Sunday, June 21, 2020

உயிர்த்தலம் - ஆபிதீன்


முன்பொருநாள் நண்பரின் புத்தக வெளியீட்டு விழாவில் பேச வாய்ப்புக் கிடைத்த போது, நான் எப்பயும் போலதான் பேசிக்கிட்டிருந்தேன் நான் பாதி பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் எழுந்து வந்து என் கன்னத்தை தடவிக் கொடுத்துவிட்டு  கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டார்… என்னடா நாம பேசிக் கொண்டிருக்கும் போதே, ஒரு பெரிய மனுசன் எந்திரிச்சுப் போயிட்டாரேனு பக்குனு இருந்துச்சு… அப்படிப் பேசியிருப்பேன் போல… அடுத்ததாக அபுதாபி தமிழ் மக்கள் மன்ற விழாவில் சிறந்த இலக்கிய ஆளுமை விருது அவர்க்கு அறிவிக்கப்பட்ட போதும் அவரைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை… அந்த விழாவில் ஆசிப் அண்ணனின் கணீர் குரலில் அவரைப் பற்றிய காணொளி காட்டப்பட்டது… அருமையாக இருந்தது… 

கானல் யூட்யூப் சேனல் தொடங்கியதும், அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்திலிருந்து ஒவ்வொருவரும் ஒரு நூலைப் பற்றிப் பேசியிருந்தோம்… ஆசிப் அண்ணன் முதல் வீடியோவாக, உயிர்த்தலம் என்ற நூலையும் அதிலுள்ள மீஜான் சிறுகதையைப் பற்றியும் பேசினார்… அப்போதுதான் எனக்கு அவரைப் பற்றியும், அவர் எழுத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆவல் உண்மையாக வந்தது…

ஆபிதீன்..

எழுத்தாளர்தான் ஆனால் எள் முனையளவு கூட தற்பெருமை இல்லாத நல்ல மனுசன்… அவரோட பேசும் போதும் அவருக்கு கமெண்ட் எழுதும் போது மட்டும் வலுக்கவனமா இருக்கணும்…எப்ப எப்படி திருப்பி அடிப்பார்னே தெரியாது… வாயக் கொடுத்துட்டு எதிராளி சிக்கித் தவிப்பான்… கொஞ்சம் கூட சிந்திக்க நேரம் கொடுக்காமல், உடனுக்குடன் திருப்பி அடிப்பார்… ஆனா யாருக்கும் மனம் நோகாது… சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்….அப்படிப் பேசுவார் ஆனால் அதிர்ந்து பேசமாட்டார்… 

எட்டு நூல்கள் புத்தக வெளியீட்டு விழாவை அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமம் நடத்திய போதுதான் ஆபிதீன் அண்ணனுடன் அமர்ந்து பேசும் வாய்ப்புக் கிடைத்தது… அன்று, கடைசி பெஞ்ச் மாணவர்களாக நாங்கள் செய்த அலப்பறையை குழுமத் தலைவர் மேடையிலிருந்தே கண்டிக்கும் அளவுக்குப் போய்விட்டது…

சரி… இந்தாண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நண்பர் ஒருவரை அனுப்பி உயிர்த்தலம் நூலை வாங்கி பின்பு இன்னொரு நண்பர் மூலம் வரவழைத்தேன்…
இந்த நூலைப் படிக்கத் தொடங்கியதும் என்னிடம் சிக்கிச் சின்னாபின்னமானாது ஆசிப் அண்ணந்தான்… 




ஒவ்வொரு பத்தியிலும் ஏன் சில கதைகளில் ஒவ்வொரு வரியிலும் சிரிப்பு வெடியைக் கொளுத்திப் போடுகிறார்… சிரித்து சிரித்து வயிறு வலிக்கும்… அப்படி சிரிக்கும் போதெல்லாம் ஆசிப் அண்ணனுக்கு ஃபோன் போட்டு ஒவ்வொரு வரியா படிச்சிக்காட்டிச் சிரிச்சிக்கிட்டிருப்பேன்… 

சில வரிகளைச் சொல்கிறேன்… இதைப் படிச்சா உங்களுக்கும் அப்படிச் சிரிப்பு வரும்…
வியாபாரமே இல்லையே முதலாளி என்று கதாநாயகன், அவர் முதலாளிட்ட சொல்வார்… அதுக்கு ”கனிகளுக்காக தன்னை தயார் செய்கிறது மரம்” என்று கவிதை சொல்வாராம் முதலாளி… இதற்கு அடுத்த வரியாக எழுதியிருப்பது ,

