Monday, May 25, 2020

எழுத்தாளர் ஜெஸிலா பானு எழுதிய நம் நாயகம் & மூஸா (அலை) நபி வரலாறு


சிறுவயதிலிருந்து கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களில் படித்திருந்ததால் பைபிள் பற்றியும் இயேசுநாதர் பற்றியும் ஓரளவுக்கு அறிந்திருந்தேன்… முதுகலைப் படிப்பு படிக்கும் காலத்தில் நண்பன் சையது அப்துல் சத்தார் மூலமாக இஸ்லாம் பற்றிய அறிமுகம் ஒரளவுக்கு கிடைத்தது… “இஸ்லாம் மதமல்ல மார்க்கம்”, அப்பு என்று அடிக்கடிச் சொல்வான்…

அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு வாக்கில், இணையத் தமிழ் நண்பர்களிடம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அன்று தெரிந்தவனாகத் தொடங்கி இன்று  தம்பியாகிப் போன முஹம்மது இஸ்மாயில் புகாரி மூலமாக இன்னும் இன்னும் நிறைய இஸ்லாமிய பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டிருக்கிறேன்…

பின்பு வளைகுடாவிற்கு வாழ்க்கைப்பட்ட நாள் முதல் தொடங்கி இன்று வரை பெரும்பாலும் அரேபியர்களுடன் பணிபுரியும் சூழல் இருப்பதால், நிறைய ஒப்பீடுகள் இயல்பாகவே மனதுக்குத் தோன்றும். அதன் மூலம், நம்மூரில் உள்ள சில பழக்க வழக்கங்களுக்கும் இங்குள்ள சில பழக்க வழக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகள், அரபிச் சொற்களுக்கான பொருள் என நிறைய அறிந்து கொள்ள முடிந்ததது. 

மேலும் ஓய்வாக அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், நிறையவே அரேபிய வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ள முடிந்தது… குறிப்பாக ரமதான் நோன்பு தொடங்குவதற்கு சரியாக பதினைந்து நாட்களுக்கு முன், குழந்தைகளுக்கு இனிப்புகளையும் பரிசுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்… இதற்கு Haq Al Laila என்று பெயர்… என் குழந்தைகளுக்கும் என் அலுவலகத்திலிருந்து அந்த நாளில் தவறாமல் பரிசுகள் கிடைக்கும்… அடுத்ததாக  மண்டி பிரியாணி. எனக்கு இங்கு வந்த போது மிகவும் வியப்பைத் தந்த ஒன்று இந்த மண்டி பிரியாணி… ஒரே தட்டில் நான்கு ஐந்து பேர் அமர்ந்து சாப்பிடுவது… இதெல்லாம் நமது ஊரில் பார்த்ததில்லை…

முன்பொருநாள் நண்பர் புகாரி எனக்குப் பரிசாக குர்ஆன் அளித்திருந்தார்… சில பக்கங்களைப் படித்துப் பார்த்திருக்கிறேன், இருந்தாலும் அதில் அடைப்புக்குறிக்குள் சில வார்த்தைகள் வருவதால் என்னால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை… எப்பவும் எனக்கு இஸ்லாம் தொடர்பாக என்ன ஓர் ஐயம் வந்தாலும் உடனே நான் தொடர்பு கொள்வது புகாரியை மட்டும்தான்… ஏனெனில் அவருக்கு என்னிடம் ஒரு நல்ல புரிதல் உண்டு… நிறையவே அவரைப் பிராண்டியிருக்கிறேன்… பொறுமையாக எனக்கு விளக்கம் அளிப்பார்…  

இதெல்லாம் இருந்தாலும் பைபிள் கதைகள் போல, இஸ்லாம் பற்றிய நிகழ்வுகளைக் கோவையாக நான் இதுவரைப் படித்ததில்லை…  எல்லாமே வாய்வழிச் சேதிகள்தான்… 

இந்த வீடடங்கு காலத்தில் நிறைய ஓய்வு கிடைத்தது, ஆதலால் நிறைய நூல்களை வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் முக்கியமான நூல்கள் நண்பர் ஜெஸிலா எழுதிய நம் நாயகம் மற்றும் மூஸா… இரண்டும் குழந்தைகளுக்கான நூல்கள் என்று எழுத்தாளர் சொல்கிறார், எனக்கென்னவோ, இஸ்லாமிய வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் எல்லாருமே படித்துப் பார்க்க வேண்டிய நூலாகக் கருதுகிறேன் இவ்விரண்டையும்…

நம் நாயகம் & மூஸா (அலை) நபி வரலாறு:



முன்பெல்லாம், மாலையில் கிராமங்களில், வீடுகளில் உள்ள மூத்தவர்கள், அங்கிருக்கும் தங்கள் சிறுவர்களை அழைத்து அமர வைத்து, தங்களுக்கு கிடைதத அனுபவங்களை, சந்தித்த நிகழ்வுகளை எல்லாம் ஒரு கதையாகச் சொல்லி, ”அதுக்குத்தாண்டா சொல்றேன், அப்படிச் செய்யக்கூடாது இப்படித்தான் செய்யணும், அதான் நல்லது” என்று நீதி சொல்லி முடிப்பார்கள்… இதெல்லாம் டிவி, இண்டெர்நெட் வருவதற்கு முந்திய காலம்… இன்னும் சொல்லப் போனால் மின்சார வசதிகூட பெரும்பான்மையாக வந்திராத காலம்… அப்படியான நீதிக் கதைகளின் வழி ஊட்டப்பட்ட நீதி இன்றும் மனதிலிருக்கும்… அந்த அறமே, யாரும் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தவறு செய்யக் கூடாதென்று உள்ளிருந்து நம்மை எச்சரித்துக் கொண்டே இருக்கும்…

அதுபோலவே எழுத்தாளர் ஜெஸிலா, இறைத்தூதர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தகுந்த ஆதாரங்களுடன் இவ்விரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்… நம்நாயகம் நூலைப் படிக்கும் போது, ஜெஸிலா, சிறுவர் சிறுமியர்களைக் கூட்டி அமர வைத்து கதை சொல்வது போலவேதான்  அவருடைய எழுத்து இருக்கிறது… பெரியவர்களே, உங்கள் குழந்தைகளுக்கு இந்நூலை அப்படியே வாசித்துக் காட்டினாலே போதும், தேர்ந்த கதை சொல்லியைப் போல நீங்களும் கதை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்… அப்படியான எளிமையான பேச்சுத் தமிழில் இந்நூலை எழுதியிருக்கிறார்…

நம் நாயகம் நூலில் மொத்தம் 63 கதைகள் இடம்பெற்றுள்ளன… இந்நூலைப் படித்து முடிக்கும் போது 63 கதைகளாக எழுதியது ஏன் என்று உங்களுக்கே விளங்கும்… நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை மேற்கோள் காட்டி, அனைவருக்கும் நல்வழி போதிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் நூல் இது… 

இறைத்தூதரின் வாழ்வை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு வாழவேண்டும் என்று குழந்தைகளுக்கு, அவர்களுக்கான மொழியில் சொல்லியிருக்கிறார். நபிகள் நாயகத்தின் வாழ்வின் சில பகுதிகளை அனைவருக்கும் புரியும் வண்ணம் சுருக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆவணமாக இந்நூலைப் பார்க்கிறேன்…

அங்கொன்றும் இங்கொன்றுமாக வாய்வழிச் செய்தியாகக் கேள்விப்பட்டிருந்த இஸ்லாமியக் குறிப்புகளை ஆவணமாக்க, நபிகள் நாயகம் (ஸல்) வாழ்வில் நடந்த நிகழ்வுகளை உண்மையான சான்றுகளைக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார்… 

