார்கள்
உலகம் முழுவதும் உன் ரசிகர்கள்
அந்த ஒரு பாட்டு போதும் 
உன் திறமையைப் பறை சாற்ற...



நீ பாடிய அத்தனை பாடல்களையும் 
ஒவ்வொரு வரிக்கும் நீ காட்டிய அழகையும்
என்னால் எழுத்தில் வடிக்க இயலாது...
கண்ணால் கண்டு 
காது குளிரக் கேட்டு
சொக்கிப் போக வேண்டும்...

ஐயோ ஆஜீத்...அது போதும்... 
இதுவரை உன் குரல் கேட்காதவர்கள்...
ஆராமலே கேட்டால் 
உறுதியாகச் சொல்கிறேன் 
உன் ரசிகன் ஆவார்கள்...



தேன் தடவி வரும் உன் குரல்
எங்கள் இதயத்தில் என்றும் இனிக்கிறது...

சூப்பர் சிங்கர் ஜீனியர் 3 
பட்டம் நீ வென்றாலும் வெல்லாவிட்டாலும்
என்னைப் போன்ற எத்தனையோ கோடி ரசிகர்களின் இதயத்தை 
எப்போதோ வென்று விட்டாய்...



வாழ்க் ஆஜீத்
இறைவா அருள் செய்வாய்...


ஆஜீத்தின் பாடல்களை பார்த்துக் கேட்டு ரசிக்க, நனைய, உருக இங்கே சென்று பாருங்கள்.

நன்றி.

Wednesday, September 26, 2012

உலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய் -- துபாய் மெட்ரோ (Dubai Metro)


அனைவருக்கும் வணக்கம்,

இதற்கு முந்தைய பதிவில் துபாய் ஃபவுண்டெய்ன் பற்றிப் பார்த்தோம்... 

வாருங்கள், துபாய் மெட்ரோ பற்றிப் பார்க்கலாம்.... 
எனக்குத் தெரிந்த தகவல்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

துபாய் மெட்ரோ -- Dubai Metro.




அமீரகத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்ட ஒரு ரயில் போக்குவரத்து இந்த துபாய் மெட்ரோ. 1997 ஆம் ஆண்டு முதல் 2000 வரை மேற்கொண்ட  ஆய்வுகளின் முடிவில், எதிர்காலத்தில் துபாய்க்கு சாலை போக்குவரத்து மட்டும் போதுமானது அல்ல, துபாயின் போக்குவரத்தை எளிதாக்க துபாய் மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.


(ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த துபாய் மெட்ரோ மாதிரி படம். நான் எடுத்த படம்)


09.09.09 - Red Line

அதன் பின்னர் படிப்படியாக,  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 09 ஆம் தேதி இரவு சரியாக 09.09.09 மணிக்கு, துபாய் மெட்ரோ தொடங்கி வைக்கப்பட்டது.  நான்கு வழித்தடங்களாக, அதாவது Red Line, Green Line, Purple Line and Blue line, மெட்ரோ ரயில் போக்குவரத்து செயல்பட வேண்டும் என திட்டம் வகுக்கப்பட்டு, முதலில் ரெட் லைன் மட்டும் தொடங்கப்பட்டது.  

ராஷீதியா எனும்  இடத்தில் இருந்து ஜெபல் அலி எனும் இடம் வரை பயணிக்கலாம்.  
பயண நேரம் 70 நிமிடங்கள் ஆகும்.
பயண தூரம் தோராயமாக 52.1 கி.மீ.
மொத்தமாக 29 நிலையங்கள் (ஸ்டேஷன்கள்) உள்ளன. இவற்றில் தரைக்கு மேல் 25 நிலையங்களும், தரைக்கடியில் 4 நிலையங்களும் உள்ளன.
துபாய் விமான நிலையத்தின் இரண்டு நிலையங்களை இந்த துபாய் மெட்ரோ - ரெட் லைன் இணைக்கிறது.
இரண்டு பெரிய கார் நிறுத்தங்கள் உள்ளன. கார் நிறுத்துவதற்கு கட்டணமில்லை.