”கொஞ்சம் மேலே எழும் கம்பெனியின் தலை, கவிதையைக் கேட்டவுடனே பூமிக்குள் புதைந்து விடும்… கவிதைகளின் சக்தி அது”
இந்தக் கடைசி வரியான ”கவிதைகளின் சக்தி அது” என்பதுதான் என்ன ஒரு அடாவடித் தனம்…

இதுபற்றி அவரிடம், ஏன்ண்ணே இப்படிக் கவிதைகளைச் சொல்றீங்களேன்னு கேட்டப்ப, கவிதை நல்லதுதான் பாலாஜி ஆனா அத நாம எழுதாம இருக்கணும்ன்னார்… இது நமக்கு அடுத்த அடி… :) 

கதைல ஒரு இடத்துல முதலாளிக்கும் கதாநாயகனுக்கும் சண்டை வந்திரும், முதலாளி உன்னைய பத்தித் தெரியாதா யாராவது நூறு திர்ஹாம் கூட குடுத்தா என்னைய விட்டுட்டு அவனிடம் வேலைக்குப் போயிருவன்னு திட்டுவார்… உடனே நம்மாளுக்கு கோபம் வந்து, பொங்கி எழுற மாதிரித்தான் பதில் 

”இவ்வளவு நாள் உண்மையா உழைச்ச நான் யாராவது நூறு திர்ஹாம்ஸ் கூட குடுத்தா போயிருவேன்னு எப்படி என்னைய அவமானப் படுத்தலாம்”, ஆனால் அதற்கு அடுத்து வரும் வரியைப் பாருங்க… ”நூறு என்னய்யா நூறு, எவனாவது நாலு திர்ஹாம்ஸ் கூட குடுத்தாக்கூட உடனே ஓடிப்போயிருவேன்” :) 

சர்வீஸ் துறையில் இருப்பவர்களுக்கு இந்தச் சோகம் நல்லாத் தெரியும், பயனாளியை மனநிறைவடையச் செய்வதற்கு என்னென்னவோ வித்தையெல்லாம் செய்வோம்… அன்றாடம் தொடர்ந்து செய்வோம்… என்றோ ஒரு நாள், எதோ ஒரு பிழை அல்லது வேலையில் தாமதம் ஏற்பட்டு விட்டால் போதும், இத்தனை நாள் நாம் செய்த சேவையெல்லாம் அடிச்சு நொறுக்கி ஒன்னுமேயில்ல, இவன் சரிப்பட்டு வரமாட்டான்னு திட்டத் தொடங்கிருவாங்க… அதையே நான் முன்பொரு முறை ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸாக 

என்னதான் 99 விழுக்காடு சிறப்பாக பணி செய்தாலும், ஒரே ஒரு விழுக்காடு பணித் தாமதம் ஏற்பட்டால் போதும், இத்தனை நாள் சேர்த்து வச்ச மொத்தமும் சேதாரமாகிப் போகும்.
But you IT guys, go on forever.”

என்று பொத்தாம் பொதுவா எழுதியிருந்தேன்… இந்த நூலில் ஆபிதீன் அண்ணன் அதையே எப்படி நாம நம்ம நண்பர்களோட பேசுவோமோ அந்த மாதிரி ”பல்லுப்பட்டிருச்சாம்னு” செம்மையா எழுதியிருபபார்… படிச்சுப் பாருங்க செம சிரிப்பா இருக்கும்….

இந்த நூலில் இத்தனை சிறுகதைகள் இருக்கின்றன…
        
மீஜான்
வாழைப்பழம்
ஹே சைத்தான்
ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்
மூடல்
பச்சை மணிக்கிளியே - சூஃபி
தினம் ஒரு பூண்டு
உயிர்த்தலம்
அமானுதம்
இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள்
ருக்கூ
பாட்டியாவின் மறதி
நாங்கோரி என்ற உறுப்பினர்

இந்த நாங்கோரி கதையைப் படிக்கும் போதுதான் தெரிந்தது இந்த மனுசன் ஆளு ஒரு காலத்துல என்ன ஆட்டம் ஆடிருக்கார்னு...