ஒவ்வொரு கதையின் கடைசி வரியைப் படிக்கும் முன்னரே அந்தக் கதைக்கான நீதி நமக்குத் தெளிவாக விளங்கிவிடுகிறது… இறைநம்பிக்கை, தொழுகை, விருந்தோம்பலின் சிறப்பு, எல்லார் உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது, தாயின் சிறப்பு, பெற்றோர்களை பேணிக்காப்பது, மனைவிக்கு மரியாதை, வாக்கினில் இனிமை, வியாபாரத்தில் நேர்மை, தர்மம் செய்தல், கோபம் தவிர்த்தல், கடனில்லா வாழ்வு, அனைவருக்கும் ஒரே சட்டம், கல்வியின் சிறப்பு என நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அறிவுரைகளையும் இறைத்தூதரின் வாழ்வில் இருந்து எடுத்துக்காட்டி அதை அறிவுரை போலல்லாமல் இனிமையான கதையாகச் சொன்ன விதம் அருமை…

குழந்தைகளுக்கான கதை சொல்லும் போது இப்படித்தான் சொல்ல வேண்டும்…இரண்டு மூன்று பக்கத்திற்கு மேல் ஒரு கதை இருந்தால் அதைப் படிப்பதற்குள் குழந்தைகளுக்கு அயற்சியாகி விடும்… இந்நூலில் உள்ள எல்லாக் கதைகளும் அவ்வாறே குறைவான பக்கங்களுடனும், ஆனால் சொல்ல வேண்டிய செய்தியை மிகவும் தெளிவாக, அளவான, குழந்தைகளுக்கு புரியும்படியான மொழியில் மிக அழகாக எழுதப்பட்டிருக்கின்றன…

நூலில் மிகவும் கவர்ந்தவை; எளிமையான பேச்சுத் தமிழ், நூல் வடிவமைக்கப்பட்டிருக்கும் முறை…குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம், வண்ணமயமாகவும், படங்களுடனும், நல்ல எழுத்துருவுடனும் கொண்ட வடிவமைப்பாகும். நூலைப் படித்துக் கொண்டிருக்கும் போது, ஏதேனும் ஐயப்பாடு இருக்குமாயின் அதைத் தீர்க்கும் பொருட்டு நூலின் இறுதியில் தேவையான குறிப்புகளும், இந்த 63 கதைகளில் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குத் தொடர்புடைய ஹதீஸ்களையும் சான்றுகளாக குறிப்பிட்டிருக்கிறார்கள்… மதம் என்பதற்கு அப்பாற்பட்டு, ஒரு வாழ்வியல் முறை நன்னெறி நூலாக அனைவரும் படிக்க வேண்டிய நூல் நம்நாயகம் என்பது என் கருத்து…



மூஸா நூல் படிப்பதற்கு மிகவும் ஆர்வத்தைத் தூண்டிய நூல்… 
ஏனெனில் மோஸஸ் என்ற பற்றி  பெயரில் ஏற்கனவே கொஞ்சம் அறிந்திருக்கிறேன்… சிறுவயதில் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துச் சென்று ”டென் கமாண்ட்மெண்ட்ஸ்” திரைப்படம் காட்டினார்கள் 
என்ற ஞாபகம். திரைப்படமாக வந்திருப்பதால் மூஸா என்ற மோசஸ் பெயர் கேட்டால் 
அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ பள்ளிகளில் படித்தவர்களுக்கு,மோஸஸ் பெற்ற பத்துக் கட்டளைகளும் , செங்கடலைத் திறந்து 
மோஸஸ் மக்களைக் காப்பாற்றிக் கூட்டி வந்ததும் நினைவிருக்கும்…இந்நூலில் ஜெஸிலா, மூஸா (அலை) வாழ்க்கை வரலாற்றை எளிய மொழியில் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் எழுதியிருக்கிறார்… 

இந்தக் கதையைப் படிக்கும் போது எனக்கு கம்சன் மன்னன் & கண்ணன், ஏரோது மன்னன் & இயேசுகிறிஸ்து மற்றும்  கர்ணன் கதையும் ஞாபகத்திற்கு வந்து போனது… அழிவிற்கு இந்தக் குழந்தைதான் காரணம் என்றறிந்த மன்னர்கள், ஊரிலுள்ள குழந்தைகளையெல்லாம் கொல்லச் சொல்வது எல்லா வரலாறுகளிலும் ஒன்று போலவே இருந்திருக்கும் போல… கர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டதைப் போல, மூஸா(அலை) வும் ஆற்றில் பெட்டியில் விடப்படுகிறார்.

இந்நூலில் மூஸா (அலை) பிறந்ததிலிருந்து அவர் மரணம் வரை நடந்த நிகழ்வுகளையும், அவர் வாழ்க்கையின் வழியாக நமக்கு என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை மட்டும் மிகத்தெளிவாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறார் ஜெஸிலா…

இந்நுலைப் படிக்கும் மூஸாவிடம் ஃபிர்அவுனைச் சேர்ந்தவர்கள் பொய் வாக்குறுதி கொடுப்பதும் அதன் விளைவாகக் இறைவன் கோபம் கொண்டு கொடுத்த தண்டனைகளாக மழை வெள்ளம் அழிவு, தண்ணீரெல்லாம் இரத்தமாவது, வெட்டுக்கிளிகள் வந்து பயிர்களை அழிப்பது, எங்கும் தவளைகள், பேன்கள் பற்றி எல்லாம் சிறுகுழந்தைகளுக்குச் சொல்லும் போதும் அவர்கள் வியந்து படிப்பார்கள்…

இது போன்ற கதைகளைப் படிக்கும் போது, உலக வரலாற்றில் நடந்த ஈவு இரக்கமற்ற கொலைகள் மிரட்டுகின்றன… அதிகாரம் கொண்ட மனிதன் தன்னைக் கடவுளாக கற்பித்துக் கொண்டு செய்த கொடுமைகளைக் கதைகளாகப் படிக்கும் போது, அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை எவ்வளவு அச்சமுள்ளதாக இருந்திருக்கும் என உணர முடிகிறது…

ஃபிர்அவுன் மன்னனின் உடல் இன்றும், எகிப்தில் பாதுகாக்கபட்டு வருகிறது என்பது எனக்கு வியப்பான தகவல். மூஸா (அலை) வாழ்வில் செய்த நிறைய அற்புதங்களைப் பற்றி நூலில் வருவதால் குழந்தைகளுக்கு இந்நூலை வாசிப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்…

நம் நாயகம் நூலை ஒப்பிடும் போது மூஸா (அலை) நூலில் ஜெஸிலாவின் எழுத்து இதில் கொஞ்சம் மாறுபட்டிருக்கிறது… பேச்சுத் தமிழில் இது அமையவில்லை என்றே தோன்றுகிறது… ஆனாலும் எளிமையாகப் புரியும்படியான எழுத்தாக இருப்பதால் தங்கு தடையின்றி விரைவாகப் படிக்கவும் அதே நேரத்தில் படித்த கதையும் அதன் கருத்தும் மனதில் பதிந்து விடுகிறது…

இப்படியாகத்தான் எழுத்து இருக்க வேண்டும்.. அதும் குழந்தைகளுக்கான கதை சொல்லல் இப்படியாகத்தான் இருக்க வேண்டும்…