09.09.2011 - Green Line

இரண்டாவது வழித்தடமான க்ரீன் லைன் 09 ஆம் தேதி செப்டம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

அல் குஸைஸ் என்னும் இடத்திலிருந்து கீரிக் ஸ்டேசன் என்னும் இடம் வரை பயணிக்கலாம்.
பயண நேரம் 36 நிமிடங்கள்
பயண தூரம் தோராயமாக 23 கி.மீ.
கீரீன் லைனில் மொத்தமாக 18 நிலையங்கள் உள்ளன. இவற்றில் 12 நிலையங்களை தரைக்கு மேலும், 6 நிலையங்களை தரைக்கு கீழும் அமைத்துள்ளார்கள்.  இரண்டு மெட்ரோ (ரெட் லைன் மற்றும் க்ரீன் லைன்) தனித்தனி வழித்தடங்கள் இருந்தாலும்,  Union நிலையம் மற்றும் Khalid bin al Waleed  நிலையங்களை இணைக்கின்றன. ஆகவே இந்த க்ரீன் லைனில்  மொத்தம் 6 அண்டர்கிரவுண்ட் நிலையங்களாக கணக்கில் கொள்ளலாம்.
ஒரு பெரிய கார் நிறுத்தம் உள்ளது. கார் நிறுத்துவதற்கு கட்டணமில்லை.


சரி, விவரம் எல்லாம் சொல்லியாச்சு, 
பல நாடுகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்து இருக்கின்றதே!!!
துபாய் மெட்ரோவிற்கு மட்டும் என்ன சிறப்பு!?!?
திவின் தலைப்பைத் தொடுகிற மாதிரி ஒரு விவரமும் சொல்லலையேனு பார்க்கிறீங்களா!?



(மெட்ரோ பாதையை காட்டும் படம். என் நண்பர் திரு. நௌஃபல் எடுத்த படம்)


இதோ வாரேன்....

துபாய் மெட்ரோ ரயிலின் சிறப்பு என்னவென்றால், இது உலகிலேயே அதிக தூரம் பயணிக்கூடிய ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலாகும்.  முழுக்க முழுக்க தானியங்கியான துபாய் மெட்ரோ ரயில் மொத்தமாக 75 கி.மீ தூரம் பயணிக்கிறது. 

Union Station:

துபாய் மெட்ரோவில் உள்ள யூனியன் நிலையம்தான் உலகத்திலேயே பெரிய தரைக்கு கீழ் கட்டப்பட்ட நிலையம் ஆகும். இதன் பரப்பளவு 25000 சதுர மீட்டர்கள்.




(தரைக்கு கீழே மெட்ரோ பாதையை என் நண்பர் திரு. நௌஃபல் எடுத்த படம்.)


மேலும் சில தகவல்கள்:

21 ஆம் நூற்றாண்டின் உலகத்தரமான மெட்ரோ ரயில் போக்குவரத்து.

துபாய் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, பெரிய இயந்திரங்கள் மூலம், தரையிலிருந்து தோராயமாக 29 மீட்டர் ஆழத்தில்(அதிகபட்சமாக), 9.3 மீட்டர் விட்டமுள்ள சுரங்கப்பாதை(Tunnel) அமைத்து, அதில் வழித்தடங்களை அமைத்திருக்கிறார்கள். 

மணிக்கு 90 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது.

ரயிலுக்குள் வைஃபை வசதி உண்டு.

ரயில் நிலையங்களில் சிறிய கடைகள், பண பரிவர்த்தனை செய்ய எக்சேஞ்சுகள், ஏடிஎம் கள் உள்ளன.

ரயில் நிலையத்தில் இருந்து நகரத்திற்குள் செல்ல சிறப்பு பேருந்துகள் உண்டு.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அனைத்து விதமான மக்களுக்கும் போக்குவரத்திற்கு எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.


அனைவருக்கும் நன்றி.


Sunday, September 23, 2012

எங்க வீட்டுக்குப் பின்னாடி ஓர் அழகான இடம்.

எங்க வீட்டுக்குப் பின்னாடி ஓர் அழகான இடம். 

பெரிய ஏரி மாதிரி தெரியுது...


சாயங்கால நேரம்னு நினைக்கிறேன்... 

நீல வானம்...

நிறைய மேகங்கள்...

இளங்காத்து... 

போட்டிருக்கும் சட்டை காத்துல நல்லா ஆடுது...

மனசுக்கு நல்லாயிருக்கு....






அந்த ஏரியை ஒட்டி, அங்கங்கே மீன் வளர்ப்பதற்கு ஏற்றது போல் பாத்தி பாத்தியா குளம் மாதிரி வெட்டி வச்சிருக்காங்க....

ஒவ்வொரு சதுரமான நீர்ப்பரப்பிலும் நிறைய வகை வகையான மீன்கள்... பெரிசு பெரிசா மீன்கள்...