பச்சை மணிக்கிளியே படிச்சிட்டு , அதாவது முதல் பத்திய படிச்சிட்டு ஆசிப் அண்ணனுக்கு போன் போட்டுச் சிரிச்சிட்டு அண்ணே இனிமேல் இவர் எழுதியதைப் படிக்க மாட்டேன்னுட்டேன்… என்னையா இது? ஒரு வரைமுறை வேண்டாமா? இப்படியா? என சிரித்துக் கொண்டேயிருந்தேன்… 

இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகளை இஸ்லாமிய எழுத்தாளர்கள் படித்தால், அவர்கள் தங்களையறியாமல் வெடித்துச் சிரிப்பார்கள்… அவ்வளவு நையாண்டி செஞ்சிருக்கார்…

கதையென்பது பொதுத் தமிழில் சொல்லப்படும் போது அது அறிக்கை போல ஆகிவிடும்… வட்டார மொழி வழக்கில் சொல்லப்படும் போதுதான், கதையில் ஒரு மண்வாசனை இருக்கும்… உயிர் இருக்கும்...

சினிமாக்களில், சென்னை மதுரை திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் பிராமண மொழி வழக்குகளையே கேட்டிருப்பதால், இந்த நாகூர் வழக்கு புதியது எனக்கு…வாசிக்கும் போது உச்சரிக்கவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது… குறிப்பாக ஆமாங்கனி என்னாங்கனி…

பேண்டமிக், கொரொனா என மிரட்டும் இன்றைய சூழலில் மனுசனுக்கு ஏகப்பட்ட மன உளைச்சல்… நோய், வேலை இழப்பு, சம்பளக்குறைப்பு, ஊருக்குச் செல்ல இயலாமை என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி சிக்கல்கள்… இம்மாதிரியான வேளைகளில் வாசிப்பும் நெஞ்சை உருக்குவதாக இருந்தால், மனுசனுக்கு கிறுக்குப் பிடிச்சிரும்… 

ஆதலால் உயிர்த்தலம் போன்ற கலகலப்பான நூலை வாசியுங்கள்… மனசு இலகுவாகும்… வாய்விட்டுச் சிரிக்கலாம்…

வாழ்த்துகள் ஆபிதீன் அண்ணே…

பி.கு
இந்த நூல் எழுதி 2007 ஆம் ஆண்டு முதல் பதிப்பு செய்யப்பட்டது…

Monday, May 25, 2020

எழுத்தாளர் ஜெஸிலா பானு எழுதிய நம் நாயகம் & மூஸா (அலை) நபி வரலாறு


சிறுவயதிலிருந்து கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களில் படித்திருந்ததால் பைபிள் பற்றியும் இயேசுநாதர் பற்றியும் ஓரளவுக்கு அறிந்திருந்தேன்முதுகலைப் படிப்பு படிக்கும் காலத்தில் நண்பன் சையது அப்துல் சத்தார் மூலமாக இஸ்லாம் பற்றிய அறிமுகம் ஒரளவுக்கு கிடைத்தது… “இஸ்லாம் மதமல்ல மார்க்கம்”, அப்பு என்று அடிக்கடிச் சொல்வான்

அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு வாக்கில், இணையத் தமிழ் நண்பர்களிடம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அன்று தெரிந்தவனாகத் தொடங்கி இன்று  தம்பியாகிப் போன முஹம்மது இஸ்மாயில் புகாரி மூலமாக இன்னும் இன்னும் நிறைய இஸ்லாமிய பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டிருக்கிறேன்

பின்பு வளைகுடாவிற்கு வாழ்க்கைப்பட்ட நாள் முதல் தொடங்கி இன்று வரை பெரும்பாலும் அரேபியர்களுடன் பணிபுரியும் சூழல் இருப்பதால், நிறைய ஒப்பீடுகள் இயல்பாகவே மனதுக்குத் தோன்றும். அதன் மூலம், நம்மூரில் உள்ள சில பழக்க வழக்கங்களுக்கும் இங்குள்ள சில பழக்க வழக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகள், அரபிச் சொற்களுக்கான பொருள் என நிறைய அறிந்து கொள்ள முடிந்ததது

மேலும் ஓய்வாக அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், நிறையவே அரேபிய வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ள முடிந்ததுகுறிப்பாக ரமதான் நோன்பு தொடங்குவதற்கு சரியாக பதினைந்து நாட்களுக்கு முன், குழந்தைகளுக்கு இனிப்புகளையும் பரிசுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்இதற்கு Haq Al Laila என்று பெயர்என் குழந்தைகளுக்கும் என் அலுவலகத்திலிருந்து அந்த நாளில் தவறாமல் பரிசுகள் கிடைக்கும்அடுத்ததாக  மண்டி பிரியாணி. எனக்கு இங்கு வந்த போது மிகவும் வியப்பைத் தந்த ஒன்று இந்த மண்டி பிரியாணிஒரே தட்டில் நான்கு ஐந்து பேர் அமர்ந்து சாப்பிடுவதுஇதெல்லாம் நமது ஊரில் பார்த்ததில்லை