மீண்டும் சொல்கிறேன், இந்த இரண்டு நூல்களும் குழந்தைகளுக்கான நூல்கள் என்கிறார் எழுத்தாளர். என்னைப் பொறுத்தவரை மதங்களுக்கு அப்பாற்பட்டு, இஸ்லாமிய வாழ்க்கை முறையையும், அதிலுள்ள நன்னெறிகளையும் அறிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்கள்

நம் நாயகம்…
மூஸா (அலை) நபி வரலாறு…
(மூஸா – இந்நூல் சார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல் என்பது குறிப்பிடத்தக்கது)

இன்னும் நீங்கள் நிறைய இதுபோல எழுதவேண்டும் ஜெஸிலா… மகிழ்ச்சி … வாழ்த்துகள்…

பிள்ளையார் சதுர்த்தி


அன்னைக்கு வெள்ளன எந்திரிச்சதும், அந்த மனைப்பலகையை நல்லா கழுவி எடுத்துட்டு வாடாம்பார் தாத்தா... அப்புறமா சைக்கிள எடுத்துக்கிட்டு, தெற்குவாசல் பக்கம் கூட்டிட்டுப் போவார்...
அங்கே முளைத்திருக்கும் திடீர் கடைகளில் அரை அடி, முக்கால் அடி, மிஞ்சிப் போனா ஒரு அடி வடிவத்தில் பிள்ளையார் அச்சும், நிறைய களிமண்ணும் வைத்திருப்பார்கள்... அந்த அச்சை மல்லாக்க வைத்து களிமண்ணை அழுத்தி நிரப்பி பின்பு குப்புற போட்டு அச்சை பைய உருவி எடுத்தால் அழகான பிள்ளையார் சிலை கிடைக்கும்... பின்பு குண்டுமணிகளை எடுத்து, களிமண் சிலையின் கண்ணில் சொருகியதும் பிள்ளையாருக்கு உயிர் வந்த மாதிரி இருக்கும்...

அப்படியே அந்தப் பிள்ளையாரத் தூக்கி மனைப் பலகையில படுக்க வச்சு வீட்டுக்குத் தூக்கியாந்திருவோம்... வரும் போது கொஞ்சம் எருக்கம் பூ, கதம்பம், தேங்காய், வாழைப்பழம், பொறி, கடலை, சின்ன வாழை மரம், அருகம்புல், ஒரு புதுத் துண்டு அப்புறம் முக்கியமா பேரிக்காய், விளாம்பழம் எல்லாம் வாங்கியாந்திருவோம்... இந்த இரண்டையும் பிள்ளையார் சதுர்த்தி அன்னைக்குத்தான் பார்க்கவோ சாப்பிடவோ முடியும்...
வீட்டுக்கு வந்ததும், படுத்திருக்கும் பிள்ளையார பைய பதறாம பொத்துனாப்புல நிமுத்து அதே மனைப்பலகையில நிக்க வச்சு, அடிப்பகுதியில் இருக்கும் களிமண்ணை கொஞ்சம் கொஞ்சமா இளக்கி மனைப்பலகையோடு பூசி விட்டால், நல்லா பலகையோட ஒட்டி உறுதியா நிப்பார் பிள்ளையார்...
பின்பு தலைல தண்ணிய தெளிச்சு (குளிப்பாட்டிட்டோம்னு பிள்ளையார நம்ப வைக்கிறதுக்காக) நெத்தில விபூதிப் பட்டைய போட்டு, சந்தனம் குங்குமம் வச்சு, புதுத்துண்டை தொப்புளுக்கு கீழ சுத்தி பலகை தெரியமா மறைச்சுட்டு, பூ, மாலைகளைப் போட்டு, இரண்டு பக்கமும் சின்ன வாழைக்கன்றை நிற்க வைத்து, அலங்காரம் பண்ணிட்டா அம்சமா இருப்பார் பிள்ளையார்... இறுதி அலங்காரமா, (அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது) பிள்ளையார் தொந்தில நாலணாவ ஒட்டி வைப்பாங்க...
பின்பு பிள்ளையாருக்கு முன்னாடி வாழை இலையில பால், தேன். அரிசி மாவு, மண்டை வெல்லம், தேங்காய், வாழைப்பழம், விளாம்பழம், பேரிக்காய், பொறி, கடலை, கொழுக்கட்டை என எல்லத்தையும் வச்சு, நீர் விளாவி, இறுதியா சூடம் காமிச்சுட்டு விபூதிய பூசிக்கிட்டு, எல்லாரும் குடும்பத்தோட உக்காந்து, பிள்ளையாருக்கு கொஞ்சம் கொஞ்சமா வச்சதெல்லாம் நம்ம இலைல நிறைய நிறைய வச்சு, கூடவே இட்லி சாம்பாரை ஊத்தி சாப்பிட்டா பிள்ளையார் சதுர்த்தி பூஜை முடிந்தது... விளாம்பழத்தை மட்டும் மண்ட வெல்லம் கலந்து சாப்பிடணும், அப்பத்தான் நல்லா இருக்கும்...
மூன்று நாள் கழித்து ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நிகழ்வு நடக்கும், அதாவது பிள்ளையார் ஆத்துல கரைக்கிறது... பிள்ளையாரத் தூக்கிக்கிட்டுச் செல்ல, வைகை ஆறு தொலைவென்பதால், அதன் கிளையான கிருதுமால் ஆற்றில் போய் கரைச்சு வாங்கடானு சொல்லிடுவாங்க...
மூனு நாளுல களிமண் ஓரளவு காஞ்சு போயிருப்பதால், வயித்துல ஒட்டுன காசு கீழ விழுந்திராம, (விழுந்துச்சுன்னா பிள்ளையார் கோவிச்சுக்கிருவார்...) வலுக்கவனமா பிள்ளையாரத் தூக்கிக்கிட்டு கிருதுமால் நதிக்குப் போவோம்... போற வழில ஆங்காங்கே அவரவர் வீட்டில் இருந்து பிள்ளையாரைத் தூக்கிட்டு வரும் சிறுவர்கள் இணைந்து கொள்வார்கள்...
கிருதுமால் நதியில் பிள்ளையாரைக் கிடத்தி, தொந்தியில் ஒட்டியிருக்கும் நாலணாவைக் கைப்பற்றியதும்தான் பிள்ளையார் சதுர்த்தியின் மகிழ்ச்சி முழுமையாகக் கிடைக்கும்... கடைசியாகக் கரைத்த காசில் பிக் ஃபன் என்ற பப்பிள் கம்மை முக்குக் கடையில் வாங்கித் தின்றதாக ஞாபகம்...
அப்போது பிள்ளையார் சதுர்த்தி இவ்வளவாகத்தான் இருந்தது... இன்பமாக இருந்தது...

Friday, May 22, 2020

நிலாச்சோறு


ஹாஸ்டல் - அது சிறிய வயதிலேயே ஒரு பெரிய மனிதனின் பொறுப்புணர்ச்சியுடன் சிறுவர்களைச் செயல்பட வைக்கும்… எதும் செய்து கொடுக்கத் தாய் தந்தை உடன் பிறந்தோர் என யாரும் இருக்க மாட்டார்கள்… விழிப்பு மணி அடித்தவுடன் எழுந்து, பாய் படுக்கையைச் சுருட்டி வைத்து விட்டு,  கழிப்பறைக்குச் செல்வதில் இருந்து இரவு தூங்கச் செல்லும் வரை என்னென்ன செய்யணுமோ அத்தனையையும் நாமே செய்யணும்… ஹாஸ்டல்ல படிச்சவனுக்கு கொஞ்சம் பொறுப்புணர்ச்சி கூடவேதான் இருக்கும்… தன்னுடைய வேலைகளுக்கு அவன் அடுத்தவரைச் சார்ந்திருப்பதை விரும்புவதில்லை என்பது என் கருத்து..