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... 

பார்க்கப் பார்க்க அப்பிடியே என்னமோ செய்யுது... 

ஆகா போட்டோ எடுத்த நல்லாயிருக்குமே..

என் பக்கத்துல எனக்குத் தெரிஞ்ச பையன் நிக்கிறான்... 

”தம்பி வீட்டுல போய் என் கேமராவ எடுத்துட்டு வாயேன்...”

சரிண்ணேண்ட்டு ஓடிட்டான் நம்மாளு....

(அடடா கேமரா பேட்டரில சார்ஜ் ரொம்ப கம்மியா இருந்துச்சே... சரி பரவாயில்ல தீரும் வரை எடுப்போம்ல...)

அப்பத்தான் அது நடந்துச்சு... 

மேலே வித்தியாசமான ஒரு விமானம் பறக்குது, அதைத் தொடர்ந்து பின்னாடியே இன்னொரு விமானமும் பறந்து வருது.... பார்க்க வித்தியாசமா இருந்தாலும் என்னமோ மனசுக்குள்ள ஒரு பயம் இருக்கு அந்த பெரிய விமானங்களைப் பார்க்கும் போது.... விமானத்த கீழே ரொம்ப இறக்கி உள்ள இருக்கிற அவங்க என்னைப் பார்க்கிறாங்க... 





வீட்டுக்கு உள்ள போய் அந்தப் பக்கம் வீட்டின் முன்புறம் உள்ள சாலைக்குப் போனால், 
அங்கே சாலையின் இரு பக்கத்திலும் மக்கள் கூட்டமா நிக்கிறாங்க.... சாலையில் வகை வகையான வாகனங்கள் வேகமா போய்க்கிட்டு இருக்கு... 



அந்த வாகனங்களை ஓட்டுபவர்கள் முகம் நம்மூரு முகம் மாதிரி இல்ல அதுமட்டுமில்லாமல் அவங்க எல்லாம் ரொம்ப கோவமா இருக்கிற மாதிரி இருக்கு....



மாட்டு வண்டியெல்லாம் ஓரமா நின்னு வேடிக்கைப் பார்க்கிறாங்க...

அடடா வீட்டுக்குப் பின்னாடி ஏரிப்பக்கம் பார்த்தால் நிறைய பறவைகள், வகை வகையான பறவைகள் தீடீரென பறந்து வருகின்றன....



அடடா கேமரா எடுத்து வாடான்னு ஒருத்தனிடம் சொன்னமே... எங்க அவன காணாம்...

வேகமா ஓடிப் போய் ஏரிப்பக்கம் நின்னு பார்த்தால்... என் கேமரவா எடுத்துட்டு வந்தவன், 

சும்மா இருக்காம, என் கேமராவில் படம் எடுத்திக்கிட்டு இருக்கான்....




டேய் நிறுத்துடா...................







அலார்ம் அடிச்சிருச்சு...

இனிமே ஆங்கில சண்டைப்படமெல்லாம் பாத்துட்டு தூங்கக்கூடாதுடா சாமி.... :-))))


[நன்றி: கனவுக்கேற்ற படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து]




Saturday, September 22, 2012

உணவு வகைகள் -- மண்டி பிரியாணி (Mandi Biriyani)


அனைவருக்கும் வணக்கம்,

முந்தைய பதிவில் பார்பிக்யூ சிக்கன் & மட்டன் பற்றிப் பார்த்தோம்... வாருங்கள், இந்தப் பதிவில் பிரியாணி - மண்டி பிரியாணி பற்றிப் பார்ப்போம்...

அசைவ விரும்பிகளுக்கு பிரியாணினாலே ஒரு விதமான மகிழ்ச்சி தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்... 

இந்த பிரியாணிலதான் எத்தனை எத்தனை வகை...  கோழி பிரியாணி, ஆடு பிரியாணி, மீன் பிரியானி, காளான் பிரியாணி, இறால் பிரியாணி, தம் பிரியாணி இப்படி பல வகை பிரியாணிகள் நாம் கண்டிருக்கிறோம் உண்டிருக்கிறோம்... 

கோழி பிரியாணி:



ஆடு பிரியாணி:


நம்ம ஊருல ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு விதமான பிரியாணி புகழ்பெற்றிருக்கிறது. 