முன்பொருநாள் நண்பர் புகாரி எனக்குப் பரிசாக குர்ஆன் அளித்திருந்தார்சில பக்கங்களைப் படித்துப் பார்த்திருக்கிறேன், இருந்தாலும் அதில் அடைப்புக்குறிக்குள் சில வார்த்தைகள் வருவதால் என்னால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லைஎப்பவும் எனக்கு இஸ்லாம் தொடர்பாக என்ன ஓர் ஐயம் வந்தாலும் உடனே நான் தொடர்பு கொள்வது புகாரியை மட்டும்தான்ஏனெனில் அவருக்கு என்னிடம் ஒரு நல்ல புரிதல் உண்டுநிறையவே அவரைப் பிராண்டியிருக்கிறேன்பொறுமையாக எனக்கு விளக்கம் அளிப்பார் 

இதெல்லாம் இருந்தாலும் பைபிள் கதைகள் போல, இஸ்லாம் பற்றிய நிகழ்வுகளைக் கோவையாக நான் இதுவரைப் படித்ததில்லை எல்லாமே வாய்வழிச் சேதிகள்தான்… 

இந்த வீடடங்கு காலத்தில் நிறைய ஓய்வு கிடைத்தது, ஆதலால் நிறைய நூல்களை வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் முக்கியமான நூல்கள் நண்பர் ஜெஸிலா எழுதிய நம் நாயகம் மற்றும் மூஸாஇரண்டும் குழந்தைகளுக்கான நூல்கள் என்று எழுத்தாளர் சொல்கிறார், எனக்கென்னவோ, இஸ்லாமிய வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் எல்லாருமே படித்துப் பார்க்க வேண்டிய நூலாகக் கருதுகிறேன் இவ்விரண்டையும்

நம் நாயகம் & மூஸா (அலைநபி வரலாறு:



முன்பெல்லாம், மாலையில் கிராமங்களில், வீடுகளில் உள்ள மூத்தவர்கள், அங்கிருக்கும் தங்கள் சிறுவர்களை அழைத்து அமர வைத்து, தங்களுக்கு கிடைதத அனுபவங்களை, சந்தித்த நிகழ்வுகளை எல்லாம் ஒரு கதையாகச் சொல்லி, ”அதுக்குத்தாண்டா சொல்றேன், அப்படிச் செய்யக்கூடாது இப்படித்தான் செய்யணும், அதான் நல்லதுஎன்று நீதி சொல்லி முடிப்பார்கள்இதெல்லாம் டிவி, இண்டெர்நெட் வருவதற்கு முந்திய காலம்இன்னும் சொல்லப் போனால் மின்சார வசதிகூட பெரும்பான்மையாக வந்திராத காலம்அப்படியான நீதிக் கதைகளின் வழி ஊட்டப்பட்ட நீதி இன்றும் மனதிலிருக்கும்அந்த அறமே, யாரும் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தவறு செய்யக் கூடாதென்று உள்ளிருந்து நம்மை எச்சரித்துக் கொண்டே இருக்கும்

அதுபோலவே எழுத்தாளர் ஜெஸிலா, இறைத்தூதர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தகுந்த ஆதாரங்களுடன் இவ்விரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்நம்நாயகம் நூலைப் படிக்கும் போது, ஜெஸிலா, சிறுவர் சிறுமியர்களைக் கூட்டி அமர வைத்து கதை சொல்வது போலவேதான்  அவருடைய எழுத்து இருக்கிறதுபெரியவர்களே, உங்கள் குழந்தைகளுக்கு இந்நூலை அப்படியே வாசித்துக் காட்டினாலே போதும், தேர்ந்த கதை சொல்லியைப் போல நீங்களும் கதை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்அப்படியான எளிமையான பேச்சுத் தமிழில் இந்நூலை எழுதியிருக்கிறார்

நம் நாயகம் நூலில் மொத்தம் 63 கதைகள் இடம்பெற்றுள்ளனஇந்நூலைப் படித்து முடிக்கும் போது 63 கதைகளாக எழுதியது ஏன் என்று உங்களுக்கே விளங்கும்நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை மேற்கோள் காட்டி, அனைவருக்கும் நல்வழி போதிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் நூல் இது… 