சரி… ஹாஸ்டல்ல டெய்லி ப்ளேஸ் என்பது எழுத்தில் இல்லாத ஆனா அடிப்படையான கட்டாய விதி… ஹாஸ்டல் வாழ்க்கைல எல்லாமே டெய்லி ப்ளேஸ்லதான் நடக்கணும்… குளிக்கிற ஷவர், படிக்கிற கூடம், சாப்பாட்டுக் கூடம், விளையாட்டுத் திடல், உறங்குமிடம் என எல்லாவற்றிலும் டெய்லி ப்ளேஸ் என்று அந்த ஆண்டு முழுவதும் முதலில் எங்கு இருக்கத் தொடங்கினார்களோ அதே இடத்திலேயே இருப்பார்கள்… சாப்பாட்டுக் கூடத்தில் டெய்லி ப்ளேஸ் மாத்திட்டா சிறு சண்டைகள் நடக்கும், தட்டுகள் மோதிக் கொள்ளும் சில வேளைகளில்.

எந்தச் சூழலிலும் டெய்லி ப்ளேஸை மாற்றுவது இயலாத செயல்… வேறு வழியே இல்லை மாற்றி ஆக வேண்டுமென்றால், வார்டனிடம் முறையிட்டு அவர் வந்து மாற்றித் தருவார்… ஹாஸ்டலைப் பொறுத்த மட்டும் அவர் சொன்னதே கட்டளை, அதுவே சாசனம்… சில நேரங்களில், அந்த அதிகாரத்தில் சிறிதளவு அந்தந்தத் துறை மானிட்டர்களுக்கு வார்டனால் கொடுக்கப்பட்டிருக்கும்… மானிட்டர்கள் வார்டனுக்கு அடுத்து  அதிகாரம் மிக்கவர்கள்…

காலையில் எழுந்ததும் ம்யூசிக் ரூம் மானிட்டர் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மத பக்திப் பாடல்களை ஒலிக்க விடுவார்… லெய்ஸர் ஹவரில் மட்டும் சினிமாப் பாடல்கள் ஒலிக்க விடுவார்…  ஒரு நாள் ”எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே” என்றால், மறுநாள் ”இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை” என்பார் நாகூர் ஹனிபா, அடுத்த நாள் ”திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்” என்பார் சீர்காழி கோவிந்தராஜன்…

இப்படியாகத்தான் அதிகாலை 5:30 மணிக்கு அன்றைய நாள் விடியும்… எதோ ஒரு சாமி, பாடல்கள் வழியாக எழுப்பியதும், உடனே வாரிச் சுருட்டி எழுந்து, காலைக்கடன் முடித்து குளிப்பதற்கு டெய்லி ப்ளேஸ் ஷவர் வரிசையில் நின்று குளித்து நாள் தொடங்குவதிலிருந்து இரவு தூங்கும் அறையில் டெய்லி ப்ளேஸில் போய்த் தூங்குவது வரை எல்லாம் ஒரு ஒழுங்கோடு இருக்கும்…

ஹாஸ்டல் வாசிகள் டே ஸ்காலர்களைப் பார்த்து பொறாமை அவர்களின் முடிவெட்டு, நினைத்ததும் அவர்கள் வாங்கி வரும் புதுப்புது ஸ்டேஷனரிப் பொருட்கள், எல்லாவற்றிற்கும் மேலாக ஏங்குவது, டே ஸ்காலர்கள் அவர்கள் அம்மா அப்பாவைப் பற்றிப் பேசுவதைக் கேட்கும் போது… சில நேரம் நமக்குக் கண்கலங்கிடும்…

சில டே ஸ்காலர்கள் ஹாஸ்டல் வாசிகளைப் பற்றிப் பொறாமைனு சொல்ல முடியாது, ஏக்கம்னு சொல்லலாம்… அதாவது ஹாஸ்டல் காரர்கள் உண்ணும் உணவு வகைகள்… ஒவ்வொரு ஞாயிறும் அசைவம் என்பது அந்தச் சில டே ஸ்காலர்களுக்கு ஏக்கமாகவே இருக்கும்…

டெய்லி ப்ளேஸ்ல இருந்து எங்கெங்கோ போயிட்டேன்… ஆம், அந்த டெய்லி ப்ளேஸ் என்பது இல்லாத நாட்கள் என்று சில உண்டு ஆண்டுக்கொரு முறை நடக்கும் ஹாஸ்டல் ஆண்டு விழா… அது பெரிய கோலாகலமா இருக்கும்… பெற்றோர்கள் வந்து, புதிய ஆடைகள் அணிந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருக்கும்…

நிலாச்சோறு:

அடுத்ததாக டெய்லி ப்ளேஸ் இல்லாதது பௌர்ணமி இரவு… பெரும்பாலான மாதங்களில் பெளர்ணமி இரவில் நிலாச்சோறு அறிவித்து விடுவார்கள்… நிலாச்சோறு தடைபடுகிறதென்றால் ஏதேனும் தேர்வுகள் அப்போது நடைபெற வேண்டும் அல்லது மழைக்காலமாக இருக்க வேண்டும் …

என்னைப் பொறுத்தவரை ஹாஸ்டல் வாழ்க்கையில் இது ஒரு பொன்னான நிகழ்வு… பொதுவாக சாப்பாட்டுக் கூடத்தில் இருபக்கமும் அமர்ந்திருப்பவர்கள் நமக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ நாம் அங்கேதான் அமர்ந்து சாப்பிட வேண்டும்… குறிப்பாகக் சாப்பாட்டுக் கூடத்தில் பேசக்கூடாது… தப்பித்தவறிப் பேசிட்டோம்னா, எந்திருச்சு நின்னு சாப்பிடுன்னுடுவாரு மானிட்டர், இல்லைனா டெய்லி ப்ளேஸ மாத்தி நமக்கு ஆகாதவய்ங்கட்ட போட்டிருவாரு…

ஹாஸ்டலைப் பொறுத்தவரை விளையாட்டு நேரம், leisure hourல் மட்டும் பேசிக்கொள்ளலாம்… எங்காவது நாம் பேசிக் கொண்டிருப்பதை சாப்பாட்டுக்கூட மானிட்டர் பாத்துட்டார்னா உடனடியாக அவர் அதிகாரத்திற்குட்பட்ட சிறு தண்டனைகளை வழங்கிடுவார்… பெரும்பாலும் எழுந்து நிற்பதாகத்தான் இருக்கும்…இப்ப என்னாங்குற?னு எதுத்துட்டோம்னா வார்டன் அறைமுன் நின்று ஆராய்ச்சி மணிய அடிச்சிருவார் மானிட்டர்…அதன் பிறகு நடக்கும் விளைவுகளுக்கு மானிட்டர் பொறுப்பல்ல…  நல்லாப் பார்த்தோம்னா, அதுவும் சரிதான்…  கிட்டத்தட்ட இருநூறூ முன்னூறு மாணவர்களுக்கு பேச அனுமதி கிடைத்து  பேசிக்கொண்டிருந்தால் அந்த இடம் என்னவாகும்… கடினம்தான்…

