Wednesday, May 13, 2020

சாபுதானா வடா


தொடர்ச்சியாக சில நாட்கள் பூனா நகர் , அது மட்டுமல்லாது அதன் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என எல்லாத் திசைகளிலும் பணியின் பொருட்டு சுற்றிக் கொண்டிருந்த காலம் அது…. 

காலையில் எழுந்து டூவீலரில் அமர்ந்தால், என்னுடைய சர்தார் நண்பன் ஒவ்வொரு அலுவலகமாகக் கூட்டிச்  செல்வான்… அவனுடைய அகலமான முதுகு ஒரு மதில் சுவர் போல, அதன் பின்னே பாதுகாப்பாக  அமர்ந்து பயணம்….என்ன ஒன்னு, எதுத்தாப்ல என்ன வண்டி வருதுனே தெரியாது, பக்கவாட்டிலேயே வேடிக்கைப் பார்த்துக்கிட்டுப் போகணும்

தொடர்சியாக சாலையோரக் கடைகளில்தான் உணவு; பூரி(டி) பாஜி, கன்னே கா ஜூஸ், தந்தூரி ரோடி, தால் & ஹரி மிர்ச்சி, அச்சார், அதரக் சாய், மிஷல் பாவ், ஜிலேபி, பாவ்பாஜி என வயிற்றை நிறைக்க எதோ ஒன்றை உள்ளே தள்ளிவிட்டு ஒரே ஓட்டம்தான்… ஓடிக்கிட்டே இருந்தேன்… அப்ப உடலும் ஒத்துழைச்சுச்சு… ( இப்ப அப்படிலாம் இருக்க முடியுமானு என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது, கொஞ்சம் நேரம் தப்பினாலும் தலைவலி வந்து ஹலோ ,ஐ மிஸ் யூ டார்லிங்னு வந்து மண்டைக்குள்ள புகுந்து சல்லி சல்லியா உடைக்கத் தொடங்கிடும்… )

இப்படியாக நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியான பயணம்…. பிம்பிரி சிஞ்ச்வாட் எனறு ஊரில் இருந்த டாடா டெல்கோ கம்பெனியில் ஒரு வேலை நேர ஓய்வில் அமர்ந்திருந்த போது , டேய் யப்ப்பா சிங்கு நாக்கு செத்துப் போன மாதிரி இருக்குடா… எங்கயாவது எங்க சாப்பாடு கிடைக்கிற மாதிரி கூட்டிட்டுப் போடான்னேன்... நல்லவேளை அவனுக்குத் தமிழ் கடி ஜோக் தெரியாததால் அடக்கம் பண்ணுனு சொல்லல...

டோண்ட் ஒர்ரி பாஜி, நாளைக்கு உன்னைய ஒரு நல்ல இடத்துக்கு கூட்டிட்டுப் போறேனு சிங்கு வாக்குக் கொடுத்தான்… அன்றிரவு ஹோட்டல் வந்து சேரவே  காலதாமதாகிப் போனதால் என்னை இறக்கி விட்டுட்டு எந்த ஒரு நாளிறுதி அறிக்கையையும் அளிக்காமல் சென்று விட்டான் சிங்கு… 

மறுநாள் காலை சொன்ன மாதிரியே வந்து அழைத்தும் சென்றான்… வேறு மாநிலங்களுக்குச் சென்றால் நம்ம ஊர் உணவைத்தான் சாப்பிடுவேன் என அடம்பிடிப்பது தவறு என்று அன்று உணர்ந்தேன்… ஒவ்வொரு உணவிற்கும் அது உண்டாக்கப்படும் ஊரின் தண்ணீருக்கும் தொடர்பு இருக்குமோ என்று நினைக்கிறேன்… தமிழ் உணவைத் தமிழ் நாட்டில்தான் சாப்பிடணும்…. அசலூர் போனால் அந்த ஊர்ல என்ன சிறப்போ அதை வாங்கி வயிறு நிறையச் சாப்பிட்டுட்டு வந்திரணும்… அதுக்காக பாம்பு திங்கிற ஊருக்குப் போய் நடுத்துண்டம் வேணும்னு கேட்டிராதீக, கொரோனா வந்தாலும் வரும்…