தலைப்பாக்கட்டு பிரியாணி (திண்டுக்கல்),ஆம்பூர் பிரியாணி,ஹைதராபாத் பிரியாணி,மலபார் பிரியாணி,பெங்கால் பிரியாணி, சிந்தி பிரியாணி என பல ஊர்களின் பெயர்களில் புகழ்பெற்ற பிரியாணிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.... நம்மில் பலர் உண்டும் ரசித்திருக்கிறோம்.... ஒவ்வொரு ஊர் பிரியாணியும் ஒரு தனித்துவமான சுவைதான்.... 

கடைல வாங்கிச் சாப்பிடுற பிரியாணிய விடுங்க....இஸ்லாமிய சகோதர்களின் வீட்டில் சமைக்கப்படுகிற பிரியாணியின் சுவையே தனி சுவைதான்....  ரமதான், பக்ரீத் பெருநாட்களில் இஸ்லாமிய நண்பர்கள், பெரிய தூக்குச் சட்டியில் பிரியாணியும் தால்சாவும் கொண்டு வந்து கொடுப்பாங்க... அந்த தால்சாவின் சுவை எந்த ஊருலயும் எந்த உணவகத்துலயும் கிடைக்காது....  


சரி வாங்க, நாம இப்ப பார்க்கப் போவது மண்டி பிரியாணி.... 



அமீரகத்தில் மிகவும் பிரபலமான உணவு வகையான இந்த மண்டி பிரியாணியின் பிறப்பிடம் யேமன்... இது யேமனின் பாரம்பரிய உணவு என்று நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பொதுவாக பாஸ்மதி அரிசியில் செய்யப்படும் பிரியாணியில், சேர்க்கப்படும் இறைச்சி சமைக்கப்படும் பக்குவம்தான் இந்த மண்டி பிரியாணியின் தனித்தன்மை. மேலும் இந்த மண்டி பிரியாணியைச் சாப்பிடும் முறையும் கொஞ்சம் வித்தியாசமானது... 

இளங்கறியாக (ஆடு & கோழி) தேர்ந்தெடுத்து இந்த மண்டி பிரியாணிக்கு பயன்படுத்துகிறார்கள். கோழியை குறுக்கு நெடுக்காக இரண்டு துண்டுகளாக வெட்டி விடுகிறாகள், ஆட்டிறைச்சியை ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்கிறார்கள். பின்பு இறைச்சியை தந்தூரி அடுப்பில்  இறைச்சியை வேக வைத்து விட்டு, புகை வெளியேறாத படி மூடி விடுகிறார்கள்... நன்கு வெந்த பிறகு அந்த இறைச்சியை எடுத்து பிரியாணியுடன் சேர்த்து பரிமாறுகிறார்கள்....




தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயம் இவற்றை பச்சையாக அரைத்து தயாரிக்கப்பட்ட சட்னியை மண்டி பிரியாணியுடன் தொட்டுக் கொள்வதற்கு தருகிறார்கள். மேலும், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், லெட்யூஸ், எலுமிச்சை ஆகியவற்றால் செய்யப்பட்ட சாலட்டும் கிடைக்கும்.


இங்கு மண்டி ரெஸ்ட்ராண்ட்கள் என்று இந்த மண்டி பிரியாணி உணவுகளுக்காகவே தனிப்பட்ட உணவகங்கள் இருக்கின்றன... இந்த உணவங்களில் பெரும்பாலும் நாற்காலி மேசைகள் இருப்பதில்லை... கார்பெட் தரையில் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் அமர்ந்து சாப்பிடலாம்... ஒரு நல்ல சுவையான உணவு....




பொதுவாக, இந்த மண்டி பிரியாணி பெரிய விருந்துகள், கல்யாண விருந்துகள், அலுவலகத்தில் விருந்துகளின் போது பரிமாறப்படுகிறது.... இதில் சிறப்பான ஒன்று ஒரு தட்டு அல்ல தாம்பாளத்தில்தான் மண்டி பிரியாணி பரிமாறப்படும்... மொத்தமா ஒரு தாம்பாளத்தில் ஐந்து பேர் அமர்ந்து சாப்பிடலாம்... சுற்றி உக்கார்ந்து கொண்டு அவரவர் முன்னால் உள்ள பிரியாணியை எடுத்துச் சாப்பிட வேண்டியதுதான்...




நன்றி: அனைத்துப் படங்களும் இணையத்திலிருந்து (கடைசிப் படத்தை தவிர:-)

அடுத்த பதிவில் சில சிறு உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்....

முந்தைய பதிவுகளைக் காண இங்கே சென்று பாருங்கள்...

அனைவருக்கும் நன்றி...