சரி நிலாச்சோறுக்கு வருகிறேன்…

பௌர்ணமி அன்று விளையாட்டுத் திடலில், நிலாச்சோறாக புளியோதரையும் தயிர்சாதத்தையும் பெரிய சட்டிகளில் வைத்துக் கொண்டு, சாப்பாட்டு மாஸ்டர் காத்திருப்பார்… வரிசையில் சென்று அவரிடம் வேணும் உணவைப் பெற்றுக் கொள்ளலாம்… நான் படித்த மட்டும் அந்த மெனுவ மாத்தவே இல்லை 😊 தட்டு நிறைய சோற்றை வாங்கிட்டு வந்து நம்ம பிடித்த நண்பர்களோடு கூடி  வட்ட வட்டமாக அமர்ந்து பல கதைகள் பேசிச் சிரித்துக் கொண்டே உணவுன்பது அப்போதைக்கு கிடைத்த பேரின்பம்…

ஊர்க்கதைகள், தன் வீட்டில் நடந்தது, தான் செய்த வீர விளையாட்டுகள், எனக்கு நீச்சல் தெரியும், எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியும், குண்டு விளையாடுறது, எருமை வாலப் பிடிச்சிக்கிட்டு நீச்சல் பழகுனது, எனக்கு அப்பா இல்ல, நான் ஒரே பையன், நான் வீட்டுக்குத் தேவையில்லாத பையன், கண்மாயில் குளிப்பேன், புது விளையாட்டு, எனக்கு அம்மா இல்ல, எங்க அப்பா ஊர்ல இல்ல, வீட்டுல நான் நாய் வளர்க்கிறேன், புறா வளர்க்கிறேன்… பிடித்த சினிமா, நடிகர்கள், வெள்ளிக்கிழமை ஹாஸ்டல் என்ன படம் போடப் போறாங்க… என  இன்னும் என்னென்னவோ, பேசிப் பேசிப் இருக்கும் ஒரு மணிநேரத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பேசித் தீர்ப்பது… இறுதியாக, இந்த மாதம் எங்க வீட்டுல இருந்து என்னைய பாக்க வருவாங்கள்ல என்ற நம்பிக்கையோடு பேச்சு முடியும்…

அப்போது அந்தப் பௌர்ணமி ஒளியை இரசிக்க கூடிய மனநிலையோ பக்குவமோ எங்களுக்கு இல்லை.. அந்தப் பௌர்ணமி நிலா வேண்டுமானால் எங்களைப் பார்த்து இரசித்து மகிழ்ந்திருக்கலாம்…

Wednesday, May 13, 2020

சாபுதானா வடா


தொடர்ச்சியாக சில நாட்கள் பூனா நகர் , அது மட்டுமல்லாது அதன் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என எல்லாத் திசைகளிலும் பணியின் பொருட்டு சுற்றிக் கொண்டிருந்த காலம் அது…. 

காலையில் எழுந்து டூவீலரில் அமர்ந்தால், என்னுடைய சர்தார் நண்பன் ஒவ்வொரு அலுவலகமாகக் கூட்டிச்  செல்வான்… அவனுடைய அகலமான முதுகு ஒரு மதில் சுவர் போல, அதன் பின்னே பாதுகாப்பாக  அமர்ந்து பயணம்….என்ன ஒன்னு, எதுத்தாப்ல என்ன வண்டி வருதுனே தெரியாது, பக்கவாட்டிலேயே வேடிக்கைப் பார்த்துக்கிட்டுப் போகணும்

தொடர்சியாக சாலையோரக் கடைகளில்தான் உணவு; பூரி(டி) பாஜி, கன்னே கா ஜூஸ், தந்தூரி ரோடி, தால் & ஹரி மிர்ச்சி, அச்சார், அதரக் சாய், மிஷல் பாவ், ஜிலேபி, பாவ்பாஜி என வயிற்றை நிறைக்க எதோ ஒன்றை உள்ளே தள்ளிவிட்டு ஒரே ஓட்டம்தான்… ஓடிக்கிட்டே இருந்தேன்… அப்ப உடலும் ஒத்துழைச்சுச்சு… ( இப்ப அப்படிலாம் இருக்க முடியுமானு என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது, கொஞ்சம் நேரம் தப்பினாலும் தலைவலி வந்து ஹலோ ,ஐ மிஸ் யூ டார்லிங்னு வந்து மண்டைக்குள்ள புகுந்து சல்லி சல்லியா உடைக்கத் தொடங்கிடும்… )

இப்படியாக நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியான பயணம்…. பிம்பிரி சிஞ்ச்வாட் எனறு ஊரில் இருந்த டாடா டெல்கோ கம்பெனியில் ஒரு வேலை நேர ஓய்வில் அமர்ந்திருந்த போது , டேய் யப்ப்பா சிங்கு நாக்கு செத்துப் போன மாதிரி இருக்குடா… எங்கயாவது எங்க சாப்பாடு கிடைக்கிற மாதிரி கூட்டிட்டுப் போடான்னேன்... நல்லவேளை அவனுக்குத் தமிழ் கடி ஜோக் தெரியாததால் அடக்கம் பண்ணுனு சொல்லல...

டோண்ட் ஒர்ரி பாஜி, நாளைக்கு உன்னைய ஒரு நல்ல இடத்துக்கு கூட்டிட்டுப் போறேனு சிங்கு வாக்குக் கொடுத்தான்… அன்றிரவு ஹோட்டல் வந்து சேரவே  காலதாமதாகிப் போனதால் என்னை இறக்கி விட்டுட்டு எந்த ஒரு நாளிறுதி அறிக்கையையும் அளிக்காமல் சென்று விட்டான் சிங்கு… 

மறுநாள் காலை சொன்ன மாதிரியே வந்து அழைத்தும் சென்றான்… வேறு மாநிலங்களுக்குச் சென்றால் நம்ம ஊர் உணவைத்தான் சாப்பிடுவேன் என அடம்பிடிப்பது தவறு என்று அன்று உணர்ந்தேன்… ஒவ்வொரு உணவிற்கும் அது உண்டாக்கப்படும் ஊரின் தண்ணீருக்கும் தொடர்பு இருக்குமோ என்று நினைக்கிறேன்… தமிழ் உணவைத் தமிழ் நாட்டில்தான் சாப்பிடணும்…. அசலூர் போனால் அந்த ஊர்ல என்ன சிறப்போ அதை வாங்கி வயிறு நிறையச் சாப்பிட்டுட்டு வந்திரணும்… அதுக்காக பாம்பு திங்கிற ஊருக்குப் போய் நடுத்துண்டம் வேணும்னு கேட்டிராதீக, கொரோனா வந்தாலும் வரும்…

எம் ஜீ ரோடில் உள்ள ப்ரியா என்ற உணவகத்தின் முன்னால் வண்டிய நிறுத்தினான் சிங்கு…. ஆத்தி எம்புட்டுக் கூட்டம்… உள்ள நுழைய இடமில்லை… நல்ல பசியாக இருக்கும் போது கூட்டமான உணவகத்திற்குச் செல்லக் கூடாது, கூட்டமில்லாத உணவகத்தில் சுவையையும் எதிர்பார்க்கக் கூடாது… என்ன ஒரு குழப்பமான நேரம்… 

சரினு  ஒரு வழியாக உள்ளே சென்று, அமர இடம் கிடைத்ததும், ஏக் தோசா ஆர்டர் பண்ணிட்டு கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டோம்…   ஆமாம் அது தோசாவாகத்தான் வந்தது, எதோ தோசைக்கு மாறுவேடம் போட்டது போல.. 
இருந்தாலும் இத்தனை நாள் தந்தூரி ரோட்டிகளாலும், சப்பாத்திகளாலும் தன் உணர்வை இழந்திருந்த நாக்கிற்கு அந்த தோசாவும் சுவையாகத்தான் இருந்தது… இருந்தாலும் சாம்பார் போன்ற அதில், அவர்கள் கொஞ்சம் இனிப்பைக் குறைக்கலாம்…