எம் ஜீ ரோடில் உள்ள ப்ரியா என்ற உணவகத்தின் முன்னால் வண்டிய நிறுத்தினான் சிங்கு…. ஆத்தி எம்புட்டுக் கூட்டம்… உள்ள நுழைய இடமில்லை… நல்ல பசியாக இருக்கும் போது கூட்டமான உணவகத்திற்குச் செல்லக் கூடாது, கூட்டமில்லாத உணவகத்தில் சுவையையும் எதிர்பார்க்கக் கூடாது… என்ன ஒரு குழப்பமான நேரம்… 

சரினு  ஒரு வழியாக உள்ளே சென்று, அமர இடம் கிடைத்ததும், ஏக் தோசா ஆர்டர் பண்ணிட்டு கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டோம்…   ஆமாம் அது தோசாவாகத்தான் வந்தது, எதோ தோசைக்கு மாறுவேடம் போட்டது போல.. 
இருந்தாலும் இத்தனை நாள் தந்தூரி ரோட்டிகளாலும், சப்பாத்திகளாலும் தன் உணர்வை இழந்திருந்த நாக்கிற்கு அந்த தோசாவும் சுவையாகத்தான் இருந்தது… இருந்தாலும் சாம்பார் போன்ற அதில், அவர்கள் கொஞ்சம் இனிப்பைக் குறைக்கலாம்…

அந்தத் தோசாவை முழுங்கி விட்டு, வயிறு நிறைஞ்ச மாதிரி இல்லையேப்பா சிங்கு எனவும், சரி எனக்குப் பிடிச்ச உங்க ஊர் உணவு சொல்றேன் நீ சாப்பிடு நல்லாருக்கும்ன்னான்… நான் தலையசைத்ததும், பரிமாறுபவரைக் கூப்பிட்டு தோன் ப்ளேட் டொமொட்டோ ஆம்லெட், தோன் ப்ளேட் சாபுதானா வடா என்றான்… 

என்னது தக்காளிய ஆம்லெட்டா போட்டுக் கொண்டாருவாய்ங்களா? என்ற மிரட்சியோடு அதென்ன சாபுதானா வடான்னானே… அது என்னவா இருக்கும் என்ற ஆர்வத்தோட இருந்தேன்… நம்ம அடைத் தோசை போன்ற ஒன்றுக்குப் பெயர்தான் டொமொட்டோ ஆம்லெட் அதோடு கூட கொஞ்சம் தயிரும் சர்க்கரையும்… ஆஹஹா ஆஹா நல்ல சுவை… 

அதை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே,  சாபுதானா வடா வந்துச்சு…. என்னானு பாத்தா, ஜவ்வரிசிய வடையா சுட்டுக் கொண்டாந்திருக்காய்ங்க… அடடா இந்தப் பொருள பாயசம் மட்டும் வச்சுத்தானே சாப்பிட்டிருக்கோம்… அதுவும் கல்யாணத்துல ரசம் மோர் முடிஞ்சதும், பாயசத்த ஊத்தி ஒரு அப்பளத்த (சப்ளை பண்றவர் தெரிஞ்சவரா இருந்தா இரண்டு அப்பளம்) அது மேல உடைச்சுப் போட்டு, அப்படியே கை நிறைய அள்ளிச் சாப்பிட்டாத்தான் சாப்பிட்ட நிறைவே வரும்…



அந்தச் ஜவ்வரிசிய, மொறுமொறுனு  வடையாச் சுட்டுக் கொண்டாந்திருந்தாய்ங்க… அட அட அட என்னா சுவை… மேலே மொறுமொறுனு இருக்கு உள்ளே பதமா இருக்கு... மொத்ததுல ரொம்ப நல்ல சுவையான உணவு... ஆனா சிங்கு இதை நம் உணவுன்னு சொல்லி வாங்கிக் கொடுத்தான், நம் உணவா இல்லை வேறு யாரு உணவானு தெரியல… ஆனா நல்ல அருமையான உணவு…

அதன்பிறகு பூனா போகும் போதெல்லாம் பிரியா உணவகத்தில் டொமொட்டோ ஆம்லெட்டும், சாபுதானா வடையும் சாப்பிடாமல் வந்ததில்லை… 

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

சாபு தானா வடா நன்றாக இருக்கும். நானும் சுவைத்தது உண்டு...

பதிவும் சுவைபட எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

Balaji said...

மிக்க நன்றி