Sunday, August 26, 2012

நினைவில் வைக்க விரும்புகிறேன்....


அத்தனையும் நினைவில்.......

எழுப்பிக் கேட்டாலும்
அப்படியே சொல்லுவேன்

இன்றியமையா எண்களை
காகித்தில் அவ்வப்போது
குறித்து கொள்வதுண்டு....
மறுமுறை குறிப்பு பார்க்காமலே
மனதில் வந்து போகும்

ஆமாம்
காகிதத்தில் எழுதும் போதே
மனதில் பதிந்திருக்கிறது
எனையறியாமலே

வந்தது செல்பேசியும் கணினியும்
எளிதாக்கியது எல்லாவற்றையும்
அதிகமாக எழுத தேவையில்லை
ஒற்றி ஒட்டினால் போதும்

நீலப் பல் முளைத்த பிறகு
பரிமாற்றமும் பஞ்சாக பறந்தது

தொலைபேசி கம்பி வழி வந்த
இணையம் வை ஃபைக்கு மாறியது 

அடடா
எங்கு சென்றாலும்
வலைப் பின்னலுக்குள்
சுதந்திர அடிமையாய் நான்

தொழில் நுட்பம் வாழ்க்கையை
எளிதாக்கியிருக்கிறது

சில நாட்கள் கழித்து
சென்று சேரும் கடிதம்
நொடியில் சேரும்
இமெயிலாக மாறியது

சில கிளிக்குகள்
சொல்லும் சேதிகள் பல

நெற்றி சுருக்கி சிந்திக்க
தேவையில்லை நேரமுமில்லை

எனக்குள் கேள்விகள் கேட்பதை
குறைத்துக் கொண்டேன்
கூகுளிடம் ஒரு கேள்விக்கு
கூத்தாடிக் கொட்டுகிறது பதில்கள் 

இணையமும் கணினியும்
இனிய செல்பேசியும் 
திடீரென இல்லாமல் போனால்
எனக்கும் வரும்
சார்ட் டெர்ம் மெமரி லாஸ்..!
செலக்ட்டிவ் அம்னீசியா .!!

ஆமாம்,
நிறையவே மறந்து போகிறேன்

வீட்டிற்கு  பேச சொன்னார்கள்!
மொபைல் எண் நினைவில் இல்லை
ஃபோன் புக்கை பார்க்க வேண்டும்!

மனைவி எதோ வாங்கி வரச்சொன்னாளே
To do குறிப்பை பார்க்க வேண்டும்.

எத்தனையோ எத்தனையோ
இப்படியே மறந்து போகிறேன்

தொழில்நுட்பமே - உன்
எலக்ட்ரானிக் குழந்தைகளை
சார்ந்தே என்
அன்றாட நடவடிக்கைகளை
தொடங்குகிறேன்

ஆகவேதான் ஒரு மனதாய்
முடிவுக்கு வந்துவிட்டேன்

வலைப் பின்னல்களின் ஊடே
கண்ணுக்கு தெரியாத இடத்தில்
இலவசமாக ஒரு
இடம் பார்த்திருக்கிறேன்
அங்கே
பதிவு செய்வேன்
என் எண்ணங்களை

நான்
நினைவில் வைக்க விரும்புகிறேன்....


2 comments:

Shankar M said...

ithuvum technology....

Balaji said...

technology improved so much :-)