அந்தத் தோசாவை முழுங்கி விட்டு, வயிறு நிறைஞ்ச மாதிரி இல்லையேப்பா சிங்கு எனவும், சரி எனக்குப் பிடிச்ச உங்க ஊர் உணவு சொல்றேன் நீ சாப்பிடு நல்லாருக்கும்ன்னான்… நான் தலையசைத்ததும், பரிமாறுபவரைக் கூப்பிட்டு தோன் ப்ளேட் டொமொட்டோ ஆம்லெட், தோன் ப்ளேட் சாபுதானா வடா என்றான்… 

என்னது தக்காளிய ஆம்லெட்டா போட்டுக் கொண்டாருவாய்ங்களா? என்ற மிரட்சியோடு அதென்ன சாபுதானா வடான்னானே… அது என்னவா இருக்கும் என்ற ஆர்வத்தோட இருந்தேன்… நம்ம அடைத் தோசை போன்ற ஒன்றுக்குப் பெயர்தான் டொமொட்டோ ஆம்லெட் அதோடு கூட கொஞ்சம் தயிரும் சர்க்கரையும்… ஆஹஹா ஆஹா நல்ல சுவை… 

அதை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே,  சாபுதானா வடா வந்துச்சு…. என்னானு பாத்தா, ஜவ்வரிசிய வடையா சுட்டுக் கொண்டாந்திருக்காய்ங்க… அடடா இந்தப் பொருள பாயசம் மட்டும் வச்சுத்தானே சாப்பிட்டிருக்கோம்… அதுவும் கல்யாணத்துல ரசம் மோர் முடிஞ்சதும், பாயசத்த ஊத்தி ஒரு அப்பளத்த (சப்ளை பண்றவர் தெரிஞ்சவரா இருந்தா இரண்டு அப்பளம்) அது மேல உடைச்சுப் போட்டு, அப்படியே கை நிறைய அள்ளிச் சாப்பிட்டாத்தான் சாப்பிட்ட நிறைவே வரும்…



அந்தச் ஜவ்வரிசிய, மொறுமொறுனு  வடையாச் சுட்டுக் கொண்டாந்திருந்தாய்ங்க… அட அட அட என்னா சுவை… மேலே மொறுமொறுனு இருக்கு உள்ளே பதமா இருக்கு... மொத்ததுல ரொம்ப நல்ல சுவையான உணவு... ஆனா சிங்கு இதை நம் உணவுன்னு சொல்லி வாங்கிக் கொடுத்தான், நம் உணவா இல்லை வேறு யாரு உணவானு தெரியல… ஆனா நல்ல அருமையான உணவு…

அதன்பிறகு பூனா போகும் போதெல்லாம் பிரியா உணவகத்தில் டொமொட்டோ ஆம்லெட்டும், சாபுதானா வடையும் சாப்பிடாமல் வந்ததில்லை… 

Saturday, May 9, 2020

லெபான் அப் எனும் மோர்


அமீரகம் வந்த அன்று முதலில் உண்ட உணவு ஷவர்மா. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்,வீட்டிலேயே கோழி அடித்துக் குழம்பு வைத்துச் சாப்பிடும் வழக்கத்தில் வந்திருந்த எனக்கு, எலும்பில்லாத கோழிக்கறியை ஒரு ரொட்டிக்குள் சுற்றி அதை மதிய உணவு என்று தந்தார்கள்… சாப்பிடும் போதே திட்டுமுட்டு அடிச்சு, கறி மூஞ்சில அடிச்சிருச்சு… அப்போதுதான் பார்த்தேன் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் பாக்கெட்டில், வினிகரில் ஊற வைத்த காரட், முள்ளங்கி மற்றும் மிளகாய் ஆகியவற்றை வெஞ்சனமாகத்  தந்திருந்தார்கள்… அப்புறம் அந்த வெஞ்சனத்தைத் தொட்டுக்கிட்டுத்தான் ஷவர்மாவைச் சாப்பிட்டு முடிக்க முடிந்தது… இப்ப எனக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஷவர்மாவும் ஒன்றாக இருந்தாலும், முதல்நாள் முதல் ஷவர்மா என்னவோ அன்றைக்கு பெரிசாக மனசுக்குப் பிடிக்கவில்லை…

நான் வந்த காலம் நல்ல வெயில் காலம்… வெயில்காலத்தின் உச்சகட்ட  மாதத்தில் அமீரகம் வந்திருந்தேன்… பணியின் பொருட்டு முதன் முதலாக வேலைக்குச் சென்றது நல்லதொரு அருமையான மொட்டைப் பாலைவனத்திற்கு நடுவே கட்டப்பட்டிருந்த அனைத்து வசதிகளுடன் கூடிய அல்ட்ரா மாடர்ன் கட்டிடத்தில்… (இப்போது அந்த இடம் பாலைவனச் சோலையாக இருக்கிறது)

அந்தக் கட்டிடத்தின் தரை தளத்தில் நிறைய அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் அரேபிய உணவகங்கள் இருந்தன… அப்போது என்னுடைய மேலாளர்களே அந்த உணவகங்களில் சாப்பிடும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இல்லை… அப்புறம் நான் எங்கிட்டுச் சாப்பிடுறது… 

எங்கள் வாகன ஓட்டுனர், அப்புறம் கூட வேலை செய்யும் சில தெரிந்தவர்கள் அங்கிருந்து ஒரு நான்கு கிலோமீட்டர் தள்ளி உள்ள ஒரு பெட்ரோல் ஸ்டேசனில் இருக்கும் , காஃபெடேரியாவிற்கு சாப்பிடச் செல்லும் போது என்னையும் இணைத்துக் கொண்டார்கள்…

எந்த ஒரு சுவையும் எள் முனையளவு கூட இல்லாத நீளவாக்கில் இருக்கும் ஒரு ”பன்”னிற்கு நடுவே, ஒரு ஆம்லெட்டை வைத்து அதன் பெயர் சாண்ட்விச் என்று சாப்பிடக் கொடுத்தார்கள். இரண்டு திர்ஹம்களும் எழுபத்தைந்து ஃபில்ஸ்களும்.

எந்த உணவைச் சாப்பிட்டாலும், சாப்பிட்டு முடிச்சவுடன் எங்கூர்ல நாங்க எப்படிச் சாப்பிடுவோம் தெரியுமா? அப்படினு சொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுலயும் சுவையான உணவுகளை மட்டுமே அல், பகல் அனைத்து வேளைகளிலும் கிடைக்கப் பெற்று, சாப்பிட்டு வந்த மதுரைக்காரர்களுக்கு எந்த ஒரு புது ஊர் உணவையும் உடனடியாக ஏற்றுக் கொள்ள மனசு ஒப்பாது… 

எல்லா உணவையும் அதன் சுவையையும் எங்க ஊர் உணவோடு ஒப்பீடு செய்து பார்க்கும் மனசு.. எப்பவும் எங்க ஊர் உணவுதான் தராசுல எடை கூட நிக்கும்…

அப்படியாக இருந்த எனக்கு, அந்த சாண்ட்விச்சை மென்று முழுங்கிய போது தெரிந்தது விதி வலியது என்று... ஏன்னா ஊர்ல எல்லாத்துக்கும் நொட்டை சொன்ன காட்சிகள் கண் முன்னே வந்து போகுமா இல்லையா?