இறைத்தூதரின் வாழ்வை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு வாழவேண்டும் என்று குழந்தைகளுக்கு, அவர்களுக்கான மொழியில் சொல்லியிருக்கிறார். நபிகள் நாயகத்தின் வாழ்வின் சில பகுதிகளை அனைவருக்கும் புரியும் வண்ணம் சுருக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆவணமாக இந்நூலைப் பார்க்கிறேன்

அங்கொன்றும் இங்கொன்றுமாக வாய்வழிச் செய்தியாகக் கேள்விப்பட்டிருந்த இஸ்லாமியக் குறிப்புகளை ஆவணமாக்க, நபிகள் நாயகம் (ஸல்) வாழ்வில் நடந்த நிகழ்வுகளை உண்மையான சான்றுகளைக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார்… 

ஒவ்வொரு கதையின் கடைசி வரியைப் படிக்கும் முன்னரே அந்தக் கதைக்கான நீதி நமக்குத் தெளிவாக விளங்கிவிடுகிறதுஇறைநம்பிக்கை, தொழுகை, விருந்தோம்பலின் சிறப்பு, எல்லார் உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது, தாயின் சிறப்பு, பெற்றோர்களை பேணிக்காப்பது, மனைவிக்கு மரியாதை, வாக்கினில் இனிமை, வியாபாரத்தில் நேர்மை, தர்மம் செய்தல், கோபம் தவிர்த்தல், கடனில்லா வாழ்வு, அனைவருக்கும் ஒரே சட்டம், கல்வியின் சிறப்பு என நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அறிவுரைகளையும் இறைத்தூதரின் வாழ்வில் இருந்து எடுத்துக்காட்டி அதை அறிவுரை போலல்லாமல் இனிமையான கதையாகச் சொன்ன விதம் அருமை

குழந்தைகளுக்கான கதை சொல்லும் போது இப்படித்தான் சொல்ல வேண்டும்இரண்டு மூன்று பக்கத்திற்கு மேல் ஒரு கதை இருந்தால் அதைப் படிப்பதற்குள் குழந்தைகளுக்கு அயற்சியாகி விடும்இந்நூலில் உள்ள எல்லாக் கதைகளும் அவ்வாறே குறைவான பக்கங்களுடனும், ஆனால் சொல்ல வேண்டிய செய்தியை மிகவும் தெளிவாக, அளவான, குழந்தைகளுக்கு புரியும்படியான மொழியில் மிக அழகாக எழுதப்பட்டிருக்கின்றன

நூலில் மிகவும் கவர்ந்தவை; எளிமையான பேச்சுத் தமிழ், நூல் வடிவமைக்கப்பட்டிருக்கும் முறைகுழந்தைகளை ஈர்க்கும் வண்ணம், வண்ணமயமாகவும், படங்களுடனும், நல்ல எழுத்துருவுடனும் கொண்ட வடிவமைப்பாகும். நூலைப் படித்துக் கொண்டிருக்கும் போது, ஏதேனும் ஐயப்பாடு இருக்குமாயின் அதைத் தீர்க்கும் பொருட்டு நூலின் இறுதியில் தேவையான குறிப்புகளும், இந்த 63 கதைகளில் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குத் தொடர்புடைய ஹதீஸ்களையும் சான்றுகளாக குறிப்பிட்டிருக்கிறார்கள்மதம் என்பதற்கு அப்பாற்பட்டு, ஒரு வாழ்வியல் முறை நன்னெறி நூலாக அனைவரும் படிக்க வேண்டிய நூல் நம்நாயகம் என்பது என் கருத்து



மூஸா நூல் படிப்பதற்கு மிகவும் ஆர்வத்தைத் தூண்டிய நூல்… 
ஏனெனில் மோஸஸ் என்ற பற்றி  பெயரில் ஏற்கனவே கொஞ்சம் அறிந்திருக்கிறேன்… சிறுவயதில் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துச் சென்று ”டென் கமாண்ட்மெண்ட்ஸ்” திரைப்படம் காட்டினார்கள் 
என்ற ஞாபகம். திரைப்படமாக வந்திருப்பதால் மூஸா என்ற மோசஸ் பெயர் கேட்டால் 
அனைவருக்கும்குறிப்பாக கிறிஸ்தவ பள்ளிகளில் படித்தவர்களுக்கு,மோஸஸ் பெற்ற பத்துக் கட்டளைகளும் , செங்கடலைத் திறந்து 
மோஸஸ் மக்களைக் காப்பாற்றிக் கூட்டி வந்ததும் நினைவிருக்கும்இந்நூலில் ஜெஸிலா, மூஸா (அலை) வாழ்க்கை வரலாற்றை எளிய மொழியில் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் எழுதியிருக்கிறார்… 