சரி என அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் ”லெபன் அப்” என்ற ஒரு அரிய பானத்தை குடிக்கக் கொடுத்தார்கள், எழுபத்தைஞ்சு ஃபில்ஸ் விலை. அந்த டப்பவைப் பார்க்கும் போதே பசக்குனு மனசுக்குப் பிடிச்சுப் போச்சு… என்னங்கய்யா இதுனு கேட்டேன், ”மோர்”தான் குடிங்கன்னாங்க…



முதலில் அந்த டப்பாவை எப்படிப் பிரிப்பது என்றே தெரியவில்லை… எந்தப் பக்கமும் திறப்பு இல்லை, நம்மூர் ஃப்ருட்டி மாதிரி ஏதும் ஓட்டையும் ஸ்ட்ராவும் இருக்குமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அப்புறம் அவர்களே அந்த டப்பாவைத் திறக்கும் தொழில்நுட்பத்தைச் சொல்லித் தந்தார்கள்.. சிந்தாமல் குடிப்பதும் ஒரு கலை…

ஒரு மடக்கு உள்ளே போனதும்தான் தெரிந்தது, அட அட அட இது தேவாமிர்தம்யா… அந்த வெயிலில் அலைந்து திரிந்து வந்து, லெபான் அப் குடித்ததும், அது வாயிலிருந்து வயிற்றுக்குப் போகும் பாதை முழுவதும், மோரின் சுவையையும், அது தரும் இன்பத்தையும் முடிந்தது… 

அப்படி ஒரு சுவையான மோரை இதற்கு முன்னால் எங்கும் குடித்ததில்லை… குடித்து முடித்ததும் நாக்கு அண்ணத்தில் சப்புக் கொட்டுவது உறுதி… வெயில் காலத்தில், குறிப்பாக நோன்பு காலங்களில் இஃப்தாரில் லெபான் அப் பருகும் போது உடலிலிருந்து வெப்பமெல்லாம் வெளியேறுவது போல உணரமுடியும்.

லெபான் அப் எனும் மோர் – அட்டைப் பெட்டிக்குள் நிரப்பப்பட்டிருக்கும் ”தேவாமிர்தம்”

Friday, April 10, 2020

மைக்ரெய்ன் தலைவலி


அமீரகம் வந்த காலந்தொட்டு எப்போதும் உடனிருந்தது தலைவலி… தலைவலியென்றால் வெறும் தலைவலியல்ல… எமத் தலைவலி… அதற்கு பெயர் மைக்ரெய்ன். தலையின் முன்புறம், பக்கவாட்டில், ஒரு பக்கமாக, காதின் பின்புறம் அல்லது முழுத் தலையும் என அதன் விருப்பப்படி பிடித்து ஆட்டுவிக்கும் …

சரி எப்ப தலைவலி வரும் என்றால், படைத்த பிரம்மனுக்கே தெரியாத சுகப்பிரசவ பிள்ளைப் பேறு போலத்தான்  மைக்ரெய்ன் முதலில் இருந்தது… பின்னர் சீசரியன் போல நமக்கு நன்றாகவே தெரிந்து விடும் இதோ இன்னும் பத்து பதினைந்து நிமிடத்திற்குள் தலைவலி வந்துவிடும் என்று… இத்தனை ஆண்டு காலத்தில், அப்படியாக மைக்ரெய்ன் வரப்போவதற்கான அறிகுறி வந்த பிறகு ஒரு நாள் கூட தவறியதில்லை, அது மரணம் போல உறுதியாக வந்தது…

கூடுதலான வெயில், குளிர், வெளிச்சம், பசி வந்த பின் உணவுண்ண நேரம் சிறிது தவறினால், தொலைதூரப் பயணம், கடல் குளியல், குளிர்ந்த உணவு, மிகவும் சூடான உணவு, காத்திருத்தல், மஞ்சள் விளக்கு,  கணினி கூடுதலாகப் பார்த்தல், வெயில் நிற்றல், கோபம், துக்கம், ரொம்ப சத்தமாக சிரித்தல், அழுத்தம், புழுக்கம், இளம் இசையமைப்பாளர்களின் இசை, முட்டை பல்பு, குழந்தையின் அழுகைக் குரல், அளவுக்கதிகமான ஒலி ஆகியன மைக்ரெய்ன் தலைவலி உண்டாக்கூடிய காரணிகளில் சில…

தலைவலி வந்துவிட்டால் என்னென்ன ஆகும் என ஃபேஸ்புக்கில் சில போஸ்ட்கள் சில நேரங்களில் இட்டதுண்டு..

”அறையை மணக்கச் செய்ய எதோ வாசனைத் திரவியத்தைத் தூவுகிறார்கள்.
தலைவலி இஸ் ஆன் த வே என்று என் மூளை கூவுவதை அவர்களுக்கு எப்படிச் சொல்வேன்?

சுவர்க்கடிகார நொடிமுள்ளின் ஒலி கூட பேரிடியாய் தலையில் இறங்கும் தலைவலி வந்தவுடன்...
பசி வந்தால் மட்டுமல்ல, தலைவலி வந்தாலும் பத்தும் பறந்து போகும்...
என் விண்வெளி தலைக்கு மேல் திறந்ததோ அடடா...
ஆமாம்ப்பா அப்படித்தான் மொத ஆரம்பிக்கும், அப்புறம் விண்வெளி என்ன தலையே திறந்த மாதிரி கடுமையா வலிக்கும்... அதான் மைக்ரெய்ன் தலைவலி...

எத்தனை மாத்திரைகள் சாப்பிட்டாலும், டைகர்பாம், ஆக்ஸ் ஆயில் என மருந்துகளைத் தேய்த்தாலும் கொஞ்சம் கூட அசராமல் என்னைக் கொடுமைப்படுத்தும் தலைவலி, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால்தான் என்னை விட்டு விலகுகிறது...

யாராவது தலை வலிக்கிறது என்று சொன்னால், உடனே அவர் மேல் இரக்கம் உண்டாகிறது... ம்ம்ம்ம்ம்....

தனக்கு வந்தால்தான் எந்த வலியையும் உண்மையாக உணர முடிகிறது...

தலைவலி வரப்போவதை முன்கூட்டியே அறிந்து மாத்திரை எடுத்துக்கொள்பவனே மைக்ரேன் அறிவாளி.
என்ன ஒன்று; இந்த மைக்ரேன் தலைவலியை எப்படி முற்றிலுமாக வராமல் நிறுத்துவது என அறியாத முட்டாளும் அவனே.

Hi headache, I truly appreciate your punctuality and the schedule that you are keeping up. Kindly consider giving me a break for an hour at least. Thanks.

என்னது நாலஞ்சு நாளா தலைவலி வரலையேனு நினைச்சாலே போதும். அன்றே உங்களுக்குத் தவறாமல் வந்துவிடும். “

 சரி… இதற்கான மருத்துவம் என்னவென்று தெரியாமல், அறியாமைதான், தொடக்கத்தில் பெனாடோல் ஒன்று எடுத்துக் கொள்வதுண்டு… பின்பு ஒரே நேரத்தில் இரண்டு எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்… பின்பு தூங்கி எழுந்தால் தலைவலி குணமாகும்… தலைவலி வந்து போன போனபிறகு உடலே இலகுவாக இருக்கும்… எதோ இறக்கை முளைத்தது போல ஓர் உணர்வும் புத்துணர்ச்சியும்…


இப்படியாகத் தொடர்ந்த தலைவலிக்கு வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்று பொது மருத்துவர் ஒருவரைப் பார்த்தேன்… அவர் அப்பொழுது சந்தையில் வந்திருந்த ஒரு மைக்ரெய்ன்க்கான தலைவலி மாத்திரையைப் பரிந்துரைத்தார்… இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் தலைவலி வரும் போது புதுமாத்திரை எடுக்கத் தொடங்கினால் எதோ சரியானது போல் தோன்றும்… பின்பு வழக்கம்போல எந்த மாத்திரைக்கும் கட்டுப்படாத சண்டியராக தலைவலி வெறியாட்டம் தொடங்கி விடும்… 