இந்தக் கதையைப் படிக்கும் போது எனக்கு கம்சன் மன்னன் & கண்ணன், ஏரோது மன்னன் & இயேசுகிறிஸ்து மற்றும்  கர்ணன் கதையும் ஞாபகத்திற்கு வந்து போனதுஅழிவிற்கு இந்தக் குழந்தைதான் காரணம் என்றறிந்த மன்னர்கள், ஊரிலுள்ள குழந்தைகளையெல்லாம் கொல்லச் சொல்வது எல்லா வரலாறுகளிலும் ஒன்று போலவே இருந்திருக்கும் போலகர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டதைப் போல, மூஸா(அலை) வும் ஆற்றில் பெட்டியில் விடப்படுகிறார்.

இந்நூலில் மூஸா (அலை) பிறந்ததிலிருந்து அவர் மரணம் வரை நடந்த நிகழ்வுகளையும், அவர் வாழ்க்கையின் வழியாக நமக்கு என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை மட்டும் மிகத்தெளிவாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறார் ஜெஸிலா

இந்நுலைப் படிக்கும் மூஸாவிடம் ஃபிர்அவுனைச் சேர்ந்தவர்கள் பொய் வாக்குறுதி கொடுப்பதும் அதன் விளைவாகக் இறைவன் கோபம் கொண்டு கொடுத்த தண்டனைகளாக மழை வெள்ளம் அழிவு, தண்ணீரெல்லாம் இரத்தமாவது, வெட்டுக்கிளிகள் வந்து பயிர்களை அழிப்பது, எங்கும் தவளைகள், பேன்கள் பற்றி எல்லாம் சிறுகுழந்தைகளுக்குச் சொல்லும் போதும் அவர்கள் வியந்து படிப்பார்கள்

இது போன்ற கதைகளைப் படிக்கும் போது, உலக வரலாற்றில் நடந்த ஈவு இரக்கமற்ற கொலைகள் மிரட்டுகின்றனஅதிகாரம் கொண்ட மனிதன் தன்னைக் கடவுளாக கற்பித்துக் கொண்டு செய்த கொடுமைகளைக் கதைகளாகப் படிக்கும் போது, அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை எவ்வளவு அச்சமுள்ளதாக இருந்திருக்கும் என உணர முடிகிறது

ஃபிர்அவுன் மன்னனின் உடல் இன்றும், எகிப்தில் பாதுகாக்கபட்டு வருகிறது என்பது எனக்கு வியப்பான தகவல். மூஸா (அலை) வாழ்வில் செய்த நிறைய அற்புதங்களைப் பற்றி நூலில் வருவதால் குழந்தைகளுக்கு இந்நூலை வாசிப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்

நம் நாயகம் நூலை ஒப்பிடும் போது மூஸா (அலை) நூலில் ஜெஸிலாவின் எழுத்து இதில் கொஞ்சம் மாறுபட்டிருக்கிறதுபேச்சுத் தமிழில் இது அமையவில்லை என்றே தோன்றுகிறதுஆனாலும் எளிமையாகப் புரியும்படியான எழுத்தாக இருப்பதால் தங்கு தடையின்றி விரைவாகப் படிக்கவும் அதே நேரத்தில் படித்த கதையும் அதன் கருத்தும் மனதில் பதிந்து விடுகிறது

இப்படியாகத்தான் எழுத்து இருக்க வேண்டும்.. அதும் குழந்தைகளுக்கான கதை சொல்லல் இப்படியாகத்தான் இருக்க வேண்டும்

மீண்டும் சொல்கிறேன், இந்த இரண்டு நூல்களும் குழந்தைகளுக்கான நூல்கள் என்கிறார் எழுத்தாளர். என்னைப் பொறுத்தவரை மதங்களுக்கு அப்பாற்பட்டு, இஸ்லாமிய வாழ்க்கை முறையையும், அதிலுள்ள நன்னெறிகளையும் அறிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்கள்

நம் நாயகம்
மூஸா (அலை) நபி வரலாறு
(மூஸாஇந்நூல் சார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல் என்பது குறிப்பிடத்தக்கது)

இன்னும் நீங்கள் நிறைய இதுபோல எழுதவேண்டும் ஜெஸிலாமகிழ்ச்சிவாழ்த்துகள்