அதன் பின் நான்கைந்து முறை வெவ்வேறு பொது மருத்துவராகப் பார்த்து விட்டு, அவர்கள் அந்த நாளில் சந்தையில் இருந்த மைக்ரெய்ன் மாத்திரையைப் பரிந்துரைத்தார்கள்… எல்லாம் தின்றாகிவிட்டது… வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை எடுக்க வேண்டியதாகிப் போனது… அதும் ஒரே நேரத்தில் இரண்டு மாத்திரை… அதும் பெனாடொல் எக்ஸ்ட்ரா போன்ற கூடுதல் சக்தியுள்ள மாத்திரைகள்… எதற்கும் கட்டுப்படமாட்டேன் என்று விஸ்வரூபம் எடுத்தாடியது தலைவலி… 

இப்படியே நாட்கள் கடந்தன… காரில் தலைவலி மாத்திரை, அலுவலகத்தில் தலைவலி மாத்திரை, வீட்டில் எப்போதும்… என எல்லா நேரத்திலும் சூழலிலும் தலைவலி மாத்திரையைக் கையில் வைத்துக் கொண்டே அலைய வேண்டிய கட்டாயம்… மைக்ரெய்னுக்கென்று விற்கப்பட்ட அனைத்து விதமான மாத்திரைகளையும் சாப்பிட்டிருக்கிறேன் என்று சொல்லலாம்… வாரத்தில் நான்கைந்து முறை குறையாமல் இருந்தது… என்னுடன் பழகுபவர்கள் என்னைத் தெரிந்தவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் நான் தலைவலிக்காரன் என்று நன்றாகத் தெரியும்… யாராவது தனக்குத் தலைவலிக்கிறது என்றால் அவர்கள் மேல் எனக்கு ஒரு அனுதாபமே வந்துவிடும்… ஆறுதலாகப் பேசத் தோன்றும்…

இப்படியாக கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தொடந்து ஆட்டிப்படைத்த தலைவலி, அன்றொரு நாள் எதோ ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்து (நிகழ்ச்சி நன்றாகத்தான் இருந்தது) வீட்டிற்கு வந்ததும் உச்சத்திற்கு சென்றது… இது எப்போதும் போல இல்லை… கடுமை கூடுதலாக இருந்தது ஒருவேளை மண்டை வெடித்து விடுமோ என்றும் தோன்றியது… உடனடியாக இரண்டு மாத்திரை போட்டுவிட்டு படுத்து விட்டேன்… ஒரு நிலைக்குமேல் இது ஏதோ நம்மைக் கொல்லப் போகிறது என்றஞ்சி கிட்டத்தட்ட மயங்கிவிட்டேன்… 

பின்பு தம்பி வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான், அங்கு வேலை பார்த்த தங்கை என்னண்ணே உங்களுக்கு பிபி இப்படி கூடுதலாக இருக்கிறது என்று பயந்து உடனடியாக மருத்துவரிடம் காட்டினார்கள்… மருத்துவர் தலைவலியால்தான் அழுத்தம் கூடியிருக்கிறது என்று உடனே ஒரு வலி குறைக்கும் மருந்தை நரம்பு வழி ஏற்றச் சொன்னார்… அதன் பின் சரியாகி வீடு வந்து சேர்ந்தேன்… அந்த மருத்துவர் சொன்னது போல் வெயிலில் நிற்காமல், குளிரில் நிற்காமல், வெயிலை நேரடியாகப் பார்க்காமல் இன்னும் பல பல கட்டுப்பாடுகளுக்குள் என்னைப் பழக்கிக் கொண்டிருந்ததால் சில மாதங்களுக்கு வாரத்தில் மூன்று முறைதான் வந்தது மைக்ரெய்ன்.

அடுத்த தாக்குதல் 2019 அக்டோபர் மாதம் நடந்தது.. அதே போல் கடுமையான தலைவலி, மண்டை வெடித்து விடும் என்ற நிலைதான் என்றாலும் இம்முறை கடந்த முறையை விட கூடுதலாக இருந்தது… செயலிழந்து விழுந்து விட்டேன்… மனைவி எங்கள் குடும்ப நண்பரை ஃபோனில் அழைக்க, அவர்கள் வந்து என்னை மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் சேர்த்து அதே போல் வலி குறைக்கும் மருந்தை நரம்பில் ஏற்றி ஒரு வழியாகச் சரி செய்தார்கள்… 

அந்த மருத்துவமனையில் எனக்கு அவசர சிகிச்சை செய்த மருத்துவர் சொன்னார், இத்தனை ஆண்டுகள் மைக்ரெய்ன் வாழ்க்கையில், நரம்பியல் நிபுணரை மைக்ரெய்னுக்காகப் பார்த்திருக்கிறீர்களா ? இல்லை என்றேன்… நாளை அந்த நிபுணரைப் பாருங்கள், அப்போதுதான் உங்கள் தலைவலிக்கான மருத்துவத்தைத் தொடங்குகிறீர்கள் என்று பொருள் என்றார்…

அதன் பின்பு தம்பி ஒருவர் என்னை நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்றார்… எல்லாம் கேட்டுவிட்டு, எம் ஆர் ஐ எல்லாம் பார்த்து விட்டு, உங்கள் தலையில் ஒன்றுமில்லை அதாவது பயப்படும்படியாக எந்தப் பிரச்சனையுமில்ல, இனி உங்கள் மைக்ரெய்ன் தலைவலிக்கான மருத்துவத்தைத் தொடங்கலாம் என்று தொடங்கினார்… ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டும், அத்தனை நாட்களாக வெறும் வலி மாத்திரைகளை மட்டும் தின்று கொண்டிருந்த நான் முதல் முறையாக மருத்துவம் பெற்றேன்… 

ஊரு விட்டு ஊரு வந்து வாழும் இந்த வாழ்வில் என்னைச் சுற்றி நண்பர்கள் மட்டும் இருப்பதால் நானும் இயங்கிக் கொண்டிருக்கிறேன். எல்லா அவசர காலத்திலும் நண்பர்கள் துணை நின்றிருக்கிறார்கள்.. அவர்கள் நண்பர்களாதலால் நன்றி சொல்லத் தேவையுமில்லை. இன்னும் சொல்லப் போனால், நெருக்கமான நண்பர்கள் இந்தத் தலைவலிக்குச் சொன்ன சில வழி முறைகளையும் பின்பற்றி வருவதால், தலைவலியை நான் கண்டு பல நாட்களாகி விட்டன… Go Slow… It helps,really… Don’t invite that villain by hurrying up things…

வாரத்திற்கு ஐந்தாறு முறை என்றிருந்த மைக்ரெய்ன் அக்டோபர் 2019 தாக்குதலால் நரம்பியல் மருத்துவரைப் பார்த்த பிறகு, இன்று வரை மாதத்திற்கு இரண்டு முறை வருவது கூட அரிதாகிப் போனது… 

ஆகவே ”மைக்ரெய்ன் தலைவலி உள்ளவர்கள், வெறும் தலைவலி மாத்திரைகளை உண்ணாமல், நரம்பியல் நிபுணரைச் சந்தித்து முறையான தேவையான, முறையான மருத்துவத்தைப் பெறுங்கள்.” 

(இந்த இரண்டு வரியை எழுதுறதுக்குத்தான் இவ்வளவு பெரிய பதிவா?? என வையாதீக)